வர்த்தகத்தின் வழியே அமைதி: இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பலன்கள் என்னென்ன?

வர்த்தகத்தின் வழியே அமைதி: இஸ்ரேல் – ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பலன்கள் என்னென்ன?

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தி இன்னும் ஆறு மாதங்கள் கூட நிறைவடையாத சூழலில், வெள்ளை மாளிகைக்கு புதிய அதிபர் வந்துவிட்டார். இஸ்ரேலில் அடுத்த தேர்தல் வரவுள்ளது.

இருப்பினும் “ஆப்ரஹாம் ஒப்பந்தம்” என்று சொல்லக்கூடிய அந்த ஒப்பந்தம் வரலாற்றிலேயே முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான உறவை அமைதிப்படுத்தியது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்காலத்திலும் எந்த ஆபத்தும் இல்லை.

இதேபோல மில்லியன் கணக்கான வர்த்தக ஒப்பந்தங்களும் ஏற்பட்டன. டிசம்பர் மாதம் மட்டும் இஸ்ரேலை சேர்ந்த 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஃப்லேர் ஹாசன் நஹோம்

“எங்களிடம் பொதுப்படையான விஷயங்கள் நிறையவுள்ளன” என ஜெருசலத்தின் துணை மேயர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் – இஸ்ரேல் வர்த்தக கவுன்சிலின் நிறுவனர்களில் ஒருவருமான ஃப்லேர் ஹாசன் நஹோம் தெரிவித்துள்ளார்.

“ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டவுடன் இருதரப்பிலும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள ஆர்வமுடன் உள்ளனர். நாங்கள் வாட்சப் குழுக்கள் மற்றும் சூம் (Zoom) சந்திப்புகளை ஒருங்கிணைத்தோம்” என்கிறார் அவர்.

வங்கி, கால்பந்து, சைபர் பாதுகாப்பு மற்றும் உணவு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோபகிர்வு உணவகங்கள் (யூத உணவு முறை) துபாயில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. மேலும் இஸ்ரேலில் உருவான தற்காப்புக் கலையான `க்ராவ் மாகா` பயிற்சியளிக்க இரு ஜிம்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வர்த்தகத்திற்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நீர் மேலாண்மை குறித்து செயல்படும் ஃபுலுயன்ஸ் நிறுவனத்தின் இஸ்ரேலிய கிளைக்கும், துபாயின் அல் ஷிராவின் குழுமத்திற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம், முதன்முதலில் ஏற்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்று.

அல் ஷிராவி குழுமத்தின் உரிமையாளர்களின் ஒருவரான தனி அல் ஷிராவி, “இந்த ஒப்பந்தம் சொர்க்கத்தில் முடிவு செய்யப்பட்ட ஒன்று” என தெரிவித்தார். “நாங்கள் ஒரே மொழியை பேசுகிறோம்” என பிபிசியின் டாக்கிங் வணிகம் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.

“எங்களின் நோக்கம் ஒன்றாக உள்ளது. இருவருமே வளர்ச்சியடைய விரும்புகிறோம். இஸ்ரேலிடம் தொழில்நுட்பம் உள்ளது. அவர்கள் தண்ணீர் துறையை பொறுத்தவரை முன்னோடியாக உள்ளனர்” என்றார் அவர்.

அல் ஷிராவி மற்றும் ஃபுலுயன்ஸ் நிறுவனம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம்

ஃபுலுயன்ஸ் நிறுவனத்தின் இஸ்ரேல் கிளையின் தலைவர் யாருன் பார் தல் இதே ஆர்வத்துடன் பேசுகிறார். அதேபோல அவர் ஏற்பட்டுள்ள வர்த்தகம் குறித்து மட்டுமல்ல, இதனால் ஏற்படப்போகும் சமாதானம் குறித்தும் ஆர்வமாக உள்ளார்.

“வர்த்தகம் சமாதானத்திற்கு வழிவகுக்கும், அதேபோல சமாதானம் வர்த்தகத்திற்கு வழிவகுக்கும். ஒரு இஸ்ரேலியனாகவும், தொழிலதிபராகவும் எங்களது நிறுவனங்களால் அமைதி உருவாவது குறித்து பெருமையடைகிறேன்,” என அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த ஒப்பந்தம் உலக முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் குறித்து பாலத்தீனம் மகிழ்ச்சியடையவில்லை. இதனை எதிர்த்து காசா வீதிகளில் போராட்டங்கள் நடந்தன. இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்தினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் இந்த ஒப்பந்த அறிவிப்புக்குப் பிறகு சைபர் தாக்குதல்கள் 250 சதவீத அளவிற்கு அதிகரித்தன.

இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய கண்ட்ரோல் ரிஸ்க் என்ற ஆலோசனை நிறுவனத்தின் உயரதிகாரியான வில்லியம் ப்ரவுன், “நாம் அனைவரும் வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது குறித்தான சூழலையும் இதில் மனதில் வைக்க வேண்டும்,” என்கிறார்.

செளதி அரசர்

அதேபோல பஹ்ரைனுடன் செளதிக்கு உள்ள தொடர்பால் அடுத்த கட்டமாக இஸ்ரேலுடன் செளதி ஒப்பந்தம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது குறித்து பெரிதாகப் பேசப்படவில்லை.

“தற்போதைய செளதி அரசரின் ராஜ்யத்தில் அது இயலாது” என்கிறார் ஆய்வு நிறுவனமான எக்னோமிஸ்ட் இண்டலிஜெண்ட் யூனிட்டை சேர்ந்த அடேடாயோ போலாஜி-அடியோ.

“இஸ்ரேலுடன் நீங்கள் எந்த ஒரு தொடர்பையும் ஏற்படுத்தி கொள்வதற்கு முன்னர் பாலத்தீனம் குறித்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பது செளதி அரசரின் கருத்து,” என்கிறார் அவர்.

“மாறாக ஓமன் இம்மாதிரியான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது. மேலும் இம்மாதிரியான ஒப்பந்தங்களுக்கு அரபு உலகம் எம்மாதிரியான வினைகளை ஆற்றுகிறது என்பதை ஓமன் பார்க்க விரும்பும்.”

பல வருடங்களாக எகிப்து மற்றும் ஜோர்டானுடன் இம்மாதிரியான ஒப்பந்தத்தில் ஏற்கனவே உள்ளது இஸ்ரேல். ஆனால் அதெல்லாம் அரபு நாடுகளில் புகழ்பெறவில்லை. ஆனால் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் பெரிதாக பேசப்பட்டது, இருநாட்டை சேர்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தம், வரக்கூடிய வருடங்களில் இந்த நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே பேசப்படுகிறது.

கூடுதல் செய்தி சேகரிப்பு கிடி க்லெய்மேன்

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman