அமெரிக்க வரலாற்றில் டொனால்டு டிரம்ப் விட்டுச்சென்ற மரபு என்ன?

அமெரிக்க வரலாற்றில் டொனால்டு டிரம்ப் விட்டுச்சென்ற மரபு என்ன?

  • ரீத்து பிரசாத்
  • பிபிசி நியூஸ்

டொனால்டு டிரம்பின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. சரி. ஒருவகையில் அவர் வரலாறு படைத்தவர். அவர் விட்டுச் சென்ற மரபு என்ன?

இதனை சில அமெரிக்க வரலாற்றாய்வாளர்களிடம் கேட்டோம்.

டிரம்ப் விட்டுச் சென்ற முக்கிய மரபு என்ன?

மேத்யூ கான்டினெட்டி

இரண்டு முறை பதவி பறிப்பு வரை சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயரை பெற்றுள்ளார் டிரம்ப்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக பலரை நம்ப வைத்து, தனது ஆதரவாளர்களை வாஷிங்டனுக்கு வரவழைத்து, பலப்பிரயோகத்தின் மூலமாகவே நாட்டை நாம் திரும்பப் பெற முடியும் என்று நினைத்தார். இதனால் ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்றக் கட்டடத்தில் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசியல் அமைப்பு ரீதியாக அரசாங்கத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

வரலாற்றாய்வாளர்கள் டிரம்பின் அதிபர் காலத்தை குறித்து எழுதும் போது, இந்த கவலரத்தின் வாயிலாகவே டிரம்பை அணுகுவார்கள்.

அமெரிக்க வரலாற்றில் டொனால்டு டிரம்ப் டிரம்ப் விட்டுச்சென்ற மரபு என்ன?

முன்னாள் அதிபர்கள் போல டிரம்பும் அமைதியாக பதவியில் இருந்து இறங்கியிருந்தால், பல விஷயங்களை சீர்குலைத்த ஆனாலும், ஜனரஞ்சகத் தலைவராக அவர் நினைவுகூரப்பட்டிருப்பார்.

அமெரிக்கப் பொருளாதாரம் ஏற்றம் கண்டபோது, தலைமை ஏற்ற, சீனா மீதான அமெரிக்க மக்களின் பார்வையை மாற்றிய, தீவிரவாத தலைவர்களை அழித்த, விண்வெளி திட்டத்தை புதுப்பித்த, வார்ப் ஸ்பீட் எனும் திட்டத்தில் குறுகிய காலத்துக்குள் கோவிட் 19 தடுப்பூசி தயாரித்த பெயர் டிரம்பை சாறும்.

(மேத்யூ கான்டினெட்டி, குடியரசுக் கட்சி மற்றும் அமெரிக்க பழமைவாத இயக்கத்தின் மேம்பாடு குறித்து ஆராய்ச்சி செய்து வருபவர்)

‘சர்வதேச தலைமை சரணடைந்த தருணம்’

லாரா பெல்மாண்டே

சர்வதேச தலைமையை விட்டுக்கொடுத்து, அதனை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் டிரம்ப். அது வெற்றியடையவில்லை என்றாலும், அமெரிக்காவிற்கு சர்வதேச அளவில் இருந்த பெயர் எப்படி கெட்டுப் போனது என்று நாம் பார்க்க வேண்டும்.

நான் பார்த்து வாயடைத்துப் போனது, 2018ஆம் ஆண்டு ஹெல்சின்கியில் ரஷ்ய அதிபர் விளாதிபர் புடினுடன் டிரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு தொடர்பாக அமெரிக்க புலனாய்வை விட்டுக் கொடுத்து புடினுக்கு ஆதரவாக நின்றார் டிரம்ப்.

'சர்வதேச தலைமை சரணடைந்த தருணம்'

டிரம்ப் தனது ஆட்சிக்காலத்தில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்தும், இரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகியதும், வரலாற்றில் இடம் பிடிக்கும்.

மற்றொரு பக்கம், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், பிரேசில் தலைவர் சயீர் போல்சனாரோ மற்றும் வட கொரியாவின் கிம் ஜாங் உன் ஆகியோரை சந்தித்தது உண்மையிலேயே தனித்துவம் வாய்ந்தது.

(லாரா பால்மாண்டே வர்ஜினியா டெக் கல்லூரியில் வரலாற்று பேராசிரியராக உள்ளார். வெளிநாட்டு உறவுகள் குறித்த நிபுணராக இருப்பதோடு, அது சார்ந்த சில புத்தகங்களையும் எழுதி உள்ளார்.)

‘2020 தேர்தலில் போட்டியிட்டது’

மார்கரெட் ஓ’ மாரா

அரசியல் அமைப்பு ரீதியாகவும், எண்ணிக்கை ரீதியாகவும் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார் என்று தெரிந்தும், அதனை எதிர்த்தார் டிரம்ப்.

அமெரிக்க வரலாற்றில் பல பதவி மாற்றங்கள் மனக்கசப்போடு நிகழ்ந்துள்ளன.

ஹாபர்ட் ஹூவர் தான் தோல்வியடைந்ததில் மிகுந்த வருத்தத்தோடு காணப்பட்டார். எனினும், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அடுத்த அதிபராக பதவியேற்றபோது, அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் ஒருமுறை கூட ஹூவர், ரூஸ்வெல்டிடம் பேசவில்லை. எனினும் அந்த பதவி மாற்றம் அமைதியாக நடந்தது.

'2020 தேர்தலில் போட்டியிட்டது'

பல விஷயங்களில் டிரம்ப் தனித்துவம் வாய்ந்தவர். ஆனால், இதுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த பதவியிலும் இல்லாது நேரடியாக அதிபரான அரிதான ஒரு சில பேரில் டிரம்பும் ஒருவர்.

ஒரு கட்டத்தில் டிரம்பின் நிர்வாகம் அவரது ஆதரவாளர்களால் நிறைந்ததோடு, அனுபவம் இல்லாத, கொள்கையில் பிடிப்பில்லாத நபர்களால் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாமல் போனது. இந்த நிர்வாக செயல்பாடுகள் மீண்டு வர நிச்சயம் சில காலம் பிடிக்கும்.

(மார்கரெட் ஓ மாரா, நவீன அமெரிக்காவின் அரசியல், பொருளாதார மற்றும் பெருநகர வரலாற்றில் கவனம் செலுத்துபவர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராகவும் உள்ளார்.)

‘ஜனநாயகத்தை சோதித்த அதிபர்’

கேத்ரின் ப்ரௌனெல்

டொனால்டு டிரம்பும், அவரது ஆதரவாளர்களும், பழமைவாத ஊடகத்தினரும் கடந்த நான்கு ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஜனநாயகத்தை சோத்தித்து விட்டனர் என்றே கூற வேண்டும்.

வரலாற்று ஆய்வாளராக, பல ஆண்டுகளாக அதிபர் பதவி மற்றும் ஊடகங்கள் குறித்து ஆய்வு செய்துவருகிறேன். ஆனால் டிரம்ப் காலத்தில் ஜோடிக்கப்பட்ட நிகழ்வுகளை உண்மை என்று சில ஊடகங்கள் மக்களை நம்ப வைத்தது வியப்பூட்டுவதாக இருந்தது.

டிரம்ப், கடந்த 4 ஆண்டுகளாக பல தவறான தகவல்களை கூறி வந்ததன் வெளிப்பாடு தான் ஜனவரி ஆறாம் தேதி நிகழ்ந்தேறிய நாடாளுமன்ற (கேபிடல்) கட்டட வன்முறை சம்பவம்.

'ஜனநாயகத்தை சோதித்த அதிபர்'

வாட்டர்கேட் ஊழல் மற்றும் பதவி பறிப்பு விசாரணை ஆகியவற்றை வைத்து எவ்வாறு அதிபர் ரிச்சர்ட் நிக்சனை வரலாறு நினைவு கூர்கிறதோ, அதே போல கேபிடல் வன்முறை சம்பவத்தை வைத்து டிரம்பை நினைவு கூர்வார்கள்.

டிரம்ப் தனது சமூக ஊடகங்களை பயன்படுத்திய விதத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அரசியலுக்கும், பொழுதுபோக்குக்கும் இருக்கும் இடைவெளியை குறைத்து, தனது விமர்சகர்களை தாண்டி, தனது ஆதரவாளர்களை சமூக ஊடகங்கள் வழியாக நேரடியாக தொடர்பு கொண்டார் டிரம்ப்.

பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஜான் எஃப் கென்னடி, மற்றும் ரொனால்டு ரீகன் போன்ற அதிபர்களும், நவீன ஊடக முறையை பயன்படுத்தி, தனது ஆதரவாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள். ஆனால், டிரம்ப் அணுகுமுறையின் விளைவு வேறாக இருந்தது.

(கேத்ரின் ப்ரௌனெல், அமெரிக்க அதிபர் பதவி சார்ந்து ஊடகம், அரசியல் மற்றும் கலாசாரத்திற்கான உறவில் கவனம் செலுத்தும், பர்ட்யூ பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராக உள்ளார்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

Author Image
Nila Raghuraman