Press "Enter" to skip to content

மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு மசோதா: ஆளுநர் ஒப்புதல் தரக் கோரி திமுக ஆர்ப்பாட்டம் மற்றும் பிற செய்திகள்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில், 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மசோதாவுக்கு தமிழக ஆளுநர் விரைந்து ஒப்புதல் தரவேண்டும் எனக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகையில் இன்று போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மாதத்திற்கு முன்னர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு அனைத்து கட்சியினரும் ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர். மசோதா சட்டமாக மாறுவதற்கு, ஆளுநரின் ஒப்புதல் தேவை என்பதால், மசோதா அவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுவரை ஆளுநர் பதில் தரவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி, அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி விரைவில் முடிவு எடுக்கவேண்டும் எனத் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். முன்னதாக அதிமுக அமைச்சர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினர். ஆனால் ஆளுநர் ஒப்புதல் தருவதில் தாமதம் இருப்பதாக ஸ்டாலின் விமர்சித்தார்.

திமுக

ஸ்டாலினின் கடிதத்திற்கு பதில் அளித்த ஆளுநர் புரோஹித், இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க 3 வாரங்கள் முதல் 4 வாரங்கள் தேவை என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஆளுநரின் காலக்கெடு மாணவர்களை பாதிக்கும் என்று கூறி ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார்.

அதன்படி, ஆளுநர் மாளிகை முன்பாக, ஸ்டாலின் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட சுமார் 2,000பேருக்கு அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டாய நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைப்பது சவாலாக இருப்பதால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது பற்றிய விவாதம் பல கட்டங்களில் நடைபெற்றது. ஒரு புறம் நீட்தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் எனத் தமிழக அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. அதேநேரம், நீட் தேர்வில் நடைபெறும் குளறுபடிகளை களைய வேண்டும் என்றும் நீட் தேர்வில் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துவருகின்றனது. அதன் ஒரு பகுதியாக, 7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாவில் ஆளுநர் விரைந்து பதில் தரவேண்டும் என திமுகவினர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

Presentational grey line

“கொரோனா பிரச்சனை அடுத்த ஜூன் வரை நீடிக்கலாம்” – பிரான்ஸ் அதிபர் மக்ரோங்

இம்மானுவேல் மக்ரோங்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், வைரஸுக்கு எதிரான போராட்டம் குறைந்தது அடுத்த ஆண்டு மத்தியப் பகுதி வரை தொடர வாய்ப்பிருப்பதாக அந்த நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் தொடர்பாக விஞ்ஞானிகளுடன் ஆலோசித்ததை செய்தியாளர்களிடம் பகிர்ந்த அவர், பிரான்சில் மீண்டும் பகுதியளவு அல்லது முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுமா என்பதை தீர்மானிக்க இன்னும் நேரம் உள்ளதாக மேலும் கூறினார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் பிரான்சில் புதிதாக 40,000க்கும் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட. மேலும், 298 பேர் உயிரிழந்திருந்தனர். இதேபோன்று, மற்ற ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா, போலந்து, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்டவற்றிலும் நோய்த்தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஐரோப்பிய நாடுகளில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர தொடங்கி இருப்பது கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான தருணம் என்று உலக சுகாதார நிறுவனம் கருத்துத் தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் அழுத்தத்தை சந்திப்பதற்கு முன்னர் நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பாவில் தினமும் பதிவாகும் நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த 10 நாட்களில் மட்டும் இருமடங்காகி உள்ளது. இதன் மூலம், ஐரோப்பிய கண்டத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்தையும், உயிரிழப்பு 2,47,000ஆகவும் அதிகரித்துள்ளது.

“அடுத்த சில மாதங்கள் மிகவும் கடினமாக இருக்கப்போகின்றன. குறிப்பாக, சில நாடுகள் மோசமான நிலையை நோக்கி செல்கின்றன” என்று செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.2 கோடியாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.

Presentational grey line

சீனாவில் இருந்து வரும் மஞ்சள் தூசு படலம் – அச்சத்தில் வட கொரியா

வட கொரியா

சீனாவில் இருந்து வீசும் மஞ்சள் தூசு படலம், கொரோனா வைரஸை தங்கள் நாட்டுக்குள் கொண்டு வரும் என்று அஞ்சுகிறது வட கொரியா.

இதனால், தங்கள் நாட்டு மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது அந்நாட்டு அரசு.

வெளி உலகத்துடன் பெரிதும் தொடர்பற்று வாழும் வட கொரியா தங்கள் நாட்டில் கொரோனா வைரஸே இல்லை என்று கூறிவந்தது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் முதலே எல்லைகளை கண்டிப்புடன் மூடிவைத்துள்ளதோடு, நடமாட்டத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பருவம்தோறும் வீசும் இந்த தூசு படலத்தின் மூலம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவாது. ஆனால், தூசு படலத்துக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருப்பதாக வட கொரியா மட்டுமே கருதவில்லை.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »