பட மூலாதாரம், Getty Images
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று சிகிச்சைக்காக ஒரு மாத காலத்துக்கு மேல் மருத்துவமனையில் கழித்த பின்பு வீடு திரும்பியபோது தனது பிரச்சனைகள் பெரும்பாலும் தீர்ந்து விட்டன என்று 60 வயதாகும் மிலிந்த் கேட்கர் நினைத்தார்.
அவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் வசதி இல்லாததால், மூன்றாவது தளம் வறை அவரைத் தூக்கிச் சென்றார்கள்.
வீடு திரும்பிய பின்பும் மூச்சுத் திணறல் மற்றும் உடல் சோர்வு நீடித்ததால் அவர் சிகிச்சை பெற்று வந்த மும்பை மருத்துவமனையின் மருத்துவர் லான்சலோட் பிண்டுவை அவர் தொடர்பு கொண்டார்.
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றில் இருந்து குணம் அடைந்ததாக நினைத்துக் கொண்டிருந்த அவருக்கு அப்பொழுது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
த்ரோம்போசிஸ் பிரச்சனை
கோவிட்-19 காரணமாக நுரையீரலில் உண்டாகி இருந்த திசுப் பாதிப்பு அவரது உடலின் ரத்த நாளங்களில் ரத்தத்தை உறையச் செய்துள்ளதாக (த்ரோம்போசிஸ்) மருத்துவர் பின்டூ அவரிடம் தெரிவித்தார்.


இதை சரியான காலத்தில் கண்டறிந்து சிகிச்சை தராவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் பின்டூ.
வீடு திரும்பிய பின்னரும் ஒரு மாத காலத்தை படுக்கையிலேயே கழித்தார் கேட்கர்.
“என்னால் அதிகம் நடமாட முடியவில்லை; கால்களில் தொடர்ச்சியாக வலி இருந்தது; என் தினசரி வேலைகளை செய்வதே கடுமையாக இருந்தது,” என்று அவர் கூறினார்.
இன்னும் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தாலும், இவரது உடல்நிலை தேறி வருகிறது.

இதே பிரச்சனை கேட்கருக்கு மட்டும் இல்லை. த்ரோம்போசிஸ் எனும் ரத்த உறைதல் பிரச்சனை இருப்பதாக உலகம் முழுவதும் கோவிட் -19 தொற்றில் இருந்து குணமடைந்த பல்லாயிரம் பேர் கூறுகிறார்கள்.
தீவிர பாதிப்புக்கு உள்ளான 30% நோயாளிகளிடம் த்ரோம்போசிஸ் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
தற்போது கொரோனநச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை கட்டுப்படுத்தவே போராடி வரும் இந்தியாவில் கோவிட் -19 தொற்றில் இருந்து குணமடைந்த பின்பு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கவனம் அதிகமாக இல்லை.
உலகிலேயே கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு அதிகமாகவுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியா ஏன் கவலைப் பட வேண்டும்?
சமீப வாரங்ங்களில் நாளொன்றுக்கு சுமார் 90 ஆயிரம் பேருக்கு புதிதாக கோவிட் -19 தொற்று உண்டாகி வருகிறது .
அமெரிக்காவிலுள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளரும் பேராசிரியருமான மருத்துவர் நடாலி லேம்பர்ட், தொற்றுக்கு பிந்தைய பிரச்சனைகள் குறித்து தொடக்கத்திலேயே எச்சரித்தவர்களின் ஒருவர்.
கோவிட் -19 தொற்றில் இருந்து மீண்ட பின்னும் உடல் சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம், முடி உதிர்வு போன்ற பல பிரச்சனைகளை தொற்றாளர்கள் எதிர்கொள்வதாக சமூக ஊடகம் வாயிலாக இவர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் நடத்திய ஆய்வு ஒன்றிலும் கோவிட் -19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் குறைந்தபட்சம் 35% பேர், தொற்று இருந்ததற்கு முந்தைய உடல் நிலைக்கு திரும்பவில்லை என்று கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் காரணமாக தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு குணமடைந்த பின்னரும் வெவ்வேறு பிரச்சனைகள் வருவது மிகவும் இயல்பானதுதான். ஆனால் மிதமான பாதிப்புக்கு உள்ளானவர்கள் கூட இதற்கு முந்தைய உடல் நிலையை எட்டவில்லை என்று மருத்துவர் நடாலி லேம்பர்ட் கூறுகிறார்.
கோவிட்-19இன் நீண்ட காலத் தாக்கங்கள் குறித்து கூறுவது இப்போதே கூற முடியாது என்று உலகெங்கிலுமுள்ள வல்லுநர்களின் சிலர் கூறுகிறார்கள்.
பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள்
லிவர்பூல் ஸ்கூல் ஆஃப் டிராபிகல் மெடிசின்-ஐ சேர்ந்த பேராசிரியரான மருத்துவர் பால் கார்னர் கோவிட் -19 தொற்றில் இருந்து குணம் அடைந்த பின்னர், தனது உடல்நிலை குறித்து பிரிட்டிஷ் மெடிக்கல் ஜெர்னல் மருத்துவ சஞ்சிகையில் எழுதிவருகிறார்.
தனக்கு நீண்டகாலம் நீடித்த உடல் சோர்வு தன்னை மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியதாக அவர் கூறுகிறார்.
“கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று இருப்பது கண்டறியப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதற்கு பின்னும் பல மாதங்கள் அதன் போராட வேண்டியிருக்கும் என்று அப்போது நான் உணரவில்லை,” என்று அவர் எழுதுகிறார்.
“என்னை பணியமர்த்தியவர்கள் என்னுடைய சூழலைப் புரிந்து கொண்டனர். ஆனால் எல்லோருக்கும் இத்தகைய வாய்ப்பு அமைவதில்லை. குறிப்பாக பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் தட்டில் உணவு வேண்டுமானால் அவர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது,” என்று அவர் கூறுகிறார்.
அப்படி மீண்டும் வேலைக்கு செல்லும் போது நீண்ட நேரம் வேலை செய்வதால் அவர்களுக்கு உடல் சோர்வு உண்டானால், அது கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு பின் உண்டாக்கியுள்ள பாதிப்பு என்று உணராமல்,வேலையில் காரணமாக உண்டான உடல் சோர்வு மட்டுமே என்று அவர்கள் கருதக்கூடும் என்று அவர் எழுதியுள்ளார்.
பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் நீண்ட விடுப்பு
இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கோவிட்-19க்கு சிகிச்சை எடுத்து வந்த சுரேஷ் குமார் மீண்டும் வேலைக்கு சென்றுவிட்டார்.
ஆனால் அவருக்கு ஏற்பட்ட கடுமையான கால் வலியால் அவரால் எதையும் செய்ய முடியவில்லை. விடுப்பு எடுப்பதும் அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.
தற்போது உண்டாகியுள்ள பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் நீண்ட நாட்கள் விடுப்பு எடுப்பது அவருக்கு வேலை இழப்பை ஏற்படுத்தக் கூடும்.
ஒரு நாள் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவர் மயங்கி விழுந்து விட்டார். அவரது மனைவி அவரை அருகே உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவருக்கு சில விட்டமின் மாத்திரைகளை கொடுத்து ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
இரண்டு நாட்கள் கழித்து அவர் வேலைக்கு திரும்பிவிட்டார். ஆனாலும் அவரது கால் வலி குறையவில்லை.
ஒவ்வொரு நாளும் தனது உடல்நிலை மோசமாகி வருவதை அவர் உணர்ந்தார். பின்னர் வேறு ஒரு பெரிய மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்குதான் அவருக்கு த்ரோம்போசிஸ் இருப்பதும் அவருக்கு உயிராபத்து இருப்பதும் கண்டறியப்பட்டது.
“என்னால் கொரோன நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உடன் போராடி வெல்ல முடிந்தது. ஆனால் அதற்கு பிந்தைய பாதிப்புகளிலிருந்து மீள முடியவில்லை. நான் நான்கு வார காலம் ஓய்வு எடுக்க வேண்டியிருந்தது. அதனால் என் வேலையும் பறிபோய் விட்டது. நல்லவேளையாக எனக்கு இப்பொழுது வேறு ஒரு வேலை கிடைத்துள்ளது,” என்று சுரேஷ்குமார் கூறுகிறார்.
அமைப்புசாரா தொழிலாளர்கள்
சுரேஷ் குமாரைப் போலவே இந்தியாவில் பெரும்பாலான தொழிலாளர்கள் அமைப்புசாரா துறையில் பணியாற்றுகிறார்கள்.
பல கோடி பேர் தினக்கூலி தொழிலாளர்கள் இருக்கிறார்கள்’ உடலுழைப்பு தொழிலாளர்களான அவர்களுக்கு ஓய்வு என்பதே மிகவும் அரிதானது.
பெரும்பாலான நோயாளிகள் குணம் அடைந்த பின்பு வேலைக்கு செல்வதையே விரும்புகிறார்கள் என்று கூறுகிறார் நுரையீரல் நிபுணர் மருத்துவர் சுசில் குமார் அவர்கள் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றில் இருந்து குணமடைந்த பின்னரும் ஓய்வின்மை காரணமாக மூச்சுத்திணறலை எதிர்கொள்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
நகர்ப்புறங்களில் உள்ள பெரும் மருத்துவமனைகள் சிகிச்சையில் இருந்து வீடு திரும்பிய பின்னரும் நோயாளிகள் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை கண்காணிக்கின்றன.
ஆனால் சிறு நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் அதைச் செய்ய முடியாது.
இளம் வயதினருக்கும் பாதிப்புகள்
கோவிட்-19 தொற்றின் நீண்டகால தாக்கங்கள் எப்படி இருக்கும் என்பதை அறிய இன்னும் அறிவியலாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றிலிருந்து அதிக எண்ணிக்கையிலானவர்கள் குணம் அடைந்து வருவதால் அதற்கு பிந்தைய உடல்நிலை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
நாள்பட்ட நோய்கள் எதுவும் இல்லாத இளம் வயதினர் மத்தியிலும் கூட கோவிட்-19 தொற்றின் காரணமாக நீண்ட கால உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com