Press "Enter" to skip to content

பாகிஸ்தானில் ‘ஷியா’ முஸ்லிமாக வாழ்வதில் உள்ள கஷ்டங்கள் என்ன?

  • சஹர் பலோச்
  • பிபிசி உருது, இஸ்லாமாபாத்

பட மூலாதாரம், HIRA, MARZIA, UROOJ

“ஷியாக்கள் குதிரைகளை வணங்குபவர்களா?”

“ஹலீமில் சுன்னி குழந்தைகளின் இறைச்சி கலக்கப்படுகிறதா?”

“சபீலின் நீரில் நீங்கள் துப்புவீர்களா?”

“தவறாக நினைக்க வேண்டாம், உனக்கு முதல் கல்மா முழுவதும் தெரியாது என்று ஆசிரியர் சொல்கிறார். கொஞ்சம் சொல்லிக் காட்டுகிறாயா?”

பிபிசியுடனான பேட்டியின் போது பாகிஸ்தானில் உள்ள ஷியா பெண்கள் கூறியவை இவை.

பாகிஸ்தானில் ஷியா சமூகத்தைச் சேர்ந்த பல குழந்தைகள் இது போன்ற கேலிகளையும் கேள்விகளையும் எதிர்கொண்டுதான் வளர்கிறார்கள். சிலருக்கு, இது வளர்ந்த பின்னரும் தொடர்கிறது.

பாகிஸ்தானின் மக்கள்தொகையில் ஷியா முஸ்லிம்கள் சுமார் 20 சதவீதம். அவர்கள் பெரும்பாலும் தாக்குதல்கள் மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் கடந்த ஆண்டில் கூட, தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஷியா பிரிவு மக்களுக்கு எதிராக வெளிப்படையாக ஆர்ப்பாட்டம் நடத்திய பல சம்பவங்கள் நடந்துள்ளன. இது போன்ற பெரும்பாலான ஆர்ப்பாட்டங்கள் கராச்சி, குவெட்டா மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் சில பகுதிகளில் நடந்தன.

2001ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை, பாகிஸ்தானில் பல்வேறு தாக்குதல்கள் மற்றும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலைகளில் 2,600 ஷியாக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சமூகத்தின் ஒரு பிரிவினரின் வெறுப்புப் பிரசாரமும் அடிப்படைவாதமும் தான் இந்தச் சமூகத்தினர் பாதிக்கப்படக் காரணம் என்று மனித உரிமை அமைப்புகளின் அறிக்கை கூறுகிறது.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் படி, வெறுப்புப் பிரச்சாரம் செய்வோர், இந்த சமூகத்தினரின் மசூதிகள் மீதும் மக்கள் மீதும் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் அல்லது பயங்கரவாத அமைப்புகளால் நடத்தப்படும் தாக்குதல்களை நியாயப்படுத்துகின்றனர்.

சுன்னி இளைஞர்களை மணப்பதால் குடும்பத்தினர் விலகல்

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானில் ஷியா முஸ்லிமாக வாழ்வது எப்படிப்பட்ட அனுபவம் என்பதை அந்தப் பெண்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள முயற்சித்தோம்.

அவர்களின் வேறுபட்ட அனுபவங்கள் வியப்படைய வைக்கின்றன. நல்ல நண்பர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் தங்கள் இனத்திலிருந்து வெளியில் திருமண சம்பந்தம் வைத்துக் கொண்டதனாலேயே குடும்பத்தினர் உறவுகளை முறித்துக் கொள்வது வழக்கம். ஆனால் அவர்கள் அனைவரும் குழந்தை பருவத்தில் அல்லது வளர்ந்த பிறகு கேள்விப்பட்ட ஒரு சொல் – காஃபிர் (மதத் துரோகி)

ஹீரா ஜைனபின் குழந்தைப் பருவம் கராச்சி, லாகூர் மற்றும் குஜ்ரான்வாலாவில் கழிந்தது. அவர் இரண்டாம் வகுப்பில் இருந்தபோது, தனது மத நம்பிக்கை குறித்துக் கேள்விகல் எழுப்பப்பட்டன மத நம்பிக்கை குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன என்று கூறுகிறார்.

“நான் குழந்தையாக இருந்த போது, நீங்கள் குதிரைகளை வணங்குகிறீர்களா என்று என் தோழி என்னிடம் கேட்டார்?

அப்போது என்னிடம் எந்தப் பதிலும் இல்லை. ஆனால் மற்றவர்களிடமிருந்து நான் வித்தியாசப்பட்டுள்ளதாக உணர்ந்தேன். தனிப்பட்ட விஷயமான மத நம்பிக்கை குறித்து மற்றவருடன் பேசுவது தயக்கமில்லை என்றாலும் அசௌகரியமாகவே இருந்தது.” என்று அவர் நினைவுகூர்கிறார்.

பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

பேனிஷ் அப்பாஸ் ஜைதி கராச்சியைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர். கராச்சியில் வளர்ந்தது அவருக்குக் கடினமாக இல்லை. வளர்ந்த பிறகு தான் அவருக்குச் சங்கடங்கள் தொடங்கின.

“குழந்தைப் பருவத்தில் இந்த வேறுபாடுகளை நான் அறிந்திருக்கவில்லை. 1990 களில், சுன்னி மக்கள் எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தனர். அதுவும் அவர்கள் மற்றவர்களுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிட மாட்டார்கள் என்பதால் தெரிந்தது. ஆனால் என் அம்மா மிகவும் நோய்வாய்ப்பட்டபோது, முதல் உதவியும் உணவு அவரது வீட்டிலிருந்து தான் வந்தது. என்று அவர் நினைவுகூர்கிறார்.

“வளர்ந்த பிறகு நான் எனது சொந்த விருப்பப்படி திருமணம் செய்து கொண்டேன், அவர்கள் எந்த நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள் என்பதைப் பற்றிக் கேட்காமலேயே. என் வீட்டாருக்கும் இது குறித்து நான் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆனால் இப்போது என் குடும்ப உறுப்பினர்கள் என்னுடன் பேசுவதில்லை. ஏனெனில் நான் ஒரு சுன்னி இனத்தவரைத் திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய சிறு குழந்தைக்குத் தன் தாய் வழி உறவுகளைத் தெரியாது. ஆனால், என் கணவரின் குடும்பத்தினர் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்கின்றனர்.” என்று இவர் கூறுகிறார்.

வீடு கிடைப்பதிலும் சிக்கல்

பாகிஸ்தான்

பட மூலாதாரம், BENISH

2015-ல் நான் வீடு தேடிய போது கூட, ஷியா என்பதால் எனக்கு வீடு கிடைக்கவில்லை என்று பேனிஷ் கூறினார்.

“நான் இன்னார் என்று யாரிடம் கூறினாலும், உங்களுக்கு வீடு கொடுக்க முடியாது, நீங்கள் கூட்டம் கூட்டுவீர்கள் என்ற பதில் தான் கிடைத்தது.” என்கிறார் அவர்.

குவெட்டாவில் வசிக்கும் 18 வயதான மர்ஸியா சாலேஹியுடன் பேசியபோது, 2011 தாக்குதலுக்குப் பிறகு தனது நண்பர்கள் தன்னைச் சந்திப்பதை நிறுத்தி விட்டதாகக் கூறினார்.

“நான் எங்கு சென்றாலும் எல்லாருடைய பார்வையும் என் மீதே இருப்பதாக உணர்வேன். என்னுடன் அமரக்கூட அஞ்சுவர். காரணம், என்னுடன் சேர்த்து அவர்களும் இலக்காக்கப்படுவார்கள் என்ற அச்சம்.” என்று அவர் கூறுகிறார்.

லாகூரில் வசிக்கும் எழுத்தாளர் உரூஜ் அலி, முந்தைய காலங்களில் நிலைமை மிகவும் நன்றாக இருந்தது என்று தனது வீட்டுப் பெரியவர்களிடமிருந்து கேள்விப்பட்டதாகக் கூறினார்.

“மோச்சி தர்வாஸா மற்றும் லாகூரில் உள்ள பிற இடங்களில் ஆஷுரா மற்றும் முஹர்ரம் சமயங்களில் மக்கள் ஒன்றாகக் கூடியதாக எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.” என்று இவர் கூறுகிறார்.

இந்த நல்ல காலங்கள் குறித்துப் பல இடங்களில் பலரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நிலைமை மாற என்ன காரணம்?

பாகிஸ்தான்

பட மூலாதாரம், UROOJ

முற்காலத்தில் நிலைமை நன்றாக இருந்தது என்றால், எப்போது பிரச்னை ஏற்பட்டது?

பாகிஸ்தான் அமைதி ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் இயக்குநர் முகமது ஆமிர் ராணா, கடந்த காலத்தில் பாகிஸ்தானில் சமூக நல்லிணக்கம் இருந்தபோதிலும், வகுப்புவாதத்தையும் வெறுப்புணர்வையும் ஊக்குவிக்கும் சில பெரிய சம்பவங்களும் நடந்துள்ளன என்று தெரிவிக்கிறார்.

“1963 ல் கைர்பூரில் உள்ள டேடி கிராமத்தில் நடந்த கலவரம் அனைவரும் அறிந்தது. ஆங்கிலேயர்கள் பிரிவினை செய்து வெளியேறிய பிறகு, இரு பிரிவுகளுக்கும் இடையிலான நிலைமை அவ்வளவு சிறப்பாக இல்லை. அவ்வப்போது பதட்டங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ஆஷுரா மற்றும் பிற சந்தர்ப்பங்களில் நிலைமை பதட்டமாக இருந்துள்ளது. பாகிஸ்தானிலோ அல்லது பிராந்தியத்தின் பிற பகுதிகளிலோ நடந்திருந்தாலும், இவற்றின் தாக்கம் இங்கேயும் உணரப்பட்டுள்ளது. ” என்று அவர் விளக்குகிறார்.

பத்திரிகையாளரும் ஆராய்ச்சியாளருமான காலித் அகமது, 2007 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வில்சன் மையத்தில் ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் நடந்த ஒரு நிகழ்வில் ஒரு சொற்பொழிவில், வகுப்புவாதம் மற்றும் பாகிஸ்தானில் அது தொடர்பான நிலைமை குறித்து விவரித்தார் – தங்கள் நாட்டில் நடந்து வரும் வகுப்புவாத வன்முறையின் யதார்த்தத்தைப் பாகிஸ்தானியர்கள் அறிவார்கள் ஆனால் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தானின் தேசிய அடையாளத்திற்கான சில காரணங்கள் சர்ச்சைக்குரியவையாகவே உள்ளன.

“பாகிஸ்தான் அடிப்படையில் ஒரு இனவாத நாடு அல்ல. ஷியாவும் சுன்னியும் பாகிஸ்தானில் ஒன்றுக்கொன்று வெறுப்பைக் கக்கும் சமூகங்களும் அல்ல. இதுவரை நடந்த அனைத்து கலவரங்களும் கராச்சி, குவெட்டா போன்ற சில நகரங்களிலும், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வாவின் சில இடங்களில் மட்டுமே நடந்துள்ளன.” என்பது அவர் கருத்து.

வகுப்புவாதத்தை ஏற்காத ஒரு நாடு, வகுப்புவாத கலவரங்களின் களமாக மாறியது எப்படி என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, ‘மத்திய கிழக்கில் வகுப்புவாத போர் மூண்ட போது அதற்கான ஒரு தனி யுத்த களமாக பாகிஸ்தான் மாற்றப்பட்டதால் தான் என்று பதிலளிக்கிறார்.

இந்துக்களை மட்டுமல்ல, ஷியா பிரிவினரையும் எதிர்த்தவர்களைத் தான் 1947 க்குப் பிறகு பாகிஸ்தானின் தலைவர்கள் தங்கள் வழிகாட்டிகளாகக் கருதினர் என்று அவர் தெரிவிக்கிறார். “இனவாதச் சிந்தனைக்கு ஆதரவானவர்களை தேசிய அளவில் மக்கள் பாராட்டத் தொடங்கினர்.” என்று அவர் கூறினார்.

1979இல் இரான் புரட்சிக்கு முன்னர், பாகிஸ்தானில் வாழும் ஷியாக்கள் ஈரானின் புரட்சிகர மற்றும் தீவிரவாத சித்தாந்தத்திற்கு எந்த வகையிலும் எதிர்வினையாற்றவில்லை என்று அவர் கூறினார்.

‘பெரும்பாலான ஷியா அறிஞர்கள் இராக் நகரமான நஜப்பில் கல்வி பெற விரும்பினர். அதனால்தான் அவர்கள் ஈரானின் அயதுல்லா கமேனியின் கருத்துக்களிலிருந்து மிகவும் வேறுபட்டார்கள்.” என்பது காலித்தின் கூற்று.

“ஈரானியப் புரட்சி, பாக்கிஸ்தானில் சிலருக்கு ஒரு உத்வேகமாக மாறியபோது நிலைமை வேறு வடிவம் பெற்றது. மேலும் சவுதி அரேபியா மற்றும் ஈரானிடையேயான வகுப்பு வாதக் கலவரங்களின் களமாக பாகிஸ்தான் பயன்படுத்தப்பட்டது. இந்த வகுப்புவாதக் கலவரங்கள் ஒரு ‘திணிக்கப்பட்ட மோதலின்’ விளைவாகும்.” என்றும் அவர் விளக்குகிறார்.

“கலவரத்தை விட்டுக் கருத்தாகச் சிந்தியுங்கள்”

பாகிஸ்தான்

பட மூலாதாரம், KULSUM BANU

இந்தச் சிந்தனை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட கலவரங்கள் குறித்து, கராச்சியில் வசிக்கும் பதிவர் குல்ஸும் பானோ, “சில நேரங்களில் நண்பர்களுடன் கேலியாக நான் கூட, ‘காஃபிர், காஃபிர், ஷியா காஃபிர்’ என்றும் சொல்கிறேன். ஆனால் இது கேட்க நன்றாக இல்லை என்பது தான் உண்மை. இது எங்கள் ஆளுமை மற்றும் இருப்புக்கு ஏற்படுத்தக்கூடிய ஆழமான தாக்கத்தை நான் அறிவேன். “

“நூற்றாண்டுகள் பழைமையான யுத்தத்தையும் யோசனைகளையும் ஒரு நாளில், ஒரு சமூக ஊடகப் பதிவின் மூலமோ முடிக்க முடியாது. ஆனால் பேச்சு வார்த்தை நடத்தலாம். எங்களிடம் கேள்விகளைக் கேளுங்கள், ஆனால் எங்கள் பதில்களைப் புரிந்து கொள்ளவும் முயற்சி செய்யுங்கள்” என்றார் குல்ஸும்.

ஹீரா ஜைனாப், “எனது பெரும்பாலான நண்பர்கள் சுன்னி பிரிவினர் தான். ஒருவரின் மதம் அல்லது பிரிவு என்ன என்பதை நாங்கள் பொருட்படுத்தவில்லை” என்றார்.

“அவர்கள் ஆயிரக்கணக்கான வெறுக்கத்தக்க புத்தகங்களை எரித்ததாக நாடு உங்களுக்குச் சொல்லும். ஆனால் நீங்கள் மனநிலையையும் சித்தாந்தத்தையும் எரிக்கவோ அழிக்கவோ முடியாது. இது குறித்துப் பேச்சு வார்த்தை மூலமாகத் தான் எதுவும் சாதிக்க முடியும்” என்று அவர் கூறினார்.

“இவ்வளவெல்லாம் நடந்த பிறகும், நாங்கள் இன்னும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். ஒரு தாலிபாக(உண்மையைத் தேடுபவராக) இருந்து சிந்தியுங்கள். தாலிபானாக இருக்காதீர்கள்,” என்கிறார் மர்ஸியா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »