கருத்தடை பக்கவிளைவு: மாத்திரை, ரத்தம், வலிகளே வாழ்க்கை ஆன பெண்மணி

கருத்தடை பக்கவிளைவு: மாத்திரை, ரத்தம், வலிகளே வாழ்க்கை ஆன பெண்மணி

  • By சேன்ட்ரைன் லங்குமு
  • பிபிசி செய்திகள்

தன்னுடைய நுரையீரல் குழாயில், உயிரை பறிக்கக் கூடிய அளவுக்கு ரத்த அடைப்பு இருப்பதாக வானெஸ்ஸா சென்டெனோ அறிந்தபோது, அதை ஏற்றுக் கொள்வது அவருக்கு கடினமாக இருந்தது.

ஆனால் எதனால் அந்தப் பிரச்னை ஏற்பட்டது என்பதை உணர்ந்தபோது, அவருக்கு குழப்பமும், அதிர்ச்சியும் மேலும் அதிகரித்தது. பாஸ்டன் நரில் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டுள்ள வானெஸ்ஸா, 2019ஆம் ஆண்டில் பல மில்லியன் பெண்களைப் போலவே, குறிப்பிட்ட கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தினார்.

ஆனால், பெரும்பாலான பெண்களைப் போல அல்லாமல், வானெஸ்ஸாவுக்கு அந்த மாத்திரையால் அபூர்வமான பக்கவிளைவாக ரத்தம் உறைந்து போகும் பாதிப்பு ஏற்பட்டது. அது தன்னுடைய வாழ்வை நிரந்தரமாக மாற்றிவிட்டது என்று அவர் கூறினார்.

A woman holding on to her chest in pain

`எனக்கு மாரடைப்பு வந்துவிட்டதாக நினைத்தேன்’

“நான் மாடிப்படிகளில் ஏறிக் கொண்டிருந்தபோது, சுவாசம் திடீரென தடைபட்டதால், அருகில் இருந்த தபால்கள் வைப்பதற்கான பெட்டியைப் பிடித்துக் கொண்டேன்” என்று வானெஸ்ஸா தனக்கு நேர்ந்த திடீர் அனுபவத்தை நினைவுகூர்ந்தார்.

“மூச்சு விட அந்த அளவுக்கு ஒருபோதும் நான் சிரமப்பட்டது கிடையாது. முடிந்த வரையில் அதிகமாக காற்றை எடுத்துக் கொள்ள நான் முயற்சித்தேன்” என்றார் அவர். மூச்சுவிட சிரமம் இருந்தபோதிலும், வானெஸ்ஸா வேலைக்குச் சென்றார். அருகில் உள்ள கிளினிக்கிற்கு செல்வதற்காக, அலுவலகத்தில் இருந்து சீக்கிரமாகவே அவர் புறப்பட்டு விட்டார்.

“சுவாசக் காற்று செல்லும் பாதையை விரிவடையச் செய்யக் கூடிய நெபுலைசர் என்ற சாதனம் மூலம் எனக்கு சிகிச்சை தந்தார்கள். கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது. சுவாசம் ஓரளவுக்கு அதிகரித்திருந்தது. எனக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, என் நுரையீரலில் நிழல் போல ஒரு அறிகுறி தெரிவதாகவும், அநேகமாக அது நிமோனியா பாதிப்பாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்” என்று வானெஸ்ஸா விவரித்தார்.

ஆனால், அது நிமோனியா அறிகுறி அல்ல என்றும், மேலும் சில மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்றும் மறுநாள் கிளினிக்கில் கூறியுள்ளனர்.

ஒரு மாதமாக சந்திப்புக்கு மருத்துவர் நேரம் ஒதுக்கித் தராத நிலையில், வானெஸ்ஸாவின் சுவாசம் மேலும் மோசமானது. கிளினிக்கில் தந்த யோசனையின்படி அவர் ஆஸ்துமா நோயாளிகள் பயன்படுத்தும் ஸ்பிரேவை பயன்படுத்தினார்.

“அப்போது அது நடந்தது” என்றார் வானெஸ்ஸா.

“துணிகளை துவைத்து சலவை செய்யும்போது மாடிப் படிகளில் நான் ஏறி இறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உடையில் ஒரு பகுதியை திறந்துவிட்டேன். பிறகு சுவாசிக்க முடியாமல் போய், சமையலறையில் தரையில் விழுந்துவிட்டேன்” என்று அவர் கூறினார்.

“உடல் வலித்தது; வயிறு, மார்பு, கைகள் எல்லாம் வலித்தன. எனக்கு மாரடைப்பு வந்துவிட்டதாக நான் நினைத்தேன்” என்று வானெஸ்ஸா தெரிவித்தார்.

வானெஸ்ஸா மருத்துவமனைக்குச் செல்லவில்லை. தன் டாக்டரை தொடர்பு கொண்டபோது பேசிய நர்ஸ், உடனே கூடிய சீக்கிரத்தில் மருத்துவமனைக்கு வருமாறு கூறியுள்ளார்.

“மறுநாள் டாக்டரைப் பார்க்க நான் சென்றேன். என் அறிகுறிகள் எல்லாவற்றையும் சொன்னேன். அந்தப் பெண் மருத்துவர் என் உடலைப் பரிசோதித்துவிட்டு, சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறினார். எனவே பெரிய மருத்துவமனைக்கு என்னை அனுப்பினார்கள்.”

“மானிட்டர்கள் நடுவே என்னை படுக்க வைத்தார்கள், நரம்பில் ஊசி குத்தினார்கள் – இதையெல்லாம் பார்த்து நான் குழப்பமாகிவிட்டேன்.”

“என் மார்புப் பகுதியில் பெரிதாக ரத்த அடைப்பு ஏற்பட்டுள்ளது, அது நுரையீரலுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது என்று அப்போது தெரிய வந்தது” என்று வானெஸ்ஸா கூறினார்.

மருத்துவமனையில் அவர் இரண்டு நாட்கள் இருந்தார். பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், இரண்டு வாரங்களாக அவர் படுக்கையிலேயே இருக்க வேண்டியதாயிற்று.

கருத்தடை மாத்திரையை மாற்றியதால் தான் ரத்தம் உறைந்து போயிருக்கும் என்று மருத்துவர்கள் கூறியதாக வானெஸ்ஸா தெரிவித்தார். ஏனெனில் சமீப காலத்தில் தான் அவர் அந்த புதிய கருத்தடை மாத்திரையை எடுக்கத் தொடங்கினார்.

“இன்னும் ஒரு நாள் தாமதம் ஆகியிருந்தால், நிலைமை விபரீதமாகி இருக்கும், அந்த அளவுக்கு உடல்நிலை மோசமாக இருந்தது என்று மருத்துவர்கள் கூறினார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

மாத்திரைகள் சாப்பிடுவதால் ரத்தம் உறையுமா?

A photo of conceptive pills on a pink background

மிக அபூர்வமாகத்தான் இப்படி நடக்கும்.

“இந்த மாத்திரைகளை ஓராண்டு காலத்துக்குப் பயன்படுத்தினால் 10 ஆயிரம் பெண்களில் 5 முதல் 12 பெண்களுக்கு ரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்படும். கூட்டு கருத்தடை முறைகளை பயன்படுத்தும் பெண்களில் 10 ஆயிரம் பேரில் 2 பேருக்கு ரத்த நாளத்தில் ரத்தம் உறைகிறது என்பதுடன் இது ஒப்பீடு செய்யப்படுகிறது” என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைத் துறை கூறியுள்ளது.

எந்தப் பெண்ணுக்காவது, ஏதாவது சந்தேகம் எழுந்தால் டாக்டரை நாடுங்கள் என்று இந்தத் துறை கூறியுள்ளது.

உலக அளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் இந்த மாத்திரை பயன்படுத்துகின்றனர். ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மிகவும் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கருத்தடை மாத்திரையாக இது உள்ளது.

ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது மாத்திரையாகவும், ஆசியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மூன்றாவது மாத்திரையாகவும் இது இருக்கிறது.

சுரப்பிகளைக் கட்டுப்படுத்தும் கருத்தடை மருந்துகளை பயன்படுத்தும் போது பக்கவிளைவுகள் ஏற்படும். உணர்வுகள் மாறுபடும் நிலை, எடையில் மாறுபாடு போன்றவை பொதுவான பக்கவிளைவுகளாக இருக்கின்றன.

ஆனால் ரத்தம் உறைதல் என்பது போன்ற, அரிதான பக்கவிளைவு, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

சுரப்பிகளைக் கட்டுப்படுத்தும் சிகிச்சை, வயது, குடும்பத்தில் முந்தைய தலைமுறையில் ரத்தம் உறைதல் பிரச்னை இருத்தல், உடல்எடை மற்றும் புகைபிடித்தல் போன்ற வாழ்க்கை முறை அம்சங்கள் போன்றவற்றால் பெண்களுக்கு இப்படி ரத்தம் உறைதல் பிரச்னை வரலாம்.

“கூட்டு கருத்தடை மருந்துகளை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, அவர்கள் பயன்படுத்தும் மருந்துகளைப் பொருத்து, ரத்தம் உறைவதற்கான ஆபத்து நான்கு முதல் எட்டு மடங்கு அதிகமாக உள்ளது” என்று லண்டனில் உள்ள கய்ஸ் மற்றும் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் ரத்தம் உறைதல் தொடர்பான சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பெவர்லி ஹன்ட் தெரிவித்தார்.

“கருவுற்ற காலத்தில் இதனால் ஏற்படும் ஆபத்து அதிகமானதாக இருக்கும். எனவே கருத்தரிப்பதைவிட, கருத்தடைக்கான கூட்டு மருந்துகளை வாய்வழியாக எடுத்துக் கொள்வதே நல்லது” என்று அந்தப் பேராசிரியை கூறினார்.

A photo of a woman lying on a sofa

`எல்லோருக்கும் உறையாது’

வாய்வழியாக எடுத்துக் கொள்ளும் கருத்தடை மருந்து, பொதுவாக மாத்திரைகளாக உள்ளன. அதில் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் அல்லது புரோஜெஸ்டெரோன் அல்லது இரண்டு ஹார்மோன்களும் இருக்கும்.

“கருப்பை வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜென் உதவும். கரு முட்டைகளின் இருப்பிடமாக கருப்பை இருக்கிறது. கருமுட்டை உரிய பருவம் முதிர்ச்சி பெற்றதும் கருத்தரிப்புக்குத் தயாராகிறது என்று தென்னாப்பிரிக்காவில் பிரெட்டோரியாவில் உள்ள ஸ்டீவ் பிக்கோ அகடமிக் மருத்துவமனையில் கருத்தரிப்பு சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ஜோஜோ நேனே தெரிவித்தார்.

`ஆனால் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக இருந்தால், மூளைக்கு எதிர்மறையான தகவலை அது அனுப்பும். வெளியில் இருந்து ஈஸ்ட்ரோஜென் தரும்போது, இந்த ஹார்மோனை அது செயல்பட விடாமல் தடுக்கும். எனவே கருமுட்டை வளர்ச்சி இருக்காது” என்று அவர் விவரித்தார்.

புரோஜெஸ்டெரோன் மூன்று வகைகளில் செயல்படுகிறது; கருப்பை வாய் பகுதியில் சவ்வுகளை இது தடிமனாக்கிவிடும் – எனவே விந்தணு அதைத் தாண்டி உள்ளே செல்ல முடியாது.

கருக்குழாய் சுவர்களை இது மெலிதாக ஆக்கும். எனவே கரு முட்டை ஒட்டிக் கொண்டிருக்காது. கருக்குழாய்களில் சிலியா என்ற முடி போன்ற பகுதிகள் உருவாகும். அது முட்டையை வாயிலை நோக்கி தள்ளும் அல்லது முட்டை மற்றும் விந்தணு சந்திக்க தள்ளிவிடும்.

“எனவே இந்த இரண்டு ஹார்மோன்களும் சேர்ந்து செயல்படும்போது, கரு முட்டை விடுபடுதல் அல்லது பிடிமானமாக ஒட்டிக் கொள்வது தடுக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

சாதாரணமாக இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது அசதி, வாந்தி, உடல் எடை கூடுதல், ஏப்பம், மரு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

“பசியின்மை, தலைவளி, மார்பகம் தளர்வு, உணர்வுநிலை மாற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக சிலர் கூறுகிறார்கள்” என்று மருத்துவர் நேனே தெரிவித்தார்.

“இந்த இரு ஹார்மோன்களால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன” என்றார் அவர்.

“பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான காரணத்தை அறிய வேண்டியது முக்கியம். எனவே, பெரும்பாலும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் காரமமாக அசதி மற்றும் வாந்தி ஏற்படுவதை நாம் அறிந்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

ரத்தம் உறைவதற்கான காரணிகளுடன், கருத்தடை மாத்திரைகளும் சேருவதால், உடலில் ரத்தம் உறைவது அதிகரிக்கிறது. ஆனால் எல்லோருக்கும் அப்படி ரத்தம் உறைந்துவிடாது.

“ரத்தம் உறைவதற்கான அதிக ஆபத்து யாருக்கு இருக்கிறது என்பதை நாம் கண்டறிய வேண்டும். உடலின் பி.எம்.ஐ. குறியீடு அதிகமாக உள்ள பெண்களுக்கு தான் இந்தப் பிரச்னை வருவதாக என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்’ என்று மருத்துவர் நேனே தெரிவித்தார்.

A photo of different forms of contraception on a pink background.

`எனக்கு PTSD உள்ளது’

ஓராண்டு முடிந்துவிட்ட நிலையிலும், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் வானெஸ்ஸா இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்.

“நுரையிரலில் காற்று தேக்கம் இருப்பதால் ரத்தத்தின் தின்மையைக் குறைக்கும் மருந்துகளை ஆறு மாதங்களாக எடுத்துக் கொள்கிறேன். கீழே விழுந்துவிடாமல் அல்லது காயங்கள் ஏற்பட்டுவிடாமல் கவனமாக இருக்கிறேன். ஏனெனில், எது நடந்தாலும் உள்ளுக்குள் ரத்தக் கசிவை ஏற்படுத்திவிடக் கூடும்”

“இதனால் எனக்கு ஏற்பட்டுள்ள PTSD பிரச்சினை பெரியதாக உள்ளது” என்று அவர் கூறினார்.

“நான் தேறிவிட்டேன். இனிமேலும் எனக்கு ஆபத்து வாய்ப்பு இல்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ள வேண்டியுள்ளது.”

“எனக்கு ஏன் இப்படி நடந்தது என்று உண்மையில் எனக்குத் தெரியாது. ஏனெனில் கல்லூரி புகுமுக வகுப்பு காலத்தில் இருந்தே நான் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தி வருகிறேன். கடந்த ஆண்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வதற்கு முன்னதாக நான் நெக்ஸ்பிளனான் என்ற கருத்தடை சாதனத்தை பொருத்தி இருந்தேன்” என்று அவர் தெரிவித்தார்.

கருத்தரை மாத்திரைகள் எடுத்துக் கொள்வது அல்லது கருத்தடைக்கு வேறு பல வழிமுறைகளைப் பின்பற்றுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இதில் பணம் ஒரு விஷயமாக இருப்பதில்லை.

வானெஸ்ஸா பாஸ்ட்டனில் காண்ட்ராக்ட் அடிப்படையில் வேலை பார்ப்பவர். நிரந்தர வேலை கிடைக்கும் வரையில், சௌகரியத்துக்காக நெக்ஸ்பிளனான் சாதனத்தை பொருத்திக் கொண்டார்.

“மூன்று மாதங்களில் எனக்கு வேலை கிடைக்காது என்றால், கரு உருவாகாமல் தடுக்க, இந்த சிகிச்சை போதும் என கண்டறிந்தேன்” என்று அவர் தெரிவித்தார்.

“சாதனத்தைப் பொருத்திக் கொள்வது நல்ல விஷயம். ஆனால் என் உடல் எடையை அது அதிகரிக்கச் செய்துவிட்டது.”

“இந்த மருந்தால் பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படலாம் அல்லது மரணம்கூட ஏற்படலாம் என்று விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள பகுதிகளை நாம் கவனிப்பதில்லை என்று தோன்றுகிறது.”

“எனக்கு இதெல்லாம் நடக்காது என்று எப்போதும் நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் பாதிப்பு வந்துவிட்டது. என் உலகை அது மாற்றிவிட்டது. இன்னமும் அது பாதித்துக் கொண்டே இருக்கிறது” என்று வானெஸ்ஸா கூறினார்.

ஆணாதிக்க உலகில், பெண்ணாக வாழ்வது என்பது கருத்தடை சிகிச்சை உள்ளிட்ட எல்லா சுமைகளையும் சுமக்க வேண்டிய விஷயமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

“எங்களுக்கு மாதவிலக்குகள் உள்ளன, எப்போதும் வலிகள் உள்ளன, இவற்றை தாங்கிக் கொண்டு நாங்கள் வாழ்கிறோம். ஏனெனில், நாங்கள் ஏதாவது சொன்னால் ஏளனமாகப் பார்க்கிறார்கள். மாதந்தோறும் நடக்கும் விஷயம் என்பதால் எங்களுக்குப் பழகிப் போயிருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.

“பெண்கள் தாங்கிக் கொள்ளும் விஷயங்கள் அனைத்தும் அவர்களின் நன்மைக்கானவையாகத்தான் உள்ளன. இதை எடுத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு ஏற்பட்டால், அது நல்லதாக இருக்க வேண்டும்” என்று வானெஸ்ஸா தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman