Press "Enter" to skip to content

இந்தியா- சீனா எல்லை மோதலுக்குப் பிறகு, மீண்டும் அதிகரிக்கிறது இந்தியாவுக்கான சீன ஏற்றுமதி: ஒரு பகுபாய்வு

  • சச்சின் கோகோய்
  • தெற்காசிய மூத்த ஆசிரியர்

பட மூலாதாரம், Getty Images

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய-சீன ராணுவங்களுக்கிடையிலான எல்லை மோதலை அடுத்து இரு தரப்பு உறவுகள் சுணக்கம் கண்ட நிலையில், மிகப் பெரிய உற்பத்தியாளர் நாடான சீனாவில் இருந்து இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்ற முழக்கம் இந்திய ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்தது.

கோவிட் -19 தொற்று நோயின் உலகளாவிய பரவலுக்கு பெய்ஜிங் தான் காரணம் என்ற ஊகங்களையடுத்து இந்தியாவில் ஏற்கனவே உருவாகியிருந்த சீன எதிர்ப்பு உணர்வுகளுக்கு எல்லை மோதல்கள் தீனி போட்டன.

சீன இறக்குமதிக்கு நேரடி கட்டுப்பாடுகளை விதித்து நிலைமையை மேலும் மோசமடையச் செய்ய விரும்பாத நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, சீன இறக்குமதியைக் குறைக்கும் வகையில் மறைமுகமான சில நடவடிக்கைகளை எடுத்தது.

மின் வணிகத் தளங்கள் விற்கும் பொருட்களில் தயாரிக்கப்பட்ட நாட்டின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டது அரசு. இது அரசு மேற்கொண்ட மறைமுக நடவடிக்கைகளில் ஒன்று. சீனத் தயாரிப்புகளை அடையாளம் கண்டு நுகர்வோர் விரும்பினால், அவற்றைத் தவிர்க்கும் வாய்ப்பை அளிப்பதே இதன் நோக்கம்.

சீனாவிலிருந்து வரும் சரக்குகளுக்கான சுங்க அனுமதியை அதிகாரிகள் தாமதப்படுத்துவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கூடுதலாக, இறக்குமதி மாற்றுக்கான சாத்தியக்கூறுகளை அடையாளம் காணும் விதமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை ரகம் பிரித்து அரசாங்கம் மறுஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. தோல் மற்றும் காலணிகள், குளிர்சாதனம், தளவாடங்கள், டயர் மற்றும் பொம்மைகள் உட்பட நான்கு முதல் ஐந்து ரகங்களை இறக்குமதி மாற்றுக்கு இந்தியா அடையாளம் கண்டுள்ளது.

சீன இறக்குமதிகள் வேகம் பெறுகின்றன

சீனா வர்த்தகம்

பட மூலாதாரம், Getty Images

அண்மை மாதங்களில் சீன இறக்குமதிகள் மீண்டும் வேகம் பெற்றுள்ளன

பிப்ரவரி 2021 வரை கிடைக்கப்பெற்ற இந்திய அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, சீன இறக்குமதி, சரிவிலிருந்து மீண்டு வருவது மட்டுமல்லாமல், அடுத்தடுத்த இரண்டு மாதங்களில் இரண்டு ஆண்டு மாதாந்திர சாதனையையும் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2020 டிசம்பரில் 6.54 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. அடுத்த மாதத்திலேயே 6.68 பில்லியன் டாலராக இது அதிகரித்தது. கடந்த இரண்டு ஆண்டு காலத்தில், இதற்கு முன்பாக இறக்குமதி அதிகமாக இருந்தது 2019 செப்டம்பர் மாதத்தில். அந்த மாதம் 6.44 பில்லியன் டாலர் இறக்குமதி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் இறக்குமதியில் சரிவு காணப்பட்டது. மார்ச் 2021ல் முடிவடைந்த இரண்டு ஆண்டு காலத்தில், மார்ச் மாதத்தில் 2.88 பில்லியன் டாலர் இறக்குமதி என்ற மிகக் குறைந்த மதிப்பு பதிவானது.கடந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்தில் எல்லை மோதல் ஏற்பட்டது. கல்வான் ஆற்றுப் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பயங்கர மோதல்களில் 20 இந்திய வீரர்களும் குறைந்தது நான்கு சீன துருப்புக்களும் உயிரிழந்த ஜூன் 15 மற்றும் 16 இரவுகளில் பதற்றம் அதிகரித்தது.

இறக்குமதி வீழ்ச்சிக்கு எல்லை நிகழ்வுகளே நேரடிக் காரணம் என்று நிறுவுவது கடினம். ராணுவ மோதல் பற்றிய செய்திகள் வெளிவரும் முன்பே, பிப்ரவரி மாதத்திலேயே இந்தச் சரிவு தொடங்கியிருந்தது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

இருந்தாலும், 2020 ஜூலை மாதத்திலிருந்து சீன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் மீட்சி அடையத் தொடங்கியது இந்தியர்கள் மத்தியில் எழுந்த சீனப் பொருள் புறக்கணிப்பு என்ற தேசியவாத அறைகூவல்களுக்கும் களத்தில் நடக்கும் உண்மையான வணிகத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதையே காட்டுகிறது.

இறக்குமதியை அதிகரித்த கோவிட் இரண்டாவது அலை

இந்தியா சீனா

பட மூலாதாரம், Getty Images

சீனாவிலிருந்து கோவிட் -19 தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதில் இந்தியா தயக்கம் காட்டும் நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொற்றுநோயின் இரண்டாவது அலையைச் சமாளிக்க மருத்துவ உபகரணங்களை அவசரமாக வழங்குவதற்காக சீனாவைப் பெரிதும் நம்பியிருந்தது இந்தியா.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஏப்ரல் மாதத்தில் சீனா 26,000-க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள், 15,000 க்கும் மேற்பட்ட மானிட்டர்கள் மற்றும் கிட்டத்தட்ட 3,800 டன் மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ததாகத் தெரிவித்திருந்தார்.

70,000 க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு இந்தியாவிடம் வாங்குதல்களைப் பெற்ற பின்னர் சீன நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரித்தன என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். அத்தகைய மருத்துவக் கருவிகளின் வாங்குதல் மதிப்பு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்தப் பின்னணியில், சீன ஊடகங்கள் இந்தியத் தரப்பிலிருந்து பாராட்டு இல்லாதது குறித்து புகார் தெரிவித்து வருகின்றன. குளோபல் டைம்ஸ் செய்தித்தாளின் ஆசிரியர், சீனா “இந்தியாவை நன்றியுடன் இருக்கக் கோரவில்லை” என்றும் ஆனால் சீனாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் -19 பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பது குறித்து இந்தியாவில் இருந்து வெளிவரும் சில விமர்சனக் கருத்துக்கள்” அவர்களின் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு சீனாவின் ஆதரவைப் பற்றிய அவர்களின் அணுகுமுறையில் சுய மரியாதை இல்லாததை வெளிப்படுத்துகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலம் எப்படி இருக்கும்?

சீனா

பட மூலாதாரம், Getty Images

சமீப ஆண்டுகளில், சீனாவிலிருந்து இறக்குமதியில் ஒட்டுமொத்தமாக சரிவு காணப்படுகிறது. 2017-18 ஆம் ஆண்டில், மொத்த இறக்குமதி மதிப்பு 76.38 பில்லியன் டாலர்களாக இருந்தது, இது ஆண்டுதோறும் படிப்படியாக வீழ்ச்சியடைந்து, 2020-21ல் 58.36 பில்லியன் டாலர்களை எட்டியது.

அண்மை ஆண்டுகளில் இறங்குமுகத்தில் சீன இறக்குமதி இருப்பினும், இந்தியாவின் இறக்குமதி பங்காளிகளிடையே சீனா பெரிய வித்தியாசத்துடன் முன்னிலையில் உள்ளது. 2020-21 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து 58.36 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அடுத்ததாக, இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்கா அதே ஆண்டில் 24.96 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தது.

நிதிச் செய்தி வலைத்தளமான மனி கன்ட்ரோலின் ஜூன் 2020 அறிக்கையின்படி, இந்தியா மின்னணு பாகங்கள் இறக்குமதியில் 70 சதவீதத்தை சீனாவிடமிருந்து தான் பெறுகிறது என்று தெரிவிக்கிறது.

இந்தியாவின் மருந்துத் துறைக்கான அடிப்படை மருந்து பொருட்கள் (ஏபிஐ) 70% இறக்குமதி, 45% நுகர்வோர் பொருட்களின் இறக்குமதி, 40% தோல் பொருட்களின் இறக்குமதி மற்றும் 20% வாகன பாகங்கள் இறக்குமதி ஆகியவை சீனாவில் இருந்தே வருகின்றன.

முக்கியத் துறைகளில் இந்த வகையான இறக்குமதிச் சார்பு இருக்கும் நிலையில், மாற்று வழிகளை உருவாக்க இந்தியாவுக்கு நிலையான மற்றும் நீண்டகால முயற்சிகள் தேவைப்படும். இந்தியாவின் பொருளாதாரம் 2020-21ல் 7.3% சுருங்கியது. இது 1947 ல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிகப் பெரிய சரிவாகும். பெரிய அளவிலான இறக்குமதி மாற்று நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதும் இப்போது கடினமாக இருக்கலாம்.

மேலும், நடப்பு நிதியாண்டில், குறிப்பாகத் தொற்றுநோயின் இரண்டாவது அலையைச் சமாளிக்க சுகாதார உபகரணங்களின் இறக்குமதியை அதிகரித்தபின், சீனாவிலிருந்து இறக்குமதியைக் குறைப்பது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதையும் யோசிப்பது அவசியம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »