அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை டிரம்ப் தனக்கு சாதகமாக மாற்ற முடியுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை டிரம்ப் தனக்கு சாதகமாக மாற்ற முடியுமா?

  • ஆண்டணி சுர்சர்
  • வட அமெரிக்க நிருபர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியாளராகக் கருதப்பட்டு, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகும், டொனால்ட் டிரம்ப் இன்னும் தம் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார். டிரம்ப் தேர்தல் முடிவை தனக்கு சாதகமாக மாற்ற திட்டம் இருக்கிறதா?

தேர்தல் முடிவுகளை எதிர்த்து, சவால் விடுவதை, அமெரிக்கா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் யாரும் கேட்பதாகத் தெரியவில்லை.

பல்வேறு வழக்குகளைத் தொடுத்த பின்பும், இதுவரை வாக்கு மோசடி நடந்ததற்கான ஆதாரங்களைக் கொடுக்கவில்லை அல்லது இதுவரை இந்த வழக்கில் எந்த ஒரு அர்த்தமுள்ள வெற்றியும் பெறவில்லை.

மிசிகன் மாகாணத்தில் தொடுத்த வழக்கைக் கைவிடுவதாக, டிரம்ப் தரப்பின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரான, முன்னாள் நியூ யார்க் நகர மேயர் ரூடி குலியானி, கடந்த வியாழக்கிழமை சொல்லி இருக்கிறார். மிசிகனில் பைடன், 1.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஜோர்ஜாவில் மாகாண அரசு, தனது தேர்தல் வாக்கு எண்ணிக்கையைச் சான்றளித்துள்ளது, இது பைடனுக்கு 12,000 வாக்குகள் முன்னிலை அளிக்கிறது. இது கிட்டத்தட்ட 5 மில்லியன் வாக்குகளை அரசு தரப்பில் கையால் எண்ணிய பின் அறிவித்த எண்ணிக்கை.

தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இருப்பதற்கான வழிகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் போது, டிரம்ப், தேர்தல் வெற்றியை தன் பக்கம் மாற்ற, கையாளும் தந்திரங்களை மாற்றுவதாகத் தெரிகிறது. டிரம்ப் தன் தந்திரங்களை, நீண்ட கால சட்ட போராட்டத்தில் இருந்து, அரசியலுக்கு மாற்ற இருக்கிறார்.

டிரம்ப் தந்திரம்

அவர் என்னவெல்லாம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

1. எத்தனை மாகாணங்களில், வாக்கு சான்றளிக்கும் (Vote Cerification Process) செயல்பாட்டைத் தடுத்து நிறுத்த முடியுமோ, அத்தனை மாகாணங்களில், வழக்குகள் மூலமாகவோ அல்லது குடியரசுக் கட்சி அதிகாரிகள் மூலமாகவோ தடுத்து நிறுத்துவது.

2. பைடன் மயிரிழையில் வெற்றி பெற்று இருக்கும், குடியரசுக் கட்சியினர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தொகுதிகளில், பரவலான வாக்கு மோசடி நடந்ததால், அறிவித்த பாப்புளர் வாக்கு எண்ணிக்கைகளை ரத்து செய்யச் சொல்வது

3. தொகுதி கைக்கு வந்த பின், அவர்களுக்கு, தங்கள் மாகாண எலெக்ட்ரால் கல்லூரி வாக்குகளை வழங்கி, 14 டிசம்பர் அன்று, பைடனுக்கு வாக்களிப்பதற்கு பதிலாக, எலெக்டார்களை, தனக்கு வாக்களிக்கும் படிச் சொல்வது.

4. டிரம்ப்பை 232 வாக்குகளிலிருந்து, 269 வாக்குகளுக்குக் கொண்டு வர, போதுமான மாகாணங்களில் செய்ய வேண்டும். விஸ்கான்சின், மிசிகன், பென்சில்வேனியா போன்ற மாகாணங்கள் உதாரணம்.

