Press "Enter" to skip to content

உடலுறவு நேர கருத்தடை: 10 பயங்கர பழங்கால முறைகள்

தினமும் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட வேண்டியுள்ளது என்று நீங்கள் எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறீர்களா? அல்லது ஆணுறையைப் பார்த்து வெறுத்தது உண்டா?

நல்லது நண்பர்களே, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் பொது சுகாதாரத் துறை கண்டுபிடிப்புகளில் இரண்டு கருத்தடை சாதனங்கள் அநேகமாக சிறந்தவையாக இருக்கும்.

அதனால்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 26ஆம் தேதி, புத்திசாலித்தனமான இந்தப் படைப்புகள் – உலக கருத்தடை நாள் – என்று கௌரவிக்கப்படுகின்றன.

கருத்தடை சாதனங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தலை நோக்கமாகக் கொண்டு உலகம் முழுக்க உள்ள வெவ்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சியாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. “இளைஞர்கள் தங்கள் பாலியல் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ளும் விஷயங்களை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்க உதவியாக இருக்க வேண்டும்,” என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

எனவே, கருத்தடை என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று நாம் பார்ப்போம்.

உதாரணமாக, பாலுறவு மூலமாகத் தொற்றும் நோய்கள் பரவாமல் தடுப்பதில் ஆணுறைகள் முக்கியப் பங்கு வகித்தன. பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, குழந்தை பிறப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் வாய்ப்பு முதன் முறையாக பெண்களுக்குக் கிடைத்தது.

உண்மையில், இந்தக் கருத்தடை சாதனங்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாதவை என்று சொல்ல முடியாது. மாத்திரைகளின் பக்க விளைவுகள் பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை என நம்புகிறோம்.

ஆனால் கருத்தடை சாதனங்கள் இல்லாத காலத்தைவிட, இவை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வாழ்க்கை நல்லபடியாக இருக்கிறது என்பதை மறுப்பது கடினமான விஷயம்.

அதனால்தான் ஆணுறைகள் என்ற ஓரளவுக்கு ஆடம்பரமான கருத்தடை சாதனம் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பு வரலாற்றில் பழக்கத்தில் இருந்து வந்த அபாயகரமான கருத்தடை முறைகளின் இருண்ட காலம் பற்றி உங்கள் வேகமான ஒரு பயணத்துக்கு நாங்கள் அழைத்துச் செல்கிறோம்.

இந்தக் கட்டுரையை படித்த பிறகு, மாத்திரை எடுத்துக் கொள்வது பரவாயில்லை என்று நீங்கள் நினைக்கக் கூடும். கந்தகத்தைக் குடிப்பதைக் காட்டிலும், உங்கள் கால்களுக்கு இடையில் ஒரு விலங்கின் விதைப் பைகளைக் கட்டிக் கொள்வதைக் காட்டிலும் இது நல்லதாகத்தான் இருக்கும்.

அதிர்ச்சியடையச் செய்யும் தகவல்களை அறிந்து கொள்ள உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

1. தோப்புக்கரணமும் தும்மலும்

பழங்கால ‘தோப்புக்கரணம் மற்றும் தும்மல்’ முறை பற்றி உங்களுக்குத் தெரியுமா? கருத்தரிக்காமல் தடுக்க இது 100 சதவீதம் சரியான வழிமுறை என்று பழங்கால கிரேக்கர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

பாலுறவு முடிந்தவுடன், தோப்புக்கரணம் போடுவது போல நேராக உட்கார்ந்து எழுவது மற்றும் குதிப்பதன் மூலம், கருப்பையில் விந்தணு நுழைவது தடுக்கப்படும் என, நடக்காத ஒன்றை அவர்கள் நம்பியது இதன் ‘அறிவியல்பூர்வ நுட்பமாக’ உள்ளது. அத்துடன் கொஞ்சம் தும்மினால் பலன் உறுதி செய்யப்படும். குழந்தை உருவாகாது என அவர்கள் நம்பினர்.

* இதை நிரூபிக்க அறிவியல் காரணங்கள் மட்டுமல்லாது அடிப்படை அறிவுக்குக் கூட இது உகந்ததாக இல்லை என்பதால், இந்த நுட்பத்தைப் பின்பற்றிய பிறகும் குழந்தை உருவானால், அதற்கு நாங்கள் பொறுப்பாளியாக மாட்டோம்.

2. மரநாய்களின் விந்தகங்கள்

அறிவியலை விட மூடநம்பிக்கை மேலோங்கியிருந்த பழங்காலங்களில் (குறிப்பாக ஐரோப்பாவின் இருண்ட காலத்தில்), தொழில்முறை மாந்திரீகராக இருந்திருக்க வாய்ப்பிருந்த ஒருவரால், உருவாக்கப்பட்ட புனைக்கதை இது.

உறவில் ஈடுபடும் பெண்ணின் கால்களுக்கு மத்தியில் மரநாய்களின் விந்தகத்தைக் கட்டி வைத்தால், விருப்பம் இல்லாத கருத்தரிப்பு நடக்காது என்று மக்களை அவர்கள் நம்ப வைத்திருந்தனர். மாந்திரீகம் உங்கள் பக்கம் இருக்கும்போது அறிவியலை ஏன் நம்ப வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள்.

ஆனால் உறவு கொள்ளும் நேரத்தில், இணையரின் கால்களுக்கு இடையில் வேறொரு விலங்கின் விதைப் பைகள் கட்டியிருப்பது, உறவின் இன்பத்தைக் கெடுப்பதாகத்தான் அமையும் என்பது யதார்த்தம்.

3. கொல்லர் கூடத்து கசடுக் கலவை

பழங்கால கிரேக்கர்களின் இன்னொரு கருத்தடை கலவை குறித்து பார்ப்போம். கொல்லர்கள் பயன்படுத்திய நீரின் கசடுகளை குடிப்பது கருவுண்டாக்காது என்று நம்பப்பட்டது. கொல்லர்கள் தங்களுடைய உபகரணங்களைக் குளிர்விப்பதற்காக இந்த நீரைப் பயன்படுத்தினர்.

ஒரு வகையில் அது பலன் அளித்தது என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த நீரில் கந்தகம் மிகுந்திருக்கும். இந்த முறை கரு உண்டாவதைத் தடுக்கும் என்றாலும் குமட்டல், சிறுநீரக செயலிழப்பு, மரத்துப் போதல், கோமா மற்றும் மரணம் போன்ற பக்கவிளைவுகள் இதில் உள்ளன.

இந்த நுட்பம் வேறு மாதிரி, முதலாவது உலகப் போர் காலம் வரைகூட பயன்படுத்தப்பட்டது. தங்களுக்கு குழந்தை பிறக்காத நிலையை உருவாக்கும் என்பதால் கந்தகம் சார்ந்த தொழிற்சாலைகளில் வேலைபார்க்க பெண்கள் தாங்களாக முன்வந்தனர்.

4. முதலை சாணம்

பிறப்புறுப்பில் தடையை ஏற்படுத்தினால் யாராலும் கருத்தரிக்க முடியாது என்று பழங்கால எகிப்தியர்கள் நம்பினார்கள்.

இந்த யோசனை தோன்றிய தருணம் மனித குல வரலாற்றில் ஒரு ஒளிமயமான தருணமாக தெரியலாம் . ஆனால் அந்த ஒளி தந்த வெளிச்சம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

ஏனென்றால் அந்த தடையை உண்டாக்குவதற்காக வழங்கப்பட்ட ஆலோசனை அப்படி.

தேன் மற்றும் முதலையின் சாணத்தை கலந்து பிறப்புறுப்பில் பூசித் தடையை உண்டாக்கினால் கரு உண்டாகாது எனும் நம்பிக்கையே அது.

சித்திர எழுத்துகளை எழுதுதல் போல கடந்த காலங்களில் எகிப்தியர்கள் என்ன செய்திருந்தாலும், அவர்களின் இந்தத் திட்டத்துக்கு, நாம் ‘வேண்டாம்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

5. விந்தக டீ

டீ

மறுபடியும் விந்தகமா! இந்த முறை 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கனெடியர்களின் கண்டுபிடிப்பு.

இது விதைப் பைகளைக் கால்களுக்கு நடுவே கட்டிக் கொள்வதை பற்றி அல்ல. மதுபானத்தின் மூலம் கருத்தடையை உண்டாக்குவதை பற்றியது. “பீவர்” எனும் சிறு உயிரினம் ஒன்றின் விதைப் பைகளை நன்றாக அரைத்து, அதை பழங்கால மதுவில் கலந்து குடிப்பது கருத்தரிப்பை தடுக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்.

இது விதைப் பைகளைக் கால்களுக்கிடையே கட்டிக்கொண்டு உறவு கொள்வது எந்த அளவுக்கு பலனளித்ததோ , இதுவும் அந்த வகையில்தான் பலனளித்தது. அதாவது இதனாலும் எந்த பயனும் கிடையாது.

6. விலங்கு உணவுக் குடல்கள்

வேறு வகையில் சொன்னால், இவை ஆரம்பகால ஆணுறைகள். ஆணுறுப்பை சுற்றி ஏதாவது ஒன்றை வைத்து கட்டிவது என்பது ஒன்றும் புதிய சிந்தனை கிடையாது.

பல்வேறு பெயர்களில் ஆணுறைகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு அவற்றின் தேவையை விலங்குகளின் குடல்களே பூர்த்தி செய்தன.

ஆணுறை பற்றிய மிகவும் பழமையான பதிவு ஒன்றில், ஒரு வகை ஆணுறை பன்றியின் குடலில் இருந்து தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என வழிகாட்டும் பயனாளர் கையேடும் அதனுடன் தரப்பட்டுள்ளது.

இந்த ஆணுறையை பயன்படுத்துவதற்கு முன்பு மிதமான வெப்பம் உடைய பாலில் இதை நினைத்து விட்டு பயன்படுத்த வேண்டும் என்று அந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது எதற்காகப் பயன்படுத்தப்பட்ட பால் என்று தெரியாமல் யாராவது குடித்தார்களோ என்னவோ.

7. கேசனோவாவின் லெமன்

இது இத்தாலிய சாகசக்காரர் கியாகோமோ கேசனோவாவின் லெமன் கிடையாது. ஆனால் பெண்களை வசீகரிக்கும் குணம் கொண்டவர்கள் இந்த நடைமுறையை விரும்பியவர்களாக இருந்தனர்.

இதற்கு அரை எலுமிச்சை தேவை. உள்ளே இருக்கும் சதைப் பகுதியை நீக்கிவிட்டு, பெண்ணுறுப்பின் உள்ள இதை வைத்துவிட வேண்டும். எலுமிச்சை தோல் பெண் உறுப்பில் தொப்பி போல செயல்படும். அமிலச்சாறு விந்தணுவை கொல்லக் கூடியதாக இருக்கும். எனவே இது ஒரு வகையில் வேலை செய்தது என்று சொல்லலாம்.

மேலும், நாள்முழுதும் அந்த இடத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறது.

8. பாதரசத்தில் வறுத்த தவளைக்குஞ்சு

கி.மு. 900 ஆண்டு வாக்கில், உடலுறவு முடிந்தவுடன் பெண்கள், பாதரசத்தில் வறுத்த 16 தலைப் பிரட்டைகளை (தவளைக்குஞ்சு) சாப்பிட வேண்டும் என்று சீன பிறப்புக் கட்டுப்பாட்டு நிபுணர்கள் கூறி வந்துள்ளனர். கொல்லர்களின் தண்ணீரைப் போல, இதுவும் தவறான வழிகாட்டுதலாக இருந்துள்ளது. இதுவே விஷமாகும் ஆபத்து உள்ளது.

இதை சாப்பிட்டால் பெண்கள் கருத்தரிக்கவில்லைதான். பலரும் நிரந்தரமாகவே கருத்தரிக்கும் தன்மையை இழந்தனர். கல்லீரல், சிறுநீரகங்களில் கோளாறு மற்றும் பிற முக்கிய உறுப்புகளில் கோளாறு ஏற்படும் பக்க விளைவுகள் இதில் உள்ளது. நிலைமை மிக மோசமாகிப் போனால் மரணமும் ஏற்படும்.

9. அபின் பூ

ஷெர்லாக் ஹோம்ஸ் சிறப்பு இது. ஹோம்ஸ் கதாபாத்திரம் கருவில் உருவானதற்கு முன்பே கண்டறியப்பட்ட முறை இது.

அபின் என்பது வெறும் பூ மட்டுமல்ல என்று சுமத்ரா தீவு மக்கள் கண்டறிந்தனர். இருபுறம் வெடித்துள்ள இந்தத் தாவரத்தின் பூவை உடலுறவின்போது ஒரு மெல்லிய திரையைப் போல பயன்படுத்துவார்கள் அல்லது அதற்கு மாற்றாக பெண் உறுப்புக்குள் இதன் பூக்களை நுழைத்துக் கொள்வார்கள். புகைபிடித்தல் போன்ற அதே தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்பினார்கள்.

இது எந்த அளவுக்குப் பயன் தந்தது என்பது தெரியவில்லை. குறைந்தபட்சம், ஒரு முறை முயற்சித்துப் பார்ப்பது வித்தியாசமான அனுபவத்தைத் தந்திருக்கலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிகிறது. வார இறுதி இரவுகளில் முயற்சிக்க புதிய வழிமுறை என்று நினைக்கிறீர்களா? ஆனால் வேண்டாம், அப்படி செய்யக் கூடாது.

கோக-கோலா

10. கோக-கோலா ‘பீய்ச்சியடித்தல்’

நம்ப முடியாத வரலாற்றுச் செய்திகளைப் படித்தீர்கள். இன்னொன்றும் இருக்கிறது. இது 60 ஆண்டுகளுக்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறை.

கோக-கோலா பல வகைகளில் பயன்படுத்தப் படுகிறது. வோட்காவில் கலக்கலாம், கோடையில் புத்துணர்வூட்டும் பானமாகக் குடிக்கலாம், தேவை இல்லாமல் முளைத்த பற்களை கரைய வைக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அது கருத்தடை சாதனமாகப் பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்காது.

1950களில் உடலுறவு முடிந்ததும் பெண்கள் கோக-கோலாவை பெண் உறுப்பில் ஊற்றிக் கொள்வார்கள். அதில் உள்ள சர்க்கரை விந்தணுக்களை செயல் இழக்கச் செய்யும் என்றும் காபனேற்றம் செய்த பானம் பெண்ணுறுப்பில் வலிந்து உள்ளே போகும் என்றும் நம்பினார்கள்.

இவ்வளவு அறிவியல்தான் தேவைப்பட்டது. உறவுக்குப் பிந்தைய பயன்பாடு பற்றி தெரிய வந்த பிறகு கோக் மிகவும் பிரபலம் ஆனது.

வரலாற்றில் பைத்தியக்காரத்தனமான கருத்தடை நடைமுறைகளை அறிந்து கொண்டிருக்கிறீர்கள். இவற்றில் எதையும் வீட்டில் முயற்சித்துப் பார்க்காமல் இருப்பது நல்லது. வரலாற்றின் இருண்ட பக்கங்களுடன் அவை முடிந்துவிட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »