Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியாவுக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் டிரம்ப்.

மேலும் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாகவும், விரைவில் இதிலிருந்து குணமடைவோம் என்றும் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனது உதவியாளர் ஒருவருக்கு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், தானும் தனது மனைவியும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.

ஹோப் ஹிக்ஸ் எனும் உதவியாளருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

ஹோப் ஹிக்ஸூடன் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் பதவிக்கு இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடும் டொனால்டு டிரம்பின் பிரசாரங்களில் உடன் காணப்படும் 31 வயதான ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ், கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமை கிளீவ்லேண்டில் நடந்த அதிபர் வேட்பாளர்களுக்கு இடையிலான விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் சென்ற விமானத்தில் உடன் பயணித்தார். அவர் முக கவசம் இன்றி விமானத்தில் இருந்து இறங்கி வந்ததை புகைப்படங்கள் காட்டுகின்றன.

மேலும், அதற்கு அடுத்த நாள் மின்னிசோட்டா மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் டிரம்புடன் உலங்கூர்தியில் வெகு அருகாமையில் அமர்ந்தவாறு ஹோப் பயணித்ததும் தெரியவந்துள்ளது.

உதவியாளருக்கு தொற்று

ஹோப் ஹிக்ஸ்

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த டிரம்ப், “ஒரு சிறிய இடைவெளி கூட எடுக்காமல் மிகவும் கடினமாக உழைத்து வரும் ஹோப் ஹிக்ஸுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நானும் எனது மனைவியும் எங்களது பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். அதற்கு இடைப்பட்ட நேரத்தில், நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுடன் வரும் 15ஆம் தேதி மியாமியில் நடைபெறவுள்ள இரண்டாவது விவாதத்தில் டிரம்ப் பங்குபெறுவதில் இது எத்தகைய தாக்கத்தை செலுத்துமென்று இதுவரை உறுதியாக தெரியவில்லை.

பெரும்பாலான நேரங்களில் முக கவசம் அணியாமல் காணப்படும் டிரம்ப், அடிக்கடி தனது உதவியாளர்களுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »