Press "Enter" to skip to content

அமெரிக்காவை அச்சுறுத்தும் மூளை உண்ணும் நுண்ணுயிர் – கோவிட் 19க்கு மத்தியில் மற்றொரு போராட்டம் மற்றும் பிற செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. அந்த நாடு கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அங்கு புதிதாக மற்றொரு பிரச்சனை முளைத்துள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தின் லேக் ஜேக்ஸன் பகுதி மக்கள் குழாய் தண்ணீர் பயன்படுத்துவது தொடர்பாக எச்சரிக்கப்பட்டுள்ளனர். அதாவது மூளையை உண்ணும் நுண்ணுயிர்கள் குழாய் நீரில் இருப்பதாக நகர் குடிநீர் விநியோக துறை எச்சரித்து உள்ளது.

மூளையை உண்ணும் நுண்ணுயிர்கள் என்று அழைக்கப்படும் ’நைல்கிரீய பெளல்ரி’ இருப்பது குடிநீர் விநியோக அமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நுண்ணுயிர் மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம்.

இது போன்ற நோய் தொற்றுகள் அரிதாகவே அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளன. அதாவது 2009 – 2018 இடையிலான பத்தாண்டு காலகட்டத்தில் 34 பேருக்கு மட்டுமே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.

குடிநீரை சுத்திகரித்து வழங்குவதாக கூறும் லேக் ஜேக்சன் குடிநீர் விநியோக துறை, இது சரியாக எத்தனை நாட்கள் ஆகும் என தெரியவில்லை என கூறி உள்ளது.

கழிவறைக்கு மட்டுமே இந்த நீரை பயன்படுத்துமாறும் வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என்றும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு டெக்சாஸின் சில பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது என்றாலும், லேக் ஜேக்சன் பகுதியில் மட்டும் இந்த எச்சரிக்கை நீட்டிக்கிறது. அங்கு 27 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். குளிக்கும் போது தண்ணீர் மூளைக்குள் போகாதப்படி பார்த்து கொள்ளுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

‘இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தினால் தாங்க முடியாத விளைவுகளை சந்திக்கும்’ – சீனா

ராணுவத்தினர்

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லைப் பதற்றத்தை குறைக்க, ராஜீய மற்றும் ராணுவ நிலையிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இருநாட்டு ஊடகங்களும் வெளியிட்டு வரும் செய்திகளால் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.

இந்தியத் தரப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டால், அந்நாடு தாங்கமுடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய எல்லையில் அதிக துருப்புகளை இந்தியா குவித்து, சீன ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடக்க அனுமதித்தால், அது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் இது இந்தியாவுக்கும் ஆபத்தாக முடியும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேளாண் மசோதாக்கள்: ஒப்புதல் அளித்தார் ராம்நாத் கோவிந்த்

விவசாயிகள்

இந்திய வேளாண் அமைப்புகள் மற்றும் எதிர்க் கட்சிகளின் வேண்டுகோளை மீறி, நரேந்திர மோதி அரசின் வேளாண் மசோதாக்களை சட்டமாக்க ஞாயிறு (செப்டம்பர் 27) மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020,விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகியன கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேறின.

பதவி விலகிய ஒரே வாரத்தில் பாஜக கூட்டணி கட்சியில் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி

பதவி விலகிய ஒரே வாரத்தில் பாஜக கூட்டணி கட்சியில் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி

பிகார் மாநில காவல் துறை தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து கடந்த வாரம் விலகிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி குப்தேஷ்வர் பாண்டே, அந்த மாநிலத்தை ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார்.

பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் அலுவல்பூர்வ இல்லத்தில் அவரைச் சந்தித்த குப்தேஷ்வர் பாண்டே ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார்.

1987இல் ஐபிஎஸ் பணிக்கு தேர்வான அவர் பதவி ஓய்வு பெற ஐந்து மாதங்கள் இருக்கும் முன்னரே பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அவர் பதவி விலகிய ஒரே வாரத்தில் அரசியலில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

தமிழக அரசு, விவசாய மசோதாக்களை விமர்சிக்கும் கமல் ஹாசன்

கமல்

இந்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாக்களில் விவசாயிகளுக்கு எதிரான சரத்துகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் மக்கள் நீதி மய்யம் நடத்திவருகிறது.

நடிகர் மற்றும் மநீம கட்சியின் நிறுவரான கமல் ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகள் நலன் காக்க புதிய வேளாண் மசோதாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றத்திற்கு திருப்பி அனுப்பவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »