Press "Enter" to skip to content

சூயஸ் கால்வாயின் அறியப்படாத வரலாறு: ஆறு நாள் போரால் 8 ஆண்டுகள் முடங்கிய கப்பல் பாதை

பட மூலாதாரம், Getty Images

உலகளாவிய வர்த்தகத்தில், பத்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான சரக்குகள் ஒவ்வொரு ஆண்டும் சூயஸ் கால்வாய் வழியாக செல்கின்றன. ஆனால் பல ஆண்டுகளாக தொடரும் இந்த கப்பல் வாணிபம், கடந்த வாரம் தொடங்கி திங்கட்கிழமைவரை (மார்ச் 29) ஒருவித தடங்கலை எதிர்கொண்டது.

சூயஸ் கால்வாயின் நடுவில் சிக்கிய 400 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகலமும் கொண்ட ‘எவர்கிவன்’ கப்பலை மீண்டும் மிதக்கச்செய்யும் முயற்சி ஒரு வார போராட்டத்துக்குப்பிறகு வெற்றி பெற்றுள்ளது.

இது ஒரு சிறிய விஷயம் அல்ல. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் 9.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் சூயஸ் கால்வாய் வழியாக செல்கின்றன. ‘எவர்கிவன்’ சம்பவத்தின் தாக்கம் என்னவாக இருந்தாலும் சரி , சூயஸ் கால்வாய்க்கான பாதை வணிகத்திற்காக மூடப்படுவது இது முதல் முறை அல்ல.

இந்த கடல் பாதையில் போக்குவரத்து நெரிசல் போன்ற சம்பவங்கள் முன்னரே, வரலாற்றிலும் நிகழ்ந்துள்ளது.

அது 1967ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த நிகழ்வு. எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலம் அது. கடும் சண்டைக்கு இடையே, 15 வணிகக் கப்பல்கள் சூயஸ் கால்வாய்க்கு செல்லும் வழியில் சிக்கிக்கொண்டன. வரலாற்றுப் புத்தகங்களில் அந்த சண்டை ‘ஆறு நாள் போர்’ என்று குறிப்பிடப்படுகிறது. அந்தப் போர் ஆறு நாட்கள் மட்டுமே நீடித்ததற்கு வரலாறே சாட்சி.

ஆனால் அந்த போரின் விளைவால் சூயஸ் கால்வாய் மூடப்பட்டது. கால்வாயில் சிக்கித் தவித்த 15 கப்பல்களில் ஒன்று மூழ்கிவிட்டது. மீதமிருந்த 14 கப்பல்கள் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அங்கே நிற்க வேண்டியதாயிற்று. ஆனால் சூயஸ் கால்வாய் ஏன் இவ்வளவு ஆண்டுகள் மூடப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இந்த நெருக்கடி எப்படித் தொடங்கியது என்பதை அறிய வரலாற்றை பின்னோக்கிப் பார்ப்போம்.

அரபு நாடுகள்-இஸ்ரேல் போர்

சூயஸ் கால்வாய்

பட மூலாதாரம், Getty Images

அதிபர் கமால் அப்துல் நாசிரின் தலைமையில் எகிப்து அரசு, 1967 ஆம் ஆண்டு மே மாதம் முதல், இஸ்ரேலிய எல்லையில் தமது துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத்தொடங்கியது. இஸ்ரேலுடன் போர் மூண்டால் அந்த நாட்டை அழிப்பதே தனது நோக்கம் என்று எகிப்து கூறியது.

சிரியாவும் இஸ்ரேலை நோக்கி இதேபோன்ற அச்சுறுத்தலை விடுத்தது. பல வாரங்களுக்கு பதற்றம் நீடித்தது. பிறகு இறுதிப் போர் 1967ஆம் ஆண்டு, ஜூன் 5ஆம் தேதி தொடங்கியது. நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக அதே நாளில் இஸ்ரேல், எகிப்து மீது குண்டுவீச்சு நடத்தியது. எகிப்து விமானப்படையின் சுமார் 90% தளவாடங்கள் அழிக்கப்பட்டன.

கால்வாய் பாதையில் சிக்கிய 15 கப்பல்கள்

சிரியா விமானப்படையும் இதே போன்ற விளைவை சந்தித்தது. குண்டுமழை பொழியப்பட்ட நேரத்தில் ​​பல்கேரியா, செக்கோஸ்லோவாகியா, பிரான்ஸ், போலந்து, ஸ்வீடன், மேற்கு ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் 15 வணிகக் கப்பல்கள் சூயஸ் கால்வாய் வழியாக சென்று கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் பீட்டர் பிளாக், பிரிட்டிஷ் கப்பலான ‘எகாபேனோர்’ இல் இருந்தார். “எங்கள் கப்பல் சூயஸ் கால்வாயின் தெற்கு முனையை அடைந்தபோது, ​​இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்கிவிட்டது என்று எங்களுடைய கேப்டன் எங்களிடம் கூறினார்,”என்று 2010 ஆம் ஆண்டில் அவர் ’பிபிசி வானொலி ஃபோர்’ வானொலி நிகழ்ச்சியில் கூறினார்.

