பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கருவுற்ற பெண்கள்: உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் மீது விசாரணை மற்றும் பிற பிபிசி செய்திகள்

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கருவுற்ற பெண்கள்: உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் மீது விசாரணை மற்றும் பிற பிபிசி செய்திகள்

உலக சுகாதார நிறுவனம் தனது உதவிப் பணியாளர்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதாக உறுதி கொடுத்துள்ளது.

காங்கோ ஜனநாயக குடியரசில் இபோலா பரவிய சமயத்தில் அங்கு பணியாற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் ஊழியர்கள் அந்நாட்டு பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி உள்ளனர் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு செய்தி முகமைகள் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் உலக சுகாதார நிறுவனத்தின் ஊழியர்கள் மீது 50 பெண்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

பெண்களுக்கு மதுபானம் கொடுத்து மருத்துவமனையில் வைத்து பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக இரண்டு பெண்கள் கர்ப்பமாகி உள்ளனர். 2018ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தாண்டு வரை இப்படியான பாலியல் சுரண்டல்கள் நடந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நியூ ஹுமானிடேரியன் செய்தி முகமை மற்றும் தாம்ப்சன் ராய்ட்டர்ஸ் ஃபவுண்டேஷன் ஆகியவை இது தொடர்பாக கடந்த ஓராண்டாக விசாரித்து வருகின்றன. இது தொடர்பாக உறுதியான விசாரணை நடைபெறும் என உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் 3 ஏரிகள் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் நிலத்துக்கு கீழே 1.5 கிலோமீட்டரில் மூன்று ஏரிகள் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்திற்கு அருகில் நிலத்துக்கு அடியில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வு ஒன்றின்போது சுட்டிக்காட்டப்பட்ட நான்காவது ஏரி ஒன்றின் இருப்பையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

குவைத் மன்னர் மரணம் – அடுத்த மன்னர் யார்?

எமிர்

குவைத் மன்னர் (எமிர்) ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா, தனது 91ஆம் வயதில் காலமானார்.

அவரது ஒன்று விட்ட சகோதரரும் பட்டத்து இளவரசருமான ஷேக் நவாஃப் அல் அஹ்மத் (83) புதிய மன்னராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: எலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்ட பெண் மரணம்

பெண்

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 19 வயது பட்டியலின பெண்ணை நான்கு பேர் கூட்டுப்பாலியல் செய்து கடுமையாகத் தாக்கிய சம்பவத்தில் 14 நாட்களாக உயிருக்குப் போராடியவர் செவ்வாய்க்கிழமை காலையில் உயிரிழந்தார்.

வெங்கய்ய நாயுடுக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)

வெங்கய்ய நாயுடு

இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுக்கு (71) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல் அவரது அதிகாரப்பூர்வ பதவிக்குரிய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், குடியரசு துணைத் தலைவர் வழக்கமான கோவிட்-19 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரிசோதனைக்கு இன்று காலை உட்படுத்திக் கொண்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman