பாகிஸ்தான் இந்து சாமியார் சமாதி தாக்குதல்: சிறிய தகராறு சர்வதேச பிரச்சனை ஆனது எப்படி?

பாகிஸ்தான் இந்து சாமியார் சமாதி தாக்குதல்: சிறிய தகராறு சர்வதேச பிரச்சனை ஆனது எப்படி?

  • எம். இல்யாஸ் கான்
  • பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபத்

பாகிஸ்தானில் நூற்றாண்டு பழமையான இந்து சாமியாரின் சமாதி கடந்த டிசம்பரில் ஒரு இஸ்லாமிய கும்பலால் அழிக்கப்பட்டது. இந்த புனித தலத்தின் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இது.

ஸ்ரீ பரம் ஹன்ஸ் மகராஜ் என்கிற இந்து சாமியாரின் சமாதியைப் புனரமைக்க வழி வகுக்குமாறு வடமேற்கு மாவட்டமான கராக் அதிகாரிகளுக்கு, பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த தாக்குதல் பாகிஸ்தானில் வாழும் இந்துக்களை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. அதோடு, பாகிஸ்தான் அரசு மத ரீதியிலான சிறுபான்மையினரைப் பாதுகாக்க முடியாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

பாகிஸ்தானில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள். அங்கு மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்துக்கும் குறைவாகவே இந்துக்கள் இருக்கிறார்கள்.

கடந்த 1997 ஆம் ஆண்டில் பரம் ஹன்ஸ் மகராஜ் நினைவிடத்தின் மீது முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இறுதியாக புனரமைப்பு உத்தரவை பிறப்பித்த பின்னர், பரம் ஹன்ஸ் சமாதியை வழிபடும் இந்துக்கள், அச்சமாதியை மீண்டும் கட்டும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்த சமாதிக்கு வந்து போகும் இந்துக்கள் ஓய்வெடுத்துக் கொள்ள ஓர் இடத்தை ஏற்பாடு செய்வதற்காக அருகிலுள்ள ஒரு வீட்டை வாங்கி புதுப்பிக்கத் தொடங்கினர். உள்ளூர் இஸ்லாமியர்கள் அதை கோயில் விரிவாக்கப் பணி என நினைத்துவிட்டனர். இதனால் இஸ்லாமியர்களின் கோபம் சமாதி பக்கம் திரும்பிவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் அந்த சமாதி மீண்டும் கடுமையாக தாக்கப்பட்டது.

எப்படி இந்த தாக்குதல் நடந்தது?

WASEEM KHATAK

கடந்த டிசம்பர் 30-ம் தேதி, உள்ளூர் மத குருவான மெளலவி மொஹம்மத் ஷெரீஃப் என்பவரின் தலைமையில், பரம் ஹன்ஸ் சமாதிக்கு அருகில் ஒரு கூட்டம் கூடியது. இந்த மத குரு தான் 1997-ம் ஆண்டிலும் இக்கோயிலின் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர். இவருக்கு ஜமியத் உலெமே இஸ்லாம் என்கிற மதக் கட்சியுடன் தொடர்பும் இருக்கிறது.

இந்த மத குரு தான், அங்கு கூடிய மக்களைத் தூண்டி விட்டதாகவும், அதன் பிறகு தான் கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள், இந்து கோயிலின் சுவர்களை தாக்கியதாகவும், மரக் கதவுகளை எரித்ததாகவும் அக்காட்சிகளைக் கண்டவர்கள் கூறினார்கள்.

“ஒட்டுமொத்தத்தில், இந்து சமாதி சிதைப்பு” என பாகிஸ்தானின் சிறுபான்மையினர் உரிமைகள் குழு தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. சர்வதேச அளவில் இது பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட அவமானம் என பாகிஸ்தானின் முதன்மை நீதிபதியான குல்சார் அஹ்மத் கூறினார்.

கோயில் தாக்கப்பட்ட போது காவலர்கள் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் கலவரத்தைக் கட்டுப்படுத்தவில்லை.

109 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அதில் மெளலவி மொஹம்மத் ஷெரீஃபும் ஒருவர். 92 காவல் துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். அதில் கண்காணிப்பாளர் & துணை கண்காணிப்பாளரும் அடக்கம்.

கோயில் தாக்கப்பட்ட போது, அங்கு இந்துக்கள் யாரும் இல்லை. அச்சாமதி கோயிலைச் சுற்றியும் இந்துக்கள் வாழ்வதில்லை. இந்த கோயில் தாக்குதலில் யாருக்கும் காயங்களோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

ஏன் இந்த பிரச்னை?

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் இருக்கும் டெரீ கிராமத்தில் பரம் ஹன்ஸ் மகராஜ் சமாதி 1919-ம் ஆண்டே கட்டப்பட்டது.

1947 இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஏகப்பட்ட இந்துக்கள் இந்தியாவுக்கும், முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும் தங்களின் சொத்துக்களை எல்லாம் விட்டு விட்டு புலம் பெயர்ந்து சென்றனர். அதில் டெரீ கிராமத்தில் வாழ்ந்த இந்துக்களும் அடக்கம்.

டெரீ கிராமத்தில் இந்துக்கள் விட்டுச் சென்ற சொத்துக்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிர்வகிக்க, பாகிஸ்தான் அரசு ஒரு ட்ரஸ்டை நிறுவியது. பரம் ஹன்ஸ் சமாதி அவரது சீடர் ஒருவரிடம் கொடுக்கப்பட்டது. அச்சீடரும் இஸ்லாத்துக்கு மதம் மாறினார். கோயிலை பராமரித்து வந்தவர் 1960-களில் இறந்துவிட்டார்.

காலப்போக்கில், சமாதியை பாதுகாத்து வந்தவரின் மகன்கள், அதை இரண்டு உள்ளூர் இஸ்லாமிய குடும்பத்துக்கு விற்றனர். எனவே, சமாதி கோயிலுக்கு வந்து செல்வதற்கான பாதை சிரமமாகிப் போனது. சமாதிக்கு வந்து செல்பவர்கள் அந்த இஸ்லாமிய குடும்பத்தினரின் வீட்டுக்குள் சென்று வர வேண்டியிருந்தது.

1990-களுக்கு மத்தியில், இந்துக்கள் முன்பு விற்ற இரண்டு வீட்டில், ஒரு வீட்டை விலை கொடுத்து வாங்கி, சமாதிக்கு பாதை ஏற்படுத்திக் கொண்டனர். இந்துக்கள் வீட்டை வாங்கிய கால கட்டம், இஸ்லாமிய மதகுருமார்கள் பாகிஸ்தான் அரசியலில் அதிக ஆதிக்கம் செலுத்தி வந்த காலகட்டம். 1996-ம் ஆண்டில் மெளலவி மொஹம்மத் ஷெரீஃப்க்கு இந்த விவரம் தெரிய வந்தது. இந்து சமூகத்தினர்கள் அமெரிக்கா & இந்தியாவின் உளவாளிகள் என அவர் கூறினார். அதோடு இந்த சமாதி தாக்குதலுக்கு தலைமையும் தாங்கினார்.

இந்த தாக்குதல் தொடர்பான விசாரணை கடந்த 2015-ம் ஆண்டு வரை நீடித்தது. கடைசியாக 2015-ம் ஆண்டு இந்த சமாதியை மீண்டும் சீரமைத்துக் கொடுக்குமாறு உத்தரவிட்டது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்.

இருப்பினும் உள்ளூர் அரசமைப்புகள் நிதி ஒதுக்கீடு செய்வதில் கால தாமதம் செய்தன. எனவே பாகிஸ்தான் இந்து சபையினர் தங்கள் சொந்த செலவில் கோயிலையும், கோயிலுக்குச் செல்லும் பாதையையும் கட்டிக் கொண்டனர்.

WASEEM KHATAK

இத்தனை நடந்த பிறகும், மீண்டும் கடந்த 2020 டிசம்பரில் அதே மெளலவி மொஹம்மத் ஷெரீஃப் தலைமையில் இந்த சமாதி தாக்கப்பட்டது.

இதை மீண்டும் கட்டித்தர உத்தரவிட்டிருக்கும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், கோயில் தாக்குதலின் போது அதை தடுக்காத காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்ளூர் அமைப்புகளிடம் கூறியிருக்கிறது.

சமாதிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தால் சிறிய கலவரம் ஏற்படலாம் என தங்களுக்கு தகவல்கள் வந்ததாகவும், ஆனால் அந்தக் கலவரம் இத்தனை பெரிதாக இருக்கும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் ஒருவர் பிபிசியிடம் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் இப்போதும் மதகுருமார்கள் அரசியல் அதிகாரமிக்கவர்கள். அவர்களின் பாதையில் குறுக்கிட்டால், அது எங்கள் வேலையை பாதிக்கும். எனவே உயரதிகாரிகள் தெளிவான கட்டளைகளைக் கொடுக்காமல் நாங்கள் எதையும் செய்ய முடியாது. இதைத் தான் கலவரக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என அக்காவலர் கூறினார்.

ஒரு கோயிலை மட்டும் மறுகட்டுமானம் செய்துவிட்டால் அது நல்லிணக்கத்தை மீட்டு எடுக்காது. கல்வி மாற்றங்களிலிருந்து நல்லிணக்கம் தொடங்க வேண்டும். தற்போதிருக்கும் கல்வி முறை இஸ்லாத்தைச் சேராதவர்களிடம் வெறுப்பையும் விதைக்கிறது.

“சட்டத்தைக் கொண்டு எளிதில் தீர்க்கப்படக்கூடிய ஒரு உள்ளூர் தகராறு இது. அரசு அமைப்பின் தோல்வியால் ஒரு தேசியப் பிரச்சனையாகி, சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது” என பெஷாவரைச் சேர்ந்த இந்து சமூகத் தலைவரான ஹாரூன் சரப் தியால் கூறினார்.

டிசம்பர் மாதம் கோயில் மீதான தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, பாகிஸ்தானில் சிறுபான்மை உரிமைகளுக்கான ஆணையம் ” பாகிஸ்தானில் சிறுபான்மையினரை நடத்துவதில் இன்னும் தெளிவான முன்னேற்றம் தேவை” எனக் குறிப்பிட்டிருந்தது. தாக்குதலுக்குப் பின் வெளியிட்ட அறிக்கையிலும், சிறுபான்மையினரை சரியாக நடத்துவதில் நாம் இன்னும் நிறைய முன்னேற வேண்டும் என ஆணையம் கூறியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman