Press "Enter" to skip to content

சேதுராமன் பஞ்சநாதன்: ஒபாமா, டிரம்ப் ஆதரவுடன் அமெரிக்காவின் அதிகாரமிக்க பதவியை அலங்கரிக்கும் தமிழர் – #தமிழர்_பெருமை

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Arizona State University

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் 13வது கட்டுரை.)

உலகமெங்கும் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களில் பெரும்பாலானோருக்கு கனவு நாடாக காலங்காலமாக விளங்கி வருவது அமெரிக்கா என்றால் அது மிகையாகாது. அரசியல், ராணுவம் தொடங்கி அறிவியல் – தொழில்நுட்பம் வரை எண்ணற்ற வடிவங்களில் அசைக்க முடியாத வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்காவில் சுமார் 10 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இது அமெரிக்க மக்கள் தொகையில் வெறும் 0.3 சதவீதம் மட்டுமே.

ஆனால், சுந்தர் பிச்சை, இந்திரா நூயி, கமலா ஹாரிஸ், மெய்யா மெய்யப்பன், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எண்ணற்ற அமெரிக்க தமிழர்கள் அந்த நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை விளக்க வேண்டிய அவசியமில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமெரிக்க அரசின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளில் ஒன்றான தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக சமீபத்தில் பதவியேற்றுள்ளார் தமிழரான சேதுராமன் பஞ்சநாதன். அமெரிக்காவின் அறிவியல் – தொழில்நுட்ப துறையில் வியத்தகு தாக்கத்தை செலுத்தக்கூடிய இந்த அமைப்பின் இயக்குநராக தமிழர் ஒருவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்த சேதுராமன் பஞ்சநாதன், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவால் 2014ஆம் ஆண்டு தேசிய அறிவியல் வாரியத்தின் (National Science Board) உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது டொனால்டு டிரம்பின் ஆதரவுடன் தேசிய அறிவியல் கழகத்தின் (National Science Foundation) இயக்குநராக நியமிக்கப்பட்டதன் மூலம் வரலாறு படைத்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு மத்தியில் ஒரு வெளிநாட்டு அரசின் மிக உயர்ந்த பதவியை அடைந்தவர்களின் பட்டியலில் சேதுராமனும் இணைந்துள்ளார்.

சேதுராமன்

பட மூலாதாரம், Arizona State University

தனது இளமைக்காலத்தில் சென்னை நகர வீதிகளில் கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த நாட்டம் மிக்கவராக திரிந்த சேதுராமன், பின்னாளில் கனடா மற்றும் அமெரிக்காவில் பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் பல சாதனைகளை புரிந்து தற்போது அமெரிக்க அதிபர்களின் ஆதரவுடன் புதிய உச்சத்தை அடைந்தது எப்படி என்பதை பிபிசி தமிழிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்த பதவி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

அமெரிக்கா என்றால் அறிவியல் – தொழில்நுட்பத்திலும் அதனால் ராணுவத்திலும் முன்னேறிய நாடு என்று உலகம் முழுவதும் சொல்லப்படும் நிலையை அந்த நாடு அடைந்ததற்கும் தற்போது சேதுராமன் பஞ்சநாதன் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய அறிவியல் கழகத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு.

ஆம், 1950ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் தொடங்கப்பட்ட தன்னாட்சி அமைப்பான இது, “அறிவியலின் முன்னேற்றத்தை ஊக்குவித்தல், தேசிய சுகாதாரம், செழுமை மற்றும் நலனை மேம்படுத்துதல், தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துதல்…” ஆகியவற்றையே முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

சமூகம்

தமிழர் பெருமை தொடரின் பிற கட்டுரைகளுக்கான இணைப்புகள்:

இதுகுறித்து பேசிய சேதுராமன் பஞ்சநாதன், “நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் அறிவியல் – தொழில்நுட்பத்துறையில் அமெரிக்கா முதன்மையான நாடாக திகழ்வதை உறுதிசெய்யும் முக்கியமான பணியை தேசிய அறிவியல் கழகம் மேற்கொள்கிறது. இதற்காக, அமெரிக்கா முழுவதிலுமிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சி முன்மொழிவுகளிலிருந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து அதற்கு தேவையான நிதி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்வதே எங்களது தலையாய பணி” என்று கூறுகிறார்.

“ஒரு திறன்பேசி முதல் எந்த தொழில்நுட்ப கருவியை நீங்கள் எடுத்துக்கொண்டாலும் அதில் உள்ள அநேக பகுதிகள் அல்லது தொழில்நுட்பங்கள் அமெரிக்க அறிவியல் கழகத்தின் நிதியுதவியால் கண்டுபிடிக்கப்பட்டவையாக இருக்கும். மேலும், அவ்வாறாக ஆராய்ச்சி செய்தவர்கள் பலரும் நோபல் பரிசு உள்ளிட்ட எண்ணற்ற பரிசுகளையும் பாராட்டுகளையும் வென்றவர்களாக உள்ளதை வரலாறு சொல்கிறது” என்று அவர் கூறுகிறார்.

சேதுராமன்

பட மூலாதாரம், Arizona State University

அமெரிக்க அறிவியல் கழகத்தின் தடையற்ற செயல்பாட்டுக்காக பெரியளவிலான தொகை ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டில் மட்டும் 8.3 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் அறுபதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை அமெரிக்க அரசு இந்த அமைப்புக்கு வழங்குகிறது.

பராக் ஒபாமா, டொனால்டு டிரம்பின் ஆதரவை பெற்றவர்

அமெரிக்காவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய கண்டுபிடிப்புகளின் பிறப்பிடமாக விளங்கும் இந்த அதிகாரம் மிக்க அமைப்பின் இயக்குநர் பதவியில் ஒருவர் அமர்வது என்பது சாதாரணமான காரியமல்ல.

சென்னையில் தனது பள்ளிப்படிப்பையும், 1981 முதல் 1986க்கு இடைப்பட்ட காலத்தில் பெங்களூரு மற்றும் சென்னையில் தனது உயர்கல்வியையும் பயின்ற பஞ்சநாதன், பிறகு கனடாவுக்கு சென்று ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை முடித்தவுடன், அங்கேயே ஏழாண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார். பிறகு, 1997இல் அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அறிவியல் கழகத்தின் இயக்குநராக பதவியேற்பதற்கு முன்பு வரை, அரிசோனா பல்கலைக்கழகத்தில் சுமார் 23 ஆண்டுகள் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய சேதுராமன், கணினி அறிவியல் துறையில் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை செய்ததோடு, தனது மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டியாகவும் விளங்கினார். சேதுராமனின் காலத்தில்தான் அரிசோனா பல்கலைக்கழகம் ஆராய்ச்சித்துறையில் அமெரிக்காவின் சிறந்த கல்வி நிறுவனமாக உருவெடுத்ததாக அந்த நாட்டு நாளிதழ்கள் இவருக்கு புகழாரம் சூட்டுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், கடந்த 2014ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக சேதுராமனை நியமித்தார். இந்த பதவியில் ஒரு தமிழர் அல்லது இந்தியர் நியமிக்கப்படுவது அதுவே முதல்முறை. தனது பல்கலைக்கழகம், ஆராய்ச்சி அமைப்புகள் சார்ந்த பணிகளோடு இந்த பொறுப்பிலும் திறம்பட செயல்பட்டு வந்த சேதுராமன் பஞ்சநாதனை தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக நியமிப்பதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார்.

சேதுராமன்

பட மூலாதாரம், Sethuraman Panchanathan

ஆனால், அமெரிக்காவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் இதன் தலைமை பொறுப்பில் ஒருவரை நியமிக்க அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலும் கட்டாயம். டிரம்பை மையமாக வைத்து அமெரிக்க செனட் சபையில் பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டு கொண்டிருந்த அந்த சமயத்திலும், சேதுராமன் பஞ்சநாதனை தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக நியமிக்கும் முடிவு அவை உறுப்பினர்களால் கடந்த ஜூன் 19ஆம் தேதி ஒருமனதாக ஏற்கப்பட்டது.

சமூகம்

தமிழர் பெருமை தொடரின் பிற கட்டுரைகளுக்கான இணைப்புகள்:

ஆளும் குடியரசு கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையில் அரசியல் உரசல்கள் உச்சத்தில் இருந்தபோதும், அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற்ற 59 வயதாகும் சேதுராமன் பஞ்சநாதன் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் 15ஆவது இயக்குநராக கடந்த ஜூன் 23ஆம் தேதி பொறுப்பேற்றார். அதன் மூலம், இந்த பதவியை ஏற்கும் முதல் தமிழர், இரண்டாவது இந்தியர் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சேதுராமன், “வெவ்வேறு காலகட்டங்களில் இரண்டு அமெரிக்க அதிபர்களின் ஆதரவை பெற்றது மிக்க மகிழ்ச்சி. எனது இளமைக்காலம் முதல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டதால் இந்த நிலையை அடைய முடிந்தது என்று நினைக்கிறேன். அமெரிக்கர்களின் ஆய்வுகளுக்கு துணைபுரிவது மட்டுமின்றி உலக நாடுகளை ஒன்றிணைத்து அறிவியல் – தொழில்நுட்பத்துறையில் ஆராய்ச்சிகளை முன்னெடுப்பது என்பது எனது இந்த ஆறாண்டுகால பணியின் முக்கிய நோக்கமாக இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

“இளமைக்காலம் என்றால் சென்னையும், கிரிக்கெட்டுமே நினைவுக்கு வரும்”

சேதுராமன்

பட மூலாதாரம், Sethuraman Panchanathan

“நான் சென்னையில்தான் பிறந்தேன். பேராசிரியரான எனது தந்தை சிறுவயதிலிருந்தே எனக்கு அறிவியல் குறித்த ஆர்வத்தை ஊட்டினார். எனது தாயாரோ கடின உழைப்பு, நற்பண்புகள் உள்ளிட்டவற்றை சொல்லிக்கொடுத்து என்னை வளர்த்தெடுத்தார். அதுமட்டுமின்றி, எனது வாழ்க்கையின் அங்கமாக தமிழ் மொழி இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். அதுதான் எனக்கு உலகளாவிய பண்புகளை அறிந்துகொள்ள வழியாய் அமைந்தது” என்று சேதுராமன் தனது இளைமைக்கால நினைவுகளை மீட்டெடுக்கிறார்.

“எனது இளமைக்காலத்தில் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. ஒருகட்டத்தில் கல்வியா, கிரிக்கெட்டா என்ற அளவுக்கு சென்றபோதுதான் கல்வியை தேர்ந்தெடுத்தேன். நான் 30 ஆண்டுகளுக்கு மேலாக அயல்நாட்டில் இருந்தாலும், நாங்கள் குடும்பத்துடன் சென்னை தியாகராயர் நகரிலும், பெசன்ட் நகரிலும் வசித்த நாட்களையும், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தையும் என்னால் மறக்க முடியாது. அந்த காலத்தில் பெற்றோரும், ஆசிரியர்களும் வழங்கிய அறிவும் ஊக்கமும்தான் நான் வாழ்க்கையில் அடுத்தடுத்த படிநிலைகளுக்கு செல்ல முக்கிய காரணம்” என்று அவர் கூறுகிறார்.

சமூகம்

மதராஸ் கிறித்தவ பள்ளி, விவேகானந்தர் கல்லூரி மற்றும் சென்னை, பெங்களூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகங்களில் கல்வி பயின்றபோது, தனது நண்பர்களுடன் வகுப்பில் போட்டிபோட்டுக்கொண்டு படித்ததாக அவர் கூறுகிறார்.

கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது தனது மனைவியும், குழந்தைநல மருத்துவருமான சௌமியாவை சந்தித்ததாக கூறும் பஞ்சநாதன் தனது மகள் அம்ரிதா மற்றும் மகன் ரோஷன் ஆகியோர் வெளிநாட்டில் பிறந்தாலும் வீட்டில் தமிழ் மொழியிலேயே பேசி வருவதாக கூறுகிறார். “என்னைப் பொறுத்தவரை, தாய்மொழிதான் குடும்பங்கள் தங்களுக்கிடையே நற்மதிப்புகளையும், கலாசாரத்தையும் பகிர்ந்துகொள்ள உதவுவதாக கருதுகிறேன். அந்த வகையில், எங்கள் வீட்டில் அவ்வப்போது ஆங்கிலத்திலும் பேசினாலும் தமிழை விட்டுக்கொடுப்பதில்லை. தாய்மொழியுடனான தொடர்பை பேணுவது மிகவும் அவசியம்.”

சேதுராமன்

பட மூலாதாரம், Sethuraman Panchanathan

எதிர்கால திட்டங்கள் என்னென்ன?

அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக 2026ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க உள்ள சேதுராமன் பஞ்சநாதன், சவாலான அமெரிக்க அரசியல் சூழ்நிலையில், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வழிநடத்தும் முக்கியமான பணியை மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில், அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து வினவியபோது, “மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாக கொண்டே எனது வாழ்க்கையில் செயல்பட்டு வருகிறேன். அந்த வகையில், எனது பதவிக்காலத்தில் மூன்று விடயங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அறிவியல் – தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை எதிர்காலத்திலும் முதன்மையான நாடாக விளங்க வைப்பது, எவ்வித பாரபட்சமுமின்றி நாடெங்கும் உள்ள திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களின் புதிய ஆய்வுகளுக்கு ஊக்கமளிப்பது, மனித குலத்துக்கு நன்மை பயக்கும் துறைசார் ஆராய்ச்சி பணிகளை உலக நாடுகளுடனும், நாசா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடனும் சேர்ந்து முன்னெடுப்பது ஆகியவை எனது இலக்குகள்” என்று அவர் கூறுகிறார்.

21ஆம் நூற்றாண்டை பொறுத்தவரை, கணினியின் கண்டுபிடிப்பு மனிதகுல வரலாற்றில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியதை போன்று வருங்காலங்களில் எத்தகைய தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்குமென்று அவரிடம் கேட்டபோது, “குவாண்டம் இயற்பியல் (Quantum Physics), செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், கம்பியில்லா தகவல்தொடர்பு, செயற்கை உயிரியல் உள்ளிட்டவை எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறக்கூடும் என்று கருதுகிறேன். இதுபோன்ற துறைகளில் ஆய்வு மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு நியுதவி வழங்குவதுடன் மற்ற அமைப்புகள், நாடுகளுடனும் எனது தலைமையிலான தேசிய அறிவியல் கழகம் செயல்பட உள்ளது” என்று சேதுராமன் கூறுகிறார்.

குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி பணிகள்

சேதுராமன்

பட மூலாதாரம், Arizona State University

கடந்த 31 ஆண்டுகளாக பேராசிரியர், ஆராய்ச்சியாளர், ஆய்வு மைய நிறுவனர், அறிவியல் – தொழில்நுட்ப அமைப்புகளின் தலைவர், சஞ்சிகைகளின் ஆசிரியர், அறிவியல் ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ள சேதுராமன் பஞ்சநாதன், தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை மனிதர்களின் வாழ்க்கையை மையமாக கொண்ட தொழில்நுட்பங்கள், கருவிகள், மென்பொருட்கள், வடிவமைப்புகள், இடைமுகங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதில் நேரத்தை முதலீடு செய்தவராக அறியப்படுகிறார்.

குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் ஒளிவீசும் எண்ணற்ற ஆய்வுகளை செய்துள்ள சேதுராமன், இதுவரை தனது மூன்று கண்டுபிடிப்புகளுக்கு படைப்புரிமை பெற்றுள்ளதுடன், 425க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும், உலகமெங்கும் பல்வேறு கருதரங்குகளிலும், மாநாடுகளிலும் உரையாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, இவரது பணியை பாராட்டும் வகையில் சிறந்த கல்வியாளர், ஆராய்ச்சியாளர், தலைமைத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகளும், எண்ணற்ற அமெரிக்க அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் சிறப்பு பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

“தொடக்க காலத்தில் நான் வேறுபட்ட ஆய்வுப்பணிகளில் கவனத்தை செலுத்தி வந்தேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, இன்னும் எத்தனை நாட்களுக்கு இதே வேலையை செய்யப்போகிறோம் என்ற எண்ணம் தோன்றியது. அதையடுத்துதான், இனி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஆய்வுகளை செய்ய வேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன். இதைத்தொடர்ந்தே, அரிசோனா பல்கலைக்கழகத்தில் விழித் திறன் அற்றவர்களுக்கு உதவக்கூடிய கருவிகள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கும் நோக்கில் ஆராய்ச்சி மையத்தை தொடங்கினேன். இதுதான் எனது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த தருணமாக கருதுகிறேன். மேலும் இது, எனது முழு திறனை வெளிக்கொணரும் வாய்ப்பாகவும் அமைந்தது” என்று சேதுராமன் தனது ஆய்வுப் பணியின் முக்கிய கட்டத்தை விளக்குகிறார்.

“தமிழகத்தில் திறமை மிகுந்துள்ளது”

சேதுராமன் பஞ்சநாதன்

பட மூலாதாரம், Arizona State University

சென்னையில் கல்வியா, கிரிக்கெட்டா என்ற யோசனையில் இருந்த சிறுவன் இன்று அமெரிக்க அறிவியல் கழகத்தின் இயக்குநர் என்ற உயர்ந்த நிலைக்கு சென்றது எப்படி என்று சேதுராமன் பஞ்சநாதனிடம் கேட்டபோது, “நான் சிறுவயதிலிருந்தே ஒரு குறிப்பிட்ட பதவியை அடைய வேண்டுமென்று நினைத்து உழைக்கவில்லை. மாறாக, எனது பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்ட ‘மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தையே என் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் மனதில் கொண்டிருந்தேன். அந்த எண்ணமே என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளதாக நம்புகிறேன். அதுமட்டுமின்றி, நான் வாழ்வில் சந்தித்த சவாலான தருணங்களை முன்னேறுவதற்கான வாய்ப்பாக கருதியது எனக்கு உந்துதலாக அமைந்ததாக நம்புகிறேன்” என்று அவர் கூறுகிறார்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் சாதிக்க விரும்பும் நாடுகள் அனைத்தும் தேசிய அறிவியல் கழகம் போன்ற ஓர் அமைப்பை கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்று கருதும் சேதுராமனிடம், தமிழகத்திலும் இந்தியாவிலும் இந்த துறையில் மாற்றத்தை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டுமென்று வினவியபோது, “சமூக – பொருளாதார சூழ்நிலை என்னவாக இருந்தாலும் தமிழ்நாடு முழுவதும் திறமை மிகுந்துள்ளது. அப்படிப்பட்ட திறமைசாலிகளை கண்டறிந்து, ஊக்கமளித்து அவர்களது எண்ணத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை. தமிழகத்திலுள்ள இளைஞர்களின் குறிக்கோள், வாழ்வில் சிறந்த நிலையை அடைவதாக இருக்க வேண்டுமே தவிர, சிறந்த வேலையை பெறுவதாக இருக்கக் கூடாது. திறமை இருப்பின் அதை வெளிக்காட்டினால் வேலை தானாக தேடி வரும். அதுமட்டுமின்றி, ஒரு நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கு அதன் கல்வித்துறையிலும், அறிவியல் கட்டமைப்பிலும் முதலீடு செய்யவேண்டியது அவசியம். அதுதான் பிற்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தையும், எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுக்கும்” என்று அவர் கூறுகிறார்.

“தோல்வியே வெற்றிக்கான முதற்படி, தோல்வியை கண்டு அஞ்சாதீர்கள். எக்காரணத்தை கொண்டும் உங்களது இலக்கிலிருந்து பின்வாங்காதீர்கள். உங்களது திறமையை கண்டறிந்து, சக மனிதர்களுக்கு சேவை புரிவதை வாழ்வில் நோக்கமாக கொள்ளுங்கள். உலகின் மிக அருமையான படைப்புகளுள் திருக்குறளும் ஒன்று. இரண்டே வரிகளில் நமது வாழ்வின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கும் அதை வாழ்வின் அங்கமாக கொள்ளுங்கள். உங்களது நோக்கமும், செயலும் நன்றாக இருந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.”

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »