Press "Enter" to skip to content

சூயஸ் கால்வாய்: சிக்கல் தீராததால் 25 இந்தியர்களுடன் நிற்கும் `எவர் கிவ்வன்’ கப்பல்

பட மூலாதாரம், Getty Images

கடந்த மாதம் சூயஸ் கால்வாயில் சிக்கிய `எவர் கிவன்’ சரக்குக் கப்பலை மனிதர்களின் இடைவிடாத முயற்சியும், இயற்கையின் கருணையும் சேர்ந்து மீட்டன. ஆனால் பிரச்னை அத்துடன் முடிந்துவிடவில்லை.

உண்மையில் மாலுமிகள் உள்ளிட்ட 25 இந்தியர்களுடன் `எவர் கிவன்’ கப்பல் இன்னும் சூயஸ் கால்வாயில்தான் இருக்கிறது. எகிப்து அதிகாரிகள் அதைச் சிறைப்பிடித்து வைத்திருக்கிறார்கள்.

கால்வாயை அடைத்து நின்றதால் ஏற்பட்ட இழப்பைக் கட்டினால்தான் `எவர் கிவன்’ கப்பலை வெளியே கொண்டு செல்ல முடியும் என அதன் உரிமையாளர்களுக்கு எகிப்து அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

தற்போது கிரேட் பிட்டர் லேக் என்ற அகலமான ஏரிப் பகுதியில் எவர் கிவன் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் சூயஸ் கால்வாயின் அங்கம்தான். இங்கிருந்து சர்வதேசக் கடல் பகுதியை அடைவதற்கு சூயஸ் கால்வாயில் இன்னும் 90 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்தாக வேண்டும்.

விசாரணை முடிந்து இழப்பீடு செலுத்தப்பட்ட பிறகுதான் கப்பலை விடுவிக்க முடியும் என்று சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி தெரிவித்திருக்கிறார்.

ஒசாமா ராபி

பட மூலாதாரம், Getty Images

தொலைக்காட்சியில் பேசிய அவர், “இழப்பீடு தர கப்பல் நிர்வாகம் ஒப்புக் கொண்டதும் கப்பலின் பயணத்துக்கு அனுமதி கிடைக்கும்” என்று கூறினார்.

சூயஸ் கால்வாய் ஆணையத்தின் கணக்குப்படி மொத்த இழப்பீடு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பில் 75 ஆயிரம் கோடி ரூபாய்.

கப்பல்கள் செல்வதற்கான கட்டண வருவாயில் ஏற்பட்ட இழப்பு, நீரை வெளியேற்றியது, மீட்புக் கருவிகளுக்கான செலவு ஆகியற்றைச் சேர்த்து இழப்பீடு கணக்கிடப்பட்டிருப்பதாக ராபி கூறினார்.

ஆனால் எவர் கிவன் கப்பலை இயக்கும் ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம், இதுவரை சூயஸ் கால்வாய் அமைப்பிடம் இருந்து இழப்பீடு கோரி எந்தத் தகவலும் வரவில்லை என்று கூறியிருக்கிறது.

விசாரணையின் நிலை

சூயஸ் கால்வாய்

பட மூலாதாரம், Getty Images

சூயஸ் கால்வாயிலேயே கப்பல் தொடர்ந்து சிறைபட்டிருக்கும் நிலையில், கப்பல் ஏன் தரைதட்டியது என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில், பலமான காற்றே காரணம் எனக் கூறப்பட்டது. ஆனால், மனிதத் தவறுகளும் காரணமாக இருக்கலாமா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

காலநிலை காரணமாகவே கப்பல் தரைதட்டியது என்பதை சூயஸ் கால்வாய் ஆணையம் ஏற்கவில்லை. “மோசமான வானிலையால் கால்வாய் ஒருபோதும் மூடப்பட்டதில்லை” என்கிறார் ராபி.

சம்பவத்துக்கு கப்பலின் அளவு காரணமாக இருக்கலாம் என்பதையும் அவர் மறுக்கிறார். இதைவிட பெரிய கப்பல்கள் எந்தச் சிக்கலும் இன்றி கால்வாயைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றன என்றும் அவர் வாதிடுகிறார்.

நடந்தது என்ன?

கடந்த மார்ச் 23-ஆம் தேதி சூயஸ் கால்வாயில் சென்று கொண்டிருந்த எவர்கிவன் கப்பல் கரையின் ஒரு பக்கத்தில் மோதி சேற்றில் சிக்கியது. 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல், சீனாவில் இருந்து நெதர்லாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மாலுமிகள் உள்பட அந்த கப்பலில் இருந்த 25 பேரும் இந்தியர்கள்.

சேற்றை அள்ளும் இயந்திரங்களும், இழுவைப்படகுகளும் கப்பலை மீட்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன. கடல் அலை அதிகரித்ததுடன், மனித முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஏப்ரல் மூன்றாம் தேதி கப்பல் மீட்கப்பட்டது.

சூயஸ் கால்வாயின் முக்கியத்துவம்

உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களுள் ஒன்று சூயஸ் கால்வாயின். உலகின் 12 சதவிகித வர்த்தகம் இதன் வழியாகவே நடக்கிறது. ஒரு நாளைக்கு 20 லட்சம் பீப்பாய் எண்ணெய் இந்த வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.

சூயஸ் கால்வாய்

பட மூலாதாரம், AFP

எவர் கிவன் கப்பல் சிக்கியிருந்த சில நாட்களின்போது கால்வாய் அடைபட்டிருந்ததால், 360 கப்பல்கள் பயணத்தைத் தொடர முடியாமல் தவித்து நின்றன. இதனால் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

சூயஸ் கால்வாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் சூயஸ் கால்வாயின் பங்களிப்பு சுமார் 2 சதவிகிதம் ஆகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »