Press "Enter" to skip to content

சீனாவில் நெகிழி (பிளாஸ்டிக்) சர்ஜரி மோகம் அதிகரிப்பு – ஆபத்து எச்சரிக்கை அலட்சியப்படுத்தப்படுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

தன்னையொத்த வயதுக்காரர்கள் பலரைப் போலவே 23 வயது ருக்ஸினும் தினமும் சமூக வலைதளங்களில் உலவுகிறார். அவர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார் – காஸ்மெட்டிக் சர்ஜரி பற்றிய விவரங்கள்.

கண் இமைகளின் மீது ஒரு கோட்டை உருவாக்கி அதன் மூலம் கண்களைப் பெரிதாகக் காட்டும் இரட்டைக் கண் இமை அறுவை சிகிச்சையை செய்துகொள்ள விரும்புகிறார் ருக்ஸின். குவாங்க்ஸோவில் வசிக்கும் ருக்ஸின், தினமும் கெங்க்மேய் செயலிக்குச் சென்று அறுவை சிகிச்சை நிபுணரைத் தேடுகிறார்.

“நகரத்தில் பல கிளினிக்குகள் உண்டு. ஆனால் நல்ல இடத்துக்குச் செல்ல நான் விரும்புகிறேன். இது என் முகத்தில் நடைபெறப்போகும் அறுவை சிகிச்சை, இல்லையா?” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

லிப்போசக்‌ஷன், மூக்கு அறுவை சிகிச்சை உட்பட வெவ்வேறு ப்ளாஸ்டிக் சர்ஜரி பற்றிய உடனடித் தகவல்களைத் தருகிறது கெங்க்மெய் செயலி. கெங்க்மெய் என்றால் சீன மொழியில் “இன்னும் அழகாக” என்று பொருள். பயனர்கள் இடம், அறுவை சிகிச்சை முறை, கிளினிக்குகள் போன்ற பல விவரங்களை இதில் தேடிக்கொள்ளலாம்.

2013ல் வெளிவந்த இந்த செயலியில் முதலில் 10 லட்சம் பயனர்கள் மட்டுமே இருந்தனர். இப்போது அது 3 கோடியே அறுபது லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இருபதுகளில் இருக்கும் இளம் பெண்கள்.

சீனா அழகு நெகிழி  (பிளாஸ்டிக்) சர்ஜரி

பட மூலாதாரம், GENGMEI/SO-YOUNG

காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சைக்கான சோ யங் செயலியிலும் 14 லட்சமாக இருந்த பயனர் எண்ணிக்கை 84 லட்சமாக இப்போது உயர்ந்துள்ளது. இது காஸ்மெடிக் சர்ஜரி பற்றிய சீனர்களின் பார்வை மாறியிருப்பதைக் காட்டுகிறது.

அமெரிக்காவுக்கு அடுத்து உலகிலேயே அதிக எண்ணிக்கையில் நெகிழி (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சை செய்யும் நாடாக சீனா உயர்ந்திருக்கிறது.

சீனா அழகு நெகிழி  (பிளாஸ்டிக்) சர்ஜரி

பட மூலாதாரம், Getty Images

நான்கு வருடங்களில் 177 பில்லியன் யுவானாக 2019ல் இந்த சந்தை மதிப்பு அதிகரித்திருப்பதாகவும், கிட்டத்தட்ட மும்மடங்கு கூடியிருப்பதாகவும் டெலோய்ட்டே அறிக்கை தெரிவிக்கிறது. இந்த சந்தையின் உலக வளர்ச்சி விகிதம் 8.2%. சீனாவில் இந்த விகிதம் 28.7% ஆக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த தசாப்தத்தின் மத்தியில் இந்த சந்தையில் சீனாவே முதல் இடம் பிடிக்கும் என்று தெரிவிக்கிறது குளோபல் டைம்ஸ் அறிக்கை.

இரட்டை இமைகள் உருவாக்குவதும் ஆங்கில எழுத்து வி வடிவிலான தாடையை உருவாக்குவதும் பலரால் விரும்பப்படும் அறுவை சிகிச்சைகளாக இருக்கின்றன. புதுப்புது முறைகள் வருவதால், பிரபலமான அறுவை சிகிச்சைகளின் பட்டியல் மாறிக்கொண்டே இருக்கிறது. கூர்மையான காதுகளை வடிவமைப்பது சமீபத்திய விருப்பமாக இருக்கிறது என்கின்றன ஆய்வுகள்.

