ஈலோன் மஸ்க் – உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை இழந்த டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் தலைவர்; அமேசானின் ஜெஃப் பெசோஸ் மீண்டும் முதலிடம்

ஈலோன் மஸ்க் – உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை இழந்த டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் தலைவர்; அமேசானின் ஜெஃப் பெசோஸ் மீண்டும் முதலிடம்

டெஸ்லா நிறுவனப் பங்குகளின் விலை சரிவால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்தார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் ஈலோன் மஸ்க்.

இந்தப் பங்குகளின் மதிப்புதான் அவர் சென்ற மாதத் தொடக்கத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற முக்கியக் காரணம்.

ஈலோன் மஸ்கின் வீழ்ச்சியால், அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஜனவரி மாதம் அதிகபட்சமாக 880 அமெரிக்க டாலர் வரை தொட்டது. ஆனால் தற்போது அதன் மதிப்பு சுமார் 20% விலை சரிந்திருக்கிறது.

டெஸ்லா நிறுவனம் பிட்காயினில் 1.5 பில்லியன் (1500 கோடி) அமெரிக்க டாலர் முதலீடு செய்திருக்கும் செய்தி, சந்தையில் எதிர்மறை செய்தியாகப் பார்க்கப்படுவதும் ஒரு காரணம்.

டெஸ்லா முதலீடு செய்த பிட்காயினும் கடந்த ஒரு வார காலமாக சரிந்து வருகிறது. இந்த சரிவு டெஸ்லாவை நேரடியாக பாதிக்கவில்லை என்றாலும், டெஸ்லா நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருந்த சிலரை விற்க வைத்திருக்கலாம் என்கிறார் வெட்புஷ் செக்யூரிட்டீஸ் நிறிவனத்தின் அனலிஸ்ட் டேன் ஐவ்ஸ்.

பிட்காயினை விற்றுத் தள்ளும் முதலீட்டாளர்கள்: என்ன காரணம்?

டெஸ்லா நிறுவனம் பிட்காயினில் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்திருப்பது மற்றும் தங்களின் பணப்பரிமாற்ற முறைகளில் ஒன்றாக பிட்காயினை வைக்கும் எதிர்காலத் திட்டம் வெளியான வாரத்தில், பிட்காயினின் மதிப்பு சுமார் 50% அதிகரித்தது.

பிட்காயின்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிட்காயின் 57,000 டாலரைத் தொட்டது. நேற்றைக்கு 48,000 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 சதவீதம் பிட்காயினின் மதிப்பு சரிந்திருக்கிறது. இருப்பினும் பிட்காயினில் டெஸ்லா நிறுவனம் செய்த முதலீட்டை வெளிப்படுத்திய போது இருந்த பிட்காயினின் மதிப்பை விடவும் தற்போது அதிகமாகவே இருக்கிறது.

பிட்காயினின் மதிப்பு அதிகரிக்க ஈலோன் மஸ்க் எப்படி பாராட்டப்பட்டாரோ, அதே போல சமீபத்தில் பிட்காயினின் மதிப்பு சரிவதற்கும் அவரையே குறை சொல்ல வேண்டி இருக்கிறது.

“பிட்காயினின் மதிப்பு அதிகமாக இருப்பது போலத் தெரிகிறது” என ஈலோன் மஸ்க் தன் ட்விட்டர் பக்கத்தில், கடந்த பிப்ரவரி 20-ம் தேதி குறிப்பிட்டிருக்கிறார்.

“பணப்பரிமாற்றத்தை நடத்த பிட்காயின் மிகவும் மோசமான வழி” என அமெரிக்க கருவூல செயலர் ஜெனெட் யெலென் கடந்த திங்கட்கிழமை கூறினார்.

ஆசிரியர் கார்ட், பேங்க் ஆஃப் நியூ யார்க் மெலன் போன்ற நிறுவனங்கள், டெஸ்லாவைப் போல பிட்காயினை தங்கள் வணிக செயல்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான திட்டங்களை அறிவிக்க தொடங்கி இருக்கும் நேரத்தில் ஜெனெட் யெலென் இப்படி ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேறு என்ன டெஸ்லாவை பாதிக்கிறது?

டெஸ்லா தன்னுடைய குறைந்த விலை கொண்ட மாடல் Y எஸ்.யூ.வி கார்களுக்கான புதிய வாங்குதல்கள் ஏற்பதை நிறுத்தி இருக்கிறது. இந்த காரின் இயங்கு திறனை அதிகரிக்க வேண்டும் என மஸ்க் கூறியுள்ளார். டெஸ்லாவில் அதிகம் விற்பனை ஆகும் தேர் ரகங்களில் இதுவும் ஒன்று.

Bitcoin: Elon Musk loses world's richest title as Tesla falters

டெஸ்லா கார்களின் மின்கலவடுக்கு (பேட்டரி)களில் தீப் பிடிப்பது, வாகனம் அதிகமாக வேகமெடுப்பது போன்ற பிரச்சனைகள் குறித்து விசாரிக்க, பாதுகாப்பு மற்றும் தரப் பிரச்சனைகள் தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில், சீனாவின் நெறிமுறையாளர்கள் டெஸ்லாவுக்கு அழைப்பு விடுத்திருகிறது.

கடந்த சில மாதங்களில் ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோக்ஸ்வேகன் போன்ற டெஸ்லாவின் போட்டி நிறுவனங்களும் கடந்த சில மாதங்களில் மின்சார வாகனத்தின் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கின்றன.

கடந்த 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்லாவின் பங்கு விலை 90 டாலருக்கும் குறைவாக இருந்தது. அந்த ஆண்டின் முடிவில் சுமாராக 700 டாலருக்கு மேல் சென்றது. இதனால் 2021 ஜனவரியில் முதல் முறையாக உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் டெஸ்லாவின் தலைவர் ஈலோன் மஸ்க்.

ஆனால், உலகின் மொத்த கார்களில், ஒரு சிறு பகுதியை மட்டுமே உற்பத்தி செய்யும் டெஸ்லா நிறுவனத்தின் இந்த சந்தை மதிப்பு சரி தானா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை டெஸ்லா நிறுவன பங்குகளின் விலை 8 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. கடந்த 2020 செப்டம்பருக்குப் பிறகு டெஸ்லா பங்குகள் காணும் மிகப் பெரிய சரிவு இது. இந்த சரிவு மஸ்கின் 15 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை காலி செய்துவிட்டது என்கிறது ப்ளூம்பெர்க். டெஸ்லாவின் பங்கு விலை நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 2% சரிந்திருக்கிறது.

பொதுவாக ஈலோன் மஸ்கின் ட்விட்டுகள், டெஸ்லா பங்குகளில் அதிகமாக பிரதிபலித்திருக்கின்றன. டெஸ்லா பங்குகளின் விலை அதிகமாக இருக்கிறது என மஸ்க் ட்விட் செய்த போது, அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 14 பில்லியன் டாலர் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

Author Image
Nila Raghuraman