இந்தியா vs சீனா: 1962 போரில் சீனப் போர்க் கைதிகளான இந்திய வீரர்களின் கதைகள்

இந்தியா vs சீனா: 1962 போரில் சீனப் போர்க் கைதிகளான இந்திய வீரர்களின் கதைகள்

  • ரெஹான் ஃபசல்
  • பிபிசி

இரண்டு நாட்களாக மலைப் பாங்கான பாதையில் பயணம் செய்த ப்ரிகேடியர் பரசுராம் ஜான் தால்விக்கு ஒரு திறந்த வெளி கண்ணில்பட்டது. அனைவருக்கும் முன்பாக அவர் செல்ல, அவரின் ஏழு சகாக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்.

அவர் குறுகலான ஒரு சாலையில் நுழைந்தவுடன், தான் சீன காலாட்படைக் குழு ஒன்றின் நடுவில் சிக்கிக்கொண்டதை உணர்ந்தார். பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் தன்னைக் குறிவைத்திருப்பதை உணர்ந்தார்.

ப்ரிகேடியர் தால்வி தனது கடிகாரத்தைப் பார்த்தார். 1962 அக்டோபர் 22, காலை சரியாக 9:22 மணி. அவரும் அவரது ஏழு சகாக்களும் சீன ராணுவத்தின் கைதிகளாகிவிட்டனர். இப்போது அவர்கள், முகத்தில் பெரிய அம்மைத் தழும்பு கொண்ட ஒரு சீன கேப்டனின் பிடியில் இருந்தனர்.

ப்ரிகேடியர் தால்வி தனது ‘ஹிமாலயன் ப்ளண்டர்’ என்ற புத்தகத்தில், “கடந்த 66 மணி நேரமாக நான் எதுவும் சாப்பிடவில்லை. நான் 10,500 அடி உயரத்திலிருந்து மேலும் 18,500 அடி உயரத்தில் ஏறி மீண்டும், 10,500 அடி கீழே ஓர் அருவி போல இறங்கினேன். நான் களைத்துப்போய் பசியுடன் இருந்தேன். என் தாடியும் நீளமாக வளர்ந்திருந்தது. புதர்களுக்கு இடையிலும் முட்களுக்கு இடையிலும் நடந்தும் உருண்டும் என் உடைகளும் கிழிந்திருந்தன,” என்று எழுதியுள்ளார்.

ப்ரிகேடியர் தால்வி

தனிமைச் சிறையில் ப்ரிகேடியர் தால்வி

ப்ரிகேடியர் தால்வியை மற்ற இந்திய வீரர்களுடனல்லாமல் திபெத்தில் உள்ள சேத்தாங் முகாமில் தனிமைச் சிறையில் அடைத்திருந்தனர். எப்போதும் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும் தால்வி, சில நாட்களில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார்.

சீனர்கள் சில நேரங்களில் அவருடன் டேபிள்-டென்னிஸ், சீட்டாட்டம் மற்றும் சதுரங்கம் விளையாடினர். சீனர்களிடம் இவருக்குப் படிக்கக் கொடுக்க ஆங்கிலப் புத்தகம் எதுவும் இல்லை. சில வாரங்கள் கழித்து அவருக்கு எழுத ஒரு பேனாவும் சில காகிதங்களும் வழங்கப்பட்டன.

அவரது மகன் மைக்கேல் தால்வி, தன் தந்தை குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். “என் தந்தை அந்தக் காகிதங்களில் அவர் படித்து முடித்த புத்தகங்களின் பெயர்களை எழுதுவார். அவர் பார்த்த படங்களின் பெயர்களையும் எழுதுவார். அவர் நினைவில் இருந்த அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயர்களையும் எழுதுவார். ஒவ்வொரு வாரமும் சீன ஆணையாளர் வந்து அந்தக் காகிதங்களைக் கிழித்து விடுவார்,” என்று கூறுகிறார்.

ப்ரிகேடியர் தால்வி

ஒரு நாளின் இரண்டு வேளைகளுக்கும் உருளைக்கிழங்கு உணவாக வழங்கப்பட்டது. ஆனால், கிறிஸ்துமஸ் அன்று இரவு மட்டும் அவருக்கு கோழிக் கறி வழங்கப்பட்டது. அதைச் சீன வீரர்களுடன் பகிர்ந்துதான் அவர் உண்டார். அவருக்கு மாதம் ஒருமுறை, முடி வெட்டப்பட்டது.

ஒருவர் தினமும் முகச்சவரம் செய்ய வருவார். தானாகவே செய்து கொள்ள அவரை அனுமதிக்கும் அளவுக்குச் சீனர்கள் அவர் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. ஏப்ரல் 1963 இல், அனைத்து இந்தியப் போர்க் கைதிகளும் பெய்ஜிங்கிற்கு மாற்றப்பட்டனர்.

மே தின அணிவகுப்பில் அந்தக் கைதிகளைக் கைவிலங்கு மற்றும் சங்கிலிகளுடன் சீன மக்களுக்கு முன் அணிவகுக்கச் செய்ய சீன அரசு திட்டமிட்டிருந்தது. ப்ரிகேடியர் தால்வியின் கடுமையான எதிர்ப்பிற்குப் பிறகு, இந்த யோசனை கைவிடப்பட்டது.

கர்னல் கே கே திவாரிக்கு நேர்ந்த அவமானம்

கர்னல் கே.கே.திவாரி பிரிகேடியர் தல்வியைப் போல அதிர்ஷ்டசாலி அல்ல.

மேஜர் ஜெனரலாகப் பின்னர் பணியாற்றிய கர்னல் திவாரி, இறப்பதற்கு முன், தனது பாண்டிச்சேரி வீட்டில், அந்தப் போர் குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். “ஒரு சீன அதிகாரி எனது சீருடையில் என் ரேங்க்கைப் பார்த்தார். அவர் என்னை மிகுந்த மரியாதை குறைவாக நடத்தினார். என் அருகில் காயமடைந்து கிடந்த கோர்கா சிப்பாய் ஒருவர் என்னை அடையாளம் கண்டு, தண்ணீர் வேண்டும் எனக் கேட்டார். நான் பாய்ந்தோடி அவருக்கு உதவ முனைந்தேன்.”

சீன சிறையில் ப்ரிகேடியர் தால்வி

“அப்போது, சீன வீரர் என்னைத் தாக்கி, தனக்குத் தெரிந்த கொஞ்சம் ஆங்கிலத்தில், “முட்டாள் கர்னலே, உட்கார். நீ ஒரு கைதி. நான் சொல்லும் வரை நீ நகர முடியாது, இல்லையெனில் நான் உன்னைச் சுட்டுவிடுவேன்” என்றார்.

சிறிது நேரம் கழித்து நாம்கா சூ ஆற்றை ஒட்டிய குறுகிய பாதையில் அணிவகுத்துச் சென்றோம். முதல் மூன்று நாட்களுக்கு எங்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்கப்படவில்லை. அதன் பிறகு முதல் முறையாக வேகவைத்த உப்பு சாதம் மற்றும் வறுத்த முள்ளங்கி உணவு எங்களுக்கு வழங்கப்பட்டது. ”

வைக்கோல் தான் படுக்கையாகப் பயன்பட்டது

மேஜர் ஜெனரல் திவாரி மேலும் என்னிடம், “நான் முதல் இரண்டு நாட்களுக்கு ஓர் இருண்ட மற்றும் ஈரமான அறையில் தனியாக வைக்கப்பட்டேன். இதற்குப் பிறகு கர்னல் ரிக் மோசமாகக் காயமடைய, அவர், எனது அறைக்கு அழைத்து வரப்பட்டார். எங்களுக்குக் காலை ஏழு முதல் ஏழரை மணிக்குள் காலை உணவு கொடுக்கப்படும். மதிய உணவு நேரம் பத்து மணி முதல் பதினொரு மணி வரை இருந்தது. மூன்று மணி முதல் மூன்றரை மணிக்குள் இரவு உணவு வழங்கப்பட்டது.

“நாங்கள் அடைக்கப்பட்டிருந்த வீடுகளில் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் இல்லை. ஒருவேளை சீனர்கள் அவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தியிருக்கலாம். எங்களை உள்ளே அழைத்து வரும்போது, ​​அங்கே ஒரு வைக்கோல் குவியல் இருப்பதைக் கண்டோம். நாங்கள் அவற்றைப் பயன்படுத்தலாமா என்று சீனர்களிடம் கேட்டோம். எங்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன் பிறகு நாங்கள் அந்த வைக்கோலை ஒரு மெத்தையாகவும் ஒரு போர்வையாகவும் பயன்படுத்தினோம்.

கர்னல் கே.கே. திவாரி

லதா மங்கேஷ்கர் பாடல்கள், பஹாதுர்ஷா ஜஃபர் கஜல்கள்

சீன சிறைகளில் தான் கழித்த நாட்களை நினைவு கூர்ந்த மேஜர் ஜெனரல் திவாரி, “சீனர்கள் பெரும்பாலும் ஒலிபெருக்கிகளில் இந்திய இசையை ஒலிபரப்பினர். ஒரு பாடல் மீண்டும் மீண்டும் இசைக்கப்பட்டது, அதுதான் லதா மங்கேஷ்கரின் ‘ஆஜா ரே மெயின் தோ கப் சே கடி இஸ் பார்’ என்ற பாடல். இந்த பாடலைக் கேட்டால் எங்களுக்கு எங்கள் குடும்பங்களின் நினைவு வரும். ஒரு நாள் ஒரு சீனப் பெண் வந்து பகதூர் ஷா ஜாபரின் சில கஜல்களை எங்களிடம் பாடியபோது நாங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டோம். ஒருவேளை இந்த உருது பேசும் பெண் லக்னோவில் பல ஆண்டுகளாக வாழ்ந்திருப்பாள் என்று நாங்கள் நினைத்தோம்,” என்று கூறுகிறார்.

1962ஆம் ஆண்டு நடந்த போரில், சீனா 3,942 இந்திய வீரர்களைப் போர்க் கைதிகளாக சிறைபிடித்தது. ஆனால், அந்தப் போரில் இந்தியாவில் ஒரு சீனப் போர்க் கைதி கூட இல்லை.

1962 போரில் சீனப் போர்க்கைதிகளான இந்திய வீரர்களின் கதைகள்

1951ஆம் ஆண்டில் போர் கைதிகள் தொடர்பான ஜெனீவா ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. ஜூலை 1952இல் சீனாவும் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது.

குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான சுரேந்திர சோப்ரா, ‘இந்தியன் ஜர்னல் ஆஃப் பொலிட்டிகல் சயின்ஸ்’ இதழின் 1968 அக்டோபர் பதிப்பில், ‘இந்தோ- சீன எல்லை மோதல் மற்றும் போர்க் கைதிகள் நடத்தப்பட்ட முறை’ (Sino – Indian Border Conflict and the treatment of Prisoner of War) என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார்.

அதில் அவர், சீனாவில் இருந்த ஒரு போர்க்கைதியை மேற்கோள் காட்டி, “நான் கைது செய்யப்பட்ட நாளில், மேலும் 15-16 காயமடைந்த வீரர்கள் என்னுடன் இருந்தனர். அவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. அவர்கள் வலியால் துடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் சீனர்கள் அவர்களைப் பொருட்படுத்தவேயில்லை. காயமடைந்த எவருக்கும் முதல் 48 மணி நேரத்தில் சாப்பிட எதுவும் கொடுக்கப்படவில்லை. அவரது வேதனையுடன் வேண்டிய போதும், ஒரு சொட்டு நீர் கூட வழங்கப்படவில்லை. இது ஜெனீவா ஒப்பந்தத்தின் பிரிவு 12-15இன் மீறலாகும்,” என்று எழுதியுள்ளார்.

அதிகப்படி தகவல் பெற்ற சீனா

இது மட்டுமல்லாமல், ஜெனீவா ஒப்பந்தத்தின் பிரிவு 17ன் படி சிறைபிடிக்கப்பட்ட பின்னர், அவரது பெயர், ராணுவ ரெஜிமென்ட் எண், பதவி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை மட்டுமே போர்க் கைதியிடமிருந்து கேட்க முடியும். ஆனால் சீனர்கள் இந்திய போர்க் கைதிகளிடம் ஒரு படிவத்தை நிரப்பச் சொல்லிப் பெற்றுக்கொண்டனர். அதில் கீழ்க்கண்ட கேள்விகள் இருந்தன…

1. உங்களிடம் எவ்வளவு நிலம் இருக்கிறது?

2. உங்களுக்கு எத்தனை வீடுகள் உள்ளன?

3. உங்கள் ஆண்டு வருமானம் என்ன?

4. உங்கள் குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?

5. நீங்கள் எந்த அரசியல் கட்சியை ஆதரிக்கிறீர்கள்?

6. நீங்கள் எத்தனை நாடுகளுக்குச் சென்றுள்ளீர்கள்?

இந்த தகவல் பெறப்படுவதற்கு இந்திய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, வீரர்களின் ​​அடையாளத்தை உறுதி செய்ய இந்திய அரசுதான் இந்தத் தகவலைக் கேட்டிருப்பதாக அவர்கள் விளக்கமளித்தனர் என்றும் இது தவிர, ராணுவத்தில் நியமன விவரங்கள், அவர்களின் ஆயுதங்கள் மற்றும் அவர்களின் அதிகாரிகளை நிலைநிறுத்துவது குறித்தும் படையினரிடம் கேட்கப்பட்டதாகவும் இது ஜெனீவா ஒப்பந்தத்தின் தெளிவான மீறலாகும் என்றும் சுரேந்திர சோப்ரா எழுதுகிறார்.

1962 போரில் சீனப் போர்க்கைதிகளான இந்திய வீரர்களின் கதைகள்

அதிகாரிகளை அவமதிக்க ஊக்குவிக்கப்பட்ட வீரர்கள்

ஜெனீவா ஒப்பந்தத்தின் 11வது பிரிவு, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு அளவு, தரம் மற்றும் வகை ஆகியவற்றில் சிறைபிடித்த நாட்டின் வீரர்களுக்குச் சமமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் சீனாவில் உள்ள இந்தியப் போர்க்கைதிகளுக்கு ஒரு நாளைக்கு 1400 கலோரிகளுக்கு மேல் உணவு வழங்கப்படவில்லை. ஆனால் இந்தியாவில் அவர்கள் ஒரு நாளைக்கு 2500 கலோரி உணவு உண்டு பழகியவர்கள்.

இது தவிர, எல்லா வகையிலும் மூத்த அதிகாரிகள் அவமதிக்கப்பட்டனர். ஒரு மூத்த அதிகாரி ஒரு பிரமாணப் பத்திரத்தில், “நாங்கள் இனி அதிகாரிகள் இல்லை என்று சீனர்கள் பலமுறை சொன்னார்கள். அவர் எங்கள் ஜவான்களிடம் தங்கள் அதிகாரிகளுக்கு வணக்கம் செலுத்தத் தேவையில்லை என்று கூறினார்கள். மாறாக, ஜவான்களை தங்கள் அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாக நடக்க ஊக்குவித்தார்கள். எங்கள் வீரர்கள் எங்களுக்கு வணக்கம் செலுத்தும் போதெல்லாம், சீனர்கள், அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் நாங்களும் அவர்களைப் போன்ற போர்க் கைதிகள்தான் என்றும் கூறுவார்கள்.

அதன் ஒரே நோக்கம் நமது வீரர்களிடையே உள்ள ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டைச் சிதைப்பதாகும். எங்கள் படையினருக்கு முன்னால் ரேஷன், எரிபொருள் மற்றும் நீர் சுமக்க எங்களை வற்புறுத்தினார்கள். அறையைக் கூட்டித் துடைக்கும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது. சீனர்களின் இந்தச் செயலால் சில இந்திய வீரர்கள் மாறவும் செய்தார்கள்,” என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ரத்தத்தில் தோய்ந்த துணிகளைத் துவைத்து மீண்டும் பயன்படுத்திய கொடுமை

1962 போரில் சீனப் போர்க்கைதிகளான இந்திய வீரர்களின் கதைகள்

ராஜ்புத் பிரிவின் மேஜர் ஓம்கர் நாத் துபே, நாம்கா சூ போரில் 16 குண்டடிகளைத் தாங்கியவர். அவர் காயமடைந்த பின்னர் சீனர்களால் சிறைபிடிக்கப்பட்டார். இவருடன் அப்போது போரிட்ட 70 வீரர்களில் மூவர் மட்டுமே உயிர் தப்பியிருந்தனர். வாரணாசியைச் சேர்ந்த அந்த மேஜர் துபே, திபெத்தின் லாசா அருகே மார்மோங் முகாமில் போர்க் கைதியாகச் சிறை வைக்கப்பட்டார்.

அந்த நாட்களை நினைவு கூர்ந்த மேஜர் துபே, “உடைந்த வீடுகளின் இடிபாடுகளின் மீது ஒரு மருத்துவமனை உருவாக்கப்பட்டது. அது பெயரளவில்தான் மருத்துவமனை. அங்கு, எக்ஸ்ரே வசதி கூட இல்லை. அங்கு, என் உடலில் இருந்து 15 குண்டுகள் அகற்றப்பட்டன. 1963 ஜனவரியில் நான் இந்தியா திரும்பியபோது, ​​இந்திய ராணுவ மருத்துவர்கள் 16வது தோட்டாவை அகற்றினர். சீனாவில், என் காயத்தின் ரத்தத்தால் நனைந்த துணிகளைக் கொதிக்கும் நீரில் அலசி, உலர்த்தி அதை மீண்டும் என் காயத்தில் கட்டினர். அந்த வசதி கூட அவர்களிடம் இல்லை,” என்று கூறுகிறார்.

மேஜர் துபே மேலும் விளக்குகிறார், “எங்களுக்கு தூங்குவதற்கு ஒரு பாய் கொடுக்கப்பட்டது, அதில் மிக மெல்லிய மெத்தை போடப்பட்டது. எங்களுக்கு வழங்கப்பட்ட கம்பளிகளும் மிகவும் அழுக்காக இருந்தன. ஒரு கம்பளியைப் பலர் பகிர வேண்டியும் இருந்தது. உணவும் மிகவும் மோசமாக இருந்தது. அங்கே விளையும் ஒரு புல் வகையுடன் சாதம் பரிமாறப்பட்டது,” என்று வேதனையுடன் நினைவு கூர்கிறார்.

மேலும் “சீனர்களின் நடத்தை கோர்க்கா வீரர்களிடம் சற்று சிறப்பாகவே இருந்தது. உணவுக் கூட எங்களை விட அவர்களுக்கு நல்ல தரத்தில் இருந்தது” என்றும் துபே கூறுகிறார்.

நேபாளமும் சீனர்களும் சகோதரர்கள் என்று சீனர்கள் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த கோர்க்கா போர்க் கைதிகளை நேபாளத்திற்கு நேரடியாக திருப்பி அனுப்ப அவர்கள் முன்வந்த போதும், நேபாளம் அதை நிராகரித்துவிட்டது.

மேஜர் ஓம்கர் நாத் துபே

இந்தியர்களும் சீனர்களும் சகோதாரர்கள் என்ற முழக்கம்

ப்ரிகேடியர் அமர்ஜீத் பஹல் 1962 இல் இரண்டாவது லெப்டினெண்டாக பணிபுரிந்து வந்தார். அவர் என்னிடம், “எங்களிடம் இருந்த குண்டுகள் தீர்ந்து போய்விட்டன. அதனால் எங்கள் விருப்பத்திற்கு மாறாக நாங்கள் போர்க்கைதிகளாக நேர்ந்தது. சீன வீரர்கள் என் தலையில் துப்பாக்கியால் அடித்து என் கைத்துப்பாக்கியைப் பறித்தனர். பின்னர் நான் ஷேன் இ போர்க்கைதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். இந்த முகாமில் சுமார் 500 போர்க் கைதிகள் இருந்தனர். இந்திய ராணுவ வீரர்கள் உணவைச் சமைப்பார்கள். இதனால் என்ன ஒரு நன்மை என்றால், எனக்குக் காலையில் ஒரு இனிப்பில்லாத ப்ளாக் டீ கிடைத்துவிடும். இரண்டு வேளைகளும் எங்களுக்கு ரொட்டி, சாதம் மற்றும் முள்ளங்கி மட்டுமே வழங்கப்பட்டன.

எந்நேரமும் அங்கே, ‘கூஞ் ரஹா ஹை சாரோ ஓர், இந்தி சீனி பாய் பாய்’ – என்ற பாடல் இசைக்கப் பட்டது. இது எங்கள் காதுகளில் ஈயம் பாய்ச்சினாற்போல் இருந்தது. போர்க் கைதியாக இருந்த காலத்தில், கட்டாயப்படுத்துதல், அடிதடிகளும் நடந்தன. இது எனக்கும் நேர்ந்துள்ளது. ஆனால், அப்போது நான் வெறும் ஜவானாக இருந்ததால் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை” என்று கூறுகிறார்.

1962 போரில் சீனப் போர்க்கைதிகளான இந்திய வீரர்களின் கதைகள்

சீன ராணுவ அதிகாரிகள் இந்திய போர்க் கைதிகளுடன் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் உரையாடுவார்கள். இந்தியா அமெரிக்காவின் கைப்பாவை என்று அவர்களை நம்ப வைக்க முயன்றனர், ஆனால் அந்த உத்தி நம்மிடம் எடுபடவில்லை.

இறுதியாக பஹலும் அவரது தோழர்களும் விடுதலையாவதாக அறிவிக்கப்பட்ட அந்த நாளும் வந்தது.’

அமர்ஜீத் பஹ்ல் ஏழு மாதங்களுக்குப் பிறகு சீன கைதி முகாமில் இருந்து வீடு திரும்பினார்

“எங்களுக்கு இந்தச் செய்தி கேட்டு மிகுந்த மகிழ்ச்சி. காலம் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது உண்மை. அடுத்த 20 நாட்கள் எங்களுக்கு 20 மாதங்கள் போல் இருந்தன. எங்களை கும்லா என்ற நகரில் விட்டார்கள். நாங்கள் எல்லையைத் தாண்டியதும், இந்திய நிலத்தை முத்தமிட்டு, ‘இந்த தாய் நிலம், இந்த தாயகம் எங்கள் தாயகம்’ என்று பாடி மகிழ்ந்தோம்.” என்று உணர்ச்சிப் பெருக்குடன் நினைவு கூர்ந்தார் பஹல். இதைக் கூறும் போது அவருக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது. இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு, உலகின் சிறந்த தேநீர் கிடைத்தது என்று அவர் கூறினார். பாலும் சர்க்கரையும் சேர்ந்த அது அமிர்தம் போலிருந்ததாக அவர் கூறுகிறார்.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

17 செப்டம்பர், 2020, பிற்பகல் 1:14 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman