அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மின்னல் வேக முதல் உத்தரவுகள் என்னென்ன? பாரிஸ் பருவநிலை, கொரோனா தடுப்பு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மின்னல் வேக முதல் உத்தரவுகள் என்னென்ன? பாரிஸ் பருவநிலை, கொரோனா தடுப்பு

அமெரிக்க அதிபராக புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், முதல் நாளிலேயே மின்னல் வேகத்தில் ஆணைகளில் கையெழுத்திட்டார்.

இதற்குமுன் எந்த அமெரிக்க அதிபரும் பதவியேற்ற முதல் நாளில் கையெழுத்திட்ட ஆணைகளின் எண்ணிக்கையைவிட பைடன் கையெழுத்திட்ட ஆணைகளின் எண்ணிக்கை அதிகம்.

பதவியேற்ற முதல் நாளில் பைடன் கையெழுத்திட்ட நிர்வாக ஆணைகள் 15. அதிபரின் குறிப்புகள் என்று பொருள்படும் பிரசிடென்ஷியல் மெமோக்கள் -2.

பதவியேற்ற முதல் நாளில் டிரம்ப் 8 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஒபாமா 9 உத்தரவுகளில் கையெழுத்திட்டார். ஜார்ஜ் டபிள்யூ புஷ் 2 உத்தரவுகளிலும், கிளிண்டன் 3 உத்தரவுகளிலும் கையெழுத்திட்டனர்.

அதெல்லாம் இருக்கட்டும், அவர் கையெழுத்திட்ட முதல் உத்தரவுகளில் முக்கியமானவை என்ன?

பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா சேருவது தொடர்பாகவும், அமெரிக்க மக்கள் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக் கவசம் அணிவது அவசியம் என்பது தொடர்பாகவும் அவர் உத்தரவுகளைப் பிறப்பித்தார். இவையே அவரது முதல் உத்தரவுகளில் முக்கியமானவை.

டிரம்ப் காலத்தின் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரும் விஷயத்தில் தாம் தாமதம் காட்டப் போவதில்லை என்பதும், கொரோனா உலகத் தொற்று காரணமாக அமெரிக்கா வரலாற்றுச் சிக்கலில் இருக்கும் நிலையில் வேகமாக முடிவெடுக்கவேண்டியதாக புதிய அதிபர் பதவி இருக்கும் என்பதும் இந்த அதிவேக உத்தரவுகள் சொல்லும் சேதிகள்.

அமெரிக்க அரசில் நிர்வாக உத்தரவுகள் எனப்படும் எக்சிகியூட்டிவ் வாங்குதல்கள் என்பதன் பொருள் என்ன?நிர்வாக உத்தரவுகளை ஒரு அதிபர் பிறப்பிக்க முடியும். அவற்றுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறவேண்டியதில்லை.

ஆனால், ஒரு அதிபர் இப்படி பிறப்பித்த உத்தரவு ஒன்றினை நாடாளுமன்றம் விவாதித்து நிராகரிக்க வழி உண்டு.

நாடாளுமன்ற நிராகரிப்பை தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபர் ரத்து செய்யவும் முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman