கொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்? – கோவேக்ஸ் திட்டம்

கொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்? – கோவேக்ஸ் திட்டம்

கொரோனா தடுப்பூசி அதிவிரைவாக கண்டுபிடிக்கப்பட்டது எல்லாம் அறிவியல் வளர்ச்சியின் உச்சம்.

ஆனால் கொரோனா தடுப்பு மருந்துகளை பணக்கார நாடுகள் பதுக்கி வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பிருப்பதாக ஒரு பயம் நிலவுகிறது. அதற்கு ஏழை நாடுகள் விலை கொடுக்க வேண்டி இருக்கும்.

இந்த பிரச்சனையைத் தீர்க்கும் விதத்தில் ‘கோவேக்ஸ்’ (covax) என்றழைக்கப்படும் ஒரு சர்வதேசத் திட்டம் இருக்கிறது. ஏழை பணக்கார பாகுபாடுகளின்றி, எல்லா நாடுகளுக்கும் நியாயமாக கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

கோவேக்ஸ் திட்டம் என்றால் என்ன?

இந்த கோவேக்ஸ் திட்டம் கடந்த ஏப்ரல் 2020-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை உலக சுகாதார அமைப்பு மற்றும் இரண்டு தடுப்பூசி ஆதரவுக் குழுக்கள் (Gavi, The Vaccine Alliance மற்றும் Coalition for Epidemic Preparedness Innovations) முன்னெடுத்து நடத்தி வருகின்றன.

கோவேக்ஸ்

இவ்வமைப்பு கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை மேம்படுத்துவது, வாங்குவது, 180-க்கு மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசியை விநியோகிப்பது போன்ற பணிகளைச் செய்து வருகிறது.

“49 பணக்கார நாடுகளில் 3.9 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் ஒரு ஏழை நாட்டில் வெறும் 25 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டிருக்கின்றன” என உலக அளவில் நிலவும் சமத்துவமின்மையைக் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசஸ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது?

வரும் பிப்ரவரி 2020 முதல் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் இதில் பெரும்பகுதி மருந்தைப் பெறுவார்கள்.

இந்த 2021-ம் ஆண்டின் இறுதிக்குள், உலக நாடுகளுக்கு 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படும் என நம்புகிறது கோவேக்ஸ்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த 200 கோடி டோஸ் மருந்தில், சுமாராக 130 கோடி டோஸ் மருந்து, கோவேக்ஸ் திட்டத்தில் இணைந்திருக்கும் 92 ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும். இதனால் அந்த 92 நாடுகளில் வாழும் மக்களில் 20 சதவீதத்தினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியும்.

இதெல்லாம் ஒரு பக்கமிருக்க, கோவேக்ஸ் திட்டம் விரைவாகச் செயல்படவில்லை என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது.

“கோவேக்ஸ் திட்டம் கொரோனா தடுப்பு மருந்துகளைப் பெறுவதிலும், அதை நாடுகளுக்கு விநியோகிப்பதிலும் வேகமாகச் செயல்படவில்லை” என உலக சுகாதார அமைப்பில் உறுப்பினராக இருக்கும் ஆஸ்ட்ரியா நாட்டின் மருத்துவர் க்ளெமென்ஸ் மார்டின் ஆர் விமர்சித்திருக்கிறார்.

கோவேக்ஸ்

கோவேக்ஸ் கொரோனா பெரும்தொற்றை ஒரு முடிவுக்குக் கொண்டு வர உதவுமா?

கொரோனா தொற்றை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால் உலகின் 70 சதவீத மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஆண்டுக்கு 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து என்றால், 780 கோடி மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி வழங்க ஆண்டுக் கணக்கில் கால அவகாசம் தேவை.

இருப்பினும் 200 கோடி டோஸ் தடுப்பு மருந்து என்பது சுகாதாரப் பணியாளர்கள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக இருக்கும்.

எந்த நாடு எவ்வளவு நன்கொடை வழங்கியிருக்கிறது?

பிரிட்டன் அரசு 734 மில்லியன் டாலரை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறது. இருப்பதிலேயே அதிகம் நன்கொடை கொடுத்த நாடு என்கிற பெயரையும் பெற்றிருக்கிறது.

ரஷ்யா மற்றும் அமெரிக்கா இதுவரை எந்த நன்கொடையையும் வழங்கவில்லை. அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகம் நன்கொடை வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

கோவேக்ஸ் திட்டத்திலிருக்கும் அமெரிக்கா போன்ற சில பணக்கார நாடுகள், தங்களின் சொந்த பயன்பாட்டுக்காக கொரோனா தடுப்பூசியைப் பதுக்குவதாகக் குற்றச்சாட்டப்படுகின்றன.

கோவேக்ஸ்

2021 ஜனவரி மத்தி வரையிலான காலத்தில், உலகின் 60 சதவீத தடுப்பூசி விநியோகத்தை, உலகில் வெறும் 16 சதவீதம் மக்கள் தொகை கொண்ட பணக்கார நாடுகள் வாங்கி இருப்பதாக டியூக் பல்கலைக்கழகத்தின் குளோபல் ஹெல்த் இன்ஸ்டிட்யூட் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மற்ற நாடுகளுக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட ஏழை நாடுகளுக்கு கோவேக்ஸ் திட்டம் மட்டுமே கொரோனா பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி.

இதுவரை, கோவேக்ஸ் திட்டம் 2.4 பில்லியன் அமெரிக்க டாலரைத் திரட்டியுள்ளது. ஆனால் 2021-ம் ஆண்டில் தன் இழக்கை அடைய குறைந்தபட்சமாக 4.6 பில்லியன் டாலர் கூடுதலாகத் தேவை எனக் கூறியுள்ளது கோவேக்ஸ் திட்டம்.

கோவேக்ஸ் மேற்கொண்ட தடுப்பூசி ஒப்பந்தங்கள் என்ன?

ஃபைசர் பயோ என் டெக் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு – ஆஸ்ட்ராசெனீகா, வேறு சில அனுமதி வழங்கப்படாத கொரோனா தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ள சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதாகக் கோவேக்ஸ் கூறுகிறது.

ஃபைசர் பயோஎன் டெக் நிறுவனத்தின் 40 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ளும் ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது.

இந்த நிறுவனத்தின் தடுப்பு மருந்து உலக சுகாதார அமைப்பின் நெறிமுறையாளர்களால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

கோவேக்ஸ்

ஏன் கோவேக்ஸ் அவசியம்?

இந்தக் கொரோனா பெரும்தொற்று பலரின் வாழ்வாதாரத்தை அழித்திருக்கிறது, நாடுகளை முழுமையாக முடக்கியிருக்கிறது, சுமாராக 21 லட்சம் பேர் இந்த நோயால் இறந்திருக்கிறார்கள்.

உலக மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் கொரோனாவுக்கு எதிராக பாதுகாக்கப்படாமல், மீண்டும் வாழ்கை பழைய நிலைக்கு வருவது சிரமமே.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் மட்டுமே தீர்வு என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். ஆனால் தடுப்பூசிகள் மற்ற நாடுகளோடும் பகிரப்பட வேண்டும். அப்போது தான் கொரோனா பெரும்தொற்றை ஒரு முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

Author Image
Nila Raghuraman