பட மூலாதாரம், Reuters
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இதன் மூலம், அவர் விரைவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் மீண்டும் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட டிரம்ப், அமெரிக்க அதிபருக்கான அதிகாரபூர்வ ஹெலிகாப்டரான மெரைன் ஒன்னில் வெள்ளை மாளிகையை சில நிமிடங்களில் சென்றடைந்தார்.
முன்னதாக, தனது உடல்நிலை குறித்து ட்விட்டரில் பதிவிட்ட டிரம்ப், “நான் உண்மையிலேயே நன்றாக இருக்கிறேன். கொரோனாவுக்கு பயப்படாதீர்கள். அதை உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவில் இதுவரை 74 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 2,10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
I will be leaving the great Walter Reed Medical Center today at 6:30 P.M. Feeling really good! Don’t be afraid of Covid. Don’t let it dominate your life. We have developed, under the Trump Administration, some really great drugs & knowledge. I feel better than I did 20 years ago!
— Donald J. Trump (@realDonaldTrump)
Twitter பதிவின் முடிவு, 1
டிரம்பின் உடல்நிலை தொடர்பாக கடந்த வாரயிறுதியில் வெளிவந்த முரண்பட்ட அறிக்கைகள் அவரது நோயின் தீவிரத்தன்மை குறித்த கேள்விகளை இன்னமும் எழுப்பி வருகின்றன. மேலும், டிரம்பை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பணிபுரியும் எத்தனை பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கும் இதுவரை பதிலில்லை.


தனது வழக்கமான பாணியிலான உடையும், முகக்கவசமும் அணிந்திருந்த டிரம்ப், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை வாஷிங்டன் டி.சி புறநகரில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்திலிருந்து வெளியேறினார்.
“நீங்கள் நோய்த்தொற்றை பரப்புபவரா அதிபரே?” உள்ளிட்ட செய்தியாளர்களின் கேள்விகளை புறக்கணித்த டிரம்ப், “அனைவருக்கும் நன்றி” என்று கூறி அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து உலங்கூர்தியில் வெள்ளை மாளிகையை சென்றடைந்த டிரம்ப், பால்கனியில் நின்றவாறு தனது முகக்கவசத்தை கழற்றிவிட்டு, தான் நலமாக இருப்பதாக கட்டைவிரலை உயர்த்திகாட்டி, ராணுவ பாணியில் சல்யூட் அடித்தார்.

பட மூலாதாரம், Reuters
அடுத்த சில மணிநேரங்களில், தான் வெள்ளை மாளிகைக்கு திரும்பியது குறித்தும், கொரோனா பாதிப்பு குறித்தும் தனித்தனியே காணொளிகளை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, “நான் விரைவில் பிரசாரத்துக்கு திரும்புவேன். போலிச் செய்திகள் தேர்தல் குறித்த போலியான தகவல்களையே அளிக்கின்றன” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் டிரம்புக்கு கடந்த வாரம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உறுதிசெய்யப்பட்டதால் அவரது பிரசாரம் முக்கியமான தருணத்தில் தடைபட்டது.
டிரம்புக்கு முற்றிலும் குணமடைந்துவிட்டாரா?

பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டாரா என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய டிரம்பின் மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்த தனிப்பட்ட கேள்விகளை தவிர்த்துவிட்டனர். எனினும், டிரம்ப் நலமுடன் உள்ளதாகவும், அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்னர் நான்காவது முறையாக அளிக்கப்படும் ரெம்டிசிவர் மருந்து, மீண்டும் அவர் வீடு திரும்பியதும் ஐந்தாவது முறையாக அளிக்கப்பட்டு அவர் 24 மணிநேரமும் மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவித்திருந்தனர். அதுமட்டுமின்றி, டிரம்புக்கு தொடர்ந்து டெக்ஸாமெத்தசோன் மருந்தும் அளிக்கப்பட்டு வருவதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்
வெள்ளை மாளிகையில் பணியாற்றுபவர்களிடையே கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், டிரம்ப் மருத்துவமனையிலிருந்து திரும்பியுள்ளார்.
டிரம்புக்கு நெருக்கமான குறைந்தது 12 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுவரை நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ள டிரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த பலர் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதியன்று வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களாக உள்ளனர். எனவே, இது ஒரு “சூப்பர்-ஸ்ப்ரெடர் நிகழ்வு” என்று குறிப்பிடப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com