Press "Enter" to skip to content

போகோ ஹராம் தலைவர் அபு பாக்கர் ஷெகாவ் தற்கொலை: எதிரணி கிளர்ச்சிக்குழு

பட மூலாதாரம், AFP

போகோ ஹராம் என்ற நைஜீரிய பயங்கரவாத குழுவின் தலைவர் அபுபாக்கர் ஷெகாவ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது எதிரணி ஆயுதக்குழுவினர் ஒலிநாடா ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க மாகாண இஸ்லாமிய நாடு என்ற செய்தி நிறுவனங்களுக்கு கிடைக்கப்பெற்ற அந்த ஒலிநாடாவில் பேசியிருக்கும் இஸ்லாமிய நாடு மேற்கு ஆப்பிரிக்கா மாகாணம் என்ற ஆயுதக்குழுவினர், இரு தரப்பு குழுவினருக்கும் இடையிலான மோதலில் ஷெகாவ் வெடிகுண்டை கட்டிக் கொண்டு தன்னைத் தானே வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.

கடந்த மாதம் ஷெகாவ் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், அவர் முன்பே கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

எனினும்,. அபு பாக்கர் ஷெகாவ் இறந்த தகவலை போகோ ஹராம் குழுவோ, நைஜீரிய அரசாங்கமோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

ஒலிநாடாவில் என்ன உள்ளது?

தேதி குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்டுள்ள ஒலிநாடாவில், உள்ள குரல் ஐஎஸ்டபிள்யுஏபி என்ற ஆயுத குழுவின் தலைவரான முசப் அல்-பர்நாவியின் உடையதாக அறியப்படுகிறது. அதில் அவர், ஷெகாவ் வெடிகுண்டை தன் உடலில் கட்டிக் கொண்டு வெடிக்கச் செய்து விட்டார் என்று கூறுகிறார்.

பூமியில் உயிருடன் பிடிபட்டு அவமானப்படுவதற்கு பதிலாக வேறு முடிவை ஷெகாவ் தேர்வு செய்திருக்கிறார் என்று அந்த ஒலிநாடாவில் முசப் அல்-பர்நாவி பேசுகிறார்.

ஷெகாவின் மரணம் தொடர்பான செய்தி ஒரு மாதத்துக்கு முன்பே வெளிவந்தபோது, அது குறித்து விசாரிக்கப்படும் என்று நைஜீரிய ராணுவம் கூறியிருந்தது.

ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் மொஹம்மத் ஹெரிமா பிபிசியிடம் பேசும்போது, “உண்மையில் அந்த தகவலின் பின்னணியை விசாரித்து என்ன நடந்தது என்பதை ராணுவம் ஆராய்ந்து வருகிறது. ஆனால், வலுவான ஆதாரம் கிடைக்கும்வரை அது தொடர்பாக எவ்வித செய்திக்குறிப்பையும் ராணுவம் வெளியிடாது,” என்று கூறியிருந்தார்.

பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருக்கமாக உள்ள ஒரு பத்திரிகையாளர், “வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள சம்பிசா காடுகளில் போகோ ஹராம் குழுவினருக்கும் ஐஎஸ்டபிள்யுஏபி குழுவினருக்கும் இடையிலான மோதலில் ஷெகாவ் இறந்து விட்டார்,” என்று கூறினார்.

ஆனால், அவர் இறந்து போனதாக இதற்கு முன்பும் பல முறை உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளது.

யார் இந்த அபுபாக்கர் ஷெகாவ்?

போகோ ஹராம்

பட மூலாதாரம், COPYRIGHTREUTERS

போகோ ஹராம் நிறுவனர் காவல் துறை காவலில் 2009இல் இறந்த பிறகு, அதன் தலைவராக பதவியேற்றார் அபுபாக்கர் ஷெகாவ். வடகிழக்கு நைஜீரியாவில் மிக மோசமான தீவிரவாத தாக்குதல்களை நடத்தும் இயக்கமாக அதை உருமாற்றியவர் அவர்தான்.

ஷெகாவ் தலைமையில் போகோ ஹராம் குண்டுவெடிப்புகள், கடத்தல்கள், சிறையில் தாக்குதல் நடத்தி கைதிகளை விடுவிப்பது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. 2014ஆம் ஆண்டு முதல் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் ஷரிய சட்டத்தின் கீழ் இஸ்லாமிய அரசு ஒன்றை உருவாக்குவதாகக் கூறி இவரது குழுவினர் பல நகரங்களை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.

வயதில் 40களில் உள்ளவராக கருதப்படும் ஷெகாவ், தன்னை ஒசாமா பின் லேடனுடன் ஒப்பிட்டு ஜிஹாதி பிரசார காணொளிகள் மூலம் இளைஞர்களை ஈர்க்கக் கூடியவராக அறியப்படுகிறார்.

“கொலை செய்வது எனக்கு பிடிக்கும்… கோழிகளை வெட்டுவதை போல நான் அதை செய்கிறேன்…” என்று 2012ஆம் ஆண்டில் வெளியான ஒரு காணொளியில் அவர் பேசியிருந்தார்.

அவர் அந்த அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றது முதல், 30 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொன்றுள்ளார். அவரது நடவடிக்கைகளால் இருபது லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

2014ஆம் ஆண்டில் போர்னா மாகாணத்தின் சிபோக் நகரில் உள்ள பள்ளியில் இருந்து நூற்றுக்கணக்கான சிறுமிகளை இவரது குழு கடத்தியது. அதைத்தொடர்ந்து சர்வதேச கவனத்தை இவரது குழு பெற்றது. அவர்கள் கடத்திச் சென்றவர்களில் பல சிறுமிகளின் கதி இன்னும் தெளிவாகவில்லை. இதையடுத்து #BringBackOurGirls என்ற பெயரில் ஒரு இயக்கத்தை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், உறவினர்கள், பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »