இளவரசி லத்தீஃபா: மாயமாகிப் போன துபாய் ஆட்சியாளரின் மகள்

இளவரசி லத்தீஃபா: மாயமாகிப் போன துபாய் ஆட்சியாளரின் மகள்

  • ஜேன் மெக்முல்லன்
  • பிபிசி

இளவரசி லத்தீஃபாவின் வழக்கத்தையும் மீறிய கடத்தல் மற்றும் ரகசிய தடுத்து வைப்பு ஆகியவை குறித்த பரபரப்பான புதிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

டினா ஜாகியானன் அவரது தோழியிடம் பேசி பல மாதங்கள் ஆகின்றன.

துணிச்சலான தப்பிக்கும் முயற்சி ஒன்றுக்கு பிறகு இளவரசி லத்தீஃபா துபாயில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் ரகசிய செல்பேசி ஒன்றின் மூலம் இவருடன் சில காலம் தொடர்பில் இருந்தார்.

ஆனால் திடீரென இந்தத் தொடர்பு நின்று போனது. தினா லத்தீஃபாவை கடைசியாக பார்த்த பொழுது படகின் தளத்தில் நின்று கொண்டு அவர்கள் இருவரும் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டே இந்திய பெருங்கடலில் பயணித்தார்கள்.

துபாய்

பிப்ரவரி 2018இல் துபாயிலிருந்து லத்தீஃபாவை வெளியேறி புதிய வாழ்க்கை தொடங்குவதற்கான அபாயம் நிறைந்த திட்டத்தை செயல்படுத்துவதில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் 25 குழந்தைகளில் ஒருவர் லத்தீஃபா. சேக் மக்தூம் துபாயை ஒரு மினுமினுப்பு மிகுந்த நகரமாகவும், வணிகத்தில் ஈடுபட விரும்புபவர்கள் வந்து குவியும் இடமாகவும், அப்பிராந்தியத்தில் இருப்பவர்கள் விளையாட விரும்பும் இடமாகவும் மாற்றியிருந்தார்.

ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெண்களுக்கு சட்டங்கள் மற்றும் பழக்கங்கள் அவர்கள் வாழ்க்கையை மிகவும் கட்டுப் படுத்தும் விதத்தில் இருந்தன.

“நான் வாகனம் ஓட்ட அனுமதிக்கப் படுவதில்லை. துபாயில் பயணிக்கவோ, துபாயை விட்டு வெளியேறவோ, எனக்கு அனுமதி இல்லை,” என்று அவர் தப்பிக்கும் முன்பு பதிவு செய்த காணொளி ஒன்றில் கூறியுள்ளார் லத்தீஃபா.

“2000மாவது ஆண்டு முதல் நான் நாட்டை விட்டு வெளியே செல்லவில்லை. நான் வெளியே சென்று பயணிக்க வேண்டும், படிக்க வேண்டும், ஏதாவது இயல்பானவற்றைச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறேன் ஆனால் அவர்கள் என்னை விடவில்லை. நான் இங்கிருந்து செல்ல வேண்டும்,” என்று அந்தக் காணொளியில் அவர் கூறியுள்ளார்.

தோழி டினாவுடன் லத்திஃபா

டினாவின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் அமர்ந்துகொண்டு அடுத்து என்ன வர உள்ளது என்பது குறித்து மகிழ்ச்சியுடன் பேசுகிறார்.

“எனக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கை உள்ளது. காலையில் எழுந்த பின்பு நான் எப்படி உணர்வேன் என்று எனக்கு தெரியாது. நான் என்ன செய்ய விரும்பினாலும் இன்றே செய்ய விரும்புகிறேன் என்றே நினைக்கிறேன். அதைச் செய்வதை எதிர்நோக்கி உள்ளேன்,” என்று அவர் அதில் பேசுகிறார்.

இளவரசி லத்தீஃபாவுக்கு கடவுச்சீட்டு கிடையாது. அதுமட்டுமல்லாமல் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். அதன் காரணமாக அவர் துபாயில் இருந்து நழுவி வெளியேறி ஓமன் கடற்கரையோரம் வரவேண்டியிருந்தது.

ஒரு பாழடைந்த சிறு படகில் அவர்கள் சர்வதேச கடல் எல்லைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின. அன்று மாலை அவர்களை சுதந்திரத்திற்கு அழைத்துச்செல்ல இருந்த படகை அவர்கள் சென்றடைந்தனர்.

தனது நண்பர் ஒருவருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் செய்தியில் “நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன்,” என்று லத்தீஃபா அறிவித்தார்.

இந்தியப் பெருங்கடலைக் கடந்து சென்று அதன் பின்பு அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டும் என்பது அவர்களது திட்டம். அங்கு அரசியல் தஞ்சம் கோரலாம் என்று லத்தீஃபா எண்ணியிருந்தார்.

ஆனால் 8 நாட்கள் கழித்து அவர்கள் இந்திய கரையோரம் நெருங்கியபோது அவரது தப்பும் முயற்சி மிகவும் மோசமாகிப்போனது.

ஆயுதமேந்தியவர்கள் அவரது படகில் ஏறினார்கள். கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்படும் வரை அவர்கள் கழிவறைக்குள் ஒளிந்து இருந்தனர் புகைக் குண்டுகள் வீசப்பட்ட பின்னரே அவர்கள் படகின் தளத்துக்கு வந்தனர்.

“லத்தீஃபா கத்திக் கொண்டே அவர்களை உதைத்துக் கொண்டிருந்தார். ‘என்னைத் திரும்பவும் ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச் செல்லாதீர்கள். இங்கேயே சுட்டு விடுங்கள்’ என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார் என்கிறார் டினா.

அப்பொழுதுதான் கடைசியாகத் தனது தோழியைப் பார்த்தார் டினா.

அதன் பின்பு லத்தீஃபா வெளியிட்ட காணொளிகளில் அந்த படகில் என்ன நடந்தது என்பது குறித்த விரிவான தகவல்கள் உள்ளன. இந்த காணொளிகள் இப்பொழுதுதான் வெளியாகியுள்ளன.

“நான் போராடிக் கொண்டிருந்தேன்; ஒரு சிறிய பையைக் கொண்டு வந்த ஒரு நபர் உள்ளேயிருந்து ஓர் ஊசியை எடுத்து என் கையில் செலுத்தினார்,” என்று அந்தக் காணொளியில் லத்தீஃபா கூறுகிறார்.

அதன்பின்பு ஓர் இந்திய ராணுவ கப்பலுக்கு தான் மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

“அந்த கமாண்டோக்கள் என்னை ஒரு தாழ்வாரம் வழியாக தூக்கிக்கொண்டு ஒரு பெரிய அறைக்குள் சென்றனர். அங்கு என் முன்பு 4 அல்லது 5 ராணுவத் தளபதிகள் இருந்தனர். அவர்களிடம் எனது பெயர் லத்தீஃபா என்று திரும்பத் திரும்ப கூறி வந்தேன். நான் துபாய் செல்ல விரும்பவில்லை. எனக்குத் தஞ்சம் வேண்டும். நான் சர்வதேச கடல் எல்லையில்தான் இருந்தேன். நீங்கள் நான் செல்ல அனுமதிக்க வேண்டும்,” என்று கூறியதாக அந்தக் காணொளியில் லத்தீஃபா கூறுகிறார்.

ஆனால் அதற்கு யாரும் செவி கொடுக்கவில்லை என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சேர்ந்த ஒருவரால் தான் தாக்கப்பட்டதாகவும் கூறுகிறார் லத்தீஃபா கூறுகிறார்.

“அவர் என்னை இறுக்கப் பிடித்துக் கொண்டார்; தூக்கினார்; உதைத்து சண்டையிட்டார். அவர் என்னை விட உருவத்தில் மிகப்பெரியவராக இருந்தார். அவரது கை சட்டை மேலே மடிக்கப்பட்டு கை வெளியே தெரிய வேண்டும் என்பதில் நான் கவனமாக இருந்தேன். எனக்கு ஓர் அடி விழுந்தது. என்னால் எவ்வளவு கடினமாக முடியுமோ அந்த அளவுக்கு கடினமாக நான் கடித்தேன். பின்பு தலையை ஆட்டினேன். அதன்பின்பு அவர் கத்தினார்,” என்று கூறுகிறார் லத்தீஃபா

அதன் பின்பு மயக்க ஊசி செலுத்தப்பட்டு துபாய்க்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக அந்த காணொளியில் விவரிக்கிறார்.

“அந்தத் தருணத்தில் எனக்கு மிகவும் சோகமாக இருந்தது. பல ஆண்டுகளாக என் சுதந்திரத்திற்காக நான் திட்டமிட்டு வந்த அனைத்தும் எடுக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். அதன் பின்பு நான் தனியாகவே இருக்கிறேன். தனியாக அடைத்து வைக்கப்பட்டுள்ளேன். மருத்துவ உதவி கிடையாது, விசாரணை கிடையாது, குற்றச்சாட்டுகள் கிடையாது. எதுவுமே இல்லை.”

டினா

டினா அந்தப் படகின் பணியாளர்களுடன் சேர்த்து ஐக்கிய அரபு அமீரகம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் இரண்டு வார காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்பு அவர் சர்வதேச ஊடகங்களிடம் நடந்தவற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.

”ஃப்ரீ லத்தீஃபா” என்ற பிரசார குழுவைத் தொடங்கி இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றார்.

ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல லத்தீஃபாவிடம் இருந்து அவருக்கு எந்த தகவலும் இல்லை.

அதன்பின்பு 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் குடும்பத்தை பார்க்க பின்லாந்து சென்ற பொழுது அறிமுகமில்லாத ஒரு நபரிடம் இருந்து ஒரு தகவல் கிடைத்தது.

முதலில் பாதுகாப்புக் கேள்விகளுக்கான பதிலை அவர் சொல்ல வேண்டியிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு லத்தீஃபாவுக்கு கபோய்ரா என்ற பிரேசிலிய தற்காப்பு கலையை கற்று தந்தார் டினா.

லத்தீஃபாவின் கபோய்ரா அழைப்பு பெயர் என்ன என்பதை அந்த நபர் கேட்டார். அதற்கு பதிலளித்த உடன் இவரால் லத்தீஃபாவுடன் செல்பேசியில் நேரடியாக பேச முடிந்தது.

“அவருடைய குரலை முதன் முதலில் கேட்ட பொழுது நான் அழுது விட்டேன். என்னால் அதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. நான் மிக மிக உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தேன்,” என்று டினா கூறுகிறார்.

லத்தீஃபா காணொளி செய்திகளை பதிவு செய்ய முடிந்தது. அவை வெளிப்படுத்துபவை அதிர்ச்சிகரமானவையாக உள்ளன.

தற்போது 35 வயதாகும் அந்த இளவரசி ஒரு கழிவறையின் மூலையில் இருந்து கொண்டு மிகவும் மெல்லிய குரலில் முணுமுணுத்தார்.

“நான் கழிவறையிலிருந்து இந்தக் காணொளியைப் பதிவு செய்கிறேன். காரணம் கழிவறை கதவுகளை மட்டும் தான் என்னால் பூட்டிக்கொள்ள முடியும். நான் இங்கு பிணைக்கைதியாக உள்ளேன். நான் சுதந்திரமாக இல்லை. நான் இங்கு சிறைவைக்கப்பட்டு உள்ளேன். என் வாழ்க்கை. என் கையில் இல்லை,” என்று அந்த காணொளியில் கூறுகிறார்.

பழுத்த மற்றும் சற்று வீங்கிய தோற்றத்தில் காட்சியளிக்கும் லத்திஃபா மூன்று ஆண்டுகளாக மிகக் குறைந்த சூரிய வெளிச்சத்திலேயே வாழ்ந்துள்ளார்.

“நான் இங்கு ஒரு வில்லாவில் இருக்கிறேன். இந்த வில்லா சிறையாக மாற்றப்பட்டுள்ளது. அனைத்து ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டுள்ளன. இந்த வீட்டுக்கு வெளியே ஐந்து காவலர்களும் வீட்டுக்கு உள்ளே இரண்டு காவலர்களும் உள்ளனர். நல்ல காற்றை சுவாசிக்க கூட என்னால் வெளியே செல்ல இயலாது,” என்று லத்தீஃபா அந்தக் காணொளியில் கூறுகிறார்.

அந்தக் கடற்கரையோரம் இருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள ஓர் ஆடம்பர குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது.

“அது ஒரு சொகுசான வில்லா என்பதால் மட்டும் அங்கு எல்லாமே நன்றாக இருக்கிறது என்று நாம் எண்ணிக் கொள்ளக் கூடாது,” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் என்று கென் ரோத் கூறுகிறார்.

“இந்தப் பெண் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரது சிறைக் காவலர்களைத் தவிர யாரும் இல்லாத நிலையில், இது அவருக்கு ஒரு தனிமைச் சிறைதான். இப்படி தனிமையில் அடைத்து வைப்பது துன்புறுத்தலில் ஒரு வகை என்று கருதப்படுகிறது. இப்போது இருக்கும் சூழல் வரை அது நீண்டுள்ளது,” என்று அவர் கூறுகிறார்.

ஷேக் முகமது

லத்தீஃபாவின் காணொளிகளில் அந்த பயம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அவரது குரலில் ஒரு அவசரமும் ஆற்றாமையும் நீடித்து உள்ளன. ஒவ்வொரு நாளும் எனது வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன். இந்த சூழ்நிலையில் என்னால் உயிர் பிழைக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. ‘என் வாழ்க்கை முழுவதும் நான் சிறையில் தான் இருப்பேன் என்றும் இனி வாழ்க்கையில் திரும்பவும் சூரியனை பார்க்கவே முடியாது’ என்றும் காவலர்கள் என்னை மிரட்டுகின்றனர். இந்த இடத்தில் நான் பாதுகாப்பாக இல்லை,” என்று லத்தீஃபா கூறுகிறார்.

தான் ரகசியமாக பயன்படுத்தும் செல்பேசியுடன் உடன் தான் பிடிக்கப்படும் அபாயத்தையும் மீறி பொறுமையாகவும் முறையாகவும் தனது வழக்கத்துக்கு மாறான கதையை அவர் ஆவணப்படுத்தி வருகிறார்.

லத்தீஃபாவை துபாய்க்கு திரும்ப அழைத்து வந்தது ஒரு மீட்பு நடவடிக்கை என்று ஷேக் கூறியிருக்கிறார். இதற்கு முன்பு லத்தீஃபா ஒன்பது மாதங்கள் தொடர்ந்து காணாமல் போன பின்பு டிசம்பர் 2018 ஐக்கிய அரபு அமீரகம் அழுத்தங்களை எதிர் கொண்டது.

லத்தீஃபா உயிரோடுதான் இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும்.இல்லாவிட்டால் லதீபா உயிரிழந்துவிட்டார் என்று கருதப்படும் கவலைகளை பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் அப்போது தெரிவித்தது.

அதன்பின்பு லத்தீஃபாவின் வளர்ப்புத்தாய் இளவரசி ஹயா அவரைச் சந்தித்தார். ஹயா அவரை தம்முடன் மதிய உணவு உண்பதற்கு அழைத்தார்.

“நீண்டகாலம் சிறைபிடிக்கப்பட்ட பின்பு மனிதர்களை சந்திக்கும் போது நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை சோதிப்பதற்காக இது நடக்கிறது. ‘நீ நன்றாக நடந்துகொண்டால், நன்றாக எதிர்வினை ஆற்றினால் இன்னும் சில நாட்களில் நீ விடுதலை செய்யப்படுவாய்,” என்று ஹயா தம்மிடம் கூறியதாகத் தான் வெளியிட்ட காணொளி ஒன்றில் தெரிவித்துள்ளார் லத்தீஃபா,

லத்தீஃபாவுக்கு ‘பைபோலார் டிஸ்வாங்குதல்’ (இருமுனையப் பிறழ்வு) எனும் உளவியல் சிக்கல் இருப்பதாகவும் அவர் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் இளவரசிக்கு தெரியாமல் அவரை பற்றிய ஒரு கட்டுக்கதையை கிளப்பிவிட்டு இருந்தார் ஹயா.

இருமுனையப் பிறழ்வு வாழ்க்கையில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்பதை ஐக்கிய நாடுகள் மன்றத்தில் நிரூபிக்க ஹயா அவரது தோழி ஒருவரை அழைத்தார். அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் மேரி ராபின்சன். டிசம்பர் 15, 2018 அன்று மேரி ராபின்சன் துபாய் வந்தார்.

மேரி ராபின்சனுடன் லத்தீஃபா

ஹயா மற்றும் அவரது அலுவலர்கள் லத்தீஃபாவின் மருத்துவ நிலையை தம்மிடம் விவரித்ததாக அப்போது மேரி ராபின்சன் கூறியிருந்தார். ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தொடர்பு கொள்வதாகவும் அவர் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் இதைப் பற்றி விவரங்கள் எதுவும்

லத்தீஃபாவுக்கு தெரிவிக்கப்படவில்லை.

மதிய உணவு உண்ணும் போது சுற்றுச்சூழல், ஸ்கை டைவிங், மேரி ராபின்சன் எழுதிவரும் புதிய புத்தகம் ஆகியவை குறித்து அவர்கள் பேசியுள்ளனர்.

“என்னைப் பற்றி நாங்கள் எதுவுமே அப்போது பேசவில்லை. எனக்கு என்ன ஆனது என்பதை நாங்கள் பேசவில்லை,” என்று லத்தீஃபா கூறுகிறார்.

மேரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் என்பது தமக்கு தெரியாது என்கிறார் லத்தீஃபா.

லத்தீஃபா வெளியிட்ட காணொளிகள் குறித்து அவர் தப்பியோடியது குறித்து தாம் எதுவும் கேட்கவில்லை என்றும் அவரை தனியாக சந்திக்குமாறு கூறவில்லை என்றும் மேரி ராபின்சன் எங்களிடம் தெரிவித்தார்.

பைபோலார் டிசார்டர் மனநிலை உடைய வருட ஒருவருடன் எப்படி நடந்து கொள்வது என்று எனக்கு தெரியாது. அதைப்பற்றி அவரிடம் பேசி அவருக்கு ஏற்கனவே இருக்கும் அதிர்ச்சியான மனநிலையை அதிகப்படுத்த அந்த சிறப்பான மதிய உணவு நேரத்தில் நான் விரும்பவில்லை என்றும் மேரி ராபின்சன் கூறுகிறார்.

ஆனால் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அனுப்பி வைப்பதற்காக லத்தீஃபாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மேரி ராபின்சன் அனுமதித்திருக்கிறார். அது தனிப்பட்ட புகைப்படங்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் 9 நாட்களுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகம் அதை உலகிற்கே வெளியிட்டதை பார்த்தபின்பு அதிர்ச்சி அடைந்தேன் என்று மேரி ராபின்சன் கூறுகிறார்.

மதிய உணவுக்கு பின்பு லத்தீஃபா மீண்டும் அவரது வில்லா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

” இது எல்லாமே ஒரு நாடகம். அவர்கள் என்னை ஏமாற்றியது போல உணர்கிறேன்,” என்று லத்தீஃபா கூறுகிறார்.

அதன் பின்பு காணாமல் போன அந்த இளவரசிக்கு எதுவுமே மாறவில்லை. ஆனால் அவரது வளர்ப்புத் தாயான இளவரசி ஹயாவுக்கு அசாதாரணமான மாற்றங்கள் இருந்தன.

” சில காலம் கழித்து எனக்குக் ஹயாவிடம் இருந்து ஓர் அழைப்பு வந்தது. ‘மேரி நான் இப்போது லண்டனில் இருக்கிறேன். எனது இரண்டு குழந்தைகளுடன் நான் இங்கே வந்துள்ளேன். நாங்கள் எந்த உடை அணிந்து இருந்தோமோ அந்த உடையுடனேயே கிளம்பி விட்டோம். ஏனென்றால் மிகவும் பயமாக இருந்தது. நாங்கள் தவறு செய்து விட்டோம் நிறைய விஷயங்களை கண்டுபிடித்து விட்டோம்’ என்று ஹயா என்னிடம் சொன்னார்,” என மேரி ராபின்சன் கூறுகிறார்.

ஹயா

ஷேக் மக்தூம், ஹயா லத்தீஃபா மீது காட்டும் ஆர்வத்தை விரும்பவில்லை. அதன் பின்பு ஹயா உடனான உறவு மோசமானது. ஏப்ரல் 2019 இல் துபாயில் அவர் இருப்பது பாதுகாப்பற்றது என உணர்ந்தார். அந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி அவர் பிரிட்டன் வந்தடைந்தார்.

அவரது மனைவிகளில் ஒருவர் தப்பியது மற்றும் இரண்டு குழந்தைகள் காணாமல் போனது ஆகியவை தொடர்பாக அவர்கள் துபாய்க்கு திரும்ப அனுப்ப வேண்டுமென்று ஷேக் உயர் நீதிமன்ற போராட்டத்தைத் தொடங்கினார்.

ஆனால் அவர் எதிர்பார்த்ததைவிட அதிகமானவையே கிடைத்தன. மார்ச் 2020 அவரது சட்டப்பூர்வ வயதை அடைந்த மகள்களின் சிகிச்சை குறித்த தகவல்களை பிரிட்டன் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் வெளியிட்டார்.

18 ஆண்டுகளுக்கு முன்பு ஷேக்கின் இன்னொரு மகளான ஷம்சா என்பவர் பிரிட்டனில் பிடிக்கப்பட்டு துபாய் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது முதல் அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கேம்பிரிட்ஜில் ஷேக்கின் ஆட்கள் எப்படி அவரை பிடித்து திரும்ப அழைத்துச் சென்றனர் என்பது குறித்த முழு கதையையும் அந்த தீர்ப்பு விவரித்தது.

அவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பது சிறைபிடிக்கப்பட்டு இருப்பதும் நீதிபதியால் கண்டுபிடிக்கப்பட்டன, ஷேக் நீதிமன்றத்துடன் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்படவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

டினாவுக்கு இது ஒரு முக்கியமான முன்னேற்றம். “லத்தீஃபா விரைவில் விடுதலை செய்யப்படுவதற்கு இது இட்டுச் செல்லும் என்று நான் நினைத்தேன். ஆனால் துபாயில் சிறை வைக்கப்பட்டுள்ள லத்தீஃபாவுக்கு எதுவுமே மாறவில்லை.”

புர்ஜ் கலிஃபா

தனது வில்லாவில் தனியாக இருக்கும் லத்தீஃபா தனது தோழியுடன் தினசரி தொடர்பில் இருந்தார். டினாவின் தாய்வழி உறவினர் மார்க்கஸ் மற்றும் ‘ஃப்ரீ லத்தீஃபா’ குழுவின் நிறுவனர்களில் ஒருவரான டேவிட் ஹேய்க் ஆகியோருடனும் லத்தீஃபா தொடர்பில் இருந்தார்.

லத்தீஃபாவின் நிலையை அறிவதற்காக தொடங்கப்பட்ட சிறு காணொளிகள் நீண்ட உரையாடல்களாக மாறின.

“அந்த செல்பேசி மிகவும் முக்கியமானதாக இருந்தது; உயிரை காப்பாற்றியது அது,” என்று மார்க்கஸ் கூறுகிறார். இந்தக் காலகட்டத்தில் லத்தீஃபா அவரது மூன்றாமாண்டு தனிமைச் சிறையில் இருக்கிறார்.

“ஒவ்வொரு நாளும் அவருக்கு போராட்டம்தான். அதை அவரது குரலிலேயே உங்களால் அறிய முடியும் அவர் மிகவும் களைப்பாக இருக்கிறார். அவரது உடல்நிலை நல்ல நிலையில் இல்லை என்பது எனக்கு தெரியும்,” என்கிறார் மார்க்ஸ்.

எப்படித் தொடங்கியதோ அதேபோல திடீரென ஒரு நாள் அவருடனான தொடர்பு நின்று போனது.

பல மாதங்கள் கழித்து டினா, டேவிட், மார்க்கஸ் ஆகிய மூவரும் லத்தீஃபா அளித்த காணொளிகளில் சிலவற்றை வெளியிட முடிவு செய்தனர்.

லத்தீஃபாவை விடுதலை செய்ய ஷேக்கிற்கு இது அழுத்தம் தரும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

“இந்த முடிவை நாங்கள் மிகவும் எளிதாக எட்டவில்லை. இந்த முடிவை எடுப்பதற்காக பல இரவுகள் உறங்காமல் கழித்தோம்,” என்கிறார் டினா.

ஆனால் ஏதாவது செய்தாக வேண்டிய நேரம் இது. நாங்கள் கைவிடக்கூடாது, அதற்காக போராட வேண்டும் என்று லத்தீஃபா நினைத்தார்.

துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகள் அவரது குடும்பத்தின் அன்பான அரவணைப்பில் லத்தீஃபா பாதுகாப்பாக இருப்பதாக கூறுகின்றன. ஆனால் தனது தோழியின் நிலைமை குறித்து டினா மிகவும் அச்ச உணர்வில் இருக்கிறார்.

“தொடக்கத்தில் அவரது செல்பேசியில் ஏதோ பிரச்சனை என்று நான் நினைத்தேன். அவர் மீண்டும் வருவார் என நான் நம்பிக்கொண்டிருந்தேன். அவருக்கு ஏதும் தவறாக நிகழ்ந்து விட்டது என்பதை நான் நம்ப விரும்பவில்லை,” என்று கூறுகிறார் டினா.

ஆனால் லத்தீஃபா தாமாக மீண்டும் திரும்பி வரப்போவதில்லை என்பதை அவர் ஒரு கட்டத்தில் உணர்ந்தார்.

“அவரது நலம் குறித்து எங்களுக்கு ஆழமான வருத்தம் உள்ளது. செல்பேசியுடன் அவர் ஒருவேளை பிடிக்கப்பட்டு இருந்தால் அவருடைய நிலைமை மிகவும் மோசமானதாக இருக்கும்,” என்று கூறுகிறார் டினா.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman