பட மூலாதாரம், Getty Images
அளவில் சிறிய, ஆனால் செல்வதில் பெரிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2020ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்து வந்துள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வுக்கலன், இஸ்ரேலுடனான அமைதி உடன்படிக்கை, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்று பரவல் தடுப்பில் விரைந்து செயல்பட்டது என எண்ணற்ற விடயங்களை ஐக்கிய அரபு அமீரகம் இந்த ஆண்டு செய்துள்ளது.
லிபியா, யேமன் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் தனது ராணுவத்தை குவித்ததன் மூலம் துருக்கியுடன் நிர்வாகரீதியிலான சிக்கலிலும் அது சிக்கியுள்ளது.
அடுத்த ஆண்டு தனது 50ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள ஐக்கிய அரபு அமீரகம் உலக அரசியலில் எத்தகைய பங்கு வகிக்கிறது? அதை யார் முன்னெடுத்து செல்கிறார்கள் என்பதை இந்த கட்டுரை அலசுகிறது.
ராணுவத்தை விரிவுபடுத்துதல்
1999ஆம் ஆண்டு மே மாதத்தின்போது, கொசோவோ போர் ஓராண்டை கடந்து நடந்துகொண்டிருந்தது. கொசோவர் அகதிகள் நிறைந்த அல்பேனிய-கொசோவோ எல்லையில் அமைக்கப்பட்டிருந்த முகாமின் ஒரு தற்காலிக குடிசைக்குள் ஒரு வாஷ் பேசினில் நான் நின்றுகொண்டிருந்தேன்.
அந்த முகாம் எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் சொசைட்டியால் அமைக்கப்பட்டிருந்தது. அந்த அமைப்பின் சார்பாக சமையல்காரர்கள், தொலைத் தொடர்பு பொறியாளர்கள், ஒரு இமாம், மற்றும் கனரக இயந்திர துப்பாக்கிகளை கொண்ட துருப்புக்களும் அங்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

பட மூலாதாரம், Frank Gardner
அல்பேனியாவின் டிரானாவிலிருந்து அதற்கு முந்தைய நாள்தான் ஐக்கிய அரபு அமீரத்தின் விமானப்படைக்கு சொந்தமான பூமா உலங்கூர்திகளில் நாங்கள் கரடு, முரடான பள்ளத்தாக்குகளை கடந்து அங்கு சென்றிருந்தோம்.
அப்போது எனக்கு அருகிலுள்ள பேசினில் பற்களைத் துலக்கிக் கொண்டிருந்த ஒருவர் உயரமாகவும், தாடியுடனும் இருந்தார். சற்று நேரத்திற்கு பிறகே, நான் அவர் பிரிட்டனின் ராயல் ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்றவரும், அதிகரித்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இராணுவப் பங்கின் பின்னணியில் உள்ள உந்து சக்தியுமான ஷேக் முகமது பின் சயீத் என்பதை அறிந்தேன்.

நான் அப்போது அவரிடம், நேர்காணல் அளிக்க வேண்டுகோள் விடுத்தேன். பெரிதும் ஆர்வம் இல்லாவிட்டாலும், அவர் ஒப்புக்கொண்டார்.
பிரான்சுடன் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு ராணுவ ரீதியிலான ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக என்று அப்போது அவர் விளக்கினார். 400 பிரெஞ்சு லெக்லெர்க் டாங்கிகள் வாங்குவதற்கான அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பிரெஞ்சுக்காரர்கள் அமீரகத்தின் துருப்புக்களுக்கு “தங்கள் பிரிவின் கீழ்” பயிற்சி அளித்து கொசோவோவில் அவர்களுடன் பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னரே சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டிற்கு இது மிகப் பெரிய நடவடிக்கை. அப்போது, நாங்கள் அபுதாபியிலிருந்து 3,200 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்தாலும், ஐக்கிய அரபு அமீரகம் வளைகுடா கடற்கரைகளுக்கு அப்பால் லட்சியங்களைக் கொண்டிருந்ததை அது உணர்த்தியது.
இதன் மூலம், நேட்டோவுக்கு ஆதரவாக ஐரோப்பாவில் தனது இராணுவத்தை நிறுத்திய முதல் அரபு நாடாக அமீரகம் உருவெடுத்தது.
பணமும், மதமும், ராணுவமும்

பட மூலாதாரம், Frank Gardner
அடுத்தது ஆப்கானிஸ்தான். எமிராட்டி படைகள் நேட்டோவுடன் அமைதியாக இயங்கத் தொடங்கியது ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பான்மையான மக்களுக்குத் தெரியாத ஒன்றாக இருந்தது. தாலிபான்கள் வீழ்ச்சியடைந்த உடனேயே, இந்த நடவடிக்கைக்கு இப்போதைய அபுதாபியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் ஒப்புதல் அளித்திருந்தார்.
2008ஆம் ஆண்டு, நான் ஆப்கானிஸ்தானின் பாக்ராம் ஏர்பேஸில் அமீரகத்தின் சிறப்புப் படைகளின் ஒரு குழுவை பார்வையிட்டு அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதைப் அறிந்தேன்.
பிரேசிலிய மற்றும் தென்னாப்பிரிக்க கவச வாகனங்களில் பயணிக்கும் அமீரகத்தின் படையினர் தொலைதூர மற்றும் வறிய ஆப்கானிய கிராமத்திற்குள் சென்று, இலவசமாக குரான் மற்றும் இனிப்புகளை விநியோகித்து, கிராமத்து பெரியவர்களுடன் உரையாடுவார்கள்.
“உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்கள் கேட்பார்கள். “ஒரு மசூதி, ஒரு பள்ளி, தண்ணீர் கிணறுகள்?” எது வேண்டுமென்று கேட்டுவிட்டு, அதுதொடர்பான ஒப்பந்த புள்ளிகளை உள்ளூர் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள். ஆனால், பணத்தை மட்டும் அமீரகம் செலுத்தும்.
அமீரகத்தின் தடம் சிறியதாக இருந்தாலும், அவர்கள் எங்கு சென்றாலும் தங்களது பணத்தையும் மதத்தையும் பயன்படுத்தி உள்ளூர் மக்களின் சந்தேக பார்வையை கட்டுக்குள் வைத்திருந்தார்கள்.
ஹெல்மண்ட் மாகாணத்தில் நடந்த சில தீவிரமான துப்பாக்கிச் சண்டைகளில் அமீரகத்தின் படைகள் பிரிட்டிஷ் படைகளுடன் சேர்ந்து போராடின. சிறிது காலத்திற்கு பிறகு, அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ், அந்த காலத்தில் பெரியளவில் அறியப்படாத, ஒரு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த நடவடிக்கைகளை பார்த்து, அதை “லிட்டில் ஸ்பார்ட்டா” என்று குறிப்பிட்டார்.
ஏமன்: சேதமடைந்த நற்பெயர்

பட மூலாதாரம், Frank Gardner
அடுத்ததாக அமீரகம் ராணுவ ரீதியிலான தவறான முடிவுகளை மேற்கொண்ட யேமனுக்கு வருவோம்.
2015ஆம் ஆண்டு தனது நாட்டை யேமனின் பேரழிவுகரமான உள்நாட்டுப் போரில் சௌதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் ஈடுபடுத்தியபோது, அதில் இணைத்துக்கொண்ட ஐக்கிய அரபு அமீரகம் தனது எஃப்-16 விமானங்களை ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை தொடுக்க அனுப்பியது.
2018ஆம் ஆண்டு, அமீரகம் முக்கியத்துவம் வாய்ந்த யேமன் தீவான சோகோத்ராவில் தனது துருப்புக்களை இறக்கியது. மேலும், எரித்திரியாவில் உள்ள அசாபில் குத்தகைக்கு விடப்பட்ட தளத்தில் ஒரு தாக்குதல் படையை குவித்தது. செங்கடலின் குறுக்கே படைகளை அனுப்பி ஹூத்திகளிடமிருந்து ஹுதாய்தா துறைமுகத்தை திரும்ப கைப்பற்றும் திட்டத்தை கடைசி நிமிடத்தில் கைவிட்டது.
யேமன் போர் இப்போது கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக நீண்டு வருகிறது. இதுவரை தெளிவான வெற்றியாளர்கள் யாரும் இல்லை என்பதுடன் நாட்டின் தலைநகரான சனா உள்பட பெரும்பாலான பகுதிகளில் ஹூத்திகள் வலுவுடன் உள்ளனர்.
யேமனில் ஒரே ஏவுகணை தாக்குதலில் 50க்கும் படையினரை இழந்த அமீரகம், அதை மூன்று நாட்கள் தேசிய துக்கமாகவும் அனுசரித்தது. இதுபோன்று எண்ணற்ற வீரர்களை யேமனில் அமீரகம் இழந்தது.
அல்-கொய்தாவுடன் தொடர்பு கொண்டிருந்த சில விரும்பத்தகாத உள்ளூர் போராளிகளுடனான தொடர்பும், டஜன் கணக்கான கைதிகளை ஒரு கப்பல் கொள்கலனுக்குள் அடைத்து வைத்ததில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் பலியான சம்பவத்தில் தொடர்புள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் வைத்த குற்றச்சாட்டு உள்ளிட்டவை அமீரகத்தின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தின.
இஸ்ரேலுடனான புதிய கூட்டணி

பட மூலாதாரம், Frank Gardner
யேமனின் உறுதியற்ற மற்றும் அழிவுகரமான மோதலில் ஐக்கிய அரபு அமீரகம் தனது ஈடுபாட்டைக் குறைத்துவிட்டது. ஆனால் தனது பிராந்தியத்தில் துருக்கியின் வளர்ந்து வரும் செல்வாக்கை பின்னுக்குத் தள்ளும் ஒரு சர்ச்சைக்குரிய முயற்சியின் ஒரு பகுதியாக தனது இராணுவத்தை தொடர்ந்து தொலைதூர பகுதிகளில் ஈடுபடுத்திவருகிறது.
சோமாலிய தலைநகர் மொகாடிஷுவில் துருக்கி கணிசமான இருப்பைக் கொண்டிருக்கையில், ஐக்கிய அரபு அமீரகம் அந்த நாட்டிலிருந்து பிரிந்து தன்னைத்தானே தன்னாட்சி கொண்ட நாடாக அறிவித்துக்கொண்டுள்ள சோமாலிலாந்தை ஆதரிப்பதுடன், ஏடன் வளைகுடாவிலுள்ள பெர்பெராவில் ஒரு தளத்தை கட்டியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட லிபியாவில், துருக்கி, கத்தார் மற்றும் பிறரால் ஆதரிக்கப்படும் மேற்கில் உள்ளவர்களுக்கு எதிராக கிழக்கில் நிலை கொண்டுள்ள கலீஃபா ஹப்தார் படைகளை ஆதரிப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் ரஷ்யா மற்றும் எகிப்துடன் இணைந்துள்ளது.
இந்த மாதம், ஐக்கிய அரபு அமீரகம் கிரீஸுடனான கூட்டுப் பயிற்சிக்காக கிரீட் தீவுக்கு தனது கப்பல்களையும் போர் விமானங்களையும் அனுப்பியது. ஏனெனில் கிரீஸ்தான் கிழக்கு மத்தியதரைக் கடலில் உரிமைகள் தொடர்பாக துருக்கியுடனான மோதலுக்கு வழிவகுத்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்தார். இதையடுத்து, இருநாடுகளுக்கிடையே முதல் அதிகாரப்பூர்வ விமான சேவை முறையாக தொடங்கப்பட்டது. இந்த விமானம் இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றது. இது இருநாடுகளிடையேயான நீண்டகால ரகசிய ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவந்தது. (சௌதி அரேபியாவைப் போலவே, ஐக்கிய அரபு அமீரகமும் தனது குடிமக்களை கண்காணிக்க இஸ்ரேல் தயாரித்த கண்காணிப்பு மென்பொருளை பயன்படுத்தி வருகிறது).
இது ஒரு பரந்த சுகாதார, கலாசார மற்றும் வர்த்தக முன்முயற்சிகளுக்காக தொடக்கம் என்று கூறப்பட்டாலும், இது ஒரு வலிமையான இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த உறவை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.
துருக்கி மற்றும் பாலத்தீனத்தை போலவே இவ்விரு நாடுகளின் பொதுவான எதிரியான இரானும் இந்த உடன்படிக்கையை கண்டித்துள்ளது. ஒரு சுதந்திர அரசுக்கான பாலஸ்தீனத்தின் நோக்கங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் துரோகம் இழைத்துள்ளதாக அது குற்றம் சாட்டியுள்ளது.
பூமியை தாண்டிய லட்சியங்கள்

பட மூலாதாரம், Reuters
ஐக்கிய அரபு அமீரகத்தின் குறிக்கோள்கள் இதோடு நின்றுவிடவில்லை. அது அமெரிக்காவின் உதவியுடன் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்பியதன் மூலம் அத்தகைய சாதனையை புரிந்த முதல் அரபு நாடு என்ற புகழையும் பெற்றுள்ளது.
“ஹோப்” என்று பெயரிடப்பட்ட சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட இந்த திட்டத்தின்படி, ஜப்பானிய தீவொன்றிலிருந்து செலுத்தப்பட்ட விண்கலம் மணிக்கு 126,000 கிலோமீட்டர் வேகத்தில் இலக்கை நோக்கி விண்வெளியில் சீறிபாய்ந்து கொண்டிருக்கிறது
சுமார் 49.5 கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தனது இலக்கை அது வரும் பிப்ரவரி மாதம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து புதிய தகவல்களை வழங்கும். தண்ணீரை உருவாக்கத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டுமே செவ்வாயில் இருந்து வெளியேறிக்கொண்டே இருப்பது எப்படி என்பதில்தான் அமீரகத்தின் இந்த நம்பிக்கை விண்கலம் அதிக கவனம் செலுத்தப் போகிறது.
அதே சமயத்தில், இதுவரை பல்வேறு மட்டங்களிலும் விரைந்து நகர்ந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது சில கவலைகளும் முன்வைக்கப்படுகின்றன.
“ஐக்கிய அரபு அமீரகம் [அரபு] பிராந்தியத்தில் மிகவும் வலிமை மிக்க இராணுவத்தை கொண்டுள்ளது என்பதில் சிறியளவிலான சந்தேகம் நீடிக்கிறது” என்று வளைகுடா நாடுகள் பற்றிய ஆய்வாளரான மைக்கேல் ஸ்டீபன்ஸ் கூறுகிறார்.
“மற்ற அரபு நாடுகளால் செய்ய முடியாத வழிகளில், அமீரகத்தால் வெளிநாடுகளில் படைகளை குவிக்க முடிகிறது. ஆனால் அதற்கும் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லை உள்ளது. பல சிக்கல்களை ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்பது மட்டுமின்றி அதை நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால் அதுவே அவர்களுக்கு எதிராகவும் அமையும் அபாயம் உள்ளது.”
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com