5. பைடனை 306 வாக்குகளில் இருந்து கீழே இழுப்பதும் நடக்கலாம். அப்படி பைடன் கீழே வந்தால், பிரதிநிதிகள் சபையில் யார் அதிபர் என தீர்மானிக்கப்படும். பிரதிநிதிகள் சபையை ஜனநாயகக் கட்சியினர்கள் கட்டுப்படுத்துகிறார்கள் என்றாலும், சில நுணுக்கமான விதிமுறைகளால் டிரம்புக்கே சாதகமான சூழல் நிலவும்.

பைடன்

டிரம்ப் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

அமெரிக்கர்கள், அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் போது, அவர்கள் உண்மையில், மாகாண தேர்தலில் பங்கெடுக்கிறார்கள். மக்கள், மாகாண எலெக்டோரளுக்கு வாக்களிக்கிறார்கள். இந்த மாகாண எலெக்டார் தான், ஆளுக்கு ஒரு வாக்கு என்கிற அடிப்படையில் அதிபருக்கு வாக்களிக்கிறார்கள். பொதுவாக, எலெக்டார்கள், தேர்தலைத் தான் பிரதிபலிப்பார்கள். உதாரணமாக, மிசிகன் மாகாணத்தில் எல்லோரும் பைடனுக்கு தான் வாக்களிக்க வேண்டும். ஏன் என்றால், அவர் தான் அந்த மாகாணத்தை வென்று இருக்கிறார்.

கடந்த திங்கட்கிழமை, ஒரு மாநில பிரச்சாரக் குழு, இரண்டு குடியரசுக் கட்சிக்காரர்கள் மற்றும் இரண்டு ஜனநாயகக் கட்சிக்காரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த குழு, வாக்கு எண்ணிக்கையை நடத்தி, அதிகாரபூர்வமாக 16 எலெக்டார் வாக்குகள் பைடன் வென்றதாக அறிவிக்க இருக்கிறார்கள்.

மிச்சிகனின் மிகப்பெரிய நகரமான டெட்ராய்டில் இருந்து, தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டு சான்றளிக்க மறுத்த, குடியரசுக் கட்சி அதிகாரிகளை, டிரம்ப் அழைத்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ட்ரம்ப் தனிப்பட்ட மாகாணங்களின் தற்போதைய வாக்குகளைப் புறக்கணிக்க அழுத்தம் கொடுக்கிறார் என்று தெரிய வந்தது.

அமெரிக்கா முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான பிரசாரகர்கள் மற்றும் இரண்டு கீழ் மட்ட கட்சி அதிகாரிகள், ஒரு அமெரிக்க ஜனாதிபதியிடம் நேரடியாகப் பேசுவது என்பது கொஞ்சம் அசாதாரணமானது. அவர்கள் நடவடிக்கைகளைத் தடுக்கும் முடிவை மாற்றிக் கொண்டனர், டிரம்பின் அழைப்புக்குப் பிறகு, தங்கள் முடிவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தனர்.

மிச்சிகன் தொகுதியிலிருந்து, குடியரசுக் கட்சித் தலைவர்கள், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, வெள்ளிக்கிழமை வர சம்மதித்த அந்த குறிப்புகள், நோக்கத்தின் தெளிவான சான்றுகளாக அமைந்தன.

முக்கிய மாகாண தொகுதிகளை மறு ஆய்வு செய்ய அழுத்தம் கொடுப்பதற்கும், அவர்களின் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கும் ஜனாதிபதி வேறு வழிகளைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக உள்ளார் என்ற செய்தியும் வந்துள்ளது.

சாதாரண தேர்தல்களின் போது பொதுவாக நடக்கும் சம்பிரதாயம் என்னவென்றால் – மாகாண வாக்குகளின் மொத்த இரு கட்சி சான்றிதழ் (Bipartisan Certification) – அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, அமெரிக்க அதிபர், தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் சமீபத்திய போர்க்களமாக மாறியுள்ளது.

டிரம்ப்

டிரம்ப் இதில் வெற்றி பெற முடியுமா?

இது சாத்தியமற்றது அல்ல, ஆனால் வாய்ப்புகள் மிகவும் குறைவு. முதலில், பல மாகாணங்களில் தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி தனக்குச் சாதகமாக மாற்ற வேண்டும், அங்கு பைடனின் வாக்கு வித்தியாசம் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் முதல் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவையாக இருக்கின்றன. இது 2000 அல்ல, அப்போது எல்லாமே புளோரிடாவுக்கு வந்தது.

மேலும் , ட்ரம்பின் சட்டக் குழு குறிவைக்கும் பல மாகாணங்கள் – மிச்சிகன், விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் நெவாடா – போன்ற மாகாணங்கள், ஜனநாயகக் கட்சியின் ஆளுநர்களைக் கொண்டிருக்கின்றன, இவை அனைத்தும் நடைபெறும் போது, அவர்கள் சும்மா உட்கார்ந்து இருக்கமாட்டார்கள்.

உதாரணமாக, மிச்சிகனில், ஆளுநர் கிரெட்சன் விட்மர் தற்போதைய மாகாண தேர்தல் வாரியத்தை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக பைடனின் வெற்றியை சான்றளிக்கத் தயாராக உள்ள ஒருவரை மாற்ற முடியும்.

ஜனநாயகக் கட்சி ஆளுநர்கள் குடியரசுக் கட்சியின் தொகுதியில் தேர்வு செய்தவர்களுடன் போட்டியிட தங்கள் சொந்த, பைடன் சார்பு வாக்காளர்களைப் பெயரிடுவதன் மூலம் பதிலளிக்க முடியும், எந்த குழுவை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிக்க காங்கிரசுக்கு விட்டுவிடுகிறது.

இருப்பினும், பைடனின் ஆதரவாளர்கள் கவலைப்படவில்லை என்று அர்த்தமல்ல. இந்த நேரத்தில் பைடனின் வெற்றி பறிக்கப்பட்டால்,

பூமியை ஒரு மாபெரும் விண்கல் தாக்கியது போல அல்லது லாட்டரியை வெல்லும்போது ஒருவருக்கு மின்னல் தாக்கினால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு பெரிய பேரழிவு அரசியல் நிகழ்வாக இருக்கும்.

இது சட்டப்படி சரி தானா?

டிரம்ப் தனது பெரும்பாலான நேரத்தை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி விதிமுறைகளையும் மரபுகளையும் சிதைத்துள்ளார். அவரது பதவிக் காலத்தின் கடைசி நாட்கள் வேறுபட்டதாக இருக்காது என்று தோன்றுகிறது.

தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாகாண தொகுதிகளுக்கு டிரம்ப் அழுத்தம் கொடுப்பது வழக்கத்தில் இல்லாதது அல்லது சர்ச்சைக்குரியது என்பதால், அது சட்டவிரோதமானது என்று பொருளல்ல.

அமெரிக்காவின் ஆரம்ப நாட்களில், மாகாண சட்டமன்றங்கள் தங்கள் தேர்தல் வாக்குகளை எவ்வாறு ஒதுக்கீடு செய்தன என்பதற்கான பரந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தன, மேலும் மக்கள் வாக்களிப்பின் முடிவுகளுக்கு அவர்கள் செவி சாய்க்க வேண்டும் என்கிற அரசியலமைப்புத் தேவை இப்போது வரை இல்லை. ஆனால் அசல் அமைப்பின் அடித்தளங்கள் இன்னும் அப்படியே உள்ளன.

மிச்சிகன் போன்ற ஒரு மாகாணத்தைச் சம்மதிக்க வைப்பதில் ஜனாதிபதி வெற்றி பெற்றால், ஜனநாயகக் கட்சியினர் சட்டரீதியிலான ஆட்சேபனைகளை எழுப்புவது உறுதி. தேசிய மற்றும் மாகாணத்தில் உள்ள சட்டம் தெளிவற்றதாக இருக்கிறது. இந்த வகையான விஷயங்கள் எப்போதாவது தான் வழக்குகளாக இருந்து இருக்கின்றன.

மாநிலங்கள் தங்கள் தேர்தல்களை எவ்வாறு நடத்துகின்றன என்பதை நிர்வகிக்கும் சட்டங்களை முன்கூட்டியே மாற்ற முடியுமா? ஒருவேளை நடக்கலாம். ஆனால் இறுதித் தீர்ப்பை வழங்குவது நீதிபதிகள் தான்.

இதற்கு முன் யாராவது இதைச் செய்து இருக்கிறார்களா?

கடைசியாக நெருக்கமாகப் போட்டியிட்ட தேர்தலில், எலக்டார்கள் மீதான போரில், 2000 ஆம் ஆண்டில், அல் கோருக்கும், ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கும் இடையே நடந்தது.

புஷ்

புளோரிடாவில் ஒரு மாகாணத்தில் அது ஒரு சண்டையாக இருந்தது, அங்கு வேட்பாளர்களுக்கிடையே வித்தியாசம் சில நூறு வாக்குகள் மட்டுமே. இறுதியில், அமெரிக்க உச்சநீதிமன்றம் நுழைந்து மேலதிக மறு ஆய்வுகளை நிறுத்தியது – புஷ் ஜனாதிபதியானார்.

பல மாகாணங்கள் உள்ளடக்கிய, ஒரு சர்ச்சைக்குரிய அமெரிக்க தேர்தலுக்கு, நீங்கள் குடியரசுக் கட்சியின் ரதர்ஃபோர்ட் பி ஹேஸ் மற்றும் ஜனநாயகக் கட்சியின் சாமுவேல் டில்டன் ஆகியோருக்கு இடையிலான 1876 தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.

அந்த தேர்தலில், லூசியானா, தென் கரோலினா மற்றும் புளோரிடாவில் போட்டியிட்டவர்களால், தேர்தல் கல்லூரியில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மையை வெல்ல முடியவில்லை. அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு இந்த விவகாரம் வந்தது. இறுதியில் 2000 ஆம் ஆண்டில் புஷ் மற்றும் 2016-ம் ஆண்டில், டொனால்ட் டிரம்ப்பைப் போல, ஹேய்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுத்தால்?

தேர்தல் முடிவுகளை மாற்றியமைப்பதற்கான, டொனால்ட் டிரம்பின் நீண்டகால முயற்சிகள் தோல்வியுற்றால், ஜனவரி 20 அன்று மதியம் 12:01 மணிக்கு, ட்ரம்ப் முறையாக ஒப்புக்கொண்டாலும், ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், 46 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பார்.

அந்த நேரத்தில், அமெரிக்காவின் ரகசிய சேவைப் பிரிவினரும், அமெரிக்க இராணுவமும், முன்னாள் ஜனாதிபதியை அரசாங்க சொத்துக்களில் அங்கீகரிக்கப்படாத தனிநபர் வந்தால், அவர்களை எப்படி நடத்துமோ, அப்படியே நடத்த அவர்களுக்கு அதிகாரம் மற்றும் சுதந்திரம் இருக்கிறது.

“டிரம்ப் செய்வது மூர்க்கத்தனமானது” என்று பைடன் வியாழக்கிழமை ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். “ஜனநாயகம் எவ்வாறு செயல்படும் என்பது பற்றி நம்ப முடியாத அளவிற்கு சேதப்படுத்தும் செய்திகள் உலகின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.” என்று சொன்னார் பைடன்.

ஜனாதிபதி வெற்றி பெறாவிட்டாலும், தேர்தல் முடிவுகளை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான அந்த தன்மை, இனி வருங்கால தேர்தல்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைகிறது. வாக்கெடுப்புகளின்படி, அமெரிக்க ஜனநாயக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் மீது அமெரிக்கர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைக் குறைத்து மதிப்பீடு செய்ய வைக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

Author Image
Nila Raghuraman