1996க்குப் பின் பிறந்தவர்களான ஜென் இஸட் தலைமுறையினரும் இதுபோன்ற அறுவை சிகிச்சைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்தகாலத்தில் இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் வேறு மாதிரியாகப் பார்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஷன் துறையில் வேலை செய்யும் ருக்ஸின், தன் நண்பர்கள் இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் பற்றி வெளிப்படையாகவே பேசுகிறார்கள் என்கிறார். “நான் இந்த அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என்று யாரும் சொல்லவில்லை என்றாலும், நாம் கேட்டால் யாரும் மறுப்பதில்லை” என்கிறார்.

இன்னும் கட்டுப்பாடுகள் தேவை

சீனா அழகு நெகிழி  (பிளாஸ்டிக்) சர்ஜரி

பட மூலாதாரம், WEIBO/GAO LIU

ஆனால் இந்த வளர்ச்சியில் சில பிரச்சனைகள் உண்டு. 2019ல் மட்டும் சீனாவில் முறையான ஆவணங்கள் இன்றி 60,000 க்ளினிக்குகள் செயல்பட்டதாகத் தெரிவிக்கிறது க்ளோபல் டைம்ஸ் அறிக்கை. இவற்றால் வருடத்துக்கு 40,000 “மருத்துவ விபத்துகள்” ஏற்படுகின்றன, அதாவது ஒரு நாளுக்கு 110 தவறிய அறுவை சிகிச்சைகள் என்ற ரீதியில் இவை நடக்கின்றன.

நடிகை கௌ லியூவுக்கு நடந்த விபத்து ஒரு பிரபலமான உதாரணம். தன் மூக்கில் நடந்த ஒரு அறுவை சிகிச்சையில் நேர்ந்த பிழையால், முக்கு நுனியில் உள்ள திசு முழுவதுமாக பாதிக்கப்பட்டுவிட்டதாக அவர் படங்களைப் பகிர்ந்திருந்தார். இதை அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்துவிடமுடியும் என்றாலும் இந்த பாதிப்பால் 40,000 யுவான் மதிப்புள்ள திரைப்பட வாய்ப்புகள் தவறிப்போய்விட்டதாக அவர் தெரிவிக்கிறார். அவரது மருத்துவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதோடு, மருத்துவமனைக்கு 49,000 யுவான் அபராதமும் விதிக்கப்பட்டது.

இணையத்தில் உள்ள பலர் இந்த அபராதம் போதாது என்று குரல் எழுப்பினர்.

“இது எப்படிப் போதும்? ஒருவரின் உடல் உறுப்பு நிரந்தரமாகப் போயிருக்கிறது!” என்று தெரிவித்த ஒரு இணையப் பயனர், இந்தத் துறைக்குக் கட்டுப்பாடுகள் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நுகர்வோரின் குறைகளை விரைவாகக் கேட்டு ஆராய்வது உட்பட, ஆவணங்கள் இல்லாத க்ளினிக்குகளைக் குறிவைக்கும் ஒரு பிரச்சாரத்தைத் துவக்கியிருக்கிறது சீனாவின் தேசிய சுகாதார கமிஷன்.

ஆபத்தை அலட்சியப்படுத்துவது ஏன்?

“சீனாவில் பலரும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதுதான் இந்தத் துறையை வளர்க்கிறது” என்று பிபிசியிடம் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் பாலின துறைப் பேராசிரியராக இருக்கும் முனைவர் ப்ரெண்டா அலெக்ரே, “ஒரு குறிப்பிட்ட பொது உடலமைப்பு இருந்தால் காதல் மட்டுமல்ல, வேலையும் கிடைக்கும்,” என்கிறார்.

சீனாவில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு புகைப்படத்தையும் இணைக்கவேண்டும். சில வேலைவாய்ப்பு விளம்பரங்களில் குறிப்பிட்ட வெளித்தோற்றம் உள்ளவர்கள், குறிப்பாக இப்படிப்பட்ட தோற்றம் உள்ள பெண்கள் தேவை என்று நேரடியாகவே கேட்கப்படுகிறது. புறத்தோற்றத்துக்கும் அந்த வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் இந்த நிலையே இருக்கிறது.

“அழகாகத் தெரியும் துணிக்கடை விற்பனையாளர் தேவை”, “நவநாகரிகமாகவும் அழகாகவும் உள்ள தொடர் வண்டிகண்டக்டர் தேவை” போன்ற பல சீன விளம்பரங்களில் பாலின ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்று 2018ல் வந்த மனித உரிமை அறிக்கை தெரிவிக்கிறது.

இணையத்தின் முன்னேற்றத்தால் புறத்தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. இது புறத்தோற்றத்தின்மீது ஒரு பெரிய கவனத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

“அழகாக இருந்தால் புதிய வேலைவாய்ப்புகள் வரும் என்பது ஓரளவு உண்மைதான். உதாரணமாக, லைவ் காணொளிக்கள், இணைய காணொளிக்கள் மூலமாக வருமானம் வரும்” என்கிறார் கெங்மெயின் துணைத்தலைவர். ஆவணங்கள் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களோடு மட்டுமே பணியாற்றுவதாக கெங்மெய் தெரிவிக்கிறது.

அழகும் அவலட்சணமும்

சீனா அழகு நெகிழி  (பிளாஸ்டிக்) சர்ஜரி

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் பத்திரிக்கைகளுடைய போக்கு கொஞ்சம் மூர்க்கமானது. பிரபலங்களின் புறத்தோற்றத்தை அடிக்கடி பத்திரிகைகள் விமர்சிக்கின்றன.

இந்த வருடத்தின் தொடக்கத்தில், அழகானவர்கள் முதல் அவலட்சணமானவர்கள் வரை பெண்களை வரிசைப்படுத்தும் ஒரு நிகழ்வை நடத்தியது ஷாங்காய் ஆர்ட் கேலரி.

சீனா அழகு நெகிழி  (பிளாஸ்டிக்) சர்ஜரி

பட மூலாதாரம், LU YUFAN

காஸ்மெடிக் சர்ஜரி பற்றிய ஒரு புத்தகத்தை எழுதிவரும் லூ யுஃபான், “குழந்தைப்பருவம் தொட்டே என் புறத்தோற்றம் பற்றிப் பலரும் வெளிப்படையாகவே பேசுவார்கள். நீ தொலைக்காட்சி நடிகையைப் போல் இருக்கிறாய் – கதாநாயகி போல் அல்ல, நகைச்சுவை நடிகைகளைப் போல் தெரிகிறாய் என்பார்கள். நடுநிலைப் பள்ளியில், வகுப்பிலேயே மிக அசிங்கமான பெண்களை என் வகுப்பிலிருந்த பையன்கள் பட்டியலிட்டார்கள். நான் ஐந்தாம் இடத்தில் இருப்பதாக என்னிடமே வந்து சொன்னார்கள்” என்கிறார்.

தன் ஆய்வுக்காக 30க்கும் மேற்பட்ட க்ளினிக்குகளுக்குச் சென்றிருக்கிறார் லூ. “எங்கு போனாலும் உங்கள் தோற்றத்தை முன்னேற்ற முடியும் என்று வெளிப்படையாகவே சொல்வார்கள். திரும்பத் திரும்பப் பேசி என்னை சம்மதிக்க வைக்க முயற்சி செய்வார்கள். முடியாது என்று சொல்வது கடினமாகவே இருக்கும். அறுவை சிகிச்சைக்கு என்னிடம் பணமும் இருக்காது” என்கிறார்.

ருக்ஸினின் கண் இமை சிகிச்சைக்கு 300 டாலர் முதல் 1200 டாலர் வரை செலவாகும். ஆனால் இது முதல் படி தான் என்கிறார் ருக்ஸின்.

“இது சரியாக நடந்துவிட்டால் அடுத்தடுத்து அறுவை சிகிச்சைகள் செய்துகொள்வேன். அழகைக் கூட்டுவதில் யாருக்குத்தான் விருப்பம் இருக்காது?” என்று அவர் கேட்கிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »