Press "Enter" to skip to content

வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: செய்தியாளர் சந்திப்பை விட்டுச்சென்ற டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது வெள்ளை மாளிக்கைக்கு வெளியே ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுடப்பட்டார்.

திங்களன்று, டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது டிரம்பின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அவரின் அருகில் சென்று காதுக்குள் முணுமுணுத்தார்.

அதன்பிறகு டிரம்ப் “என்ன நடக்கிறது” என்று கேட்டு, பின் செய்தி அறையைலிருந்து சென்றார்.

அதன்பின் ஒன்பது நிமிடங்கள் கழித்து திரும்பிவந்த டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் வெள்ளை மாளிக்கைக்கு அருகில் ஆயுதம் வைத்திருந்த நபர் ஒருவர் அமெரிக்க பாதுகாப்பு சேவையால் சுடப்பட்டார் என்று தெரிகிறது என்றார்.

இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், ஆனால் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

சுடப்பட்ட நபர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

`இந்த சம்பவத்தால் பதற்றம் அடைந்துள்ளீர்களா` என டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டபோது. “என்னை பார்த்தால் பதற்றமாக தெரிகிறதா,” என டிரம்ப் கேட்டார்.

சுடப்பட்ட நபர் மன நிலை பாதிக்கப்பட்டவரா என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லெபனான் வெடிப்புச்சம்பவம்: பிரதமர் ஹஸ்ஸன் டியாப் அரசு கூண்டோடு விலகல்

லெபனான் பிரதமர்

பட மூலாதாரம், Getty Images

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை துறைமுக ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால், மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், அந்த நாட்டில் பிரதமர் ஹஸ்ஸன் டியாப் தலைமையிலான அரசு கூண்டோடு பதவி விலகியிருக்கிறது.

இது தொடர்பாக பிரதமர் ஹஸ்ஸன் டியாப் தலைமையில் அமைச்சரவை இன்று மாலை கூடி விவாதித்தது.

பெய்ரூட் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, நாடு தழுவிய அளவில் நடக்கும் போராட்டங்கள் குறித்தும், 200 பேருக்கும் அதிகமானோர் பலியான சம்பவத்தில் மக்களின் எதிர்ப்புணர்வுக்கு பதில் அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

முன்னதாக, லெபனான் நீதித்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தகவல் துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர் உள்பட அனைவரும் முறைப்படி பதவி விலகும் கடிதத்தைப் பிரதமரிடம் அளித்தனர்.

“கனிமொழி, நீங்கள் இந்தியரா?” எதிர்க்குரல் எழுப்பும் தென்னிந்தியா

கனிமொழி

பட மூலாதாரம், THE INDIA TODAY GROUP

திமுக எம்.பி கனிமொழிக்கு விமானநிலையத்தில் ஏற்பட்ட அனுபவத்துக்கு எதிராகப் பல அரசியல்வாதிகள் குரல் எழுப்பி உள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை, “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கேட்ட நிகழ்வு சர்ச்சையானது.

இதையடுத்து, கனிமொழியை டெல்லி விமான நிலையத்திலேயே சந்தித்து நடந்த சம்பவம் தொடர்பாக சிஐஎஸ்எஃப் உயரதிகாரிகள் வருத்தும் தெரிவித்தனர்.

மேலும், எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் நிர்ப்பந்திப்பது தங்களுடைய படையின் கொள்கை கிடையாது என்றும் சிஐஎஸ்எஃப் தலைமையகம் அதன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தது.

இந்தியப் பொருளாதார நெருக்கடியை தீர்க்க யோசனை தரும் முன்னாள் பிரதமர்

மன்மோகன் சிங்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீள, “உடனடியாக” மூன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

“இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி” என்று பரவலாக மதிக்கப்படுபவரும், பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டாக்டர் மன்மோகன் சிங், இமெயில் மூலம் பிபிசியின் கேள்விகளுக்குப் பதில்களை அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவரை நேரில் சந்தித்து பேட்டி எடுக்க வாய்ப்பில்லாமல் போனது. காணொளி மூலம் பேட்டி அளிக்க அவர் மறுத்துவிட்டார்.

இந்தியாவின் பொருளாதாரத்தை, எதிர்வரும் காலத்தில் பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கு, 3 நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்த இமெயில் கலந்தாடலில் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ஆற்றில் சிக்கிய இளைஞர்களை மீட்க சேலையை கயிறாக மாற்றிக் காப்பாற்றிய பெண்கள்

பெண்கள்

பெரம்பலூர் மாவட்டம், மருதையாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் சிக்கிய சில இளைஞர்களை தங்களின் சேலையை கயிறாக மாற்றி 3 பெண்கள் காப்பாற்றியுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் 12 பேர் கிரிக்கெட் விளையாடி முடித்து, அருகே இருக்கும் கொட்டரை மருதையாற்றை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர்.

பிறகு அங்கிருக்கும் உபரிநீர் வடிகாலில் குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு குளித்துக்கொண்டிருக்கும் போது நீரில் சிக்கினார்கள்.

இதனால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞர்களை, ஆற்றின் மற்றொரு பகுதியில் குளித்துக்கொண்டிருந்த செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பெண்கள், உடனே தங்களின் சேலையை கயிறாக மாற்றி இளைஞர்களைக் காப்பாற்ற முயன்றனர்.

காஷ்மீர், லடாக்: குளிர்காலத்திற்காக இந்திய ராணுவத்தின் தயார்நிலை எப்படி உள்ளது?

ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

ரயில் நிலையத்தில் இருந்து வண்டி புறப்படவுள்ளது. பயணிகள் இன்னும் ரயிலில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக இந்த செயல்முறைக்கு பழக்கமாகிவிட்ட மக்கள், கூட்டமாக இருந்தபோதிலும், ரயிலில் ஏறிவிடுகிறார்கள். திடீரென்று பயணிகள் குழு ஒன்று வருகிறது.

அவர்களும் ரயிலில் ஏற வேண்டியிருந்தது. ஆனால் இவர்களால் ஏற முடியவில்லை, ஏனெனில் ரயில், இதை விட அதிக நேரம் காத்திருக்க முடியாது.

இதே போல ஒன்றுதான் கிழக்கு லடாக்கிலும் நடக்கிறது. அங்கு, 3 மாதங்களுக்கும் மேலாக இந்தியா மற்றும் சீன வீரர்கள் வெவ்வேறு இடங்களில், எதிரெதிரே நிற்கின்றனர்.

இரு தரப்பினரும் பின்வாங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தாலும், தங்கள் நிலையை வலுப்படுத்தும் பொருட்டு இப்பகுதிக்கு அனுப்பப்பட்ட கூடுதல் துருப்புக்களை அங்கேயே நிறுத்தி வைக்க இந்திய இராணுவம் முடிவு செய்துள்ளது என்று பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »