பட மூலாதாரம், Reuters
அமேசான் பிராந்தியத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் காட்டுத்தீ சம்பவங்களின் எண்ணிக்கை மிகப் பெரிய ஏற்றம் கண்டுள்ளது பிரேசில் அரசு வெளியிட்டுள்ள தரவின் மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது, அமேசான் பிராந்தியத்தில் நடைபெறும் காட்டுத்தீ சம்பவங்களை கண்காணிப்பதற்காக பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ள செயற்கைக்கோள் அனுப்பிய படங்களை பகுப்பாய்வு செய்ததில், கடந்த ஜூலை மாதம் அங்கு 6,803 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவங்களை காட்டிலும் 28 சதவீதம் அதிகம்.
பல்லாயிரக்கணக்கான தாவரங்கள், மரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக விளங்கும் அமேசானில் விவசாயம் செய்வதற்கும், சுரங்கங்கள் அமைப்பதற்கும் பிரேசிலின் அதிபர் ஜெயிர் போல்சனாரூ ஊக்கமளித்து வருகிறார்.
இதன் காரணமாக அமேசான் மழைக்காடுகளில் தொழிற்சாலைகள் தொடங்கும் பொருட்டு செயற்கையாக காட்டுத்தீயை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.


இது உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதன் காரணமாக சர்வதேச முதலீட்டாளர்களின் அழுத்தத்திற்கிணங்க அந்த நாட்டு அரசு அமேசான் காடுகளில் தீ மூட்டுவதற்கு கடந்த மாதத்தின் தொடக்கத்தில் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், கடந்த மாதத்தில் பதிவாகியுள்ள அதிகபட்ச காட்டுத்தீ சம்பவங்கள் கடந்த ஆண்டின் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் அமேசானில் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தீ மீண்டும் ஏற்பட வித்திடுமோ என்ற கவலையை பல்வேறு தரப்பினரிடையே ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Reuters
“இதொரு கொடூரமான சமிக்ஞை” என்று கூறுகிறார் பிரேசிலிலுள்ள அமேசான் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியல்துறை இயக்குநர் அனே அலென்கார்.
“இந்த ஆகஸ்டு மாதம் சூழ்நிலை மோசமடையும் என்று தெளிவாக தெரியும் நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் நிலைமை இன்னமும் கடினமானதாக இருக்குமென்று எதிர்பார்க்கலாம்” என்று அவர் எச்சரிக்கை விடுப்பதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரேசிலின் சுற்றுச்சூழல் அமலாக்க நிறுவனமான இபாமா, சுற்றுச்சூழல் சார்ந்த விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பதாக பதவிக்கு வருவதற்கு முன்புவரை அதிபர் போல்சனாரூ கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில், அவர் அதிபரான பிறகு, இபாமா நிறுவனம் விதிமீறல்களுக்கு விதிப்பதில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதே போன்று, இபாமாவிற்கு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளதுடன், காலிப்பணியிடங்களும் நிரப்பப்படாத அவலநிலை நீடிப்பதாக துறைசார் வல்லுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உலகில் சுமார் மூன்று மில்லியன் தாவரங்களும், விலங்குகளும் அமேசான் காட்டை இருப்பிடமாக கொண்டுள்ளன. இது உலகில் உள்ள அனைத்து உயிரினங்களில் பத்தில் ஒரு மடங்கு இங்கு வாழ்வதாக நம்பப்படுகிறது.
2010ஆம் ஆண்டுக்கு பிறகு அமேசான் காட்டுப்பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட மோசமான காட்டுத்தீ உலகின் கவனத்தை ஈர்த்தது. எனினும், அமேசானில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே மீண்டும் காட்டுத்தீ சம்பவங்கள் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த வண்ணம் உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com