Press "Enter" to skip to content

சீனாவின் தியானென்மென் சதுக்கம்: உலகை அதிரவைத்த படுகொலை நடந்தது எப்படி?

பட மூலாதாரம், AFP

சீனாவில் ஜனநாயக உரிமை கேட்டுப் போராடிய மாணவர்கள் ஏராளமானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடம் தியானென்மென் சதுக்கம். தியானென்மென் என்ற பெயரை உலகம் இன்னும் அதிர்ச்சியோடு நினைவுகூர்வதற்கு இந்தப் போராட்டமும், அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அரசு கையாண்ட வழிமுறைகளால் எண்ணற்றவர்கள் கொல்லப்பட்டதும்தான் காரணம். கம்யூனிஸ்ட் சீனாவின் எதிரிகளை மட்டுமல்ல, கம்யூனிசத்தின் ஆதரவாளர்கள் பலரையும் அதிர இந்த வைத்த சம்பவத்தை தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கவிஞர் இன்குலாப் இப்படிப் பதிவு செய்தார். “என் நம்பிக்கைத் திசைகளில் எனது கொடிகள் முறிகின்றன. இனி முன்மொழியப்பட ஒரு தேசமில்லை. நூறு பூக்களின் சருகுகளோடு இளம் கபாலங்கள் நூறாயிரம்”. இப்படி உலகம் முழுவதும் சித்தாந்த எல்லைகளைக் கடந்து பலரையும் அதிரவைத்த இந்த சம்பவம் நடந்தது 1989ல். இதன் பின்னணி என்ன? தியானென்மென் சதுக்கத்தில் என்ன நடந்தது? எப்படி நடந்தது?

தியானென்மென் சதுக்க சம்பவ நினைவு தினமான இன்று, அந்த வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் தியானென்மென் சதுக்கம் ஒரு பெரும் போராட்டத்தின் நிகழிடம் ஆனது. ஆனால் அந்த போராட்டம் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களால் நசுக்கப்பட்டது.

அந்த சம்பவம் தொடர்பாக ஒரு முக்கிய வரலாற்று புகைப்படமும் உண்டு. தனி ஒரு போராட்டக்காரர் டாங்கி வரிசையை மறித்து நிற்பதைக்காட்டும் காட்சி அது. 20ஆம் நூற்றாண்டின் ஒரு முக்கிய புகைப்படமாகவும் இது கருதப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு வித்திட்டது எது?

டியான்னென்மென் சதுக்க போராட்டக்காரர்கள்

பட மூலாதாரம், Getty Images

1980களில் சீனாவில் பெரிய மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சில தனியார் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு முதலீடுகளுக்கும் அனுமதி வழங்க தொடங்கியது.

சீனத் தலைவர் டெங் ஷியோபிங், பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்தலாம் என நம்பிக்கைக் கொண்டிருந்தார்.

இருப்பினும் இந்த நடவடிக்கை ஊழல்களுக்கு வித்திட்டது. அதே நேரம் அரசியலில் வெளிப்படைத் தன்மை தேவை என்ற கோரிக்கையையும் இந்த சீர்திருத்தங்கள் உடன் கொண்டுவந்தன.

வேகமாக மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஒரு தரப்பும், நாட்டை கடுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று கூறும் கடும்போக்குவாதிகள் மறு தரப்பும் என சீன கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இருவிதமான போக்குகள் முகம் காட்டின.

1980களில் இடைக்காலத்தில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் ஒன்று தொடங்கியது.

அந்த போராட்டத்தில் வெளிநாட்டில் வாழ்ந்தவர்களும், புதிய யோசனைகள் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்துக்குப் பழகியவர்களும் கலந்து கொண்டனர்.

போராட்டம் எப்படி வளர்ந்தது?

டெங் சியாவ்பிங் & ஹூ யாவ்பங்

பட மூலாதாரம், AFP

1989 ஆண்டின் வசந்த காலத்தில், மேம்பட்ட அரசியல் உரிமைகள் கோரி போராட்ட மேகம் சூல் கொண்டது.

முக்கிய அரசியல் தலைவரும், பொருளாதார, அரசியல் மாற்றங்களை ஆதரித்தவருமான ஹு யோபாங்கின் இறப்பு போராட்டக்காரர்களை தூண்டியது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் எதிரிகளால் கட்சியின் உயர் பதவியிலிருந்து அவர் ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தார்.

ஏப்ரல் மாதம் ஹுவின் இறுதிச் சடங்கின்போது ஆயிரக்கணக்கானோர் கூடினர். அவர்கள் பேச்சுரிமை கோரினர். கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் வலியுறுத்தினர்.

அதற்கு அடுத்த வாரம் போராட்டக்காரர்கள் தியானென்மென் சதுக்கத்தில் கூடினர். இந்தப் போராட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் வரை கூடியதாக கணிக்கப்படுகிறது.

இந்த சதுக்கம் பெய்ஜிங்கின் புகழ்பெற்ற இடங்களில் ஒன்று.

அரசாங்கத்தின் எதிர்வினை என்னவாக இருந்தது?

முதலில் அரசாங்கம் போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த ஒரு நேரடி நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்பதில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. சிலர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். சிலர் பெரிதாக நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம் என்றனர்.

இறுதியில் கடும்போக்காளர்கள் வென்றனர். பெய்ஜிங்கில் மே மாத இறுதியில் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்தது.

ஜூன் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தியானென்மென் சதுக்கத்தை நோக்கி படைகள் சென்றன. அந்தப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்; போராட்டக்காரர்களை கைது செய்தனர்.

புகழ்பெற்ற புகைப்படத்தில் உள்ள நபர் யார்?

டேங்கர்களை எதிர்த்த மனிதர்

பட மூலாதாரம், Getty Images

ஜூன் மாதம் 5ஆம் தேதி, சதுக்கத்தில் இருந்து வெளியேறிய ராணுவ டாங்கி வரிசை முன், இரண்டு கைப்பைகளை வைத்து கொண்டு சாமானியராகத் தோன்றிய ஒரு மனிதர் மறித்துக்கொண்டு நின்றார்.

அதன்பின் அவர் இரண்டு படையினரால் இழுத்து தள்ளப்பட்டார்.

அந்த நபருக்கு பிறகு என்ன ஆனது என்பது தெரியவில்லை. ஆனால் அந்தக் காட்சியைப் பதிவு செய்த புகைப்படம், அந்தப் போராட்டத்தின் அடையாளமாக மாறியது.

அந்தப் போரட்டத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்?

போராட்டத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது.

200 பொதுமக்களும், பாதுகாப்பு படையை சேர்ந்த சில டஜன் பேரும் உயிரிழந்ததாக சீன அரசு 1989ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் தெரிவித்தது.

ஆனால், நூற்றுக் கணக்கானோர் முதல், பல்லாயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று வெவ்வேறு கணிப்புகள் வெளியாயின.

சீனாவுக்கான பிரிட்டனின் தூதர் சர் ஆலன் டொனால்ட் அனுப்பிய ராஜீய தகவல் பறிமாற்றம் ஒன்றில், இந்த சம்பவத்தில் 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த ஆவணம் 2017ம் ஆண்டு வெளியானது.

சீன மக்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியுமா?

சீனர்கள்

பட மூலாதாரம், Getty Images

தியானென்மென் சதுக்கத்தில் என்ன நடந்தது என்பது சீனாவில் அதிகம் பேசப்படக் கூடிய ஒரு விஷயமன்று.

படுகொலை தொடர்பான இணையப் பதிவுகள் அரசால் உடனுக்குடன் நீக்கப்பட்டுவிடும்.

எனவே போராட்டம் நடந்தபோது பிறந்திருக்காத தற்போதைய தலைமுறையினருக்கு தியானென்மென் சதுக்கம் குறித்து அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »