மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு: இப்போது ஏன் நடந்தது – அடுத்து என்ன நடக்கும்?

மியான்மரில் ஆட்சிக் கவிழ்ப்பு: இப்போது ஏன் நடந்தது – அடுத்து என்ன நடக்கும்?

  • ஃப்ளோரா ட்ரூரி
  • பிபிசி

நாட்டின் நிர்வாகப் பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டு ஒரு தசாப்தம் கழித்து இது மீண்டும் நடந்திருக்கிறது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை நாட்டில் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. 2011-ல் ஜனநாயக ஆட்சி அமைவதற்கு முன்பு, சுமார் 50 ஆண்டு காலம் ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியை சந்தித்த நாடு மியான்மர். அதிகாலை நேரத்தில் ஆங் சான் சூச்சி மற்றும் பிற அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பாணி, தாங்கள் மறந்துவிட்ட அதே ராணுவ பாணியை நினைவுபடுத்துவதாக அந்த மக்களுக்கு இருந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, சூச்சி மற்றும் ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டிருந்த அவருடைய ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி (என்.எல்.டி.) ஆட்சி நடத்தி வந்தது. 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுதந்திரமாக, நேர்மையாக 2015ல் நடந்த தேர்தலில் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது. திங்கள்கிழமை காலையில், அந்தக் கட்சியின் இரண்டாவது பதவிக் காலம் தொடங்கி இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் கால்வாசி இடங்கள் ராணுவத்தின் வசம் இருக்கும் வகையிலும், மிக முக்கியமான அமைச்சகங்கள் ராணுவத்தின் வசம் இருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் காரணமாக, மியான்மர் நிர்வாகத்தில் ராணுவம் தான் திரைமறைவில் கட்டுப்பாட்டை செலுத்தி வந்தது.

இந்த நிலையில், இப்போது ஏன் ஆட்சிக் கவிழ்ப்பு செய்யப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. மிக முக்கியமாக, அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

`டிரம்ப் மாதிரியான’ மோசடி புகார்கள்

பிபிசியின் தென்கிழக்கு ஆசிய செய்தியாளர் ஜோனாதன் ஹெட், இதுகுறித்து தெளிவாக விளக்குகிறார். நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் திங்கள்கிழமை காலையில் தொடங்கி இருக்க வேண்டும். தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதாக அது அமைந்திருக்கும். இப்போது அது நடக்காது.

கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில், பதிவானவற்றில் 80 சதவீத வாக்குகள் என்.எல்.டி. கட்சிக்கு கிடைத்தன. தங்கள் நாட்டின் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு புகார்கள் இருந்தாலும், அந்தக் கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்தன.

யாங்கூன் நகரில் சிட்டி ஹால் உள்ளே ராணுவ வீரர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர்.

தேர்தல் முடிந்த உடனேயே, தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராணுவத்தின் ஆதரவைப் பெற்ற எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியது. புதிதாக பதவியேற்ற தற்காலிக தலைவர் கையெழுத்திட்ட அறிக்கையிலும் இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. ஓராண்டு கால நெருக்கடி நிலை பிரகடனம் சரியானது என்று நியாயப்படுத்தும் வகையில் இந்த அறிக்கை உள்ளது.

“பல கட்சிகள் பங்கேற்புடன் 2020 நவம்பர் 8 ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் பெருமளவு நடந்த முறைகேடுகளை களைய தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” என்று துணை அதிபராக இருந்த முன்னாள் ராணுவ ஜெனரல் மியின்ட் ஸ்வே கூறியுள்ளார்.

ஆனால் அந்தப் புகாரை நிரூபிக்க சிறிதளவே ஆதாரங்கள் உள்ளன.

“வெளிப்படையாகக் கூறினால், ஆங் சான் சூச்சி பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறார்” என்று ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் துணை இயக்குநர் பில் ராபர்ட்சன் கூறியுள்ளார். “வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாகப் புகார்கள் கூறப்படுகின்றன. இது டிரம்ப் புகார்களைப் போல உள்ளது – எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்தப் புகார்கள் கூறப்படுகின்றன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும், ஆட்சியை ராணுவம் கைப்பற்றியிருப்பதற்கு “விளக்கம் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று ராபர்ட்சன் கூறியுள்ளார்.

“வாக்காளர்கள் ஆதரவு கிடைப்பது, ஆட்சியை இழப்பதாக அர்த்தமா? அப்படியில்லை என்பதே இதற்கான பதில்” என்கிறார் அவர்.

`தேசத்தின் தந்தைக்கு’ தர்மசங்கடம் ஏற்படுத்துவது

ராணுவத்தின் ஆதரவைப் பெற்ற யு.எஸ்.டி.பி. கட்சிக்கு தேர்தலில் சிறிதளவு மட்டுமே வாக்குகள் கிடைத்திருக்கலாம். ஆனால், ராணுவ ஆட்சியில் 2008ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய வகையில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின்படி, அரசு நிர்வாகத்தில் ராணுவத்துக்கு இன்னமும் பெரிய கட்டுப்பாடு இருக்கிறது.

தானாகவே நாடாளுமன்றத்தில் 25 சதவீத இடங்கள் ராணுவத்துக்கு அளிக்க அரசியல்சாசனம் வகை செய்கிறது. அதுமட்டுமின்றி, உள்துறை, ராணுவம் மற்றும் எல்லை விவகாரங்கள் என்ற மூன்று முக்கிய அமைச்சகங்களும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

எனவே, இந்த அரசியல்சாசனம் அமலில் உள்ள காலம் வரையில், ராணுவத்துக்கு ஓரளவுக்கு கட்டுப்பாட்டு அதிகாரம் உள்ளது. ஆனால் தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி அரசியல்சாசனத்தை என்.எல்.டி. திருத்தியிருக்க முடியுமா?

ராணுவ நடவடிக்கைக்கு எதிராக ஜப்பானில் உள்ள மியான்மர் குடிமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு வாய்ப்பில்லை என்று ஜோனாதன் ஹெட் கூறுகிறார். நாடாளுமன்றத்தில் 75 சதவீத ஆதரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் – ராணுவத்துக்கு 25 சதவீத இடங்கள் இருப்பதால், அது ஏறத்தாழ சாத்தியமற்றது என்று அவர் தெரிவித்தார்.

ராணுவத்திற்கு ஏற்பட்ட தர்மசங்கடமான சூழ்நிலைதான் இந்த திடீர் நடவடிக்கைக்கு காரணமாக இருந்திருக்கும் என்று முன்னாள் பத்திரிகையாளரும், தொழில்நுணுக்க கல்வியாளருமான அயே மின் தான்ட் தெரிவித்தார்.

யாங்கூனில் இருந்து பிபிசி உடன் பேசிய அவர், “ராணுவம் இந்த அளவுக்குத் தோல்வி அடையும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ராணுவத்தில் உள்ளவர்களின் குடும்பத்தினரே அவர்களுக்கு எதிராக வாக்களித்திருப்பார்கள்” என்று அவர் கூறினார்.

அதைவிட அதிகமாகவும் நடந்திருக்கும் தான்.

“நாட்டின் நிலைமையை ராணுவம் எப்படி பார்க்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அயே மின் தான்ட் கூறுகிறார். “ஆங் சான் சூச்சி யை `அன்னை’ என்று குறிப்பிடுவது சர்வதேச ஊடகத்தினருக்கு பழகிப் போன விஷயம். ராணுவம் தன்னை `தேசத்தின் தந்தை’ என்று கருதிக் கொண்டிருக்கிறது” என்றும் அவர் கூறினார்.

அதன் விளைவாக, ஆட்சி செய்வது என்ற கேள்வி வரும்போது, “கடமை மற்றும் உரிமை” என்ற உணர்வாக ராணுவம் பார்க்கிறது. சர்வதேச வர்த்தகத்தில் மியான்மர் திறந்த நிலையுடன் அணுகுவது ராணுவத்திற்குப் பிடித்திருக்காது.

“வெளியில் இருந்து வருபவர்களை ஆபத்தானவர்கள் என்ற ரீதியில் ராணுவம் பார்க்கிறது” என்று அயே மின் தான்ட் கூறுகிறார்.

பெருந்தொற்று மற்றும் ரோஹிங்யா மக்களுக்கு வாக்குரிமை மறுப்பு குறித்த சர்வதேச அளவிலான கவலை ஆகியவை காரணமாக, ராணுவம் இப்போது செயல்பட தைரியம் கிடைத்திருக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். இவையெல்லாம் இருந்தாலும் இதை ஆச்சர்யத்துடன் தான் பார்க்க வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

எதிர்காலம் எப்படியானதாக இருக்கும்?

ராணுவத்திற்கு சிறிதளவே ஆதாயம் கிடைக்கும் என்ற நிலையில், ராணுவம் இப்போது ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர்.

“இப்போதுள்ள அமைப்பு முறை ராணுவத்துக்குப் பெருமளவு பயன் தருவதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தன்னாட்சி விஷயத்தில் ராணுவத்தின் முழு கட்டுப்பாடு இருக்கிறது. வணிக நலன்களில் சர்வதேச முதலீடுகளில் கணிசமான கட்டுப்பாடு வைத்துள்ளது. போர்க் குற்றங்களில் மக்கள் நிர்வாகத்திடம் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான அம்சங்கள் உள்ளன” என்று சிங்கப்பூரில் உள்ள ஆசிய ஆராய்ச்சி நிலையத்தின் தேசிய பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் ஜெரார்டு மெக்கர்த்தி பிபிசியிடம் கூறினார்.

“இப்போது அறிவித்துள்ளபடி, ஓராண்டு காலத்துக்கு அதிகாரத்தைப் பறித்துக் கொள்வதால், சீனா அல்லாத சர்வதேச பங்காளர்கள், ராணுவத்தின் வணிக நலன்களுக்கு ஊறு ஏற்படுத்தி, சூச்சி மற்றும் என்.எல்.டி. கட்சியை இன்னொரு பதவிக்காலத்துக்கு ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல மில்லியன் மக்களின் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்வதாக இருக்கும்” என்கிறார் அவர்.

எதிர்காலத்தில் வரக் கூடிய தேர்தல்களில் யு.எஸ்.டி.பி. கட்சிக்கு அதிக ஆதரவு கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புவதாக இருக்கலாம். ஆனால் அதுபோன்ற எதிர்பார்ப்புகள் “குறிப்பிடத்தக்கதாக” இருக்குமா என அவர் சந்தேகம் தெரிவித்தார்.

இப்போதைய நடவடிக்கையால் சர்வதேச அளவில் “தனிமைப்படுத்தப்பட்ட நாடாக” மியான்மர் மாறும் ஆபத்து மீண்டும் ஏற்பட்டுள்ளது, தாயகத்தில் மக்களின் கோபத்தையும் ராணுவம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பில் ராபர்ட்சன் கூறியுள்ளார்.

“மியான்மர் மக்கள் இதை மௌனமாக ஏற்றுக் கொள்வார்கள் என எனக்குத் தோன்றவில்லை. மீண்டும் ராணுவ ஆட்சிக்குச் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. ராணுவத்தின் பலத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றும் அரணாக சூச்சியை மக்கள் பார்க்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். ஆனால், “பெரிய போராட்டங்கள் தொடங்கினால், பெரிய நெருக்கடிகளும் ஏற்படும்” என்றும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman