கதீஜா – இஸ்லாம் பிறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த பெண்

கதீஜா – இஸ்லாம் பிறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த பெண்

  • மார்கரிட்டா ரோட்ரிகஸ்
  • பிபிசி முண்டோ சேவை

`”அவர் பல தடைகளை தகர்த்தெறிந்தவர். இன்றைய நவீன உலக பெண்கள் கூட 1400 வருடங்களுக்கு முன் அவர் செய்த தனையை போல தாங்களும் சாதிக்க வேண்டும் என்று விரும்புவர்.”

தற்போதுள்ள சௌதி அரேபியாவில் 6 ஆம் நூற்றாண்டில் பிறந்த கதீஜா பற்றி, பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள இஸ்லாமிய தலைவர் ஆசாத் ஜமன் இப்படித்தான் கூறுகிறார்.

அந்தப் பெண்மணி மரியாதைக்கு உரியவராக, பண வசதி மிக்கவராக, அதிகாரம் மிக்கவராக, பிரபலமான பெரிய மனிதர்களிடம் இருந்து வந்த திருமண அழைப்புகளை நிராகரித்தவராக இருந்துள்ளார்.

கடைசியில், அவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். அவருடைய முதலாவது கணவர் மரணம் அடைந்துவிட்டார். இரண்டாவது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ அவர் முடிவு செய்தார் என்று நம்பப்படுகிறது.

அதன் பிறகு இனிமேல் திருமணம் செய்து கொள்வதில்லை என அவர் உறுதி எடுத்துக் கொண்டார். மூன்றாவது மற்றும் கடைசி கணவரை சந்திக்கும் வரை அந்த உறுதி நீடித்தது.

“அவரிடம் சில அற்புதமான குணங்களைக் கண்டதால் திருமணம் குறித்த தனது உறுதியை கதீஜா மாற்றிக் கொண்டார்” என்று பிபிசியிடம் ஜமன் தெரிவித்தார்.

அந்த காலக்கட்டத்தில் இல்லாத வழக்கமாக, கதீஜாவே அந்த ஆணிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அப்போது அவருக்கு வயது 40. மூன்றாவது கணவராக வர இருந்தவருக்கு வயது 25. அவர் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தார்.

இது காதலுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது; உலகில் இரண்டாவது மிகப் பெரிய மதத்தின் தொடக்கமாக அது இருந்துள்ளது.

வணிகர்

ஒட்டகம்

கதீஜாவை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வது சிரமமான விஷயம்; ஏனெனில் அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து தான் அவரைப் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பழங்கால மத்திய கிழக்கு நாடுகளின் வரலாறு துறை பேராசிரியராக இருக்கும் ராபர்ட் ஹாய்லேண்ட் கூறுகிறார்.

இருந்தபோதிலும், “சுதந்திர எண்ணம் கொண்ட உறுதியான மனம் கொண்ட” பெண்ணாக அவர் இருந்திருக்கிறார் என்பதற்கான தகவல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்று பிபிசியிடம் ஹாய்லேண்ட் தெரிவித்தார்.

உதாரணமாக, தன் உறவினரை மணக்க அவர் மறுத்துவிட்டார். குடும்ப வழக்கத்தின்படி அவரை திருமணம் செய்ய குடும்பத்தார் கூறியதை அவர் ஏற்கவில்லை. தன் கணவரை தாமே தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கதீஜா விரும்பியதே அதற்குக் காரணம்.

வணிகத்தில் ஈடுபட்டிருந்த கதீஜாவின் தந்தை, குடும்ப வணிகத்தையே தனது வணிக சாம்ராஜ்யமாக உருவாக்கி வைத்திருந்தார். போரில் அவர் இறந்ததை அடுத்து, பொறுப்புகளை கதீஜா ஏற்றுக் கொண்டார்.

“உலகில் தனக்கான பாதையை வகுத்துக் கொண்டவராக கதீஜா இருந்துள்ளார்” என்று வரலாற்றாளரும், புத்தக ஆசிரியருமான பெட்டனி ஹியூக்ஸ் பிபிசி ஆவணப்படத்தில் கூறியுள்ளார்.

“வியாபாரத்தில் அவர் காட்டிய ஆர்வம் தான், உலகின் வரலாற்றையே மாற்றி அமைந்துள்ளது என்பது தான் உண்மை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உதவியாளர்

பெட்டனி ஹியூக்ஸ்

மெக்காவில் (செளதி அரேபியா)இருந்து செயல்பட்ட கதீஜாவுக்கு, மத்திய கிழக்கு நாடுகளில் சரக்குகளை கொண்டு செல்வதற்கு பல வண்டிகள் தேவைப்பட்டன.

“உலகில் தனக்கான பாதையை உருவாக்குவது என்பதில் கதீஜா தெளிவாக இருந்துள்ளார்” என்று பெட்டனி ஹியூக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு ஏமன் முதல் வடக்கு சிரியா வரையில் பல தொலைதூரப் பகுதிகளை இவருடைய வண்டிகள் சென்று வந்தன.

இவருடைய சொத்துகளின் ஒரு பகுதி, குடும்பத்தின் மூலமாக வந்தது என்றாலும், கதீஜாவும் தன் பங்கிற்கு நிறைய சம்பாதித்துள்ளார் என்று லண்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வரலாற்றுத் துறை துணை பேராசிரியர் போஜியா போரா தெரிவித்துள்ளார்.

“தன்னுடைய பாணியில் செயல்படும் பெண் வணிகராக அவர் இருந்துள்ளார். அதில் அபார நம்பிக்கை கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.”

தனது வணிகத்துக்குத் தேவையான ஆட்களை அவரே தேர்வு செய்திருக்கிறார். குறிப்பிட்ட திறமைகள் கொண்டவர்களை மட்டுமே தேர்வு செய்திருக்கிறார்.

ஒருவர் மிகவும் நேர்மையானவர், கடும் உழைப்பாளி என அவர் கேள்விப்பட்டு, அவருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததை அடுத்து, தனது ஒரு வண்டியை கையாளும் பொறுப்பை அளித்துள்ளார்.

அந்த நபரின் விடா முயற்சி கதீஜாவுக்குப் பிடித்துப் போனது. இப்படியே சில காலம் சென்றது. அவருடைய செயல்பாடுகளில் நாட்டம் அதிகரித்ததை அடுத்து, மீண்டும் திருமணம் செய்து கொள்ள கதீஜா முடிவு செய்தார்.

பெற்றோரை இழந்த நிலையில் மாமாவால் வளர்க்கப்பட்ட முகமது என்ற அவருக்கு திடீரென “பொருளாதார வளம் மற்றும் உறுதியான வாழ்க்கைச் சூழல் அமைந்தது” என்று லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வரலாற்றுத் துறை துணை பேராசிரியர்போஜியா போரா கூறுகிறார்.

அந்தத் தம்பதியினருக்கு 4 குழந்தைகள் பிறந்தனர். பெண் குழந்தைகள் மட்டுமே வளர்ந்து பெரியவர்களாகும் வரை வாழ்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் சேர்ந்ததில் பிரத்யேகமான ஒரு விஷயம் இருக்கிறது: “இது ஒருவனுக்கு ஒருத்தி என்ற வகையிலான திருமணமாக இருந்தது” என்று லண்டனில் உள்ள முஸ்லிம் இன்ஸ்டிடியூட்டில் பேராசிரியராக இருக்கும் ரனியா ஹபஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

“சமூகவியல் அம்சத்தில், பல மனைவிகளை வைத்திருந்த ஆண்கள் வாழ்ந்த காலமாக, பல தார சமூகமாக இருந்த காலத்தில்” இது வித்தியாசமான அம்சமாக இருந்தது.

முதலில் தெரிந்த தகவல்கள்

மெக்கா

குவாரய்ஷ் மலைவாழ் இனத்தில் (கதீஜாவும் இதே இனம்) பிறந்த முகமது, பல கடவுள்கள் வணங்கப்படும் காலத்தில் வாழ்ந்தவர்.

திருமணம் ஆகி சில ஆண்டுகளில், முகமதுவிடம் ஆன்மிக ரீதியில் மாற்றம் ஏற்பட்டது. தியானம் செய்வதற்காக மெக்கா பகுதியில் உள்ள மலைகளுக்குச் சென்றார்.

உன் வயிற்றில் ஏசு பிறப்பார் என மேரியிடம் அறிவித்த இறைதூதர் கேப்ரியல் மூலமாக முகமதுவுக்கும் இறைவனின் போதனைகள் கிடைத்தன என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர்.

அப்படிதான் முஸ்லிம்களின் புனித நூலான குரான், முகமதுவிடம் சொல்லப்பட்டிருக்கிறது.

குரான்

முதலில் அவருக்குப் போதனைகள் கிடைத்தபோது, என்ன நடக்கிறது என்பது புரியாத காரணத்தால், முகமது பயந்து போனார்.

“தன் அனுபவங்களுக்கு அவரால் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏக இறைவன் என்ற புரிதலில் அவர் வளர்க்கப்படவில்லை என்பதால், போதனைகளை அவரால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை” என்று போஜியா போரா தெரிவித்துள்ளார்.

“அந்த நிகழ்வால் அவர் அதிக குழப்பம் அடைந்து, களைப்பாக உணர்ந்தார். அந்த அனுபவம் மென்மையானதாக இருந்தாலும், போதனைகள் எளிமையானவையாக இருக்கவில்லை, உடல் ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்துபவையாக இருந்தன என தகவல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன” என்று அவர் குறிப்பிட்டார்.

“தாம் கூறுவதை முழுமையாக நம்பக் கூடிய ஒரே நபரான மனைவியிடம் சொல்ல” முகமது முடிவு செய்தார் என்று பேராசிரியர் ஹாய்லேண்ட் கூறியுள்ளார்.

பொறுமையாக இவற்றைக் கேட்ட கதீஜா, அவரை அமைதிப்படுத்தினார். இது நல்லதற்கான விஷயம் என்று கதீஜாவின் உள்ளுணர்வு கூறியது. கணவரை ஆறுதல்படுத்தினார்.

கிறிஸ்துவத்தில் அதிக விஷயங்களை அறிந்திருந்த ஒரு உறவினரிடம் கதீஜா ஆலோசனை பெற்றுள்ளார்.

முகமதுவுக்கு கிடைத்த போதனைகள், மோசஸிற்கு கிடைத்ததைப் போன்றவை என்று வாராகுவா இபின் நாவ்ஃபல் என்பவர் விளக்கியதாக நம்பப்படுகிறது.

“முந்தைய கால விஷயங்களைப் படித்தவர் என்பதால், முகமதுவுக்கு கிடைத்த போதனைகளை உறுதிப்படுத்தும் நம்பகமானவராக இருந்திருக்கிறார்” என்று போரா விளக்கினார்.

“குரான் என்ற வகையில் தெரிவிக்கப்பட்ட விஷயங்களை செயல்படுத்திப் பார்த்தபோது, தன் மீதே முகமதுவுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் இறைதூதர் என்று அவருக்கு கதீஜா நம்பிக்கை ஊட்டியிருக்கிறார்” என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இஸ்லாம் பற்றிய கல்வித் துறையில் அறிஞராக உள்ள லெய்லா அஹமது தெரிவித்துள்ளார்.

முதலாவது முஸ்லிம் பெண் கதீஜா

முகமதுவுக்குக் கிடைத்த போதனைகளை முதலில் கேட்டவர் கதீஜா தான் என்பதால், அவரைத்தான் வரலாற்றில் முதலாவது முஸ்லிம் என பதிவு செய்ய வேண்டும், புதிய மதத்திற்கு மாறிய முதலாவது நபர் என பதிவு செய்ய வேண்டும் என்ற கருத்தை பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

“கதீஜா அதில் நம்பிக்கை கொண்டு, போதனைகளை ஏற்றுக் கொண்டார்” என்று போஜியா போரா குறிப்பிடுகிறார்.

ஃபோசியா போரா

“போதனைகளை பரப்புவதற்கு இதன் மூலம் முகமது நம்பிக்கை பெற்றார். தன் வார்த்தைகள் மதிக்கப்படும் என்று உணரத் தொடங்கினார்” என்றும் போஜியா போரா கூறியுள்ளார்.

அந்த சூழ்நிலையில், மலைவாழ் மக்களில் மூத்தவர்களுக்கு சவாலாக முகமது மாறினார். “ஒரே இறைவன் தான் இருக்கிறார். அவர் அல்லா. வேறு கடவுள்களை வழிபடுகிறவர்கள் கடவுள் விரோத செயலில் ஈடுபடுபவர்கள்” என்று வெளிப்படையாகப் முகமது பிரசாரம் செய்தார் என்று வரலாற்றாளர் பெட்டனி ஹியூக்ஸ் கூறியுள்ளார்.

இஸ்லாம் விஷயங்களை முகமது கற்பிக்கத் தொடங்கிதால், பல இறைவன்களை வழிபடுவதில் நம்பிக்கை கொண்ட மெக்கா சமுதாயத்தால் அவர் புறக்கணிக்கப்பட்டார்.

“ஆனால் அந்த கட்டத்தில் அவருக்குத் தேவைப்பட்ட ஆதரவு மற்றும் பாதுகாப்பை கதீஜா அளித்தார்” என்று போரா தெரிவித்துள்ளார்.

“அடுத்த 10 ஆண்டுகளில், தன் குடும்பத்தின் தொடர்புகளையும், தன் சொத்துகளையும் பயன்படுத்தி, கணவருக்கும் அவர் உருவாக்கிய புதிய நம்பிக்கைக்கும் கதீஜா ஆதரவாக இருந்துள்ளார். பல இறைவன்கள் இருப்பதாக நம்பிக் கொண்டிருந்த சமூகத்தில் ஒரே இறைவன் தான் இருக்கிறார் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவானதாக அந்த மதம் இருந்தது” என்று ஹியூக்ஸ் தெரிவித்துள்ளார்.

`சோகமான ஆண்டு’

பெண்

தன் கணவருக்கும், இஸ்லாத்திற்கும் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து உதவிகளையும் கதீஜா செய்தார். ஆனால் 619 ஆம் ஆண்டு அவர் நோயில் படுத்து, காலமாகிவிட்டார்.

25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த முகமது இதனால் நிலைகுலைந்து போனார்.

“கதீஜாவின் மரணத்திற்குப் பிறகு அவர் உண்மையில் மீண்டு வரவில்லை” என்கிறார் பேராசிரியர் ஹாய்லேண்ட்.

“முகமதுவுக்கு நெருக்கமான அபுபக்கர் அல்லது உமரை காட்டிலும், சிறந்த நண்பராக கதீஜா இருந்தார் என்ற வகையில் மக்கள் கருதியிருக்கிறார்கள் என்பது அந்த காலக்கட்டத்து வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கதீஜா மரணம் அடைந்த ஆண்டை முஸ்லிம்கள் இன்னமும் “சோகமான ஆண்டு” என கருதுகிறார்கள் என்பதை வரலாற்றாளர் பெட்டனி ஹியூக்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

அதன் பிறகு முகமது மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.

கதீஜாவை பற்றி நாம் அறிந்துள்ள தகவல்கள் அனைத்தும் முகமதுவின் வாழ்க்கை பற்றிய கதைகள், மரபுகள் மற்றும் வாய்மொழியாக பரவியுள்ள தகவல்கள் மூலமாகக் கிடைத்தவை தான் என்று கதீஜா குறித்த குழந்தைகள் புத்தகத்தை எழுதியவரும், முஸ்லிம் அறிஞருமான பாத்திமா பர்கதுல்லா கூறுகிறார்.

முதலில் இந்தத் தகவல்கள் சொல்லப்பட்டு, முகமதுவுக்கு நெருக்கமான சீடர்களால் நினைவில் வைத்து, பிற்காலத்தில் எழுதப்பட்டுள்ளன.

முகமதுவின் பிற்கால மனைவியரில் ஒருவரான ஆயிஷா என்பவர் இதுபோன்ற தகவல்களை அளித்தவர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் இஸ்லாத்தில் முக்கியமான நபராக இடம் பெற்ற இரண்டாவது பெண்ணாக இருக்கிறார்.

“கதீஜா பற்றிய விஷயங்களை ஆயிஷாவிடம் முகமது கூறியிருக்கிறார். போதனைகள் கிடைத்தபோது, தாம் இறைதூதராக ஆன போது நடந்த விஷயங்களை ஆயிஷாவிடம் நினைவுபடுத்திக் கூறியுள்ளார்” என்கிறார் பாத்திமா பர்கதுல்லா.

முகமது வாழ்க்கையின் முதலாவது கட்டத்தை ஆயிஷா நேரில் பார்க்கவில்லை என்றாலும், “மற்ற முஸ்லிம்களுக்கு அந்தத் தகவல்களை, தனக்குச் சொல்லப்பட்டவாறு உண்மையுடன் தெரிவிக்க வேண்டியது தன் கடமை என்று கருதியுள்ளார்” என்று பாத்திமா குறிப்பிட்டுள்ளார்.

முன்மாதிரியானவர்

பெண்கள்

ஆரம்ப கால முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர் என்ற தவறான நம்பிக்கையை உடைப்பதில், கதீஜாவின் வரலாறு முக்கியத்துவம் பெறுகிறது என்று போய்ஜா போரா கூறுகிறார்.

தன் விருப்பத்தின்படி நடந்து கொள்வதை கதீஜாவை முகமது தடுக்கவில்லை. சொல்லப்போனால், அந்த காலக்கட்டத்தில் இஸ்லாம் பெண்களுக்கு அதிக உரிமைகளையும், முக்கியத்துவத்தையும் தந்ததாக போய்ஜா போரா கூறுகிறார்.

“ஒரு வரலாற்றாளர் மற்றும் ஒரு முஸ்லிம் என்ற வகையில், கதீஜா ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். அதேபோன்று அவருடைய மகள் பாத்திமா (கதீஜாவுக்கும் முகமதுவுக்கும் பிறந்த மகள்களில் ஒருவர்), ஆயிஷா மற்றும் சில பெண்களும் உத்வேகம் தரும் நபர்களாக உள்ளனர்” என்று போய்ஜா போரா தெரிவித்துள்ளார்.

“அவர்கள் அறிவார்ந்தவர்களாக, அரசியல் ரீதியில் அதிக செயல்பாடு கொண்டவர்களாக, மதத்தைப் பரப்புவதிலும், இஸ்லாமிய சமுதாயத்தை வடிவமைப்பதிலும் பெரும்பங்காற்றியுள்ளனர்” என்றும் போய்ஜா கூறியுள்ளார்.

“எனக்கு அது அற்புதமான விஷயமாகத் தெரிகிறது. என் மாணவர்களுக்கு இதைக் கற்பிப்பது, நம்பிக்கை கொண்டிருந்தாலும், மறுத்தாலும் இந்தப் பெண்கள் பற்றி கற்பிப்பது அற்புதமாக இருக்கிறது” என்று மேலும் கூறுகிறார் போய்ஜா.

BBC Indian sports woman of the year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman