- ஜாக் குட்மேன் & கிரிஸ்டோஃபர் கிள்ஸ்
- பிபிசி ரியாலிட்டி செக்
பட மூலாதாரம், Getty Images
பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராட அமேசான் காடுகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானது என கருதப்படுகிறது.
ஆனால் அவை காட்டுத்தீயால் கருகும் அபாயத்தில் இருக்கின்றன.
உலகளவில் அமேசான் மழை காடுகளின் முக்கியத்துவம் குறித்து பல நாடுகள் விவாதித்து வருகின்றன.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆரம்பக்கட்டத்திலேயே காட்டுத் தீ அதிக அளவில் பரவி வருவது அறிவியலாளர்களை கவலையடைய செய்துள்ளது.
”அமேசான் காடுகளில் மீண்டும் பெரியளவில் தீ பிடித்துள்ளது என வெளிவரும் செய்திகள் உண்மை அல்ல” என பிரேசில் அதிபர் ஜெயர் போல்சனாரோ சமீபத்தில் கூறினார்.
தனது நாட்டு அரசாங்கம் ஆதாரங்களுடன் காட்டுத்தீ குறித்த தரவுகளுக்கும் அதிபரின் கருத்துக்கும் அதிக முரண்பாடுகள் உள்ளன.
இந்த ஆண்டு காட்டுத் தீ குறித்து வெளிவந்த தரவுகள் என்ன சொல்கின்றன?
பிரேசிலின் அமேசான் காடுகளில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதா?
மழை காடுகள், புல்வெளி, ஈரம் நிறைந்த மண் உள்ள நிலப்பரவு என பல வகையான சுற்றுசூழல் உள்ள மிக பெரிய நாடாக பிரேசில் விளங்குகிறது.
அமேசான் மழை காடுகளில் 60% பிரேசிலில் உள்ளன.
தீங்கு விளைவிக்கும் கரியமில வாயுவை உறிஞ்சும் தன்மை உள்ளதாக மழைக்காடுகள் விளங்குகின்றன. எனவே இந்த காடுகளில் தீ பரவுவது மிகவும் ஆபத்தானது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை பிரேசிலின் அமேசான் மழைக் காடுகளில் பல முறை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஏற்பட்ட எண்ணிக்கையை விட தற்போது சற்று குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த மாதம் திடீரென காட்டுத் தீ அதிகம் பரவ தொடங்கியது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2010-2019ல் ஜூலை மாதம் பதிவான சராசரி காட்டுத் தீ பரவலின் எண்ணிக்கையை விட, 2020ம் ஆண்டு ஜூலை மாதம் காட்டுத்தீ பரவலின் சராசரி எண்ணிக்கை 55.6% அதிகமாக பதிவாகியுள்ளது என ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரேசில் அறிவியலாளர் பேராசிரியர் மார்ஷியா காஸ்ட்ரோ கூறுகிறார்.
“அதே போல ஜுன் மாத சராசரியும் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில்தான் அதிக அளவிலான காட்டுத்தீ பரவல் ஏற்படும். அதனால், தற்போது ஜூன் மற்றும் ஜூலையிலேயே தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிக்கிறது” என்கிறார் பேராசிரியர் கேஸ்ட்ரோ.
கடந்த ஆகஸ்டில் பதிவான காட்டுத்தீ பரவலின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு அதிகம் பதிவாகியிருப்பது எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
2010ம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள காட்டுத் தீ இரண்டாவது மிக அதிக எண்ணிக்கையை கொண்டிருக்கிறது.
அமேசான் மழைக்காடுகளின் வெப்பமண்டல சூழலியல் நிபுணர் டாக்டர் மைக்கேல் கலாமண்டீன் வழங்கிய செயற்கைக்கோள் தரவுகளின்படி, 2020ம் ஆண்டின் முதல் ஏழு மாதத்தில் 13,000 சதுர கிலோமீட்டர் அமேசான் மழைக்காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. அதாவது லண்டனை விட எட்டு மடங்கு பெரிய நிலப்பரப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தீப்பிடித்த காடுகளில் உள்ள மரங்களை மீண்டும் வளர செய்வது அவ்வளவு எளிதல்ல என்று டாக்டர் கலாமண்டீன் கூறுகிறார்.
காடுகள் அழிந்துவிட்டால், அது முழுமையாக அழிந்துவிட்டது என்றே அர்த்தம். தீ பிடித்த காடுகள் 100% மீண்டும் புத்துயிர் பெறுவதில்லை என கலாமண்டீன் குறிப்பிடுகிறார்.
ஆகஸ்ட் 11 தேதி அன்றும் அந்த வாரம் முழுவதும், அமேசானில் குறிப்பிடத்தக்க அளவு காட்டுத் தீ ஏற்பட்டது. பாரா, மேட்டோ க்ரோசோ, அமசோனியா மற்றும் ரொண்டோனியா மாகாணங்களில் அதிக எண்ணிக்கையிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது
கடந்த ஆண்டு பிரேசிலின் வட-கிழக்கு பகுதியான அல்டாமிராவில் கடுமையான காட்டுத் தீ பாதிப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு காட்டுத் தீ அதிகரிக்க காரணம் என்ன?
இந்த ஆண்டு கடுமையான காட்டுத் தீ ஏற்பட இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக பிரேசிலின் காலநிலை அறிவியலாளர் கார்லோஸ் நோபிரே குறிப்பிடுகிறார்.
ஆண்டுதோறும் இந்த நேரத்தில் ஏற்படும் வறட்சியை விட இந்த ஆண்டு அதிக வறட்சி நிலவுகிறது. பூமியில் ஈரத்தன்மை மிகவும் குறைந்து காணப்படுகிறது. வட அட்லான்டிக் பகுதியில் உள்ள தண்ணீரில் வெப்பம் அதிகரித்துள்ளது. இவ்வாறு வெப்பம் அதிகரிக்கும்போது தென் அமேசான் பகுதியில் குறைந்தளவிலேயே மழை பொழிவு இருக்கும் என பேராசிரியர் கார்லோஸ் குறிப்பிடுகிறார்.
இரண்டாவதாக கடந்த ஆண்டு பல மரங்கள் வெட்டப்பட்டன. தற்போது அந்த மரங்கள் தீக்கு இறையாகின்றன, அதே சமயம் அவை தீ ஏற்படவும் காரணமாக அமைந்துவிட்டது.
சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் காடு அழிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அமேசான் காடுகளில் ராணுவத்தினர் முகாமிட்டு இருந்ததால் பல மரங்கள் தீக்கு இரையாவது தடுக்கப்பட்டது.
ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் காடு அழிப்பு நடவடிக்கைகளை கட்டுபடுத்தும் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். அதே நேரம் அதிபர் போல்சனாரோ விவசாய நிலங்களுக்கு எரியூட்டுவதற்கு 4 மாதம் தடை விதித்திருந்தார்.
காட்டுத் தீ குறித்த புகார்களை பொது மக்கள் பதிவு செய்ய துணை அதிபர் ஹாமில்டன் மௌராவ் சமீபத்தில் ஒரு செயலி ஒன்றை அறிமுகம் செய்தார். ஆகஸ்ட் மாதம் காட்டுத் தீயை கட்டுப்படுத்த களத்தில் இறங்கி வேலை செய்ய போவதாகவும் ஹாமில்டன் மௌராவ் பிபிசியிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
எனினும் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களுக்கு இதுகுறித்து இன்னும் பல சதேகங்கள் இருப்பதாக பிபிசி உலக சேவை செய்தியாளர் கமீலியா கோஸ்டா குறிப்பிடுகிறார்.
சட்டவிரோதமாக கடத்தப்பட்டிருந்த 28,100 கன மீட்டர் மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பிரேசிலின் பாதுகாப்புத் துறை குறிப்பிடுகிறது. இதற்கு அபராதமாக 72.6 மில்லியன் டாலர்கள் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், இங்கு காட்டுத் தீ அதிகரித்து வருவதால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என பிரேசில் அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
வேறு எந்த நாடுகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது?
கடந்த ஆண்டு இதே நேரத்தில் அமேசான் பகுதிகளான கொலம்பியா, பெரு, வெனீசுவேலா உள்ளிட்ட இடங்களிலும் காட்டுத் தீ ஏற்பட்டது.
வெனீசுவேலாவில் காட்டுத் தீ அதிகரிக்க தங்க சுரங்கங்கள் தோண்டப்படுவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
2016ம் ஆண்டு அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மடுரோ பொருளாதார வளர்ச்சிக்காக தங்க சுரங்கங்கள் மூலம் கிடைக்கும் லாபத்தை வரவேற்க தொடங்கினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com