அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம்: பதவி நீக்கும் முயற்சிக்கு சொந்தக் கட்சியில் ஆதரவு

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம்: பதவி நீக்கும் முயற்சிக்கு சொந்தக் கட்சியில் ஆதரவு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. ஆனால், அதற்குள் அவரைப் பதவி நீக்கிவிடவேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் மேற்கொண்டுவரும் முயற்சிக்கு டிரம்பின் சொந்தக் கட்சியிலேயே சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், தேர்தல் முறைகேடு நடந்துவிட்டதாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை தொடர்ந்து சுமத்தி வந்த டிரம்ப் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் சுமுகமாக நடக்கவேண்டுமே என்று பலரும் கவலைப்பட்டு வந்தனர்.

ஆனால், கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடமான கேபிடல் மீது டிரம்ப் ஆதரவு கும்பல் மேற்கொண்ட வன்முறைக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

கட்சி எல்லைகளைக் கடந்து பலரும் டிரம்பை விமர்சிக்கத் தொடங்கினர். உலக நாடுகள் பலவும் இந்த தாக்குதலை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கண்டம் தெரிவித்தன.

இப்போது டிரம்ப் பதவியை விட்டுச் செல்வது சுமுகமாக நடக்குமா அல்லது அவர் பதவி நீக்கப்படுவாரா என்று கேள்வி தலைகீழாக மாறிவிட்டது.

கண்டனத் தீர்மானத்துக்கு குடியரசுக் கட்சியில் ஆதரவு

கண்டனத் தீர்மானம் மூலம் டிரம்பை பதவி நீக்கும் முயற்சி: சொந்த கட்சியிலேயே ஆதரவு

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் மூன்றாவது மூத்த குடியரசுக் கட்சி உறுப்பினரான லிஸ் செனீ, கடந்த வாரம் நடந்த கேபிடல் வன்முறை தொடர்பாக டிரம்ப் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுந்தால் அதை ஆதரித்து வாக்களிவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

5 மரணங்களுக்கு காரணமாக இருந்த இந்த கேபிடல் வன்முறைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பொறுப்பேற்க மறுத்துவிட்டார். ஜனவரி 20ம் தேதி அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

நாடாளுமன்றத்தில் கலவரம் செய்யத் தூண்டியதாக அதிபர் டிரம்ப் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டின் மீது புதன்கிழமை அவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். கலவரத்துக்கு முன்பாக டிரம்ப் ஆற்றிய உரையில் தமது ஆதரவாளர்களை கலவரத்தில் ஈடுபடும்படி அவர் தூண்டினார் என்பது ஜனநாயக கட்சியின் குற்றச்சாட்டு.

இதன் மூலம் இரண்டு முறை கண்டனத் தீர்மானத்தை எதிர்கொண்ட அமெரிக்க அதிபர் என்ற பெயரை டிரம்ப் பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

சட்டத்துக்குப் புறம்பாக, ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரான பைடன் மீது விசாரணை நடத்தும்படி உக்ரைன் நாட்டை கேட்டுக்கொண்டதற்காக டிசம்பர் 2019ல் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் நாடாளுமன்ற கண்டனத் தீர்மானத்தை எதிர்கொண்ட

மூன்றாவது அமெரிக்க அதிபர் என்ற பெயரை டிரம்ப் பெற்றார்.

முன்னாள் துணை அதிபர் டிக் செனீயின் மகளான லிஸ் செனீ, இது பற்றிக் கூறும்போது ‘அதிபரே கும்பலை அழைத்தார், கூட்டம் கூட்டினார், தாக்குதலின் தீப்பொறியை அவரே பற்றவைத்தார்’ என்று குறிப்பிட்டார். ஜான் காட்கோ, ஆடம் கின்சிங்கர் ஆகிய குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் கண்டனத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக கூறியுள்ளனர்.

ஆனால், அவை குடியரசுக் கட்சி முன்னவர் கெவின் மெக்கார்த்தி கண்டனத் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று சொல்லிவிட்டார் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனநாயக கட்சியினர் கண்டனத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருப்பது தமக்கு மகிழ்ச்சி என்றும், இதனால் டிரம்பை குடியரசுக் கட்சியில் இருந்து நீக்க வழி பிறக்கும் என்றும் தமக்கு நெருக்கமானவர்களிடம், செனட் அவையின் குடியரசுக் கட்சி முன்னவர் மிட்ச் மெக்கனல் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

பிரையன் ஃபிட்ஸ்பாட்ரிக் என்ற என்ற பென்சில்வேனியா நாடாளுமன்ற உறுப்பினர், கண்டனத் தீர்மானத்தைவிட குறைவான தீவிரம் உள்ள சென்ஷ்யூர் என்ற கண்டனத் தீர்மானத்தை செவ்வாய்க்கிழமை மாலை முன்மொழிந்தார்.

கண்டனத் தீர்மானம் மூலம் டிரம்பை பதவி நீக்கும் முயற்சி: சொந்த கட்சியிலேயே ஆதரவு

நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டவிரோதமாக மாற்றியமைக்க முயன்றதாகவும், அரசாங்கத்தின் இணைப் பிரிவினை பாதிப்புக்கு உள்ளாக்கியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டுகிறது இந்த தீர்மானம்.

பதவி நீக்கம் – என்ன நிலையில் இருக்கிறது?

25-வது சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி டிரம்பை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று துணை அதிபர் மைக் பென்ஸை வலியுறுத்தும் தீர்மானம் பிரதிநிதிகள் அவையில் 223க்கு 205 என்ற அளவில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது. ஆனால், அந்த தீர்மானத்தை ஏற்க மைக் பென்ஸ் நிராகரித்துவிட்டார்.

அவைத் தலைவர் நான்சி பெலோசிக்கு எழுதிய கடிதத்தில், நமது அரசமைப்புச் சட்டத்தில் 25வது திருத்தம் என்பது தண்டனை வழங்குவதற்கானது அல்ல என்று குறிப்பிட்டார் மைக் பென்ஸ். இது போன்ற சூழ்நிலையில் 25வது சட்டத் திருத்தத்தை பயன்படுத்துவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது, ஜனநாயக கட்சியினர் கண்டனத் தீர்மான வழியைத் தேர்ந்தெடுக்க வழி செய்கிறது. கண்டனத் தீர்மானம் நிறைவேறினால், செனட் அவையில் அவர் மீது விசாரணை நடக்கும்.

செனட்டில் அவர் மீதான குற்றத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இதனால், குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்கவேண்டும்.

இப்படி டிரம்பை தண்டிக்க குறைந்தது 20 குடியரசுக் கட்சி செனட்டர்கள் தயாராக இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அவரை மீண்டும் போட்டியிடவிடாமல் தடுப்பதற்கு பதவிநீக்க குற்றச்சாட்டு விசாரணையை செனட் பயன்படுத்தலாம்.

டிரம்ப் என்ன கூறினார்?

டிரம்ப்

கேபிடல் வன்முறைக்கு பின்னர் முதல் முறையாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தனது ஆதரவாளர்களிடம் கூறிய கருத்துகளுக்கு எந்தவிதமான கவலையும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், வாக்குப்பதிவில் முறைகேடு பற்றிய ஆதாரமற்ற கூற்றுக்களையும் அவர் மீண்டும் மீண்டும் கூறினார்.

“நான் கூறியது முற்றிலும் பொருத்தமானதே. நான் எவ்விதமான வன்முறையை விரும்பவில்லை” என்று டிரம்ப் கூறினார்.

“இந்த பதவிநீக்க குற்றச்சாட்டு குறித்த விசாரணை மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறிய அவர் கடந்த ஆண்டு நடந்த ‘கருப்பர் உயிரும் உயிரே’ போராட்டம் மற்றும் வன்முறையின்போது ஜனநாயக கட்சியினர் பயன்படுத்திய சொல்லாட்சியே “உண்மையான பிரச்சனை” என்று குற்றஞ்சாட்டினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman