Press "Enter" to skip to content

கியூபா போராட்டம்: பற்றாக்குறையைச் சமாளிக்கப் பயணிகள் கொண்டுவரும் உணவு மற்றும் மருந்துகளுக்கு வரிவிலக்கு

பட மூலாதாரம், Getty Images

கியூபாவுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு வரும் பயணிகளுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படாது எனக் கியூபா அரசு தெரிவித்துள்ளது.

பல பத்தாண்டுகளாக கியூபாவை ஆண்டு வரும் கம்யூனிச அரசுக்கு எதிராக அங்கு மிகப்பெரிய போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விலைவாசி உயர்வு, உணவு மற்றும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிராகவும், கோவிட் தொற்றை அரசு கையாண்ட விதத்தைக் கண்டித்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர்.

இந்தநிலையில், திங்கட்கிழமை முதல் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரும் அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த வரம்பும் இல்லை என அரசு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை தற்காலிகமானதுதான் என்றும், மிகத் தாமதமான சிறிய நடவடிக்கை என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

புதன்கிழமையன்று அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கூட்டத்தில் பிரதமர் மானுவல் மர்ரெரோ குரூஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கியூபா அதிபர் மிகுயேல் டையாஸ்-கேனல் தொனியுடன் ஒப்பிடும் போது, பிரதமர் குரூஸின் தொனி போராட்டக்காரர்களுடன் இணக்கமாகச் செல்வது போல இருந்தது.

ஆர்ப்பாட்டங்கள் பரவியபோது, வீதியில் இறங்கி ”கிளர்ச்சியை வீழ்த்த வேண்டும்” என அதிபர் குயேல் டையாஸ்-கேனல் அரசு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நேர்மாறாக, இறக்குமதி வரிகளை நீக்க வேண்டும் என பல பயணிகள் கோரிக்கை வைத்தனர் என்றும், இந்த முடிவை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் குரூஸ் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31க்கு பிறகு நாட்டின் நிலைமையை அரசு மதிப்பிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கியூபாவிற்குப் பயணிப்பவர்கள் தற்போது 10 கிலோ வரை மருந்துகளை வரி விலக்கில் கொண்டு வர முடியும். ஆனால், அவர்கள் கொண்டு வரும் உணவுக்கு, தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களுக்குக் குறைந்த அளவிலான சுங்க வரி செலுத்த வேண்டும்.

நாட்டில் நிலவும் மருந்து மற்றும் உணவுப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான ஒரு வழியாக இறக்குமதி வரிகளை நீக்க வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர்.

அதிக அளவிலான வெளிநாட்டுப் பொருள்கள் மற்றும் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவதற்காகவே பயணிக்கும் ‘முலாஸ்’ எனும் வணிக நபர்களைத் தடுப்பதற்காகக் கியூப அரசு வரிகளை விதித்தது.

ஆனால் இந்த நடவடிக்கை, அரசு நடத்தும் கடைகளில் கிடைக்காத பொருட்களை வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரும் கியூபா முலாஸ்களை மட்டும் பாதிக்கவில்லை, உணவு மற்றும் சுகாதார பொருட்களுக்காக வெளிநாடுகளில் உள்ள உறவினர்களை நம்பியிருக்கும் மக்களையும் பாதித்தது.

இறக்குமதி வரியை நீக்குவது அரசின் ஒரு அரிய சலுகையாகக் கருதப்பட்டாலும், இந்த நடவடிக்கையைப் பலர் ஏளனம் செய்கின்றனர்.

கோவிட் தொற்றுநோய் காரணமாகக் கியூபாவுக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், கட்டுப்பாடுகளை நீக்குவதால் பலன் கிடைக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு தொடங்கிய போராட்டம் பல பத்தாண்டுகளில் கியூபாவில் நடந்த மிகப்பெரிய போராட்டம் மட்டுமல்ல நாடு முழுவதும் நடந்த பரவலான போராட்டமாகக் கருதப்படுகிறது.

போராட்டத்தை ஒட்டி கியூபாவில் முடக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

போராட்டம் தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் டஜன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலர் சமூக வலைத் தளங்களில் போராட்டக் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பினர். அரசுக்கும் நாட்டின் அதிபருக்கும் எதிராகப் போராட்டக்காரர்கள் எழுப்பிய முழக்கங்கள் அதில் காட்டப்பட்டன.

கியூபாவின் பொருளாதாரம் மிகவும் நொடித்த நிலையில் உள்ளது. கொரோனாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளால் மிக முக்கியமான துறைகளில் ஒன்றான சுற்றுலா அழிந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரை, கியூபாவின் மற்றொரு முக்கிய வருவாய் ஆதாரம். ஆனால் இந்த ஆண்டு அறுவடை எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது.

கியூபாவின் சர்க்கரை உற்பத்தியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அஸ்கியூபா அமைப்பு,எரிபொருள் பற்றாக்குறை மற்றும் இயந்திரங்களின் பழுது உள்ளிட்டவை சர்க்கரை உற்பத்தி குறைந்து போனதற்குக் காரணங்கள் என்று கூறுகிறது.

பொருளாதாரத்தின் முக்கியமான அம்சங்கள் முடங்கி விட்டதால், அரசின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »