வட கொரியாவில் இருந்து தப்பியவர்களுக்கு தென் கொரியாவில் என்ன நடந்தது?

வட கொரியாவில் இருந்து தப்பியவர்களுக்கு தென் கொரியாவில் என்ன நடந்தது?

  • சோஃபி வில்லியம்ஸ்
  • பிபிசி செய்திகள்

தன் 31ஆவது வயதில் வட கொரியாவில் இருந்து கிம் ஜி யங் என்பவர் தென்கொரியாவுக்கு தப்பிச் சென்றது “ஒரு கனவைப் போல இருந்தது.”

வளமான வாழ்வை எதிர்நோக்கி தென் கொரியாவுக்கு 2013 மார்ச் மாதம் அவர் தனது தாயார் மற்றும் 3 ஒன்றுவிட்ட சகோதர உறவுகளுடன் சென்றார். கஷ்டங்கள் நிறைந்த காலத்தில் இருந்து தப்பியதற்கான வாய்ப்பைத் தருவதாக இருந்தது.

குடும்பத்தில் யாருக்கும், எவரையும் தெரியாது என்பதால் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. “நிறைய கலாச்சார மாறுபாடுகள் இருந்தன. நாங்கள் மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டியிருந்தது” என்று அந்தப் பெண்மணி தெரிவித்தார்.

சர்வாதிகார நாட்டில் இருந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பிச் சென்ற ஆயிரக்கணக்கான மக்களில் கிம் ஒருவர். ஆனால், தப்பிச் சென்றவர்கள் தென் கொரியாவில் குடியமர்வது என்பது, ஒரு தொடக்கமாக இருந்துள்ளது.

உயர் தொழில்நுட்ப, ஜனநாயக சமூகத்தில் வாழ்க்கையின் அடிப்படையான விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. வங்கி அட்டையை பயன்படுத்துவது முதல், பிரதிநிதிகள் மூலம் நடைபெறும் அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வது வரை புதிதாகக் கற்பவையாக இருக்கின்றன.

சென்றதும் அவர்களுக்கு என்ன நடக்கிறது?

ஆரம்பத்தில் அவர்கள் விசாரிக்கப்பட்டு, புலனாய்வுத் துறையின் மூலம் தகவல்கள் பெறுகின்றனர்.

“பிறகு, தென்கொரிய அரசு நடத்தும் மறுகுடியமர்வு கல்வி மையமான ஹனாவோன் மையத்தில் 3 மாத காலம் வகுப்புகள் நடைபெறுகின்றன” என்று வடகொரியாவில் சுதந்திரம் என்ற அமைப்பின் தென்கொரிய டைரக்டரான சோக்கீல் பார்க் தெரிவித்தார்.

“தென்கொரிய சமூகம் பற்றி பல விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான 3 மாத பள்ளிக்கூடம் அது. ஏ.டி.எம். இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவது, தென் கொரியாவின் நவீன போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள், எப்படி வேலையில் சேருவது என்பவை அங்கு கற்பிக்கப்படும். தென் கொரியாவின் குடியுரிமை, ஜனநாயகம் மற்றும் வித்தியாசங்கள் பற்றிய பல விஷயங்களை அங்கு கற்றுக் கொள்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

மறுகுடியமர்வு செய்யப்பட்ட அகதிகளுக்கு வசதிகளை அளிக்க சமுதாய மையங்கள் உள்ளன. இந்த காலக் கட்டத்தில், தப்பி வந்தவர்கள் செல் போன்கள் வாங்குவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, உள்ளூர் சமுதாயத்தினருடன் இணக்கமாக நடந்து கொள்வதை அவர்கள் சொல்லித் தருகின்றனர்.

வடகொரியாவில் இருந்து தப்பி வந்தவர்களுக்கு ஹனாவோனில் வாடகை வீடு அளிக்கப்படும். சில தினங்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை கிம் பெட்டியில் எடுத்து வந்திருந்தார்.

தப்பி வந்தவர்களுக்கு கலந்தாய்வு சேவை அளிக்கும் ஒருவர் வீட்டை சுத்தம் செய்ய உதவி செய்து, கூடுதல் உதவிகளை அளித்தார். “பிறகு தங்கள் வாழ்க்கைத் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

தென்கொரியாவில் குடியேறும் வட கொரியர்களை மேற்பார்வை செய்ய காவல் துறை அதிகாரி நியமிக்கப்படுவார். அவர்களின் நடவடிக்கைகளை அந்த அதிகாரி கவனித்துக் கொண்டிருப்பார். “உள்ளூர் பகுதியில் இருக்கும், நட்பு ரீதியிலான அதிகாரியாக, அவ்வப்போது வந்து ஆய்வு செய்பவராக அவர் இருப்பார்” என்று பார்க் தெரிவித்தார்.

“சிலநேரங்களில் அவர்கள் நண்பர்களாகிவிடுவார்கள். தந்தை போன்ற வயதுள்ளவர்கள் அப்படி நட்பாகி விடுவார்கள். அவர்களுடைய ஆய்வு என்பது பெரும்பாலும் சமூக சேவையைப் போன்றதாகத் தான் இருக்கும்” என்றார் அவர்.

அந்த அதிகாரிகள் சில நேரங்களில் சங்கங்கள் அல்லது தேவாலயங்களுடன் இணைந்து செயல்படுவார்கள்.

மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, சில கலந்தாய்வு சேவை வசதிகள் உளஅளன. ஆனால் அந்த மையங்களின் வசதியை மேம்படுத்த வேண்டியுள்ளது என்று பார்க் கூறினார். வட கொரியாவில் இருந்து தப்பி வந்த ஹன் சங்-ஓக் மற்றும் அவருடைய மகன் 2019-ல் சியோலில் அடுக்கு மாடி வீட்டில் இறந்து கிடந்ததை அடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர்கள் பட்டினி கிடந்து இறந்ததாகக் கூறப்பட்டது. அவர்கள் மனம் உடைந்து போயிருந்தனர் என்று அருகில் வசித்தவர்கள் கூறினர்.

தப்பி வந்த பலரும் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள். ஆனால் யாரிடம் அல்லது எங்கே உதவி பெறுவது என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. வட கொரியாவில் இருந்து தென் கொரியாவுக்கு தப்பிச் சென்றவர்களிடம் நடத்திய ஓர் ஆய்வில், தங்களுக்குத் தற்கொலை எண்ணம் வந்ததாக 15 சதவீதம் பேர் கூறியிருந்தனர். தென்கொரிய தற்கொலை சராசரி 10 சதவீதம் என்ற நிலையில், அதைவிட அதிகமாக இது உள்ளது.

“சமூக மாற்றம் மற்றும் விழிப்புணர்வால் தான் மன ஆரோக்கியம் மேம்படும். இதில் தவறில்லை, உதவி கேட்டு செல்வது பரவாயில்லை என்று மக்கள் நினைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

வடகொரியாவில் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என தப்பி வந்த 4 பேர் விவரிக்கின்றனர்.

தப்பி வந்தவர்களுக்கு தென்கொரிய வாழ்க்கை தனிமைப்படுத்திய வாழ்க்கையாக இருக்கும். முற்றிலும் மாறுபட்ட சமூகத்திற்குள் வந்திருக்கிறார்கள் என்பதைவிட, இவர்களை “மற்றவர்கள்” என்ற ரீதியில் தென்கொரிய மக்களால் பார்க்கப்படுகிறார்கள் என்பது தான் அதர்குக் காரணமாக உள்ளது என்று வடகொரியா விஷயங்களை ஆய்வு செய்யும் நிபுணர் பியோடார் டெர்ட்டிட்ஸ்கி தெரிவித்தார்.

“நீங்கள் துரோகி என பார்க்கப்படுவீர்கள் என்பதால் வட கொரியாவுக்கு திரும்பிச் செல்ல முடியாது. உங்கள் குடும்பம் அல்லது நண்பர்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு விடுகிறீர்கள்” என்றார் டெர்ட்டிட்ஸ்கி. “தப்பிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி, வெளியில் வந்தவர்களுக்கு இது மிகுந்த உளைச்சலைத் தரும் அனுபவமாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.

அவர்களுக்கு என்ன தொழில் வாய்ப்புகள் உள்ளன?

தென் கொரியாவுக்குச் சென்று வேலை தேடுவது சிரமமான விஷயம்.

“வட கொரியாவிலும், தென் கொரியாவிலும் கல்வி முறை முற்றிலும் மாறுபட்டது. தென் கொரியாவில் வட கொரியர்களுக்கு சில வகையான வேலைகள் மட்டுமே கிடைக்கும்” என்று கிம் தெரிவித்தார்.

வட கொரியா

“தப்பி வந்தவர்கள் பகுதி நேர வேலை என்பதையே கேள்விப் பட்டிருக்க மாட்டார்கள், முன்னர் தாங்களாக வேலை தேடி சென்றிருக்க மாட்டார்கள் என்பதால் அது மிகவும் கடினமானது. நேர்காணல்களில் பெரும்பாலும் அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள்.”

பெண்கள் சிறு வயதினராக இருந்தால், உணவகங்களில் உணவு பரிமாறுவார்கள். வயது அதிகமானதும், சமையலறை உதவியாளராக அனுப்புவார்கள். ஆண்களைப் பொருத்தவரை கணினிமய கடையில் வாங்குதல் நிறுவனங்களில் பொருட்களை பொட்டலம் செய்யும் வேலை அல்லது கட்டுமான வேலை கிடைக்கும்.

வட கொரியர்கள் வேலை செய்வது, ஒரே வேலையில் நீடித்து, திறன்களை வளர்த்துக் கொள்ள ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. தப்பி வந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தென் கொரிய தொழில் நிறுவனங்களுக்கும் ஊக்கத் தொகை அளிக்கப் படுகிறது.

மேலும் படிப்பைத் தொடர விரும்புவர்களுக்கு, சலுகைகள் உண்டு. இளநிலை பட்ட வகுப்புகளுக்கு அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 35 வயதுக்கு குறைவானவர்கள் பட்டதாரி படிப்பு கல்லூரிகளில் இலவசமாக கல்வி பயில முடியும். மேலும் பல கல்வி உதவித் திட்டங்களும் உள்ளன.

கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துவது போன்ற விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும் தப்பி வந்த வட கொரியர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. 1996-ல் வட கொரியாவில் இருந்து தப்பி வந்த கிம் சியோங்-மின் தங்களுக்கான கல்வி வாய்ப்புகள் குறித்து பாராட்டு தெரிவிக்கிறார். ஆரம்பத்தில் இவர் உறவினரிடம் கிளீனர் மற்றும் காவலாளியாக வேலை பார்த்தார். ஆனால் கற்பனைத் திறன் எழுத்து படிப்பில் இவர் பட்டம் பெற்றார். கே.பி.எஸ். ஒளிபரப்பு நிறுவனத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து, நாடகங்களுக்கு கதை வசனம் எழுதும் நிலைக்கு மாறினார்.

Kim Seong Min

2004 ஆம் ஆண்டு இவர் ப்ரீ வடகொரியா வானொலி தொடங்கினார். பெரும்பாலும் தப்பி வந்தவர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த வானொலி சேவையில், வட கொரியாவுக்கான தகவல்கள் ஒலிபரப்பு செய்யப் படுகின்றன. வட கொரிய அரசு மற்றும் தலைமை குறித்த விமர்சனங்கள் அதில் இடம் பெறுகின்றன.

தப்பி வந்தவர்களின் குழந்தைகள் நிலை என்ன?

வடகொரியாவில் இருந்து தப்பி வந்தவர்களுக்காக சியோலில் சிறப்புப் பள்ளிகள் உள்ளன.

விசேஷ பள்ளியில் படிப்பவர்களை “சுற்றிலும் ஒரே மாதிரியான பின்னணி கொண்ட குழந்தைகள் இருக்கிறார்கள்” என்று டெர்ட்டிட்ஸ்கி தெரிவித்தார். “அங்கே ஓரளவுக்கான கல்வி தான் கிடைக்கும், தென் கொரிய சமூகம் பற்றிய போதனைகள் இருக்காது என்பதால், அது நல்ல இடமாக இருக்காது” என்று அவர் குறிப்பிட்டார்.

வட கொரியா

“வேறு வகையில் பார்த்தால், நீங்கள் தென் கொரிய பள்ளிக்குச் சென்றால் குழந்தைகள் சரியாகப் பழக மாட்டார்கள். இவர்களை அவர்கள் தாழ்வாகப் பார்ப்பார்கள். அவர்களுடன் இணக்கமாகப் பழகுவது கஷ்டமானது. அதுவும் உகந்த இடமாக இருக்காது” என்றும் அவர் கூறினார்.

பொதுவாகப் பார்த்தால், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தென் கொரிய பிள்ளைகளைவிட வட கொரிய பிள்ளைகள் குறைவாகவே தேறுகின்றனர். சில நேரங்களில், சிரமங்களை சந்திக்க முடியாமல் கல்வியில் இருந்து விலகிவிடுகிறார்கள் என்று கிம் தெரிவித்தார்.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman