Press "Enter" to skip to content

மார்வா எல்செல்தார்: “சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியத்துக்கு என்னை குற்றம்சாட்டினர்”

  • ஜோஷ்வா சீதம்
  • பிபிசி

பட மூலாதாரம், MARWA ELSELEHDAR

கடந்த மாதம், மார்வா எல்செல்தார் விசித்திரமான ஒன்றைக் கவனித்தார்.

அப்போதுதான் உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான சூயஸ் கால்வாயில் எவர் கிவன் என்ற கப்பல் சிக்குண்ட செய்தி வெளியாகி இருந்தது.

இதைத்தொடர்ந்து தனது திறன்பேசியை பார்த்த மார்வாவுக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏனெனில், சூயல் கால்வாயில் இந்த கப்பல் தரை தட்டியத்திற்கு மார்வாவே காரணம் என இணைய கட்டுரைகள் மற்றும் சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டப்பட்டது.

“நான் அதிர்ந்துவிட்டேன்” என்று கூறும் மார்வா எல்செல்தார், எகிப்து நாட்டின் முதல் பெண் கப்பல் கேப்டனாவார்.

சூயல் கால்வாயில் இந்த போக்குவரத்து தடை ஏற்பட்டபோது, அங்கிருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள அலெக்ஸாண்டிரியாவில் ஐடா IV என்ற கப்பலில் மார்வா பணியாற்றிக் கொண்டிருந்தார்.

எகிப்தின் கடல்சார் பாதுகாப்பு அமைப்புக்கு சொந்தமான இந்த கப்பல் அப்போது செங்கடலில் உள்ள ஒரு கலங்கரை விளக்கத்திற்கு பொருட்களை விநியோகிக்க சென்று கொண்டிருந்தது. அரபு லீக் நடத்தும் பிராந்திய பல்கலைக்கழகமான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கடல் போக்குவரத்துக்கான அரபு அகாடமியின் (AASTMT) மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் இந்த கப்பல் பயன்படுத்தப்படுகிறது.

எவர் கிவன் கப்பல் தரை தட்டியதில் மார்வா எல்செல்தாரின் பங்கு பற்றிய வதந்திகள் பெரும்பாலும் ஒரு போலிச் செய்தி கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட்களால் தூண்டப்பட்டன. அராப் நியூஸ் என்ற ஊடகத்தால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் அந்த செய்தியில், சூயஸ் சம்பவத்தில் மார்வாவுக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மார்ச் 22ஆம் தேதி பதிப்பிக்கப்பட்ட அந்த புனையப்பட்ட செய்திக் கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட், எண்ணற்ற ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டன.

அது மட்டுமின்றி, மார்வாவின் பெயரில் அங்கீகாரம் இல்லாமல் ட்விட்டரில் உலா வரும் 20க்கும் மேற்பட்ட கணக்குகளில் எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிய விவகாரத்தில் அவருக்கு தொடர்பிருப்பதாக போலியான தகவல்கள் பரப்பப்பட்டன.

இந்த நிலையில், இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய, மார்வா எல்செல்தார், யார், எந்த காரணத்திற்காக இந்த போலிச் செய்தியை முதலில் பரப்பினார்கள் என்று தனக்கு தெரியாது என்கிறார்.

மார்வா எல்செல்தார்

பட மூலாதாரம், MARWA ELSELEHDAR

“இந்த துறையில் ஒரு வெற்றிகரமான பெண்ணாக இருப்பதாலோ நான் எகிப்தியனாக இருப்பதாலோ நான் இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று உணர்ந்தேன். அது ஏன எனக்கு உறுதியாகத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.

வரலாற்றில் ஆண்களால் மட்டுமே ஆதிக்கம் செலுத்தப்பட்டு வரும் இந்த துறையில் மார்வா, இதுபோன்ற சவால்களை சந்திப்பது முதல்முறையல்ல. உலகம் முழுவதும் கடல்சார் பணிகளில் ஈடுபட்டுள்ளோரில் வெறும் 2 சதவீதத்தினரே பெண்கள் என்று சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவிக்கிறது.

தான் எப்போதும் கடலை நேசிப்பதாகவும், தனது சகோதரர் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கடல் போக்குவரத்துக்கான அரபு அகாடமியில் சேர்ந்தது, தன்னையும் கடல்சார் பணியில் சேர ஊக்கமளித்ததாகவும் மார்வா கூறுகிறார்.

அந்த காலகட்டத்தில், அகாடமியில் ஆண்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்த நிலையிலும், மார்வா தன்னம்பிக்கையுடன் விண்ணப்பித்தார். அதைத்தொடர்ந்து எகிப்தின் அப்போதைய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் சட்ட மறுஆய்வுக்குப் பிறகு மார்வாவுக்கு அகாடமியில் சேர முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது.

தனது படிப்பின்போது, அனைத்து விடயங்களிலும் பாலின அடிப்படையிலான வேறுபாட்டுக்கு உள்ளதாக மார்வா கூறுகிறார்.

“நான் முதன்முதலாக கப்பலில் பணியாற்றியபோது உடன் பணியாற்றியவர்களில் அனைவரும் வெவ்வேறு மனப்பான்மை கொண்ட வயதான ஆண்கள் என்பதால் ஒத்த எண்ணவோட்டம் கொண்டவர்களைக் கண்டுபிடித்து பேசுவது என்பது கடினமாக இருந்தது” என்று அவர் கூறுகிறார். “இதுபோன்ற விடயங்களை தனியாக சந்தித்து, அது என் மனநலத்தை பாதிக்காமல் கடந்துசெல்வது என்பது சவாலான விடயமாக இருந்தது.”

“எங்களுடைய சமூகத்தில், நீண்டகாலத்திற்கு பெண்கள் குடும்பத்தினரிடமிருந்து தனித்திருந்து கப்பல்களில் பணிபுரிவதை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வளரவில்லை. ஆனால், நீங்கள் நேசிப்பதை செய்யும்போது, அதற்கு அனைவரிடமும் ஒப்புதல் பெற வேண்டுமென்பது அவசியமில்லை” என்று மார்வா எல்செல்தார் கூறுகிறார்.

மார்வா எல்செல்தார்: "சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியத்துக்கு என்னை குற்றஞ்சாட்டினர்"

பட மூலாதாரம், EPA

பல்கலைக்கழக பட்டம் பெற்றதும், கப்பலின் பர்ஸ்ட் மேட் எனப்படும் துணை கேப்டன் பதவிக்கு நிகரான நிலைக்கு உயர்ந்த மார்வா, பிறகு 2015ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் விரிவுபடுத்தப்பட்ட பிறகு, அதன் வழியே முதலாவதாக பயணித்த ஐடா IV என்ற கப்பலின் கேப்டனாகவும் செயல்பட்டார். அப்போது, சூயஸ் கால்வாயை கடந்த மிகவும் இளைய மற்றும் எகிப்தை சேர்ந்த முதல் பெண் கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றார்.

2017ஆம் ஆண்டில் எகிப்தின் மகளிர் தின கொண்டாட்டத்தின் போது ஜனாதிபதி அப்தெல் பத்தா எல்-சிசியால் கௌரவிக்கப்பட்டார். கடந்த மாதம் சூயஸ் கால்வாயில் எவர் கிவன் கப்பல் சிக்குண்ட விவகாரத்தில் தனக்கு பங்கு இருப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டபோது, அது தனது பணியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மார்வா அஞ்சினார்.

“அந்த போலிச் செய்தி ஆங்கிலத்தில் இருந்ததால், அது விரைவாக மற்ற நாடுகளுக்கும் பரவியது. அந்த கட்டுரையில் உள்ளதை மறுக்க நான் மிகவும் கடினமாக முயற்சித்தேன். ஏனெனில் அது எனது நற்பெயரைப் பாதிப்பதுடன், நான் இப்போது அடைந்துள்ள உயரத்திற்கு வர எடுத்த அனைத்து முயற்சிகளையும் பாதிக்கிறது” என்று மார்வா வருத்தத்துடன் கூறுகிறார்.

ஆனால், இந்த போலிச் செய்திக் கட்டுரைக்கு கிடைத்த சில பதில்கள் தன்னை உற்சாகப்படுத்தியதாக அவர் கூறுகிறார்.

“அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த விவரங்கள் மிகவும் எதிர்மறையாகவும், கடுமையாகவும் இருந்தன. ஆனால், அதே சமயத்தில் இதுதொடர்பாக எண்ணற்ற மக்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களிடம் இருந்து நான் பெற்ற வார்த்தைகள் எனக்கு ஆதரவளித்தன. நான் பெறும் அனைத்து ஆதரவு மற்றும் அன்பில் கவனம் செலுத்த முடிவு செய்ததால், என் கோபம் நன்றியுணர்வாக மாறியது.”

“அதுமட்டுமின்றி, இதன் மூலம் முன்னெப்போதுமில்லாததை விட நான் இப்போது பிரபலமாகிவிட்டேன்.”

ஒரு கேப்டனுக்கான முழு அதிரகாரத்தை பெரும் தேர்வொன்றை அடுத்த மாதம் சந்திக்கவுள்ள மார்வா, இந்த துறையில் பெண்களுக்கான முன்மாதிரியாக தான் தொடர முடியும் என்று நம்புகிறார்.

“நீங்கள் விரும்பும் விடயங்களுக்காக போராடுவதோடு, எந்த எதிர்மறையும் உங்களைப் பாதிக்க விடக்கூடாது என்பதை கடல்சார் துறையில் பணியாற்ற விரும்பும் பெண்களுக்கு எனது செய்தியாக கூறிக்கொள்கிறேன் ” என்று மார்வா மேலும் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »