பட மூலாதாரம், Getty Images
“நான் வேறு எங்கும் வாழ மாட்டேன்” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பிபிசியிடம் ஹரோல்டு கிரீன் கூறினார்.
ஆனால் டிரிஸ்டன் டா குன்ஹா அல்லது உள்ளூர் மக்களுக்கு டி.டி.சி. – பயந்த சுபாவம் கொண்டவர்களுக்கான பகுதி கிடையாது.
அது வழக்கத்திற்கு மாறானது என்று கூறுவது, குறைத்து மதிப்பிடுவதாக ஆகிவிடும்.
உலகில் மக்களிடம் இருந்து அதிகபட்ச தொலைதூரம் விலகி இருக்கும், மக்கள் வாழும் தீவுக்குச் செல்ல நீங்கள் விரும்பினால், பின்வருமாறு செய்யலாம்:


பட மூலாதாரம், Alasdair Wyllie
1.தென்னாப்பிரிக்காவில் கேப் டவுன் நகருக்கு விமானத்தில் செல்லவும்
2.மிதக்கும் ஒரு படகில் குதிக்கவும்
3.பூமியில் மிகவும் சீற்றமான அலைகளைக் கொண்ட கடல் பகுதியில் 18 நாட்களுக்கு படகில் பயணிக்கவும். பனிக்கு இடையில் ஓய்வு கிடைக்கும் என்று நம்பவும். பிரதானத் தீவின் கவர்ச்சியான தோற்றத்தைக் காணவும்.
4.அதை நெருங்கத் தொடங்குங்கள். அலைகள் அடங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். படகை கரைக்குச் செலுத்தி, அதில் இருந்து இறங்கும் வகையில் அலைகள் ஓய்ந்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
5.அலைகள் வந்து படகை பாறைகள் மீது மோதச் செய்வதற்கு முன்னதாக தண்ணீரில் இருந்து வெளியே கொண்டு போய்விடுங்கள். அல்லது இன்னொரு நாள், வேறு யாராவது பயன்படுத்துவதற்காக குட்பை சொல்லி கடலிலேயே அனுப்பிவிடுங்கள்.
6.டிரிஸ்டன் டா குன்ஹாவின் தலைநகர், ஏழு கடல்களின் எடின்பர்க் நகருக்கு ஒரு வணக்கம் சொல்லுங்கள் (மக்கள் வாழும் ஒரே பகுதி அது)

நீங்கள் “வேகமான” படகு ஒன்றை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு எப்போதும் உண்டு: தென்னாப்பிரிக்காவில் பாறைகள் மிகுந்த கடலோரத்தில் இருந்து வெறும் ஆறு நாட்களில் அதில் செல்ல முடியும் – ஒரே பிரச்சினை என்னவென்றால், ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் அது 2,810 கிலோ மீட்டர் பயணம் செல்லும். அதில் இருக்கும் இடவசதியும் குறைவு.
அல்லது அந்த வழியாக வந்து போகும் வெகுசில மீன்பிடி கப்பல்களில் நீங்கள் லிப்ட் கேட்டு போகலாம்.
டிரிஸ்டன் டா குன்ஹாவுக்குச் செல்வதாக இருந்தாலும், அங்கிருந்து வெளியேறுவதாக இருந்தாலும் இவ்வளவு கஷ்டங்கள் உள்ளன.
“வாழ்க்கைக்கான தோழர்கள்”

பட மூலாதாரம், penguins-and-potatoes.co.uk
டிரிஸ்டன் டா குன்ஹாவில் வாழும் 245 பேரும் (கடைசியாக கணக்கெடுத்த போது 133 பெண்கள் மற்றும் 112 ஆண்கள்) ஏழு கடல்களின் எடின்பர்க்கில் சேர்ந்து வாழ்கிறார்கள்.
அந்தக் குடியிருப்புப் பகுதியில் ஒரு காபி நிலையம் உள்ளது, சமூக நிகழ்வுகளுக்காக ஓர் அரங்கம் உள்ளது, ஒரு தபால் நிலையம் உள்ளது, அல்பாட்ரோஸ் எனப்படும் ஒரு மது அருந்தும் கூடம் உள்ளது.
சிறிய நவீன மருத்துவமனை ஒன்றும், ஒரு சிறிய பள்ளிக்கூடமும் அங்கே இருக்கின்றன.
“தீவில் இருந்து வெளியேறாமல் இருந்தால், யாருடன் பள்ளிக்குச் சென்றீர்களோ அவர்களுடன் தான் வாழ்வையும் கழிப்பீர்கள் என்பதை சீக்கிரத்தில் புரிந்து கொள்வீர்கள்” என்று பிபிசியிடம் அலாஸ்டெய்ர் வைல்லி கூறினார்.
இவர் சமீப காலம் வரை அங்கே வாழ்ந்து, வேளாண்மை ஆலோசகராக இருந்து வந்தார்.

பட மூலாதாரம், Google
திருமணம் பற்றி சிந்திப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே, உங்கள் வாழ்க்கைத் துணைவரை அங்கே தான் நீங்கள் சந்தித்திருப்பீர்கள். நீங்கள் டிரிஸ்டனை சேர்ந்தவராக இருந்தால், அந்தத் தீவின் ஆறு பட்டப் பெயர்களில் ஒன்று உங்களுக்கு தரப்படும் பெருமையும் கிடைக்கும். லாவரெல்லோ, ரெப்பெட்டோ, ரோஜர்ஸ், ஸ்வெய்ன், கிரீன் அல்லது கிளாஸ் என்ற பட்டப் பெயர்களில் ஒன்று உங்கள் பெயருடன் சேர்ந்துவிடும் என்பதில் ஆச்சரியம் எதுவும் கிடையாது.
அந்தத் தீவில் பிறக்காத இரண்டு பேரும் அங்கே வாழ்கிறார்கள்: பல ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் தீவைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்து கொண்ட ஓர் ஆணும், ஒரு பெண்ணும் தங்களது புதிய குடும்பங்களுடன் அங்கேயே வாழ முடிவு செய்து தங்கிவிட்டனர்.
அந்தப் பகுதி பிரிட்டன் கடல் எல்லைக்குள் வருவதால், பிரிட்டனில் இருந்து குறிப்பிட்ட கால பணி அடிப்படையில் ஒரு மருத்துவர் மற்றும் ஓர் ஆசிரியர் அங்கு வந்து செல்கிறார்கள்.
பொழுதுபோக்கு

பட மூலாதாரம், Getty Images
“இங்கே மிகுந்த அமைதி நிலவும். புல் வளரும் சப்தத்தைக் கூட கேட்க முடியும்” என்று ஹரோல்டு கூறினார். தனது தாயகத்தின் அமைதி மற்றும் நிசப்தத்தை அவர் மிகவும் நேசிக்கிறார்.
மேலும் அங்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டு. “பூட்டுகள் எதுவும் கிடையாது” என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் இணையம் இணைப்பு “மோசமாக அல்லது மிக மோசமாக உள்ளது” என்று இன்னொரு உள்ளூர்வாசி கூறினார்.
அங்கே ஒரு சாலையும் இருக்கிறது. 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலோரத்தில் செல்லும் அந்தச் சாலை “வாக்கு போட்டது போல” சிறு பள்ளங்களைக் கொண்டிருக்கிறது. பலமான காற்று பாதிக்காமல் பாறைகளால் ஆன சுவர்கள் போன்ற அமைப்பில் உள்ள பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள சிறிய வயல்களும் இருக்கின்றன.
அங்கே நீங்கள் சில காய்கறிகளை விளைவிக்கலாம். “பெரும்பாலும் உருளைக்கிழங்கு விளைவிக்கிறார்கள்” என்று அங்கு முன்னர் வசித்த ஒருவர் தெரிவித்தார்.
“கோடையில் நாங்கள் அங்கே சென்று, நகருக்கு வெளியில் செல்லும் அனுபவம் எப்படி இருக்கும் என ரசிப்போம்” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Alasdair Wyllie
திறந்த வெளியில் விருந்து வைப்பது தான் அவர்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. `அருகில் உள்ள’ தென்னாப்பிரிக்காவில் இருந்து அதைக் கற்றிருக்கிறார்கள். உள்ளூர் கால்நடைகளை பயன்படுத்திக் கொள்வதற்கான நல்ல வாய்ப்பாக அதைக் கருதுகிறார்கள்.
இசைக் கருவிகள் வாசிப்பது, பாட்டுப் பாடுவது ஆகியவை அந்தத் தீவு வாழ்க்கையில் பெரும் பகுதி நேரத்தை எடுத்துக் கொள்கிறது. ஆனால், “இப்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் ஸ்கிரீன்களில் (கைபேசி போன்ற சாதனங்கள்) தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள்” என்று அலஸ்டெய்ர் கூறினார்.

பட மூலாதாரம், penguins-and-potatoes.co.uk
பசுமை நிறைந்த அந்தத் தீவில் மலையேற்றம் செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. 10 கிலோ மீட்டரை மிகாத அகலம் கொண்ட அந்தத் தீவில் பெரிய பள்ளத்தாக்குகள், முகடுகள் உள்ளன. அந்த முகடுகள் கடல் மட்டத்தில் இருந்து 2,062 மீட்டர் வரை உயரமாக உள்ளன.
உண்மையில், சமமான நிலப்பரப்பு அதிகமாக இல்லை. தீவின் எல்லையில் மூன்றில் இரண்டு பகுதி அளவுக்கு பெரும்பாலும் பாறைகளைக் கொண்டதாக, அப்படியே கடலில் முடிவதாக இருக்கின்றன.
நிலத்தையும், நீரையும் சார்ந்த வாழ்க்கை

பட மூலாதாரம், Brian Gratwicke
டிரிஸ்டன் டா குன்ஹா அல்லது டிரிஸ்டன் என்பது எரிமலை தீவுக்கூட்டங்களில் பிரதான தீவாக உள்ளது.
தீவுகளின் நைட்டிங்கேர்ல் என்பது டிரிஸ்டன் மக்கள் விடுமுறையை கழிக்கச் செல்லும் இடமாக உள்ளது. அங்கே நீச்சலடிப்பது குறைவான ஆபத்தை கொண்டதாக இருக்கும் – பலமான நீரோட்ட பலம் இருக்கும், சுறா மீன்கள் இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
நெருங்க முடியாத தீவு மற்றும் காஃப் தீவு ஆகியவை உள்ளன. காஃப் தீவில் தென்னாப்பிரிக்கா வானிலை நிலையத்தை நிறுவியுள்ளது. வருடாந்திர சுழற்சி அடிப்படையில் சில வானிலை ஆராய்ச்சியாளர்கள் அங்கு பணிபுரிகின்றனர்.
“தீவு வாழ்க்கையில் காதல் உற்சாகம் நிறைந்ததாக வாழும் எண்ணம் வரும்” என்கிறார் அலாஸ்டெய்ர். ஆனால் அது உங்களுக்கான ஆபத்துடன் சேர்ந்ததாக இருக்கும்: “நிச்சயமாக இது அழகான இடம் தான், ஆனால் இது சொர்க்கபூமி அல்ல” என்கிறார் அவர்.
அமைதியான தீவுகள்

பட மூலாதாரம், penguins-and-potatoes.co.uk
காற்றின் விசில் சப்தம் மற்றும் பிரதான தீவில் திரியும் காகங்களின் ஓசை தவிர, வேறு எந்த சப்தமும் அங்கே கேட்காது.
அந்தத் தீவுக் கூட்டங்களில் நீங்கள் எங்கே சென்றாலும் ஆயிரக்கணக்கான பறவைகள் உங்களைச் சுற்றி வரும்; ஆனால் எந்தப் பறவையும் சப்தம் போடாது என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கும்.

பட மூலாதாரம், Brian Gratwicke
“அது ஒரு முரண்பாடான விஷயம். ஏராளமான பறவைகள் இருக்கின்றன. ஆனால், ஒலி எழுப்புவது கிடையாது” என்கிறார் அலாஸ்டெய்ர். பாறைகளில் திரியும் எண்ணற்ற பென்குயின்களை கௌரவிக்கும் வகையில் penguins-and-potatoes.co.uk என்று தனது வலைப்பூவிற்கு அவர் பெயரிட்டுள்ளார். இந்த பென்குயின்களுடன் அவரும், அவருடைய மனைவியும் அதிக நேரத்தைக் கழித்துள்ளனர்.
வேட்டைப் பறவைகள் இல்லாத காரணத்தால், அங்குள்ள பறவைகள் பறந்து ஓட வேண்டிய அவசியம் இல்லை. அணுகமுடியாத தீவு போன்ற பகுதிகளில் தீவுக்கூட்டங்களில் வாழும் தனித்துவமான பறவை இனங்கள் இருக்கின்றன.
பழங்கள், காய்கறிகள் கிடையாது – ஆனால் ஏராளமான கடல் நண்டுகள் உண்டு

பட மூலாதாரம், penguins-and-potatoes.co.uk
உலகில் மிகவும் தொலைவில் உள்ள எளிதில் அணுக முடியாத தீவில் வசிப்பது என்பது தனிமைப்பட்டு இருப்பதை எளிதாக்குவது என்றில்லை – புவியியல் அமைப்பு அப்படி அமைந்திருக்கிறது.
ஆனால் “இந்தத் தீவில் கோவிட்-19 பாதிப்பு ஏற்படவில்லை என்பதற்காக, எங்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டதில்லை என்று சொல்லிவிட முடியாது” என்று அங்கு வாழும் பியோனா கில்பாட்ரிக் கூறினார்.
தென்னாப்பிரிக்காவில் முடக்கநிலை அமல் செய்யப்பட்டதால், தீவுக்கு வழக்கமாக சரக்குகள் ஏற்றி வரும் கப்பல்கள் கேப் டவுனில் இருந்து வெளியேற முடியாமல் போனது.
“நல்ல சூழ்நிலைகளில் சௌகரியமாக இருக்கும் வழங்கல் சங்கிலித் தொடர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது” என்று அலாஸ்டெய்ர் தெரிவித்தார். அவர் தனக்கு அருகில் வசித்தவர்களுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறார்.

பட மூலாதாரம், penguins-and-potatoes.co.uk
“ரொம்ப நாட்களுக்கு முன்னதாகவே தீவில் காய்கறிகள், பழங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுவிட்டது. இப்படி நடப்பது அசாதாரணம் கிடையாது. ஆனால் இப்போதைய சூழ்நிலையில், மறுபடியும் எப்போது அவை கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை” என்று அவர் கூறினார்.
டிரிஸ்டன் கடல் நண்டுகளுக்கு மட்டும் பற்றாக்குறையே கிடையாது. அந்தப் பகுதி குளிர்நீரில் வாழும் பாறை நண்டுகளை அந்தப் பகுதி மக்கள் பிடித்து பதப்படுத்தி வைத்துக் கொள்கிறார். ஏற்றுமதி வாய்ப்பு உள்ள காலத்தில், அந்தத் தீவின் 70 சதவீத வருமானம் அதன் மூலமாகத்தான் கிடைக்கிறது.
குழந்தையால் ஆனந்தம்

பட மூலாதாரம், penguins-and-potatoes.co.uk
கோவிட் பாதிப்பு காரணமாக எதிர்பாராத ஒரு விஷயமும் டிரிஸ்டன் டா குன்ஹா தீவில் நடந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளில் முதன்முறையாக அந்தத் தீவிலேயே ஒரு குழந்தை பிறந்துள்ளது.
“வழக்கமாக பிரசவத்தில் சிக்கல் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக, முன்னதாகவே பெண்கள் தென்னாப்பிரிக்காவுக்கு சென்று விடுவார்கள். ஆனால் முடக்கநிலை அமல் மற்றும் தகவல் தொடர்பு தற்காலிக நிறுத்தம் போன்ற காரணங்களால், அந்தக் குழந்தை டிரிஸ்டனிலேயே பிறக்க வேண்டியதாயிற்று” என்று அலாஸ்டெய்ர் தெரிவித்தார்.
தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். தீவுக்கு புதிய ஒருவரை வரவேற்பதில் உள்ளூர் மக்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள்.
டிரிஸ்டனில் முதலில் 1800களின் தொடக்கத்தில் குடியேற்றம் நடந்துள்ளது. அங்கு மக்கள் தொகை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது என்றாலும், கடந்த சில தசாப்தங்களாக மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது.
“நான் அங்கே வாழ்ந்தபோது, வயது முதிர்வால் 15 பேர் இறந்தார்கள். ஆனால் இரண்டு குழந்தைகள் மட்டுமே பிறந்தன” என்று அலாஸ்டெய்ர் தெரிவித்தார். “வயது முதிர்ந்த மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, பொதுவான எண்ணிக்கை குறைவு சூழலில், இது மிக நல்ல செய்தியாக அமைந்துள்ளது” என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
எதிர்காலத்துக்கு இன்னும் நல்ல செய்தி இருக்கிறது: “செகன்டரி கல்விக்காக பிரிட்டனுக்கு அனுப்பப்பட்ட 3 பெண்களில், ஒருவர் அங்கேயே உயர் கல்வியைத் தொடரப் போகிறார்” என்று அலாஸ்டெய்ர் கூறினார்.
அந்தத் தீவில் இருந்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் முதலாவது இளம் பெண்ணாக அவர் இருக்கப் போகிறார். (இதற்கு முன்பு டிரிஸ்டனை சேர்ந்த ஒருவர் தொலைநிலைக் கல்வி மூலம் பட்டம் பெற்றிருக்கிறார்.)
தொலைதூரத்தில் வாழ விருப்பம் கொண்டு, அங்கு குடியேறலாம் என்ற எண்ணம் வருமானால், உங்களுக்கு வெற்றி கிடைக்காது என்ற எச்சரிக்கையையும் தெரிந்து கொள்ளுங்கள்.
“அங்கே நிரந்தரமாகக் குடியேறுவதற்கு தீவு கவுன்சில் அனுமதி அளிக்க வேண்டும். பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன” என்று அலாய்டெய்ர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com