Press "Enter" to skip to content

பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர்கள் நடந்த விஷயங்களை ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்?

பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெரும்பாலானவர்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமையை ஒப்புக்கொள்வதில்லை. சமூக புறக்கணிப்பு செய்வார்களோ என்ற அச்சம் அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் உடலில் தானாக ஏற்படும் அதிர்ச்சியும் காரணமாக உள்ளது.

அந்தப் பெண்ணுக்கு வயது 16, ஆணுக்கு வயது 40. அது காதலால் ஏற்பட்ட தொடர்பு என்று அந்தப் பெண் தனக்குத் தானே கூறிக் கொண்டார்.

ஆனால் அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கும்போது, அந்தப் பெண்ணின் உடலும், மனமும் விநோதமான உணர்வுகளைக் காட்டின. சில நேரங்களில் தன் உடலில் இருந்து பிரிந்து நிற்பதைப் போல அந்தப் பெண் உணர்ந்தாள். அந்த ஆளைப் பார்த்ததும் அவளின் உடல் நடு, நடுங்கிப் போகும். நடுக்கம் என்பதைவிட, பூமி அதிர்ச்சி என்ற அளவில் அவளது முழு உடலும் நடுங்கும்.

முன் எப்போதும் இதுபோன்ற உணர்வு அவளுக்கு வந்தது கிடையாது. ஆனால் வயதான ஒருவருடன் அவள் இருந்ததும் கிடையாது. அப்படி சேர்ந்திருக்கும் போது, இப்படித்தான் இருக்கும் போல என்று அவள் நினைத்துக் கொண்டாள். எனவே அந்த உணர்வுகளைப் புறக்கணித்து விட்டாள்.

தனக்கு நடந்தது காதல் வயப்பட்ட விஷயம் கிடையாது என்பதை மரிஸ்ஸா கோர்பெல் உணர்வதற்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலானது. “குறைந்தது 9 அல்லது 10 ஆண்டுகள் நடந்தவற்றுக்கு என் மீது தான் குறைசொல்ல வேண்டும்” என்று அவர் கூறினார்.

பல ஆண்டுகள் சிகிச்சை அளித்த பிறகு, இப்போது அவர் ஒரு தாயாக இருக்கிறார். ஓரேகானில் ஓர் அமைப்பின் வழக்கறிஞராகவும் இருக்கிறார். பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகி உயிர் வாழ்பவர்களின் நலனுக்காக அந்த அமைப்பு பாடுபடுகிறது.

இன்றைக்கும்கூட, முதன்முறையாக அத்துமீறலுக்கு ஆளான சமயத்தில் ஏற்பட்டதைப் போன்ற, உடலைவிட்டு பிரிந்து நின்ற உணர்வை சில நேரங்களில் கோர்பெல் அனுபவிக்கிறார். அந்தக் கொடூரத்தை மறுபடி நினைவு கூர்வதன் மூலம், அதைப் புரிந்து கொள்ள அவருக்கு வழி கிடைக்கிறது.

சித்தரிப்புப் படம்

“பாலியல் அனுபவங்கள் என்னை மிதமிஞ்சிய நிலைக்கு கொண்டு செல்வதாக உணர்கிறேன். அடிப்படையில் என் உடலைவிட்டு நான் பிரிந்திருப்பதைப் போல உணர்கிறேன்” என்று உள்ளதை உள்ளபடி அவர் கூறுகிறார்.

“அது கொடூரத்தின் குறியீடு என புரிந்து கொண்டிருப்பதால், மிகவும் சிக்கலான அந்த உறவின்போது பிரிந்து நிற்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதுபற்றி நான் அறிந்து கொண்டதும், அது நல்லது அல்ல என தெரிந்து கொண்டேன்” என்று அவர் கூறுகிறார்.

முந்தைய ஆய்வுகளின் முடிவுகளை தொகுத்து மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், பாதிப்புக்கு ஆளானவர்களில் 60% பேர் தாங்கள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதை ஒப்புக்கொள்வதில்லை என தெரிய வந்தது.

கோர்பெலுக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை. மன ஒப்புதல் இல்லாமல் கட்டாயத்தின் பேரில், மிரட்டல் அல்லது எதிர்க்க முடியாத நிலையில் பாலுறவுக்கு உள்ளாக்கப்பட்ட 14 மற்றும் அதற்கும் அதிகமான வயதுடைய பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்த 28 ஆய்வுகளின் முடிவுகளை பகுப்பாய்வு செய்ததில், பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் அதை ஏற்க மறுக்கின்றனர் என தெரிய வந்தது. தாங்கள் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானதை அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை.

இவ்வளவு பேர், நடந்த சம்பவத்தை ஏற்க மறுப்பது தான், உடனடியாக புகார் செய்யப்படாமல் இருப்பதற்கான காரணமாக உள்ளது: தங்களுக்கு நடந்தவற்றை பாதிக்கப்பட்ட பெண்கள் ஒப்புக்கொள்வதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது என்பது பொதுவான இயல்பாக உள்ளது.

பாலியல் தாக்குதல் சித்தரிப்புப் படம்

விருப்பமின்றி நடந்த பாலியல் சம்பவத்தை வெளியில் சொல்வது பொதுவாக படிப்படியான செயல்பாடாக உள்ளது. நடந்த கொடுமையை நினைவுபடுத்துவதைத் தவிர்க்கும் மனப் போக்கு அல்லது உணர்வு தான் PTSD-யின் ஓர் அம்சமாக இருக்கிறது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பாலியல் வன்முறை நெருக்கடி என்ற அமைப்பைத் தொடர்பு கொள்பவர்களில் 75 சதவீதம் பேர், குறைந்தபட்சம் ஓராண்டுக்கு முன்பு நடந்த பாலியல் வன்முறைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் என்பதுதான் உண்மை நிலையாக இருக்கிறது.

எவ்வளவு சீக்கிரமாக இதைப் பதிவு செய்கிறார்கள் என்பதற்கும் எந்த அளவுக்கு அது உண்மையாக இருக்கும் என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதுடன், சமூக மற்றும் மன ரீதியிலான பல விஷயங்கள், பாதிக்கப்பட்ட பெண்களை, உடனடியாக சம்பவங்களை நினைவுபடுத்திப் பார்க்க முடியாமல் தடுக்கின்றன.

சட்டங்களில் குறைபாடுகள்

தங்களுக்கு நடந்திருப்பது “உண்மையில்” பாலியல் வன்முறை என்பதை பலரும் அறியாமல் இருக்கிறார்கள் என்பது ஒரு முக்கியமான விஷயம். சட்டபூர்வமாகப் பார்த்தால், பாலியல் வன்முறை என்பதற்கான வரையறைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடுகின்றன. மாநிலங்களுக்கு இடையில் கூட இதில் வித்தியாசம் உள்ளது.

உதாரணமாக, பிரிட்டனில், ஒரு பெண் கற்பழிப்புக்கு ஆளானதாக சட்டபூர்வமாகக் கருத முடியாது (பாலியல் வன்முறைக்கு ஆளானதாக சொல்லலாம்). அமெரிக்காவில், பாலுறவுக்கு சம்மதிக்கும் வயது மிசௌரியில் 14 என உள்ளது (உறவில் ஈடுபடும் மற்றவர் 20 அல்லது அதற்கும் குறைந்த வயதாக இருந்தால்). ஆனால் அருகில் உள்ள இல்லினாய்ஸில், பாலுறவுக்கு சம்மதிக்கும் வயது 17 என உள்ளது.

இதுபோன்ற மாறுபட்ட சட்டங்கள், பாலியல் வன்முறை என்பது என்ன என்ற கலாச்சார புரிதலில் குழப்பத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. நடந்த விஷயங்களை சிலர் கூறுவதே கூட, மற்றவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருப்பதில்லை.

தொடர்ந்து நடந்து வரும், ஒரே மாதிரியான `உண்மையான பாலியல் வன்முறை’ என்பது, பொது இடத்தில் எதிர்ப்பைக் காட்டும் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில், அறிமுகம் இல்லாத ஓர் ஆண் வலுக்கட்டாயமாக தன் ஆண் உறுப்பை நுழைப்பது என்பதாக இருக்கிறது.

இந்த விஷயங்கள் நடந்ததாக பாலியல் வன்முறை சம்பவ விவரிப்பில் இல்லாவிட்டால், பாதிக்கப்பட்ட பெண் உயிருடன் இருந்தாலும், அது பாலியல் வன்முறை என்று அறிவது சிரமமம் ஆகிவிடும். நமது மூளையானது, ஒரு விஷயம் பற்றி என்ன சொல்லித் தரப்பட்டதோ அதற்கு ஏற்ப மட்டுமே, அனுபவங்களை வகைப்படுத்திக் கொள்ளும்.

ஆனால் இந்த விவரிப்பில் உள்ள பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக, மூட நம்பிக்கை உள்ளது. பாலியல் வன்முறை என்பதில் வேறு பல சூழ்நிலைகளும் அடங்கியுள்ளன என்பதுடன், குறுகலான இடத்தில் அறிமுகம் இல்லாத புதியவருடன் இருப்பது என்ற மாறுபட்ட சூழ்நிலையாகவும் இருக்கிறது.

மத்திய பிரிட்டன் காவல் துறை, 2016ல் அனைத்து பாலியல் வன்முறைகள் குறித்து ஆய்வு செய்தது. உண்மையில் இரண்டு ஆண்டு காலத்தில் நடந்த பாலியல் வன்முறை சம்பவங்கள் குறித்து ஆய்வு நடத்தியதில், தகவல் பெறப்பட்ட 400 சம்பவங்களில், ஒன்றுகூட `உண்மையான பாலியல் வன்முறை’ என்ற வரம்பிற்குள் வரவில்லை.

ஆயுதம் எதுவும் இல்லாத, முன் அறிமுகம் இல்லாத ஓர் ஆண், தன் உடல் பலத்தை மட்டும் பயன்படுத்தி, வெளிப்புறப் பகுதி இடத்தில், இரவு நேரத்தில், எதிர்ப்பு காட்டும் பெண்ணின் பிறப்புறுப்பில் தன் ஆணுறுப்பை நுழைத்தார் என்ற வரையறைகளில் அந்த 400 சம்பவங்களில் ஒன்றுகூட வரவில்லை.

பெண்

அவசர கால பாலியல் வன்முறை கிளினிக்கிற்கு வரும் பெண்களை ஆய்வு செய்ததில், 70 சதவீதம் பேருக்கு அதிக பயம் காரணமாக தற்காலிகமாக மற்றும் காரணம் இல்லாமல் பக்கவாதம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

உதாரணமாக, பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் சுயநினைவை இழப்பதால், பயந்து ஒடுங்குவதால் அல்லது உடல் ரீதியாக அதிர்ச்சியில் உறைந்து போவதால், சம்பவத்தின்போது எதிர்ப்பைக் காட்ட முடிவதில்லை. ஸ்டாக்ஹோம் நகரில் அவசரகால பாலியல் வன்முறை கிளினிக்கிற்கு வரும் பெண்கள் குறித்து 2017ல் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் 70 சதவீதம் பேருக்கு தற்காலிக பக்கவாதம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. தீவிர பயம் காரணமாக இந்தத் தற்காலிக மற்றும் காரணம் இல்லாத பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்தப் பெண்கள் அமைதியாக சம்மதித்தவர்கள் கிடையாது. ஓர் அச்சுறுத்தல் ஏற்படும்போது மனித உடல் எப்படி எதிர்வினையாற்றுமோ அதன்படி அவர்களுடைய உடல் எதிர்வினை ஆற்றியுள்ளது.

ஒரு டீன் ஏஜ் பெண்ணாக கோர்பெல் முதன்முதலில் அனுபவித்த உடலில் இருந்து பிரிந்து நிற்கும் அனுபவம், அச்சுறுத்தல் நிலைக்கு எதிராக தானாக ஏற்படும் மற்றொரு ஆச்சர்யமான எதிர்வினையாக உள்ளது. “இப்படி அடிக்கடி நடக்கும். உடல் ரீதியாக ஒரு கொடுமையில் இருந்து மீள முடியாத ஆபத்தில் சிக்கும்போது, மனதளவில் அவர்கள் விட்டு விலகி நிற்கும் நிலை ஏற்படும்” என்று இண்டியானா பல்கலைக்கழகத்தின் கின்சே பாலியல் வன்முறை ஆராய்ச்சி நிலையத்தில் உளவியல் சிகிச்சையாளராக இருக்கும் ஜோ பீட்டர்சன் கூறுகிறார்.

அந்தத் தருணத்தில் இருந்து விடுபடுவதற்கு அவருக்கு உதவாமல் மூளையானது விலகிக் கொள்ளலாம். ஆனால், எதிர்த்துப் போராடும் தன்மையையும் அது குறைத்துவிடும். `உண்மையான பாலியல் வன்முறை’ குறித்து நமக்குச் சொல்லப்பட்ட வரம்புக்குள் இந்த சம்பவத்தின் விவரிப்புகள் வராது. அதனால் பெண் எதிர்த்துப் போராடாமல் இருக்கலாம். “அதை பாலியல் வன்முறை என்று சொல்லாமல் போகவும் அதுதான் காரணம்” என்கிறார் பீட்டர்சன்.

பெண்களும் சிறுமிகளும் மட்டுமே பாலியல் வன்முறைக்கு ஆளாவார்கள் என்பது மற்றொரு கலாச்சார கருத்தாக உள்ளது. சிறுவயதில் இருந்தபோது பாலியல் அத்துமீறலுக்கு ஆளான அல்லது வளர்ந்த பிறகு பாலியல் வன்முறைக்கு ஆளான பெரும்பாலான ஆண்கள், ஓர் அத்துமீறல் அல்லது பாலியல் வன்முறை என்று அந்த நிகழ்வுகளைக் கருதுவது இல்லை.

பீட்டர்சன்னும் அவருடைய சகாக்களும் நடத்திய ஓர் ஆய்வில் 323 ஆண்களிடம், தங்களின் பாலியல் அனுபவங்கள் குறித்து இணையத்தில் வினாக்கள் பட்டியலுக்கு பதில் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களில் 24 சதவீதம் பேர் மட்டுமே அதை பாலியல் வன்முறை என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது எவ்வளவு கடினமானது என்பதை கலிபோர்னியாவில் வாழும் மாத்யூ ஹேயெஸ் புரிந்திருக்கிறார். தன்னுடைய 20 வயதுகளில் ஆரம்ப காலத்தில் தனக்கு இருந்த உறவு, இயல்பானது அல்ல என்று அவருக்குத் தெரிந்துள்ளது. ஆனால் அவருடைய பெண் தோழி வலுக்கட்டாயமாக செயல்பட்டார் என்பதைவிட, சம்மதிக்கச் செய்யக் கூடியவராக இருந்தார். அது பாலியல் அத்துமீறல் என்று கருதி இவர் எதிர்ப்பு காட்டியிருக்கிறார்.

(மாத்யூ என்பது மாற்றப்பட்ட பெயர். அந்த ஆண் கேட்டுக் கொண்டதன் பேரில் பெயர் மாற்றப் பட்டுள்ளது)

தனது முன்னாள் பெண் தோழி அதிக உணர்வுகளுடன் மிரட்டல் பாணியில் நடந்து கொண்ட மூன்று குறிப்பிட்ட சம்பவங்கள் ஹேயெஸ் நினைவில் இருக்கிறது. “முதலாவது சம்பவத்தின் போது பாலுறவு கொள்ளும் வரையில் தன்னைத் தானே அந்தப் பெண் அடித்துக் கொள்வார். இரண்டாவது முறை அந்தப் பெண் கையில் கத்தி வைத்திருந்தார். அன்றிரவு உறவு கொள்ளாவிட்டால் கத்தியால் அறுத்துக் கொள்வேன் என்று கூறி, உறவு முடியும் வரையில் மிரட்டிக் கொண்டிருந்தார்.”

“மூன்றாவது முறை என்னை நோக்கிய மிரட்டலாக இருந்தது. எப்படியோ ஒரு துப்பாக்கியை அந்தப் பெண் பெற்று வந்திருந்தார். அதை வெளியே எடுத்து, என்னை மிரட்டினார். அவருடன் உறவு கொள்ளாவிட்டால், ஏதாவது நடந்துவிடும் என்று கூறினார்” என்று ஹேயெஸ் தெரிவித்தார்.

சித்தரிப்புப் படம்

ஓராண்டு கழித்து ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது இவற்றை அவர் கூறியிருக்கிறார். அப்போது தான் தனக்கு சொல்லப்பட்டதைவிட இது கொடூரமானது – பாலியல் வன்முறை என்று அவர் உணர்ந்திருக்கிறார். ஆனால், அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பாலியல் வன்முறை என்ற பொதுவான விவரிப்புகளுக்குள் அடங்காது. முதலில் அவர் ஆண் என்பது.

ஆனால் பாலியல் வன்முறையை எப்படி விவரிக்கிறோம் என்பது, அதற்கான வரையறைகளுடன் ஒத்துப்போகாது. பீட்டர்சனும் அவருடன் பணிபுரியும் சார்லென் மியூஹ்லென்ஹார்டும் நடத்திய ஓர் ஆய்வில், சம்மதம் இல்லாமல் பெண் உறுப்பில் ஆண் உறுப்பை நுழைத்து உறவு ஏற்பட்டும் கூட, பல்வேறு காரணங்களால் மகளிர் கல்லூரி மாணவிகள் 77 பேர் அதை பாலியல் வன்முறை என கூற முடியாமல் போனதாகத் தெரிய வந்தது. அவை வருமாறு:

  • பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்ற தங்களது எண்ணத்தின் வரையறைக்குள் அவர் வரவில்லை. (“அவர் என் நண்பர். எல்லோரும் அவரை நேசித்தார்கள்”)
  • அவர்களுடைய நடத்தை `சாதாரணமான’ பாதிக்கப்பட்டவர்களின் நடத்தையைப் போல இல்லை என்ற கருத்து (“மயக்கநிலைக்கு என்னை அனுமதித்தது என்னுடைய தவறு”)
  • உடல் ரீதியாக வன்முறையோ அல்லது எதிர்ப்போ இருக்கவில்லை (“அவர் என்னை அடிக்கவில்லை”)

மோதல், குடிபெயர்வு மற்றும் இயற்கை பேரிடர் காலம் போன்ற சூழ்நிலைகளில் இதுபோன்ற பாலியல் வன்முறைக்கான வரையறைகள் பொருந்தி வரக்கூடும். அந்த சமயங்களில் வெளிப்பகுதிகளில் ஆயுதம் ஏந்திய புதியவர்கள் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதாகச் செய்திகள் வெளியாகின்றன. போரில் ஓர் ஆயுதமாக பாலியல் வன்முறையும் இருக்கிறது. ஒழுங்கு கெடும்போது, பாலியல் வன்முறை அதிகரிக்கிறது.

இந்த சூழ்நிலை இருப்பதாலேயே, `பாலியல் வன்முறை’ என்பதற்கான கலாச்சார வரையறை இன்னும் குறுகலானதாக இருக்கிறது.

ரனிட் மிஷோரி என்பவர் மனித உரிமைக்கான மருத்துவர்கள் அமைப்பில் மருத்துவ நிபுணராக இருக்கிறார். அந்த அமைப்பு சண்டை நடக்கும் பகுதிகளில் பாலியல் வன்முறையில் பாதித்தோருக்கு உதவி அளிக்கிறது. காங்கோ குடியரசு பகுதியிலும் இந்த அமைப்பு செயல்படுகிறது. அங்கே பல தசாப்த காலங்கலாக வன்முறை மோதல்கள் நடந்து வருகின்றன.

அங்கே “நாங்கள் `பாலியல் வன்முறை இயல்பாக்கம்’ என்ற நிலையைக் காண்கிறோம்” என்று அவர் கூறுகிறார்.

சித்தரிப்புப் படம்

“பெண்கள் தங்களை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொள்ளுமாறு விரும்பியதாக மூன்றில் ஒரு பகுதி ஆண்கள், விசாரணை அமைப்பினரிடம் கூறியதாக ஓர் ஆய்வில் தெரிய வந்தது. பலர் அதை அனுபவிக்கவும் செய்தார்கள் என்றும் அந்த ஆண்கள் கூறியுள்ளனர்.

பாதிப்புக்கு ஆளாகி, உயிர்வாழும் பெண்கள் இது தனிப்பட்ட விஷயம் என்று சொல்லக் கூடும். இது `இயல்பு வாழ்க்கையில்’ ஓர் அங்கம் என்று கருதக்கூடும். அல்லது பெரிய குற்றங்களுக்கு ஆளாவதைக் காட்டிலும், ஒவ்வொரு பெண்ணும் இதற்கு ஆட்பட வேண்டியுள்ளது என்று கூறக்கூடும். ஆணாதிக்கம் மிகுந்த நாடுகளில் மற்றும் கலாச்சாரங்களில் இது இயல்பானதாக இருக்கிறது” என்று அவர் கூறுகிறார்.

பாலியல் வன்முறை சம்பவத்தை, பாலியல் வன்முறை என ஒருவர் கூறினாலும், கூறாவிட்டாலும், அது அதிர்ச்சி மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கிடையாது.

ஆனால், எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும், “பாலியல் வன்முறை சம்பவத்தை, பாலியல் வன்முறை என ஒருவர் கூறினாலும், கூறாவிட்டாலும், அது அதிர்ச்சி மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கிடையாது” என்று பீட்டர்சன் எச்சரிக்கிறார்.

ஹேயெஸை பொருத்தவரையில், தாம் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்ததும், அதிர்ச்சி அடைந்து, மனம் உடைந்து போனதாகக் கூறுகிறார்.

அந்த உறுத்தல் வருவதற்கு முன்னதாக தனக்கு அவகாசம் இருந்தது என்பதில் அவர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார். “மற்ற காயங்கள் எல்லாம் சரியாவதற்கு எனக்கு இடைப்பட்ட ஒரு கால அவகாசம் கிடைத்தது உதவிகரமாக இருந்தது” என்று அவர் சொல்கிறார்.

பாலியல் தாக்குதலுக்கு ஆளானதை ஒப்புக்கொள்வதால் ஏற்படும் பாதிப்பு

சித்தரிப்புப் படம்

தனக்கு நடந்த சம்பவம் பாலியல் வன்முறை என்பதை ஒருவர் உணர்ந்து கொண்டால், அவர் சில நேரங்களில் அதில் தொடர்புடையவருடன் உறவைத் தொடர்கிறார் அல்லது தொடங்குகிறார் என்பது மற்றொரு காரணியாக இருக்கிறது. பாலியல் வன்முறையில் ஈடுபட்டவரை திருமணம் செய்து கொள்தல் என்பதன் வரலாறு நீண்டதாக இருக்கிறது.

பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர், பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து கொண்டால் வழக்கில் இருந்து தப்பலாம் என்ற இதுபோன்ற சட்டங்கள் அல்ஜீரியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இன்னமும் அமலில் இருக்கின்றன. இதுபோன்ற சட்டங்கள் இல்லாத நாடுகளிலும்கூட, பாதிப்புக்கு ஆளாகி உயிர்வாழும் நபர்கள், அந்த வன்முறையில் ஈடுபட்டவர்களுடன் தொடர்ந்து உறவில் ஈடுபடுகின்றனர். தங்களுக்கு ஏற்பட்ட மன அதிர்ச்சியில் இருந்து மீள அல்லது தன்னை வலுவற்றதாக ஆக்கிய அந்த சம்பவத்தில் சில கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள அப்படி தொடர்வதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதற்கு பாதுகாப்பான உளவியல் வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன. தனிநபர்கள், தற்போதுள்ள நம்பிக்கைகளைப் பொருத்து மன அதிர்ச்சி எதிர்வினைகள் மாறுபடும். சில ஆண்கள் (கணவர் அல்லது நண்பர் போன்றவர்கள்) நம்பகமானவர்கள் என்ற நம்பிக்கையை உடைப்பதாக பாலியல் வன்முறைகள் இருக்கின்றன. பாலியல் வன்முறைக்கு ஆளான சிலர், இது தங்கள் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்ற கருத்தையே ஏற்பதில்லை.

மற்ற கொடூரமான அல்லது மன அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு மூளை எதிர்வினை ஆற்றுவதைப் போல இதிலும் நடந்தால், அது உண்மையில் பாலியல் வன்முறையல்ல என்ற நம்பிக்கை அதிகரித்துவிடும்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பாலியல் வன்முறை நெருக்கடி அமைப்பின் கேதே ரஸ்ஸல் கூறுவது போல, “பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களின் பெயர்களைக் கூறுவது பலருக்கு சிரமமாக இருக்கும். தங்கள் இணையர், முன்னாள் இணையர், ஒருவேளை தனியாக வாழும் தன்னுடைய குழந்தையின் தந்தையை (co-parent) பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறுவது அப்படி சிரமமாக இருக்கலாம். அதை வெளிப்படையாகச் சொல்வது கஷ்டமானது. ஆனால், தனிப்பட்ட முறையில் சொல்வது மற்றும் உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்வதும் கஷ்டம்தான்” என்ற நிலை உள்ளது.

பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆண், அவ்வாறு ஈடுபடாத ஆணை விட மாறுபட்டவர் இல்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது – ஜோ பீட்டர்சன்

“பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மனதளவில் சீர்கெட்டவர்கள்” என்ற எண்ணத்திற்கும், நம்மைச் சுற்றி பாலியல் வன்முறையாளர்கள் இருக்கிறார்கள் என்ற நமக்குப் பிடிக்காத உண்மை நிலைக்கும் இடையில் அறிவார்ந்த ஓர் ஒத்திசைவு இருப்பதாக பீட்டர்சன் கருதுகிறார்.

“ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பார்த்தால் பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆண்கள், அவ்வாறு செய்யாத ஆண்களைவிட மாறுபட்டவர்கள் இல்லை என பல வழிகளில் தெரிய வருகிறது” என்று அவர் கூறுகிறார்.

தங்களுக்கு நடந்த சம்பவங்கள் பாலியல் வன்முறைகள் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் கூற தயங்குவதற்கு பல காரணங்கள் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். அவற்றில் பின்வரும் காரணங்களும் அடங்கும்:

  • அந்த ஆணை பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர் என்று கூற அவர்கள் விரும்பவில்லை (“முதலில் அந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியில் இருக்கிறேன். ஆனால் அந்த ஆள் குறித்து அக்கறை கொண்டிருககிறேன். எனவே அவரை பாலியல் வன்முறையாளர் என்று கூற நான் விரும்பவில்லை”)
  • அதேபோன்ற ஒரு ஆண் பாலியல் வன்முறையாளராக இருப்பதை நினைத்துப் பார்க்க அவர்கள் விரும்பவில்லை (“நான் சந்தித்த பலரையும் போல அவரும் இருக்கிறார்”)
  • `பாலியல் வன்முறை’ என்பது குற்றம் காணும் வார்த்தை (“என்னுடைய முதலாவது அனுபவம் என் விருப்பத்தின் பேரில் நடந்தது அல்ல, கட்டாயத்தின் பேரில் நடந்தது என்று மற்றவர்களிடம் நான் சொல்வேன். அநேகமாக அப்படி சொல்வது அதிர்ச்சியைக் குறைப்பதாக இருக்கும் என நினைக்கிறேன்”)

பாதிப்புக்கு ஆளாகி உயிர்வாழ்பவர்கள், குறிப்பாக சிறுமிகள் மற்றும் பெண்கள், தங்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அந்த சம்பவங்கள் `தகவல் இடைவெளியால் நிகழ்ந்தது’ அல்லது `மோசமான பாலுறவு’ என்று கூறி, அந்த பாலியல் வன்முறையின் பாதிப்பை குறைத்து காட்டிக் கொள்கிறார்கள். அதை பாலியல் வன்முறை என்று சொல்லிக் கொள்வதால் ஏற்படும் இதர பாதிப்புகளை மனதில் கொண்டு இந்தக் குற்றச்சாட்டை அவர்கள் திசைதிருப்புகிறார்கள். வதந்திகள் பரப்புவது மற்றும் பொருளாதார வாய்ப்புகள் இழப்பிற்குக் காரணம் என குற்றச்சாட்டுக்கு ஆளாவது, குடும்பத்தினர் ஒதுக்கி வைத்தல், சமூகத்தில் ஒதுக்கி வைத்தல் போன்ற செயல்களுக்கு அவர்கள் அச்சப்படுகிறார்கள்.

அதுதான் சமூகப் புறக்கணிப்பு குறித்த அச்சம்.

ஒப்புக்கொள்ளப்படாத பாலியல் வன்முறைகள் குறித்து கிழக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் ஹீதர் லிட்டில்டன் பல தசாப்தங்களாக ஆய்வு செய்து வருகிறார். குறைந்த வருவாய் உள்ள பெண்கள் குறித்து இன்னொருவருடன் சேர்ந்து அவர் எழுதியுள்ள கட்டுரையில், பாலியல் வன்முறையை ஒப்புக்கொண்ட பெண்கள் சமூகப் புறக்கணிப்பு அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

பாலியல் வன்முறை நடந்ததை ஏற்றுக் கொள்ளாமல் விட்டுவிட்டால், அந்த புறக்கணிப்பு அச்சத்தில் இருந்து விடுபட்டுவிட்டதாகக் கருதுகிறார்கள். பாதிப்பை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஏற்படும் துயரங்கள் மற்றும் மன பாதிப்புகளை தவிர்க்க அவர்கள் விரும்புகிறார்கள். இது `விரும்பி மறைப்பதாக’ கருதுவதைவிட மாறுபட்டது.

சித்தரிப்புப் படம்

“மற்ற பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கு, தங்களை அறியாமலே சீக்கிரத்தில் அதை நிராகரிக்கும் தன்மை வந்துவிடுகிறது” என்று லிட்டில்டன் என்னிடம் கூறினார்.

அவமானம் மற்றும் சங்கடம் தனிப்பட்ட முறையிலானது என்று கருதுவது சாதாரணமாகிவிட்டது. குறைகாண்பவர்கள் என்ன சொல்வார்களோ என்ற எண்ணத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மீதே குறைகூறிக் கொள்கிறார்கள்.

எனவே அவமானம் மற்றும் சங்கடம் தனிப்பட்ட முறையிலானது என்று கருதுவது சாதாரணமாகிவிட்டது. குறைகாண்பவர்கள் என்ன சொல்வார்களோ என்ற எண்ணத்தில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மீதே குறைகூறிக் கொள்கிறார்கள். மீண்டு வரும் நிலைக்கு அவமான உணர்வு தடை விதித்துவிடுகிறது. பாலியல் வன்முறை தவிர்ப்பு நிகழ்ச்சிகள், குற்றத்தை செய்தவர்களைக் காட்டிலும் தங்கள் மீதே பாதிக்கப்பட்டவர்கள் குறைகூறிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மீதே குறைகூறிக் கொள்வதற்கு மதுப் பழக்கமும் மற்றொரு காரணமாக இருக்கிறது.

இந்தக் கட்டுரைக்காக பணியாற்றியபோது, என் சொந்த அனுபவங்களை எப்படி புத்தகமாக்குவது என்று உணரச் செய்தது. டீன் ஏஜ் ஆண் நண்பனின் வேனில் மது அருந்தி இருந்த அறியாமையை நினைத்து அதிர்ச்சியானேன். அப்போது அவன் தன் ஆணுறுப்பை என் வாயில் திணித்தான். ஒரு நிகழ்ச்சியில், ஒரு நண்பரும், வீட்டில் உறவினர் ஒருவரும் என்னைத் தடவியபோது நான் சிரித்தேன். நம் உடல் முழுக்க நமக்கானவை மட்டும் அல்ல என்றும், நம் உடலில் நடக்கும் அத்துமீறல்கள், உண்மையில் எல்லை மீறுவதாக இல்லை என்றும் பல பெண்கள் மற்றும் சிறுவயதினருக்கு இருக்கும் இயல்பான மனோபாவம் தான் எனக்கும் இருந்தது.

எனவே உயிர் வாழ்பவர்கள் இப்படி சொன்னால் அது முக்கியமானது: அது உன்னுடைய தவறு அல்ல என்பது அந்த வார்த்தைகள். வலியும் அவமானமும் நஞ்சு கலந்த மதுபானமாக, தவறாக வழிகாட்டப்படும் குற்றச்சாட்டாக அமையும். ஆனால் அது உங்களின் தவறு கிடையாது.

“உங்களுக்கு என்ன நடந்தது என்ற அதிர்ச்சி இருக்கிறது. நீங்கள் எப்படி எதிர்வினை ஆற்றினீர்கள் என்பதற்காக இப்படி உங்களை நீங்களே அடித்துக் கொள்கிறீர்கள்” என்று கோர்பெல் அமைதியாகக் கூறுகிறார். “மக்களுக்குத் தெரியாத நிறைய அவமானங்கள் இதில் இருக்கின்றன” என்கிறார் அவர்.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

5 அக்டோபர், 2020, பிற்பகல் 1:51 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »