கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): வீட்டில் இருந்து பணியாற்றுவதை பலர் விரும்ப என்ன காரணம் ?

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): வீட்டில் இருந்து பணியாற்றுவதை பலர் விரும்ப என்ன காரணம் ?

  • சாம் பிரோஃபிட்
  • பிபிசி செய்தியாளர்

பட மூலாதாரம், Getty Images

உலகின் பல நாடுகளில் மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியபோது, பலர் தங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை அலுவலகத்தில் இருந்து எடுத்துக்கொண்டு தங்கள் வீட்டில் இருந்தே அலுவலக பணியை மேற்கொள்ள தொடங்கினர்.

படுக்கை அறை, சமையல் அறை சாப்பாடு மேஜை போன்றவற்றிற்கு நடுவில் அமர்ந்தபடி மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் அலுவலக பணியை புதிய வழியில் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜோன் வில்லியம்ஸ்

ஆனால் தற்போது உலகின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு திரும்பி சென்று பணியை மேற்கொள்ளலாம் என அறிவிப்புகள் வெளிவருகின்றன. ஆனால் உண்மையில் எத்தனை பேர் மீண்டும் அலுவலகம் சென்று பணியை தொடர தயாராக உள்ளனர்?

சமீபத்தில் எஸ்கென்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், பிரிட்டனில் வசிக்கும் 91% மக்கள் வீட்டில் இருந்து அலுவலகப் பணியை மேற்கொள்ள விரும்புகின்றனர் என்பது தெரியவந்தது. குறிப்பிட்ட நேரம் மட்டும் அலுவலகம் சென்றுவிட்டு, மற்ற நேரங்களில் வீட்டில் இருந்தே பணியாற்ற விரும்புவதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஏன் அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற விரும்புகின்றனர்?

‘ஊதிய உயர்வு பெற்றது போல உணர்கிறேன்’

ஜோன் வில்லியம்ஸ் என்ற 43 வயதுடைய மென்பொருள் மேம்பாட்டாளர், ”வீட்டில் இருந்து பணியாற்றுவதால் நிறைய பணம் சேமிக்க முடிந்தது. அலுவலக பணி தவிர வேறு பல பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்த நேரம் கிடைத்தது” என்கிறார்.

நீராலி அமின்

”ஊரடங்கிற்கு முன்பு எனது வாகனத்திற்கான இரண்டு வார பெட்ரோல் செலவு மட்டும் 65 பவுண்டுகளாக இருந்தன. ஆனால் தற்போது பயணத்தில் செலவிடப்படும் நேரமும் மிச்சமானது, மார்ச் மாதம் முதல் காரில் பெட்ரோலை நிரப்பவே இல்லை” என்கிறார் ஜோன் வில்லியம்ஸ்.

”உணவு விடுதிகளில் சென்று நான் செலவு செய்யும் பணமும் தற்போது மிச்சமாகியுள்ளது. புதிதாக ஊதிய உயர்வு எதுவும் இல்லாமலே, தற்போது நிறைய பணம் சேமிக்க முடிந்தது. இதுவரை 1600 பவுண்டுகள் சேமித்துள்ளேன். வாயுப்பு கிடைத்தால், பாதுகாப்பான நேரத்தில் சுற்றுலா பயணம் செல்ல திட்டமிட்டுள்ளேன்.” என்கிறார்.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நேரத்திலும், ஜோன் தனது அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே மேற்கொள்ள அவர் பணிபுரியும் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து அலுவலகப் பணிகளும் இடையூரில்லாமல் சரியாக மேற்கொள்ளப்படுவதால், ஊழியர்களை மீண்டும் அலுவலகம் வரவழைக்கும் யோசனை தற்போது இல்லை என ஜோன் பணிபுரியும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

”குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க வாய்ப்புகிடைத்துள்ளது”

வாட்ஃபோர்டில் கணக்கராக பணிபுரிந்து வந்த நீராலி அமின், வீட்டில் இருந்து அலுவலக பணி மேற்கொள்வதால் தனது மகன்களுடன் நிறைய நேரம் செலவிட முடிகிறது என்கிறார்.

நீராலி அமின்

வீட்டில் இருந்தே அலுவலக பணியாற்றிக்கொண்டு, குழந்தைகளையும் கவனித்துக்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என 39 வயதுடைய நிராலி கூறுகிறார். கணவன் மனைவி இருவரும் அலுவலகம் செல்வதால், தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடியாத சூழல் நிலவியது என்கிறார்.

”வீட்டில் பணியாற்றத் தொடங்கிய முதல் இரண்டு வாரம் சற்று கடினமாக இருந்தது, குழந்தைகள் உணவு உண்ணும் மேஜையில் அமர்ந்து படிக்க தொடங்கினர். எனவே போதிய இடம் இல்லாதது போல் உணர்ந்தேன்” என்கிறார்.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பு இருந்ததை விட தற்போது தனக்கும் தான் குழந்தைகளுக்குமான உறவில் நெருக்கம் அதிகரித்துள்ளது என நிராலி கூறுகிறார். அவர்களின் தேவை என்ன என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள இதுவே சரியான நேரம் என்றும் நிராலி குறிப்பிடுகிறார்.

நிராலியின் கணவர் துஷர் படேலும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்கிறார். ”குடும்பமாக இணைந்து நேரம் செலவிட முடியாத நிலை இருந்தது, ஆனால் தற்போது குழந்தைகளுடன் விளையாடவும் அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கவும் நேரம் கிடைத்துள்ளது என துஷர் கூறுகிறார்”.

பல பெற்றோர்களை போல நிராலி மற்றும் துஷர் இருவருமே வீட்டில் இருந்து பணிபுரிகின்றனர். ஆனால் லண்டனில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால், விரைவில் இவர்கள் அலுவலகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்படலாம்.

”எனது மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது”

வீட்டில் இருந்து அலுவலகப் பணி மேற்கொள்ளும் சாரா தனது மனநிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக கூறுகிறார்.

''எனது மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது''

30 வயதுடைய சாரா அனிமேஷன் துறையில் பணிபுரிகிறார். அலுவலகத்தில் தான் பணியாற்றும்போது அவரை சுற்றி பலர் இருப்பதால், தனது கவனம் திசை திரும்பும் என்கிறார். ஆனால் தற்போது வீட்டில் இருந்து பணியாற்றுவதால் தனது வேலையில் நல்ல கவனம் செலுத்த முடிகிறது என்கிறார்.

அலுவலக பணியின்போது ஏற்படும் மன அழுத்தம் தற்போது இல்லவே இல்லை என்கிறார் சாரா. மேலும் அலுவலகத்தில் நாள் முழுவதும் பதற்றத்துடன் வேலை பார்க்க வேண்டிய நிலை இருக்கும். ஆனால் வீட்டில் அமைதியான சூழலில் பணியாற்றுவதால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே பணியை முடிக்க முடிகிறது என்கிறார். மேலும் தனக்காக நேரம் செலவழிக்க முடிகிறது என்றும் அவர் கூறுகிறார்.

”அலுவலகத்தில் பணியாற்றும்போது எனது அனிமேஷனில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டாலும் நான் என்னை வற்புறுத்திக்கொண்டு எனது பணியை முடிப்பேன். ஆனால் வீட்டில் அந்த நிலை இல்லை, அனிமேஷனில் கவனம் செலுத்த முடியவில்லை என்றால் எனது கணவருடன் உரையாடுவேன், பூனையுடன் விளையாடுவேன், 10 நிமிடம் என்னை நானே திசை திருப்பி ஆசுவாசபடுத்திக்கொள்ள முடியும். பிறகு என் பணியை மீண்டும் தொடங்கும்போது முழுமையாக அதில் கவனம் செலுத்த முடிகிறது”.

மேலும் ரயில் மூலம் அலுவலகம் செல்ல தான் செலவிட்டு வந்த 450 பவுன்களை மிச்சப்படுத்தியதால், தனக்கு இருந்த பொருளாதார நெருக்கடியும் தற்போது குறைந்துள்ளது என்கிறார் சாரா.

தான் பணிபுரியும் அலுவலகத்தில், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதை விரும்பினால் அதையே தொடரலாம் என தன் அலுவலக மேலாளர் கூறியுள்ளதாக சாரா மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். வீட்டில் இருந்து பணியாற்ற முழு சுதந்திரம் இருப்பதால், சாரா தனது கணவருடன் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து தங்கள் அலுவலக பணியை தொடரவும் முயற்சித்து வருகின்றனர்.

”எனது வாடிக்கையாளர்கள் எனக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை தெரிந்துக்கொண்டேன்”

ஏரோபிக்ஸ் பயிற்சியாளரான லாரா, இரண்டு தாசாப்தங்களாக தனியார் நிறுவனம் ஒன்றில் பயிச்சியாளராக பணியாற்றி வந்தார். ஆனால் தற்போது உடற்பயிற்சி கூடங்கள் மூடியுள்ளதால், அவரது வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தன்னிடம் இருந்து ஆலோசனை பெறுவதாக லாரா கூறுகிறார். மேலும் வாடிக்கையாளர்கள் இவருக்கு அளிக்கும் முக்கியத்துத்தை புரிந்துக்கொண்டதால், மீண்டும் தான் பணிபுரிந்த இடத்திற்கு செல்ல விரும்பவில்லை என லாரா கூறுகிறார்.

கொரோனா வைரஸ்:வீட்டில் இருந்து பணியாற்றுவதை பலர் விரும்ப என்ன காரணம் ?

பட மூலாதாரம், Getty Images

தான் பணிபுரிந்து வந்த உடற்பயிற்சி கூடம் 20 ஆண்டுகளாக ஊதிய உயர்வே வழங்கவில்லை என லாரா கவலை தெரிவிக்கிறார்.

”தற்போது ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்வதன் மூலம் போதிய வருமானம் ஈட்ட முடிகிறது. எனவே இன்னும் இரண்டு வாரங்களில் வலைத்தள பக்கம் தொடங்கவுள்ளேன். ஆன்லைன் வகுப்புகளை விரிவுபடுத்தவும் முயற்சி மேற்கொள்கிறேன்” என சாரா நம்பிக்கை தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

Author Image
Nila Raghuraman