Press "Enter" to skip to content

ஹிரோஷிமா, நாகசாகி : அணு குண்டுக்குத் தப்பிய பெண்களின் அனுபவங்கள்

பட மூலாதாரம், Getty Images

Transparent line

இரண்டாம் உலகப் போர் முடியும் கட்டத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசியதன் 75 வது ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் வருகிறது.

அவற்றில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை மதிப்பீடுகள் தான். ஹிரோஷிமாவில் வாழ்ந்த 350,000 பேரில், இந்த குண்டுவீச்சில் 140,000 பேர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. நாகசாகியில் குறைந்தது 74 ஆயிரம் பேர் மாண்டதாகத் தெரிகிறது. இந்த குண்டு வீச்சுகளைத் தொடர்ந்து 1945 ஆகஸ்ட் 14 ஆம் தேதி நேசப் படையினரிடம் ஜப்பான் சரணடைந்ததை அடுத்து ஆசியாவில் திடீரென போர் முடிவுக்கு வந்தது.

ஏற்கெனவே சரணடையும் எண்ணத்திற்கு ஜப்பான் வந்துவிட்டது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அணுகுண்டு வீச்சில் தப்பியவர்கள் ஹிபாகுஷா எனப்படுகின்றனர். குண்டுவீச்சைத் தொடர்ந்து கதிர்வீச்சு விஷத்தன்மை மற்றும் மன ரீதியிலான அழுத்தம் என கொடூரமான அனுபவங்களை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.

வரலாற்றில் மோசமான சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளாக இருக்கும் அந்தப் பெண்களைப் பற்றிய கதைகளை சிறப்பாகக் கூறுபவராக பிரிட்டனைச் சேர்ந்த புகைப்பட செய்தியாளர் லீ கரேன் ஸ்டோவ் இருக்கிறார்.

75 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குண்டுவீச்சுகளின் பாதிப்புகளை தெளிவாக நினைவில் வைத்திருக்கும் 3 பெண்களை ஸ்டோவ் புகைப்படங்கள் எடுத்து நேர்காணல்கள் செய்துள்ளார்.

இந்தக் கட்டுரையில் வரும் தகவல்கள் சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடும்.

டெருக்கோ உயெனோ

1945 ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட போது உயிர்தப்பிய டெருக்கோவுக்கு அப்போது வயது 15.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி : அணுகுண்டுகளுக்குத் தப்பிய பெண்கள்

பட மூலாதாரம், Lee Karen Stow

ஹிரோஷிமா செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனை வளாகத்தில் மழலையர் பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

குண்டு வீச்சு நடந்ததும், மருத்துவமனையில் குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்த பகுதி தீ பிடித்தது. தீயை அணைக்கும் முயற்சியில் டெருக்கோ உதவிகள் செய்தார். ஆனால் அவருடன் தங்கியிருந்த நிறைய குழந்தைகள் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

குண்டுவீச்சு நடந்து ஒரு வாரம் கழித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடூரமான காயங்களைக் குணப்படுத்த இரவு, பகலாக பலரும் வேலை பார்த்ததை இவர் நேரில் பார்த்திருக்கிறார். இவருக்கு சாப்பிட உணவு கிடைக்கவில்லை. தண்ணீரும் சிறிதளவு தான் கிடைத்தது.

படிப்பை முடித்த பிறகு, டெருக்கோ அதே மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். தோல் மாற்று சிகிச்சைகளில் அவர் உதவியாளராக இருந்தார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

நோயாளியின் தொடையில் இருந்து தோலை எடுத்து, தீக்காயத்தால் தோல் உரிந்து போன இடத்தில் அதைப் பொருத்த வேண்டும்.

அணுகுண்டு வீச்சில் உயிர்பிழைத்த டாட்சுயுக்கி என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார்.

முதல் முறையாக டெருக்கோ கருவுற்றிருந்தபோது, குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்குமா, அது உயிர் பிழைக்குமா என்றெல்லாம் அவர் கவலைப்பட்டிருக்கிறார்.

அவருடைய மகள் டொமோக்கோ பிறந்து, உயிர் பிழைத்திருக்கிறார். அது குடும்பத்தைப் பேணுவதில் டெருக்கோவிற்கு அதிக தைரியத்தைக் கொடுத்தது

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி : அணுகுண்டுகளுக்குத் தப்பிய பெண்கள்

பட மூலாதாரம், Lee Karen Stow

“நான் நரகத்திற்குப் போனது கிடையாது. அதனால் அது எப்படி இருக்கும் என்று தெரியாது. ஆனால் நாங்கள் எதிர்கொண்டதைப் போன்ற அனுபவத்தைப் போலத்தான் நரகம் இருக்கக் கூடும். மீண்டும் அதுபோல நடந்துவிட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது” என்றார் டெருக்கோ.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி : அணுகுண்டுகளுக்குத் தப்பிய பெண்கள்

பட மூலாதாரம், Lee Karen Stow

“அணு ஆயுதங்களை அழித்துவிடுவதற்கு தீவிர முயற்சிகள் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் உள்ளாட்சித் தலைவர்கள் தான் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிறகு தேசிய அரசாங்கத்தின் தலைவர்களை அணுக வேண்டும். பிறகு உலகத் தலைவர்களை அணுக வேண்டும்” என்று அவர் கூறினார்.

“இங்கே 75 ஆண்டுகளுக்கு புல் அல்லது மரங்கள் வளராது என்று சொன்னார்கள். ஆனால் அழகான பசுமைவெளிகள் மற்றும் நதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட நகரமாக ஹிரோஷிமா உருவாகியுள்ளது” என்று டெருக்கோவின் மகள் டொமோக்கோ கூறினார்.

“இருந்தாலும் குண்டுவீச்சில் உயிர் தப்பியவர்கள், கதிர்வீச்சு பாதிப்பின் துன்பங்களைத் தொடர்ந்து அனுபவிக்க வேண்டியதாயிற்று. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பற்றிய நினைவுகள் மக்கள் மனதில் இருந்து அகன்று கொண்டிருக்கும் நிலையில், நாங்கள் செய்வது அறியாமல் நடுத் தெருவில் நிற்கிறோம்” என்றார் அவர்.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி : அணுகுண்டுகளுக்குத் தப்பிய பெண்கள்

பட மூலாதாரம், Lee Karen Stow

“எதிர்காலம் நம் கைகளில் உள்ளது. நமக்கு சிந்தனை இருந்தால் மட்டுமே, மற்ற மக்களைப் பற்றி யோசித்தால் மட்டுமே, நாம் என்ன செய்ய முடியும் என உணர்ந்தால் மட்டுமே, அதற்கான செயல்பாடுகளில் இறங்கினால் மட்டுமே, அமைதியை உருவாக்க ஒவ்வொரு நாளும் ஓய்வின்றி உழைத்தால் மட்டுமே அமைதியை ஏற்படுத்துவது சாத்தியமானதாக இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

டெருக்கோவின் பேத்தி குனிக்கோ, “போரையோ அல்லது அணுகுண்டு வீச்சையோ நான் பார்க்கவில்லை. மீண்டும் உருவாக்கப்பட்ட நிலையில் உள்ள ஹிரோஷிமாவை தான் எனக்குத் தெரியும். பழையனவற்றை நான் கற்பனை மட்டுமே செய்து பார்க்க முடியும்” என்று கூறினார்.

“ஆகவே, அணுகுண்டு வீச்சில் உயிர்பிழைத்த ஒவ்வொருவரும் சொல்வதைக் கேளுங்கள். அணுகுண்டு வீச்சு குறித்த உண்மைகளை, ஆதாரங்களின் அடிப்படையில் நான் படிக்கிறேன்” என்றார் அவர்.

Transparent line
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி : அணுகுண்டுகளுக்குத் தப்பிய பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

Transparent line

“அன்றைய தினம் நகரில் எல்லாமே எரிந்து போய்விட்டன. மக்கள், பறவைகள், தட்டாம்பூச்சிகள், புற்கள், மரங்கள் என எல்லாமே எரிந்துவிட்டன.”

குண்டுவீச்சுக்குப் பிறகு மீட்பு நடவடிக்கைகளுக்காக நகரில் நுழைந்தவர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நலனை அறிய வந்தவர்களிலும் பலர் மாண்டு போனார்கள். அதையும் மீறி உயிர்பிழைத்தவர்கள் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாயினர்.”

“ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சில் உயிர் பிழைத்தவர்களுடன் மட்டுமின்றி, யுரேனியம் சுரங்கத் தொழிலாளர்களுடனும், அந்த சுரங்கங்கள் அருகே வாழும் மக்களுடனும், அணு ஆயுதங்கள் பரிசோதனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுடனும், அணு ஆயுத பரிசோதனை சூழலில் உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளானவர்களுடனும் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொள்ள நான் முயற்சி செய்திருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

line

எமிக்கோ ஒக்காடா

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி : அணுகுண்டுகளுக்குத் தப்பிய பெண்கள்

பட மூலாதாரம், Yuki Tominaga

ஹிரோஷிமாவில் குண்டுவீச்சு நடந்தபோது எமிக்கோவுக்கு 8 வயது. அவருடைய மூத்த சகோதரி மியெக்கோவும், நான்கு உறவினர்களும் அதில் கொல்லப்பட்டனர்.

எமிக்கோ மற்றும் அவருடைய குடும்பத்தினரின் பல புகைப்படங்கள் அதில் எரிந்துவிட்டன. உறவினர்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த படங்கள் தப்பிவிட்டன. அதில் அவருடைய சகோதரியின் படங்களும் உள்ளன.

“என் சகோதரி அன்று காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டார். உன்னை பிறகு சந்திக்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். அப்போது அவருக்கு வயது 12” என்று எமிக்கோ தெரிவித்தார்.

“ஆனால் அவர் திரும்பி வரவே இல்லை. அவருக்கு என்ன ஆனது என்று யாருக்கும் தெரியாது.”

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி : அணுகுண்டுகளுக்குத் தப்பிய பெண்கள்

பட மூலாதாரம், Courtesy of Emiko Okada

Transparent line

“என் பெற்றோர்கள் தீவிரமாக அவரைத் தேடினர். அவருடைய உடல்கூட கிடைக்கவில்லை. அதனால் அவர் எங்கேயோ உயிருடன் இருக்கிறார் என்று பெற்றோர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.”

“அப்போது என் தாயார் கருவுற்றிருந்தார். ஆனால் கரு கலைந்துவிட்டது.”

“எங்களுக்கு சாப்பிட எதுவும் இல்லை. கதிர்வீச்சு பற்றி எங்களுக்குத் தெரியாது. எனவே எது கிடைத்தாலும் நாங்கள் சாப்பிட்டோம். அது கதிர்வீச்சு பாதிப்பு இருக்குமா என்பது பற்றி தெரியாமலே சாப்பிட்டோம்.”

“சாப்பிட எதுவும் இல்லாத நிலையில், மக்கள் திருடத் தொடங்கினார்கள். உணவுதான் மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. தண்ணீர் கிடைப்பது அபூர்வமாக இருந்தது. முதலில் அப்படித்தான் மக்கள் வாழ்ந்தார்கள். ஆனால் அவையெல்லாம் மறந்து போய்விட்டன.”

“பிறகு என் முடி உதிரத் தொடங்கியது. ஈறுகளில் ரத்தம் கசியத் தொடங்கியது. தொடர்ந்து சோர்வாக இருந்தேன். எப்போதும் படுத்துக் கொண்டே இருந்தேன்.”

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி : அணுகுண்டுகளுக்குத் தப்பிய பெண்கள்

பட மூலாதாரம், Courtesy of Emiko Okada

Transparent line

“கதிர்வீச்சு என்றால் என்ன என்று அப்போது யாருக்கும் எதுவும் தெரியாது. 12 ஆண்டுகள் கழித்து எனக்கு சிவப்பணு வளர்ச்சி இல்லாததால் ஏற்பட்ட சோகை நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.”

“ஒவ்வொரு ஆண்டும் சில சமயங்களில் சூரிய மறைவு நேரத்தில் வானம் அடர் சிவப்பு நிறமாக இருக்கும். மக்களின் முகங்களே சிவப்பாக தோன்றும் அளவுக்கு அந்த சிவப்பின் அடர்வு இருக்கும்.”

“அதுபோன்ற நேரங்களில், அணுகுண்டு வீச்சு நடந்த நாளில் சூரிய மறைவு நேரம் எப்படி இருந்தது என்பதை என்னால் நினைக்காமல் இருக்க முடியாது. மூன்று நாட்கள் இரவு பகலாக நகரம் எரிந்து கொண்டிருந்தது.”

“சூரியன் மறைவையே நான் வெறுக்கிறேன். இப்போதும் கூட சூரியன் மறையும் தருணம், அந்த எரியும் நகரை எனக்கு நினைவுபடுத்துவதாக உள்ளது.”

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி : அணுகுண்டுகளுக்குத் தப்பிய பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

“அணுகுண்டு வீச்சில் உயிர்பிழைத்தவர்களில் பலரும், இதையெல்லாம் பேச முடியாமல் அல்லது குண்டுவீச்சால் ஏற்பட்ட பாதிப்பால் இறந்துவிட்டார்கள். அவர்களால் பேச முடியாது. எனவே நான் பேசுகிறேன்.”

“உலக அமைதி பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். ஆனால் அதற்காக மக்கள் செயல்பாடு காட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒவ்வொருவரும் தன்னால் இயன்றதை இதற்காகச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.”

“நம்முடைய எதிர்காலமாக இருக்கும் நமது பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும், தினமும் புன்னகையுடன் வாழக் கூடிய வகையிலான உலகை உருவாக்க நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

line

ரெய்க்கோ ஹடா

நாகசாகியில் அணு குண்டுவெடிப்பு நடந்தபோது, ரெய்க்கோ ஹடாவிற்கு 9 வயது.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி : அணுகுண்டுகளுக்குத் தப்பிய பெண்கள்

பட மூலாதாரம், Lee Karen Stow

Transparent line

முன்னதாக அன்று காலையில், விமானத் தாக்குதல் குறித்த எச்சரிக்கை இருந்தது. எனவே ரெய்க்கோ வீட்டிலேயே இருந்துவிட்டார்.

அச்சம் நீங்கிவிட்டதாக அறிவிப்பு வந்ததும், அருகில் உள்ள கோவிலுக்கு அவர் சென்றார். தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடந்ததால் பள்ளிக்குச் செல்லாத அந்தப் பகுதி குழந்தைகள் அந்தக் கோவிலில் தான் படிப்பார்கள்.

கோவிலில் சுமார் 40 நிமிடம் ஆசிரியர் பாடம் நடத்துவார். அது முடிந்த்தும் ரெய்க்கோ வீட்டுக்கு வருவார்.

“நான் எங்கள் வீட்டின் வாயிலுக்கு வந்தேன். ஓர் அடிகூட உள்ளே எடுத்து வைக்கவில்லை” என்று ரெய்க்கோ விவரித்தார்.

A landscape of collapsed buildings

பட மூலாதாரம், Getty Images

“அந்த சமயத்தில் திடீரென அது நடந்தது. பிரகாசமான வெளிச்சம் என் கண்களைத் தாக்கியது. மஞ்சள், காக்கி மற்றும் ஆரஞ்சு நிறத்தில் அவையெல்லாம் சேர்ந்த கலவையான நிறமாக அது இருந்தது.”

“அது என்ன என்று பார்ப்பதற்குக் கூட எனக்கு அவகாசம் இல்லை. திடீரென எல்லாமே வெள்ளையாகிவிட்டது.”

“நான் மட்டும் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தேன். அடுத்த விநாடி பெரிய சப்தம் கேட்டது. பிறகு எனக்கு எதுவுமே தெரியவில்லை.”

“சிறிது நேரம் கழித்து நினைவுக்கு வந்தேன். அவசர தேவை ஏற்பட்டால், விமானத் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான பதுங்கு குழிகளுக்குள் சென்றுவிட வேண்டும் என்று எங்களுடைய ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருந்தார். எனவே உள்ளே இருந்த என் தாயாரை அழைத்துக் கொண்டு, அருகில் இருந்த பதுங்கு குழிக்குச் சென்றேன்.”

“எனக்கு ஒரு சிராய்ப்பு கூட இல்லை. கோன்பிரா மலைதான் என்னைக் காப்பாற்றியது. ஆனால் மலையின் மறுபக்கம் இருந்தவர்கள் நிலை வேறு மாதிரி இருந்தது. அவர்கள் கொடூரமான பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தனர்.”

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி : அணுகுண்டுகளுக்குத் தப்பிய பெண்கள்

பட மூலாதாரம், Courtesy of Reiko Hada

“நிறைய பேர் கோன்பிரா மலைக்கு ஓடினர். கண்கள் வெளியில் பிதுங்கிய நிலையில், கோரமான தலைமுடிகளுடன், ஏறத்தாழ நிர்வாணமாக, தீக்காயங்கள் அடைந்து, உடலின் தோல்கள் எரிந்து பிய்ந்து தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் மலைக்கு ஓடினார்கள்.”

“என் தாயார் வீட்டில் இருந்த துண்டுகள் மற்றும் போர்வைகளை எடுத்துக் கொண்டார். தப்பி ஓடிய அந்தப் பகுதியைச் சேர்ந்த மற்ற பெண்களுடன் அருகில் கல்லூரியில் இருந்த ஆடிட்டோரியத்துக்கு ஓடினோம். அங்கு அவர்கள் படுத்துக் கொள்ள முடிந்தது.”

“அவர்கள் தண்ணீர் கேட்டார்கள். அவர்களுக்கு தண்ணீர் தரும்படி எனக்குச் சொன்னார்கள். எனவே ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள ஆற்றுக்குச் சென்று அவர்களுக்குத் தண்ணீர் எடுத்து வந்தேன்.”

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி : அணுகுண்டுகளுக்குத் தப்பிய பெண்கள்

பட மூலாதாரம், Lee Karen Stow

Transparent line

“தண்ணீரை விழுங்கியதும் அவர்கள் இறந்தனர். ஒருவரை அடுத்து இன்னொருவர் என அடுத்தடுத்து இறந்தார்கள்.”

“அது கோடைக் காலம். இறந்தவர்களின் உடல்களில் மாமிசப் புழுக்கள் உருவாகிவிட்டதாலும் மற்றும் மோசமான நாற்றம் வீசியதாலும், உடனடியாக உடல்களை எரிக்க வேண்டியதாயிற்று. கல்லூரியின் நீச்சல் குளத்தில் எல்லா உடல்களையும் குவித்துப் போட்டு, மரக்கட்டைகளை மேலே போட்டு தீ வைத்தனர்.”

“அதில் யாரெல்லாம் கிடந்தார்கள் என்று அறிந்து கொள்வது கஷ்டமான விஷயம். அவர்கள் மனிதர்களைப் போல சாகவில்லை.”

“எதிர்கால தலைமுறையினர் யாருக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டுவிடக் கூடாது. அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.”

“மக்கள் தான் அமைதியை உருவாக்க வேண்டும். நாம் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும், வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும், அமைதிக்கான நம்முடைய நாட்டம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்” என்று அவர் கூறினார்.

All photographs subject to copyright.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »