அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடப்பதற்கு 32 நாட்களுக்கு முன்பு அதிபர் டொனால்டு டிரம்புக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 74 வயதாகும் டிரம்ப் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றின் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது வயதினரில் ஒருவராக இருக்கிறார்.
அதிபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டிரம்ப் பிறரை வைத்து பிரசாரம் செய்ய முடியாதா?
கொரோனா தொற்று இருப்பது அவருக்கு உறுதியான பின்பு அமெரிக்க அதிபர் தேர்தலில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
மின்னசோட்டா, பென்சில்வேனியா, வர்ஜீனியா, ஜார்ஜியா, ஃப்ளோரிடா, வட கரோலினா ஆகிய மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு கட்சியின் பிரசார கூட்டங்கள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
தாம் நேரடியாக இல்லாவிட்டாலும் அந்த பிரசாரக் கூட்டங்களை டிரம்பால் நிகழ்த்தி இருக்க முடியும்.
ஆனால் கடந்த காலங்களில் டிரம்பின் குடும்பத்தினர், அவரது அரசின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பிரசார குழு அலுவலர்கள் ஆகியோர் இத்தகைய கூட்டங்களை முன்னின்று நடத்தினார்கள்.
சமீப நாட்களில் டிரம்புடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதன் காரணமாக இந்தக் கூட்டங்களை முழு வெற்றியுடன் நடத்துவது சிரமமானது.
மியாமியில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் இடையிலான இரண்டாவது கட்ட விவாதம் டிரம்பின் தனிமைப்படுத்தல் முடிந்த பின்பு அக்டோபர் 15-ஆம் தேதிதான் நடைபெற உள்ளது.
எனினும் அதிலும் அவர் கலந்து கொள்வாரா என்று இப்போது உறுதியாக கூற முடியாது.
வேண்டுமானால் அதை காணொலிக் காட்சி வாயிலாக நடத்தலாம் .

அதுவும் அந்த தேதியில் அமெரிக்க அதிபரின் உடல்நிலை எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.
இப்போதைய நிலவரப்படி தேர்தல் தேதியை மாற்றுவது குறித்த எந்த பேச்சும் எழவில்லை.
அப்படி மாற்ற வேண்டுமானால் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் கட்டுபாட்டில் இருக்கும் பிரதிநிதிகள் சபை, ஆளும் கட்சியான குடியரசு கட்சியின் கட்டுபாட்டில் இருக்கும் செனட் சபை ஆகிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
சில அமெரிக்க மாகாணங்களில் ஏற்கனவே வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது.
டிரம்ப் உடல்நிலை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவை எப்படி பாதிக்கும்?
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று காரணமாக உண்டான பொருளாதார நெருக்கடி, கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவலர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது மரணமடைந்ததால் நாடெங்கிலும் இனவெறிக்கு எதிராக நிகழ்ந்த போராட்டங்கள், டிரம்பின் ஆட்சிக்காலத்தில் அவ்வப்போது அவருக்கு எதிராக எழுந்த சர்ச்சைகள் ஆகியவை நிலவிய போதும் அதிபர் தேர்தலுக்கான போட்டி நிலைத்தன்மை வாய்ந்ததாகவே இருந்தது.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் கடந்த சில மாதங்களாகவே தேசிய அளவிலான கருத்துக்கணிப்புகள் முன்னணியில் இருக்கிறார்.

ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் சமநிலையில் இருக்கும் மாநிலங்களில் கூட சற்று அதிக ஆதரவை பெற்றவராக ஜோ பைடன் இருக்கிறார்.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் முடிவுகள் மாறலாம் எனும் நிலையில் இருக்கும் இந்த மாநிலங்களின் முடிவுகளை மாற்றுவதற்கு டிரம்புக்கு இனி நேரம் இருக்காது.
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவலை டிரம்ப் நிர்வாகம் கையாண்ட விதத்தால் அவரது அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடையே உள்ளது.
அதுகுறித்த எந்த விவாதமும் டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது பாதிக்கும்.
கோவிட்-19 தொற்று பரவல் தொடங்கிய காலத்தில் அது குறித்து பெரிய கவலை ஏதும் இல்லாமல் வெளிப்படுத்திய கருத்துகள் அமெரிக்கர்கள் பலராலும் நினைவு கூரப்படும்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையே நடந்த முதல் கட்ட விவாதத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அடிக்கடி முகக் கவசங்கள் அது குறித்தும் பெரிய கூட்டத்தை திரட்டி தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்தாதது குறித்தும் எள்ளி நகையாடினார் டிரம்ப்.
“நான் அவரைப் போல எப்பொழுதும் முகக் கவசம் அணிவது இல்லை. எப்பொழுது பார்த்தாலும் அவர் முக கவசம் அணிந்து இருக்கிறார்,” என்றும் அந்த விவாதத்தின் போது அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
சமூக இடைவெளி மற்றும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நெருக்கடியை கடுமையாக எடுத்துக்கொள்வது உள்ளிட்டவை குறித்து டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது கூறி வந்தாலும் அறிவியலுக்குப் பொருந்தாத வகையில் இந்த நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) ‘மாயமாகிவிடும் ‘ என்றும் குறிப்பிட்டார்.
தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக அமலாக்கிய மற்றும் தொழில்கள் மற்றும் பள்ளிக்கூடங்களை திறப்பதில் கட்டுப்பாடுகளை அதிகமாக்கிய அதிகாரிகளையும் தனது விவாதத்தின் போது கடுமையாக விமர்சித்தார்.
தாமே கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு உள்ளாகியுள்ள டிரம்ப் இந்தப் பெருந்தொற்று பரவலைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுத்தாரா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
அதிபரின் நலம் மற்றும் பாதுகாப்பு முக்கியமானதாக பின்பற்றப்படும் வெள்ளை மாளிகையிலேயே கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் நிகழ்ந்துள்ளது பெரும் கவலைகளை உண்டாக்கியுள்ளது.
எதிர்க் கட்சிக்கு இதனால் இருக்கும் பிரச்சனைகள் என்ன?
தேசிய அளவில் ஒரு நெருக்கடி உண்டாகும் போது பொதுமக்கள் அதிபருக்கு ஆதரவளிக்கும் மனநிலையில் இருப்பார்கள். டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நெருக்கடி குறித்து கடுமையான கேள்விகளை எதிர்கொள்ளும் பொழுது அந்த தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள டிரம்ப் மற்றும் அவரது மனைவி தேசிய அளவிலான அனுதாபத்தையும் பிரார்த்தனைகளையும் பெறக்கூடும்.


ஜனநாயக கட்சியினரும் அதிபரின் விமர்சகர்களும் முன்கூட்டியே சொல்லியும் கேட்கவில்லை என்று இப்போது அவரை விமர்சிக்கலாம். அவருக்கு நிகழ்ந்த அரசியல் வினையாகவும் இதை அவர்கள் கொண்டாடலாம்.
ஆனால் ஒரு நெருக்கடி இருக்கும் பொழுது அதிபருக்கு தொற்று இருப்பதை கொண்டாடும் பொறுப்பற்ற மனநிலையில் அவர்கள் இருப்பதாக பொதுமக்கள் எண்ணக்கூடும்.
ஏற்கனவே இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அமெரிக்காவில் கோவிட்-19 தொற்றின் காரணமாக இறந்த சூழ்நிலையில் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை குற்றவாளிகளாக மாற்றுவதை விரும்பாமல் போகலாம்.
இதை எப்படி எதிர்கொள்வது என்பதில் ஜனநாயகக் கட்சியின் பிரசாரக் குழு சவாலை எதிர்கொள்ளும்.
தொற்றுக்கு உள்ளாகி விடக்கூடாது எனும் காரணத்தால் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் கூட்டங்கள் நடத்துவதில் மிகவும் அதிகமான கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்தார்.
அது ஆளும் குடியரசு கட்சியினரின் கிண்டலுக்கும் உள்ளானது. அவரது வீட்டின் அடித்தளத்தில் பைடன் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று டிரம்ப் கூட அவரை ஒருமுறை எள்ளி நகையாடினார்.
ஆனால் சமீப காலமாக ஜோ பைடன் தனது பிரசாரங்களை அதிகப்படுத்தியுள்ளார். வீடு வீடாக சென்று வாக்கு கேட்பது இனி நடக்கும் என அவரது பிரசாரக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
டிரம்பின் பிரசாரக் குழுவினர் வீடு வீடாக சென்று வாக்கு கேட்பதை இவர்கள் கடந்த காலங்களில் விமர்சித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிபர் மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், பைடன் தனது பிரசார நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக தெரியவில்லை.
ஆனால் அவர்களது சமீப நடவடிக்கைகளை அவரது பிரசாரக் குழுவினர் மறு ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் தற்பொழுது ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைக்கிறார்.
ஆனால் அதை அவரது கட்சியினர் பின்பற்றுவார்களா என்பது கேள்விக்குறிதான்.
வேறு என்ன பிரச்சனைகள்
டிரம்ப் கொரோன நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றுக்கு உள்ளாகியுள்ள இந்த சூழலில் உண்டாகும் மேலதிக பிரச்சனைகள் அமெரிக்க அரசின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் வேறு யாரேனும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்களா என்பது மற்றும் சிகிச்சைக்கு பின்பு எவ்வாறு டிரம்ப் நலமடைகிறார் ஆகியவற்றின் அடிப்படையிலேயே முடிவாகும்.
மிகச் சிறிய அளவில் இருந்தாலும் தற்போது நிகழ்ந்து வரும் பொருளாதார சரிவிலிருந்து தற்போது நிகழ்ந்து வரும் மீட்சி இந்த அரசியல் நிலைத்தன்மை இன்மையால் மேலும் ஆட்டம் காணும்.
அரசு மீதான பொது மக்களின் நம்பிக்கை குறைவதால், தொழில் செய்பவர்கள் மேற்கொண்டு வருவாய் இழப்புகளை சந்திக்க நேரிடும்.
அதிபருக்கே கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று உண்டாகி இருப்பதால் இன்னும் அதிக எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் வாக்குச்சாவடிக்கு நேரடியாக சென்று வாக்களிப்பதை விட அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விரும்புவார்கள்.
இது தேர்தல் முடிவுகளை அறிவிப்பதை மேலும் தாமதப்படுத்தும் .
தேர்தல் நெருங்க நெருங்க உண்மையான தேர்தல் வெற்றியாளர் யார் என்பது குறித்த சட்ட போராட்டங்களும் இதனால் உண்டாகலாம்.
ஏற்கனவே அமெரிக்காவில் பல அரசியல் நெருக்கடிகள் நிகழ்ந்துள்ள இந்த ஆண்டில், இன்னும் மிகப்பெரிய அரசியல் புயல் இனிமேல்தான் வரும் போல் தெரிகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com