பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், துணை அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதம் புதன்கிழமை இரவு நடந்து முடிந்துள்ளது.
இருவருமே, ஒரு சில இடங்களில் வலுவாக பேசினாலும், ஒருசில இடங்களில் தடுமாறவே செய்தனர்.
கடந்த வாரம்தான் இரு அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதம் நடந்து முடிந்தது.
ஜோ பைடன் பேசும் போது, அதிபர் டிரம்ப் குறிக்கிட்டதும், அதற்கு பைடன், கோபத்துடன் “வாயை கொஞ்சம் மூடுவீர்களா?” என்று கேட்டதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.
ஆனால், நேற்று நடைபெற்ற விவாதம் அதுபோல இல்லை.
குடியரசுக்கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான மைக் பென்ஸ் எப்போதும்போல சாதுவாக இருந்தார். மைக் பென்ஸ் விவாதத்தின்போது குறிக்கிட்ட போதும், எதிர்தரப்பில் இருந்த கமலா ஹாரிஸ் அதனை எதிர்கொள்ள தயாராகவே இருந்தார்.
“துணை அதிபர் அவர்களே.. நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் பேசி முடிக்க நீங்கள் அனுமதிக்கவில்லை என்றால், நாம் உரையடலாம்” என்றார் கமலா ஹாரிஸ்.
கொரோனா குறித்த விவாதம்
தற்போதைய சூழலை வைத்து பார்த்தால், இந்த விவாதம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று குறித்த விவாதத்தில்தான் தொடங்கியது என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
கொரோனா வைரஸை அமெரிக்கா கையாண்ட விதம், “இதுவரை இல்லாத அதிபர் நிர்வாகம் சந்தித்த மிகப்பெரிய தோல்வி” என்று தாக்கினார் கமலா ஹாரிஸ்.

பட மூலாதாரம், Reuters
2,10,000 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர். டிரம்ப் நிர்வாகத்தின் “திறமையின்மை” மற்றும் “இயலாமை”தான் இதற்கு காரணம் என்று கமலா குறிப்பிட்டார்.
இதற்கு தன் பதிலை தயாராகவே வைத்திருந்தார் மைக் பென்ஸ். டிரம்ப் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருக்கிறதோ, அதை அப்படியே செய்வதுதான் பைடன்-ஹாரிஸ் திட்டமாக இருக்கிறது என்று பேசிய மைக், தடுப்பூசியில் அமெரிக்கா வேகமான வளர்ச்சியை பெற்றிருப்பதாகவும், டிரம்ப் நிர்வாகத்தின் மீது வைக்கும் விமர்சனங்கள், அமெரிக்காவின் சுகாதாரத்துறை பணியாளர்கள் மீது வைக்கும் விமர்சனங்கள் என்று கூறினார்.
ஆனால், சமீபத்தில் வெள்ளை மாளிகையே கொரோனா பரவும் இடமாக மாறியது குறித்து இரு வேட்பாளர்களுமே பெரிதாக பேசவில்லை. இதனை குறித்து பேச தவறவிட்ட ஹாரிஸ், தடம் மாறி வேறு விவகாரங்கள் குறித்து பேசத் தொடங்கிவிட்டார்.
கொரோனா தொற்றை டிரம்ப் கையாண்ட விதம், தேர்தலில் அவருக்கு மிகப்பெரிய சறுக்கலாக அமையும் என கருத்துக்கணிப்புகள் கூறியிருக்கும் நிலையில், அதனை பயன்படுத்திக் கொள்ள கமலா ஹாரிஸ் தவறவிட்டது, மைக் பென்சுக்கு சாதகமாக அமைந்துவிட்டது எனலாம்.
பருவநிலை மாற்றம் குறித்த பேச்சு
கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) விவகாரத்தில் மைக் பென்ஸ், சற்று பின்னடைவை சந்தித்தாலும், பருவநிலை மாற்றம் குறித்த விவாதம் எழுந்தபோது, இவர் எதிர்தரப்பை தாக்கத் தொடங்கிவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
கார்பன் வெளியீட்டை குறைப்பதற்கான இலக்குகள் கொண்டிருக்கும் கிரீன் நியூ ஒப்பந்தம் (டீல்)கிளைமெட் பிரபோசலின் உண்மையான ஸ்பான்சராக கமலா ஹாரிஸ் இருந்தார்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்க எரிபொருள் சக்தியை சிதைக்கும் என்று எச்சரித்த பென்ஸ், புதைபடிவ எரிபொருள்களுக்கு ஜோ பைடன் தடை விதிக்க விரும்புவதாக குறிப்பிட்டார். ஆனால், அது உண்மையல்ல என்று கமலா ஹாரிஸ் பதிலளித்தார்.
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தை பொறுத்தவரை மைக் பென்ஸ், கவனமாகவே பேச வேண்டியிருந்தது.
உலகம் சந்திக்கும் மிகப்பெரிய ஆபத்து, பருவநிலை மாற்றம் என்று பேசினார் கமலா ஹாரிஸ்.
ஆனால், இதற்கு எந்த மாதிரியான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பது குறித்து இருவருமே எதையும் குறிப்பிடவில்லை.
இனவெறி குறித்த விவாதம்
இனப்பாகுபாடு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து நடைபெற்ற விவாதத்தில்தான பல சூடான கருத்துகள் பரிமாறப்பட்டது.
அமெரிக்கா அமைப்பு ரீதியிலாகவே இனவெறியை கொண்டிருக்கிறது என்றும், சிறுபான்மையினருக்கு எதிராக பாரபட்சமாக காவல் துறை நடந்து கொள்வது பெரும் அவமானம் என்றும் கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டினார்.

பட மூலாதாரம், Alex Wong
கடந்த வாரம் டிரம்ப் செய்ததுபோலவே இதில் இருந்து திசை திருப்ப முயன்றார் மைக் பென்ஸ்.
“மினிசொடாவில் நிகழ்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் கொலை அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. ஆனால், அதனை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று அவர் பேசினார்.
நீதியின்மேல் தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும், இந்த நாடு அமைப்பு ரீதியாக இனவெறியை கொண்டிருப்பதாக கூறுவது சட்ட அமலாக்கத்துறையில் இருப்பவர்களை அவமானப்படுத்துவது போன்று உள்ளதாகவும் மைக் பென்ஸ் பேசினார்.
“அமெரிக்காவில் சட்ட அமலாக்கம் குறித்து துணை-அதிபர் எனக்கு பாடம் எடுப்பதை என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியாது” என்றார் சான் பிரான்சிஸ்கோவின் முன்னாள் அரசு வழக்கறிஞரும், கலிபோர்னியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான கமலா ஹாரிஸ்.
கடந்த வாரம் நடைபெற்ற விவாதத்தில் இதுகுறித்து பேசிய போது டிரம்ப் தடுமாறியதை கவனித்த கமலா ஹாரிஸ், வெள்ளை மேலாதிக்கவாதிகளை கண்டிக்காத ஒருவரைதான் நாம் அதிபராக பெற்றிருக்கிறோம் என்று கூறினார்.
இந்த நேரத்தில்தான், மைக் பென்ஸ் தலையில் ஒரு ஈ வந்து அமர, அங்கு சிறு குழப்பம் ஏற்பட்டது. அந்நாட்டு சமூக ஊடகங்களில் இது குறித்த விவாதங்களும், காணொளிகளும் மிகுதியாக பகிரப்பட்டுி வருகின்றன.
அமெரிக்க அரசியலின் தற்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த முடிவை எடுக்க, அமெரிக்கர்களுக்கு இந்த விவாதம் உதவும்.

பட மூலாதாரம், Alex Wong
வரும் தேர்தலை பொறுத்த வரை, இரு துணை அதிபர் வேட்பாளர்களுமே, தங்கள் அதிபர் வேட்பாளர்களுக்கு தங்களால் என்ன செய்ய முடியுமோ அதனை இந்த விவாதத்தில் செய்துள்ளனர்.
எனினும், இந்த விவாதத்தில் கலந்து கொண்டவர்கள், நவம்பர் மாதம் தேர்தல் முடிந்த பின்னும் என்ன நடக்கும் என்பதை எதிர்ப்பார்க்கின்றனர்.
இந்த விவாதம் முழுக்க, டிரம்பை காப்பாற்ற மைக் பென்ஸ் போராடினாலும், தனக்கு என்ற ஒரு தனி அடையாளத்தை அவர் உருவாக்கிக் கொண்டார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு, பின்னர் அதிலிருந்து விலகிய கமலா ஹாரிஸ், தான் இதற்கு தகுதியுள்ளவர் என்பதை நிரூபிக்க முயன்றார்.
வேறு சில முக்கிய விவாதங்கள்
- பழிக்குப்பழி என்ற டிரம்பின் நடவடிக்கைகளால் சீனாவுடன் நடந்த மோதலில் அமெரிக்காவில் உற்பத்தி மந்தநிலை ஏற்பட்டுள்ளது. “வர்த்தகப்போரில் நீங்கள் தோற்று விட்டீர்கள். ஆம். நீங்கள் தோற்றுவிட்டீர்கள்” என்றார் கமலா ஹாரிஸ். அதற்கு பதிலளித்த மைக் பென்ஸ், “சீனாவுடன் நடந்த வர்த்தகப் போரில் தோற்றுவிட்டோமா? ஜோ பைடன் போரை சந்திக்கவே இல்லை. கடந்த பல தசாப்தங்களாக சீன கம்யூனிஸ்ட் ஆட்சியின் ஆதரவாளராக இருக்கிறார் ஜோ பைடன்” என்று குறிப்பிட்டார்.
- நியூயார்க் டைம்ஸ் நடத்திய புலனாய்வு படி, அதிபர் டிரம்ப் ஆண்டுக்கு 750 டாலர்கள் மட்டுமே வருமான வரியாக கட்டுகிறார் என்று தெரிய வந்துள்ளது. “நான்கூட முதலில் அதுகுறித்து கேட்டபோது, 7,50,000 டாலர்களா என்று கேட்டேன். இல்லை வெறும் 750 டாலர்கள்தான் என்றார்கள்” என டிரம்ப்பை தாக்கி பேசினார் கமலா ஹாரிஸ்.
- நம் நட்பு நாடுகளுக்கு துரோகம் இழைத்துவிட்டு, சர்வாதிகாரிகளை அரவணைக்கிறார் அதிபர் டிரம்ப் என்று கமலா ஹாரிஸ் பேசினார். அதற்கு பதிலளித்த மைக் பென்ஸ், ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி மற்றும் இரான் ஜெனரல் காசீம் சூலேமானியை கொல்ல உத்தரவிட்டது டிரம்ப்தான் என்று கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com