பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அத்து மீறி நுழைந்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவரை பதவி நீக்கும் சாத்தியம் குறித்த முனுமுனுப்பு எழுந்துள்ளது.
இன்னும் 13 நாள்கள் மட்டுமே அவரது பதவிக்காலம் உள்ள நிலையில் இந்த முனுமுனுப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் பெற்ற வெற்றியை டிரம்ப் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆதாரம் ஏதுமில்லாமல் அவர் தொடர்ந்து பேசிவருகிறார்.
ஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும் முக்கியமான சம்பிரதாயம் ஒன்றில் அமெரிக்க நாடாளுமன்றம் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த தேர்தல் முடிவை மாற்ற வேண்டும் என்றும், டிரம்ப்தான் வெற்றி பெற்றார் என்று வலியுறுத்தியும் அவரது ஆதரவாளர் கும்பல் நாடாளுமன்றக் கட்டடமான, கேபிட்டல் கட்டடத்தில் நுழைந்து அமளியில் ஈடுபட்டது.
இந்த வன்முறையில் 4 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் டிரம்ப் பேசி வந்ததால்தான் கலவரம் ஏற்பட்டதாக பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
எனவே டிரம்பை பதவியில் இருந்து நீக்க அரசமைப்புச் சட்டத்தில் வழி இருப்பதாகவும், அதை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கிவிட்டன.
அந்த சட்டப் பிரிவுக்கு 25வது திருத்தம் என்று பெயர்.
டிரம்பின் அமைச்சரவைக்குள்ளேயே இந்த சட்டத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு குறித்து முனுமுனுப்புகள் தொடங்கியுள்ளன என்று பிபிசியின் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட அந்த 25-வது திருத்தத்தின் படி, அதிபருக்கு அவரது கடமையை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டால் அவரது பொறுப்புகள் வேறொருவருக்கு மாற்றப்படலாம்.
தற்போதைய நிலையில், முக்கிய அமைச்சரவை உறுப்பினர்கள், துணை அதிபர் மைக் பென்ஸ், ஆகியோர், ‘டிரம்ப் தகுதியோடு இல்லை என்பதால் மைக் பென்ஸ் செயல் தலைவர் ஆகிறார் என்று நாடாளுமன்றத் தலைவர்களுக்கு கடிதம் எழுதிதான் இதைச் செய்ய வேண்டும்.
1967ம் ஆண்டு கொண்டுவரப்பட்டதில் இருந்து இந்த சட்டத் திருத்தம் ஒரு முறைகூட பயன்படுத்தப்பட்டதில்லை.
ஆனால், இதுவரை இதற்கான கோரிக்கை துணை அதிபர் மைக் பென்சிடம் முறைப்படியாக சமர்ப்பிக்கப்படவில்லை.
வெர்மான்ட் மாகான குடியரசுக் கட்சி ஆளுநர், தேசிய உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர், என்.ஏ.ஏ.சி.பி. (நேஷனல் அசோசியேஷன் ஃபார் அட்வான்ஸ்மென்ட் ஆஃப் கலர்ட் பீப்புள்) தலைவர் உள்ளிட்டோர் மைக் பென்சை சந்தித்து இந்தப் பிரிவை பயன்படுத்தும்படி கோரியுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com