சீனா – அமெரிக்கா இடையே வலுக்கும் மோதல் – ஐ.நா கூட்டத்தில் மோதிக் கொண்ட டிரம்ப் – ஷி ஜின்பிங்

சீனா – அமெரிக்கா இடையே வலுக்கும் மோதல் – ஐ.நா கூட்டத்தில் மோதிக் கொண்ட டிரம்ப் – ஷி ஜின்பிங்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலுக்கு சீனாதான் காரணம் என நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

இது அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலம் அதிகரித்துள்ளது.

பெருந்தொற்றுக்கு, சீனா பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என டிரம்ப் தெரிவித்தார்.

இதனையடுத்து, உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங், “எந்த நாட்டுடனும் பனிப்போரில் ஈடுபடும் நோக்கம் சீனாவுக்கு இல்லை” என தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களால், உலகின் இந்த இரு சக்தி வாய்ந்த நாடுகளுக்கு இடையேயான உறவு மோசடைந்து இருக்கிறது.

இந்தாண்டு நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுக்கூட்டம் பெரும்பாலும் காணொளி காட்சி வாயிலாகவே நடைபெற்றது. இதில் உலகத் தலைவர்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த உரைகள் ஒளிபரப்பாகின.

சீனா ‘உலகிற்க்கு பாதிப்பை ஏற்படுத்தியது’ – அதிபர் டிரம்ப்

அதிபர் டிரம்ப்

“இந்த உலகத்தை பெருந்தொற்றால் பாதிப்படைய வைத்த சீனாவை நாம் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வைக்க வேண்டும்” என டிரம்ப் பேசினார்.

“கொரோனா பரவலின் ஆரம்பகட்ட காலத்தில், உள்நாட்டு பயணத்தை முடக்கிய சீனா, வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட அனுமதி அளித்து, இந்த உலகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா மீது நான் பயணத்தடை விதித்ததற்கு அந்நாடு என்னை குற்றம்சாட்டியது. ஆனால், சீனாவே உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ரத்து செய்து, மக்களை வீட்டிற்குள் முடக்கி வைத்தது” என அவர் மேலும் பேசினார்.

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்க, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவலை டிரம்ப், கையாண்ட விதம் ஏற்கனவே உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தொடர்ந்து இதற்கு சீனாவை குற்றம்சாட்டி வருகிறார். சீனா நினைத்திருந்தால், இந்த நோய் பரவாமல் தடுத்திருக்கலாம் என அவர் கூறி வருகிறார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சீனா தொடர்ந்து மறுக்கிறது.

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடாக அமெரிக்கா இருக்கிறது. இதுவரை அங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

டிரம்ப், தொடக்கத்தில் இருந்தே இந்த நோயை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற வாதமும் இருந்து வருகிறது.

வர்த்தகம், தொழில்நுட்பம், ஹாங்காங் விவகாரம், ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை முஸ்லிம்களை சீனா நடத்தும் விதம் ஆகிய காரணங்களால் அமெரிக்கா – சீனா இடையே பதற்றம் அதிகமாக இருக்கிறது.

அதிபர் டிரம்ப் தன் உரையை முடித்த பின், அடுத்ததாக பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், “நாகரீகங்களுக்கு இடையே சண்டை” நடக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார்.

சீனா - அமெரிக்கா இடையே வலுக்கும் மோதல் - ஐ.நா கூட்டத்தில் மோதிக் கொண்ட டிரம்ப் - ஷி ஜின்பிங்

“பேச்சுவார்த்தை மூலமாகவே நாடுகளுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகளையும், சர்ச்கைகளையும் தீர்க்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம். மற்ற நாடுகளுக்கு இழப்பை ஏற்படுத்திவிட்டு வெற்றி பெற மாட்டோம்” என அவர் தெரிவித்தார்.

முன்னதாக அதிபர் ஷி கூறுகையில், “எந்த ஒரு குறிப்பட்ட நாடோ உலக விவகாரங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த முடியாது என்றும் எந்த நாடோ மற்றவர்களின் விதியை கட்டுப்படுத்த முடியாது என்றும், அல்லது முன்னேற்றங்கள் மற்றும் வளர்ச்சியின் பலன்களை ஒரு நாடு மட்டும் தனக்கு வைத்துக் கொள்ள முடியாது” என்றும் அமெரிக்காவை குறிப்பிட்டு பேசினார்.

ஆனால், இவை அனைத்தையும் சீனாவும் செய்வதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Banner

அமெரிக்க வாக்காளர்களை இலக்கு வைக்கும் டிரம்ப்

லாரா ட்ரெவெல்யான், பிபிசி நியூஸ்

40 நாட்களில் மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் டிரம்ப், அதனை மனதில் வைத்தே இந்த உரையை பேசியுள்ளார்.

இந்த பெருந்தொற்றை தாம் எப்படி கையாண்டோம் என்ற விஷயத்தை யாரும் கவனிக்கக்கூடாது என்பதற்காக அவர் சீனா மீது குற்றம்சாட்டுகிறார்.

சீனா ஏற்படுத்திய இந்த பிரச்சனைக்கு அமெரிக்கா தீர்வு கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் அழுத்தமாக கூறுகிறார்.

நாங்கள் இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவோம் என உறுதியளித்த அதிபர் டிரம்ப், தடுப்பூசி கண்டுபிடிப்பில் இறுதி பரிசோதனை கட்டத்தை எட்டியிருக்கும் அமெரிக்க விஞ்ஞானிகளின் முயற்சிகளுக்கு நன்றி கூறுகிறேன் என அவர் குறிப்பிடுகிறார்.

மேலும், ஐநாவின் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் பேசினார்.

அமெரிக்காவிடம் இருந்து அதிக நிதி பெறும் உலக சுகாதார அமைப்பு, சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) குறித்த தவறான தகவல்களை அந்த அமைப்பு பரப்பியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அதிபர் தேர்தலில் வாக்களிக்க அமெரிக்கர்கள் தயாராகி வரும் நிலையில், தன் மீதுள்ள தவறுகளை மறைப்பதற்கான உரையாக இது இருக்கிறது.

Banner

ஐ.நா பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்த, பொது செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், சீனா, அமெரிக்கா போன்ற எந்த நாடுகளின் பெயரையும் குறிப்பிடாமல், “புதிய பனிப்போர் ஒன்று ஏற்படுவதை தவிர்க்க, நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” என்றார்.

“நாம் ஆபத்தான சூழலை நோக்கி செல்கிறோம். எதிர்காலத்தில் இரு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையேயான பிரச்சனையால், இந்த உலகம் பாதிப்படையக் கூடாது” என்று குறிப்பிட்டார்.

சீனா - அமெரிக்கா இடையே வலுக்கும் மோதல் - ஐ.நா கூட்டத்தில் மோதிக் கொண்ட டிரம்ப் - ஷி ஜின்பிங்

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) என்று வரும்போது அங்கு சுயநலத்திற்கு இடமில்லை.

“ஜனரஞ்சகம் அல்லது தேசியவாதம் இதில் தோல்வியடைந்துவிட்டது. இவை இரண்டாலும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை கட்டுப்படுத்த முயற்சிக்க, அது மிகவும் மோசமான சூழலை உருவாக்கும்” என அவர் பேசினார்.

மற்ற உலகத் தலைவர் பேசியது என்ன?

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்: இந்த உலகத்தின் எதிர்காலத்தை, சீனா அமெரிக்கா இடையே இருக்கும் உறவு முடிவு செய்ய முடியாது. உலக சவால்களை எதிர்கொள்ள “புதிய நவீன ஒருமித்த கருத்து” ஒன்று எட்டப்பட வேண்டும்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்: கொரோனா தடுப்பூசி தயாரிப்பு மற்றும் அதன் விநியோகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த, கணினிமய சந்திப்புக் கூட்டம் ஒன்றை உலக நாடுகள் விரைவில் நடத்த வேண்டும்

பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சீனாரோ: பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் கொள்கைகள் மீதான விமர்சனங்களை ஏற்க மறுத்த அவர், பிரேசில் குறித்த தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறினார். அமேசான் மழைக்காடுகளில் தற்போது மோசமான காட்டுத்தீ நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

Author Image
Nila Raghuraman