“நாங்கள் முன்னேறிச்சென்று கொண்டிருந்தபோது, ​​பாலைவனத்தின் வழியாக போர் விமானங்கள் பறப்பதை கண்டோம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இஸ்ரேலிய விமானங்கள் தாழ்வாக பறந்து கொண்டிருந்தன. அவை எகிப்திய ராணுவ நிலைகள் மீது குண்டு வீசின. அவற்றின் குறி தப்பவில்லை,”என்று அவர் குறிப்பிட்டார்.

சூயஸ் கால்வாய்

பட மூலாதாரம், Reuters

சூயஸ் கால்வாய் பாதை

மலேஷியாவிலிருந்து பிரிட்டனுக்கு ரப்பர் மற்றும் நெகிழி (பிளாஸ்டிக்) விளையாட்டுப்பொருட்களை ஏற்றிச் சென்ற ‘ஏகாபேனோர்’ கப்பல், சூயஸ் கால்வாயில் சிக்கித் தவித்த அந்த 15 கப்பல்களில் ஒன்றாகும்.

அப்போது சீனாவிலிருந்து அக்ரூட் பருப்புகள் மற்றும் பாமாயில் கொண்டு செல்லும் ‘மெலம்பஸ்’ கப்பலில் பணியாற்றியவர் ஜான் ஹக்ஸ். “இரண்டு இஸ்ரேலிய போர் விமானங்கள் சினாய் பாலைவனத்திலிருந்து பறந்தன. அவை எங்கள் கப்பலைக் கடந்து சென்றபோது செவிப்பறையே கிழிந்துவிடுவதைப்போல இருந்தது,”என்று அவர் ’பிபிசி வானொலி ஃபோரிடம்’ கூறினார்.

இஸ்ரேல் குண்டுவீச்சில் ஒரு கப்பல் மூழ்கியது. அது ஒரு அமெரிக்க கப்பல். இதற்கிடையில், சூயஸ் கால்வாயில் இருக்கும் கப்பல்கள் ’க்ரேட் பிட்டர்’ ஏரியில் தஞ்சமடைய வேண்டியிருந்தது.

“அந்த நேரத்தில் சூயஸ் கால்வாயில் சிக்கித் தவித்த கப்பல்கள், தங்களை இலக்காக்கிக் கொள்ள விரும்பவில்லை. எனவே அவை கிரேட் பிட்டர் ஏரியில் தஞ்சம் புகுந்தன,” என்று அமெரிக்காவின் காம்ப்பெல் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாற்றுப் பேராசிரியர், சைல் மெர்கோக்லியானோ கூறுகிறார்.

போரின் இரண்டாம் நாளில், சூயஸ் கால்வாயின் இறுதிப்பகுதியில் எகிப்து கப்பல்களை மூழ்கடித்தது. சூயஸ் கால்வாயை இஸ்ரேல் பயன்படுத்த முடியாத வகையில் வெடிபொருட்களை எகிப்து ராணுவம் அங்கு நிரப்பியது. மூன்று அரபு நாடுகளின் தோல்வியுடன் இந்த போர் ஜூன் 10 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ஆனால் சூயஸ் கால்வாயை எகிப்து மூடிவிட்டது. அங்கே சிக்கிய 14 கப்பல்களால் வெளியேற முடியவில்லை.

சூயஸ் கால்வாய்

பட மூலாதாரம், Getty Images

கிரேட் பிட்டர் லேக்’ சங்கம்

மோதலின் உச்சத்தில் மற்றும் நெருக்கடி முடிந்தபின், கிரேட் பிட்டர் ஏரியில் சிக்கிய கப்பல்களில் இருந்தவர்களின் வாழ்க்கை சலிப்படையத் தொடங்கியது. 2010ஆம் ஆண்டில், பிபிசி வானொலி ஃபோரில் ஒலிபரப்பப்பட்ட ‘தி யெல்லோ ஃப்ளீட்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பீட்டர் ஸ்னோ, ”தூதாண்மை பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சிக்கித் தவித்த பணியாளர்கள் பலர் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்களில் சிலர் மூன்று மாதங்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது,” என்று சொன்னார்.

“சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவையோ அவற்றால், எகிப்து மற்றும் இஸ்ரேலுடன் ஒரு உடன்பாட்டை எட்ட முடியவில்லை. ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை,”என்று பேராசிரியர் சைல் மெர்கோக்லியானோ விளக்குகிறார்.

சூயஸ் கால்வாயின் முற்றுகை காலவரையின்றி சென்றுகொண்டிருந்த நிலையில், ​​கப்பலில் உள்ள பொருட்கள் மற்றும் இயந்திரங்களை கவனித்துக்கொள்வதற்காக கப்பல் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அங்கேயே நிறுத்தி வைத்திருந்தன. அவர்கள் அவ்வப்போது மாற்றப்பட்டனர்.

இங்கு சிக்கித் தவித்த அல்லது பணியமர்த்தப்பட்ட கப்பல் நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் பணியை தொடரவும், மன ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக்கொள்ளவும், ‘கிரேட் பிட்டர் லேக் சங்கத்தை’ உருவாக்கினர் என்று மெர்கோக்லியானோ கூறினார்.

‘கிரேட் பிட்டர் லேக் சங்கம்’ ஒலிம்பிக்கின் அடிப்படையில், ஒரு விளையாட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்தது. இதில் டைவிங், படப்பிடிப்பு, ஸ்பிரிண்டிங், வாட்டர் போலோ, வில்வித்தை போன்ற 14 விளையாட்டுகளில் வெவ்வேறு நாடுகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டன. தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் கூட விநியோகிக்கப்பட்டன.

சூயஸ் கால்வாய்

பட மூலாதாரம், Getty Images

டேபிள் டென்னிஸ் முதல் கால்பந்து வரை எல்லா விளையாட்டுகளிலும் இந்த சங்கம் ஈடுபட்டது. தன் சொந்த அஞ்சல் அலுவலகத்தைத் திறந்து, தபால் தலைகளையும் வெளியிட்டது. பின்னர் அவை உலகெங்கிலும் உள்ள தபால் தலை சேகரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.

“ஆனால் பிற்காலத்தில், முற்றுகை முடிவடையாது என்று உணரப்பட்டபோது, ​​பல நிறுவனங்கள் தங்கள் கப்பலை கைவிட்டு, காப்பீட்டு நிறுவனங்களிடம் உரிமை கோரல்களை அளித்தன,” என்கிறார் மெர்கோக்லியானோ.

சினாய் பாலைவனத்திலிருந்து பறக்கும் மணல் துகள்கள், இந்த கப்பல்களை மஞ்சள் நிற போர்வையால் மூடின. இந்தக்கப்பல்கள் கைவிடப்பட்ட பின்னர் அவை ‘ யெல்லோ ஃப்ளீட்’ என்று அழைக்கப்பட்டன.

சூயஸ் கால்வாயின் முற்றுகையால் ஏற்பட்ட விளைவு

கடல்சார் வரலாற்றின் வல்லுநர் லிங்கன் பென் ‘ ‘ ‘தி சீ அண்ட் தி சிவிலைசேஷன் – எ மேரிடைம் ஹிஸ்டரி ஆஃப் தி வோர்ல்ட்’ (கடல் மற்றும் நாகரிகம்: உலகின் கடல் வரலாறு’) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

“சூயஸ் கால்வாய் 1869இல் தொடங்கியது. ஆனால் 1960களில் இந்த பாதை வழியாக வர்த்தகம் கணிசமாக வளர்ந்தது. இது ஒரு முக்கியமான கடல் பாதை ஆக இருந்தது. ஏனெனில் இந்த பாதை வழியாக செல்லும் கப்பல்கள் ஆப்பிரிக்கா வழியாக செல்ல வேண்டியிருக்காது,”என்று அவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.

சூயஸ் கால்வாய்

பட மூலாதாரம், Getty Images

“எனவே 1967ஆம் ஆண்டில் இந்தப் பாதை மூடப்பட்டபோது, ​​அது உலகம் முழுவதையும் பாதித்தது. இது நீண்ட காலம் நீடித்தது. மிகப்பெரிய தாக்கம் எகிப்துக்கு ஏற்பட்டது. ஏனெனில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு சதவிகிதம், சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் கப்பல்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து வந்துகொண்டிருந்தது,” என்று லிங்கன் பென் கூறுகிறார்.

”அரபு நாடுகளைப் பொருத்தவரை அவை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாயின. ஏனென்றால் அவற்றின் எண்ணெய் இந்த வழியேதான் செல்ல வேண்டியிருந்தது. அதன் விளைவாக ரஷ்யா, ஐரோப்பாவிற்கு அதிக எண்ணெயை விற்கத் தொடங்கியது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் உலகின் வர்த்தகத்தை முன்னே கொண்டுசெல்லும் சக்திகளாக இருந்தன. சீனா அப்போது பொருளாதார வல்லரசாக இருக்கவில்லை. ஐரோப்பா அனுப்பிய கப்பல்கள் சிறியவை. அவை ஆப்பிரிக்காவின் தெற்கு கடற்கரை வழியாக செல்ல வேண்டியிருந்தது. இது போக்குவரத்து செலவை அதிகரித்தது. “என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

“ஆப்பிரிக்காவுக்கான பாதை நீண்டதாக இருந்ததால், இரண்டு சிறிய கப்பல்களை அனுப்புவதற்குப் பதிலாக ஒரு பெரிய கப்பலை அனுப்ப பின்னர் முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு கப்பல்களின் அளவு பெரிதாகத் தொடங்கின. 1975ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாய்க்கு செல்லும் பாதை மீண்டும் திறந்தபோது, அந்த பாதையை கடந்து செல்ல முடியாத அளவிற்கு சில கப்பல்கள் பெரிதாக இருந்தன. எனவே அப்போதிலிருந்து, கால்வாய் பாதையை அகலப்படுத்தும் பணியில் எகிப்து ஈடுபட்டது, “என்கிறார் லிங்கன் பென்.

சூயஸ் கால்வாய் எவ்வாறு திறக்கப்பட்டது?

“சூயஸ் கால்வாயை மூடுவதன் மூலம் எகிப்து மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்பியது. மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவானவை என்று அது நம்பியது. எண்ணெய் வழங்கல் மற்றும் சர்வதேச வர்த்தகத்தை சீர்குலைப்பதன் மூலம் மத்திய கிழக்கில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள, ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் அழுத்தம் தர முடியும் என்று எகிப்து நினைத்தது,” என்று லிங்கன் பென் குறிப்பிடுகிறார்.

ஆனால் எகிப்தின் இந்த சிந்தனை பலனளிக்கவில்லை மற்றும் சூயஸ் கால்வாயின் முற்றுகை நீடிக்கத் தொடங்கியது. இதற்கு ஒரு காரணம் என்னவென்றால், யாருமே தங்களை பலவீனமாக காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

சூயஸ் கால்வாய்

பட மூலாதாரம், Reuters

இருப்பினும், சூயஸ் கால்வாயின் முற்றுகை தீர்வதற்கான பாதை மற்றொரு போரால் திறந்தது. யோம் கிப்பூர் போர் ,1973 ஆம் ஆண்டில் நடந்தது. இதில், எகிப்தும் சிரியாவும் இஸ்ரேலைத் தாக்கின. யூத நாள்காட்டியில் மிகவும் புனிதமானதாக கருதப்படும் தேதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

“யோம் கிப்பூர் போர், அனைத்து தரப்பினரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வந்தது. சூயஸ் கால்வாய்யை திறப்பதே, போர் நிறுத்த உடன்பாடாக ஆனது. சூயஸ் கால்வாயை மூடியதால் யாருக்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று அனைவரும் புரிந்துகொண்டனர்,” என்று லிங்கன் பென் விளக்குகிறார். நாசீரின் வாரிசான அன்வர் அல் சதாத்தின் தலைமையில் எகிப்து தனது பழைய முடிவை மாற்றியது.

நீரில் மூழ்கிய கப்பல்கள் மற்றும் வெடிபொருட்களை அகற்ற ஒரு வருடம் ஆனது. இறுதியாக 1975ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி, சூயஸ் கால்வாய் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது. அரபு-இஸ்ரேலிய போர் தொடங்கிய நாள் இது.

அங்கு சிக்கிய 14 கப்பல்களில், இரண்டு கப்பல்களால் மட்டுமே மீண்டும் கடலில் மிதக்க முடிந்தது. இந்த இரண்டு கப்பல்களும் ஜெர்மனியைச் சேர்ந்தவை. மீதமுள்ள கப்பல்கள் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டன அல்லது அங்கேயே அழிக்கப்பட்டன.

“சூயஸ் பாதை எவ்வளவு முக்கியமானது மற்றும் அந்த கடல் பாதை மூலம் நடைபெறும் வர்த்தகம் எவ்வளவு ஆபத்து நிறைந்தது என்பதையும், இது போன்ற தடைகள் நமக்கு தெரியப்படுத்துகின்றன. ஒரு கப்பல் அல்லது ஒரு போர், உலக வணிகத்தில் எந்த நேரத்திலும் தடைகளை ஏற்படுத்தக்கூடும்,” என்று சொல்கிறார் மெர்கோக்லியானோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »