ஜெஃப் பெசோஸ்: அமேசான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறார்

ஜெஃப் பெசோஸ்: அமேசான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறார்

தனது வாடகை வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி இப்போது உலகின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமாக அமேசானை வளர்த்தெடுத்துள்ள அதன் தலைமை செயலதிகாரியான ஜெஃப் பெசோஸ் அந்த பதவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அமேசானின் நிர்வாக தலைவராக பொறுப்பேற்க உள்ள அவர், இந்த மாற்றம் தனது மற்ற நிறுவனங்களின் மீது கவனம் செலுத்த தேவையான, “நேரத்தையும் ஆற்றலையும்” அளிக்குமென நம்புகிறார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ் விலகும் பதவியை அமேசானின் மேகக்கணினியக வணிகத்தை வழிநடத்தி வரும் ஆண்டி ஜாஸ்ஸி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த மாற்றங்கள் நடைபெறுமென அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அமேசானின் தலைமை செயலதிகாரியாக இருப்பது முக்கிய பொறுப்பு. இதுபோன்ற பொறுப்புகளில் இருக்கும்போது மற்ற விடயங்களில் கவனம் செலுத்துவது என்பது மிகவும் கடினமானது” என்று பெசோஸ் தெரிவித்துள்ளார்.

“அமேசானின் நிர்வாக தலைவராக, நிறுவனத்தின் முக்கிய முன்னெடுப்புகளில் நான் தொடர்ந்து இணைந்திருப்பேன். அதே சூழ்நிலையில், எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ள டே 1 பண்ட், பெசோஸ் எர்த் பண்ட், ப்ளூ ஆரிஜின், தி வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவதற்கான நேரம் கிடைக்கும்.”

“இதுவரை இவ்வளவு ஆற்றல் இருந்ததாக உணர்ந்ததில்லை. மேலும், இது ஓய்வுபெறுவது குறித்தானது அல்ல. இந்த நிறுவனங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து நான் மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சவாலான வாழ்க்கைப் பயணம்

அமேசான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ்

1994ஆம் ஆண்டில் ஒரு சிறு இணைய புத்தக கடையாக தொடங்கப்பட்டது முதல் இப்போது வரை அமேசான் நிறுவனத்தை ஜெஃப் பெசோஸ் வழிநடத்தி வருகிறார். அவருக்கு வயது 57.

உலகின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமாக மட்டுமின்றி, இணையம் சார்ந்த பல்வேறு தொழில்நுட்ப, காணொளி மற்றும் விநியோக சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் அமேசானை வளர்த்தெடுத்துள்ள இவரது சொத்து மதிப்பு 196.2 பில்லியன் டாலர்கள் என்று ஃபோர்ப்ஸ் இதழின் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்று பரவத் தொடங்கியது முதல் இணையம் வழியே பொருட்கள் வாங்குவது அதிகரித்ததால் அமேசானின் வருவாய் புதிய உச்சங்களை தொட்டுள்ளது.

அதாவது, 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு அமேசானில் 386 பில்லியன் டாலர்களுக்கு, அதாவது 38 சதவீதம் வர்த்தகம் அதிகரித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் கிட்டதட்ட இரண்டு மடங்காக அதிகரித்து 21.3 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

அமேசான் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ்

இந்த நிலையில், இனி வரும் காலங்களிலும் அமேசான் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள் மற்றும் முன்னெடுப்புகளில் தான் தொடர்ந்து கவனம் செலுத்துவேன் என்று அவர் ஊழியர்களிடம் உறுதியளித்துள்ளார்.

“நமது நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள், ஒரு கண்டுபிடிப்பின் நீண்டகால முடிவுகளை பிரதிபலிக்கின்றன. மேலும், இப்போது நான் அமேசானை அதன் மிக புதுமையான நிலையில் காண்கிறேன். இதுவே இந்த மாற்றத்திற்கான உகந்த நேரமாக அமைகிறது.”

சமீபகாலத்தில் விவாகரத்து, தொழிலாளர் நல ஆர்வலர்ளின் கோபத்துக்கு ஆளானது, தனது பணத்தை புதிய தொழில்களில் முதலீடு செய்ய நேரிட்டது என பெசோஸ் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில்முறையாகவும் பல சவால்களை சந்தித்த பின் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman