பட மூலாதாரம், Reuters
யுரேசிய பகுதியில் அமைந்துள்ள அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் போன்றதொரு சூழல் நிலவி வருகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு எல்லையில் ஆயுத மோதலாகத் தொடங்கிய இந்த பதற்றநிலை ஒரு நாட்டின் பகுதி மீது இன்னொரு நாடு குண்டு வீசும் அளவுக்கு மோசமாகியுள்ளது.
பெரும் எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் சில நூறு இந்தியர்கள் இந்த நாடுகளிலும் வசிக்கின்றனர்.
அங்கு உள்ள சூழல் என்ன என்பது குறித்து அஜர்பைஜான் தலைநகர் பக்கூவில் உள்ள தமிழ் சங்கத்திடம் பேசியது பிபிசி தமிழ்.
அர்மீனியா – அஜர்பைஜான் இடையே நடக்கும் எல்லை மோதல் குறித்து கீழே உள்ள இணைப்பில் விரிவாகப் படிக்கலாம்.
மோதல் நிலவிவரும் அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகளில் இந்தியர்கள் அதிகமாக வசிப்பது அஜர்பைஜானில்தான்.
“அர்மீனியாவில் இதற்கு முன்பு 15-20 இந்தியர்கள் வசித்து வந்தனர். ஆனால், இப்பொழுது அங்கு யாரும் இருப்பதாக தெரியவில்லை. அங்கு இருந்தவர்கள் அனைவருமே மாணவர்கள். படிப்பை முடித்து விட்டு அவர்கள் நாடு திரும்பி விட்டனர். அஜர்பைஜானில் பொருளாதார வளர்ச்சி அதிகம் இருப்பதால் இங்கு இந்தியர்கள் வந்து தங்கி பணிபுரிகின்றனர்,” என்கிறார் பக்கூ தமிழ் சங்கத்தின் தலைவர் பாபு சாஹிப்.
நாகர்கோயிலைப் பூர்விகமாகக் கொண்ட இவர் அஜர்பைஜானில் சுமார் 25 ஆண்டுகளாக தங்கிப் பணிபுரிவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP
இரு நாடுகளுக்கு இடையே எல்லை மோதல் நடந்து வரும் பகுதிக்கும் தலைநகரம் பக்கூவுக்கும் சுமார் 600 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அங்கு போர் நடப்பதால் எந்தவிதமான பிரச்சனையும் இங்கு இல்லை. இங்கே எல்லாம் வழக்கம் போலவே உள்ளது என்கிறார் அவர்.
பக்கூ நகரில் சுமார் 120 தமிழர்கள் வசித்து வந்தனர். கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலுக்கு பின்பு அவர்களில் சுமார் 50 பேர் வெளியேறிவிட்டனர். இப்பொழுது இங்கு 60 முதல் 70 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். அவர்களின் ஏழு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தனியாக வந்து தங்கி பணிபுரியும் நபர்கள் ஆகியோர் அடக்கம் என்றார் பாபு.
‘தமிழகத்தில் பரவும் போர் குறித்த போலிச் செய்தி’
அர்மீனியா – அஜர்பைஜான் போரில் 15,000 பேர் மரணம் அடைந்து விட்டதாக தமிழகத்தில் போலி செய்தி ஒன்று பரவி வருகிறது. அங்கு இருப்பவர்கள் பதற்றத்துடன் எங்களை விசாரிக்கிறார்கள். அப்படி எதுவும் இங்கு இல்லை. நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.
குண்டு வீச்சு நடந்த கஞ்சா பகுதியில் 10 முதல் 20 இந்தியர்கள் வேலை செய்து வந்தனர். மோதலுக்கு பின்பு அங்கு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டதால் அவர்கள் பக்கூ திரும்பி விட்டனர்.
இந்த போரின் காரணமாக இந்தியர்கள் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது.
அர்மீனியாவுக்கு ஆதரவான மனநிலையில் இந்தியர்கள் இருப்பதாக ஒரு போலிச் செய்தி இங்கும் பரவத் தொடங்கியது. அது இங்குள்ள இந்தியர்களுக்கு கெட்ட பெயரை உண்டாக்கியது.

ஆனால் இங்கு தமிழ் சங்கம், மலையாள சங்கம் தெலுங்கு சங்கம் மற்றும் இந்தியர்கள் கூட்டமைப்பு ஆகிய நான்கு அமைப்புகளும் எல்லையில் போராடும் அஜர்பைஜான் ராணுவ வீரர்களுக்காக பணம் மற்றும் பொருட்களை திரட்டி தொடர்ந்து அனுப்பி வருகிறோம். இதன் காரணமாக இங்கு இந்தியர்களுக்கு இப்பொழுது நல்ல பெயர் கிடைத்து வருகிறது என்று பாபு சாஹிப் தெரிவித்தார்.
அர்மீனியா – அஜர்பைஜான் இடையே என்ன பிரச்சனை?
நாகோர்னோ – காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் பிரச்சனை கடந்த வாரம் ஆயுத மோதலாக உருவெடுத்தது.
நாகோர்னோ – காராபாக் பகுதி அலுவல்பூர்வமாக அஜர்பைஜான் நாட்டுக்கு சொந்தமானது. ஆனால், அப்பகுதி அர்மீனிய இனத்தவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
தங்கள் பிராந்திய தலைநகரான ஸ்டெப்பன்க்யர்ட் அஜர்பைஜான் படையினரால் ஷெல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதால் தாங்கள் கஞ்சா நகரில் உள்ள ராணுவ விமான நிலையம் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக, தங்களைத் தாங்களே தன்னாட்சி அரசாக அறிவித்துக்கொண்டுள்ள நாகோர்னோ – காராபாக் பகுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனினும் தங்கள் ராணுவ நிலைகள் எதுவும் தாக்கப்படவில்லை என்று அஜர்பைஜான் அரசு தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com