Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் சண்டையை நிறுத்துவதற்கு விதிக்கும் ‘மிகப் பெரிய நிபந்தனை’

பட மூலாதாரம், EPA

ஆப்கானிஸ்தானில் மூன்று மாத சண்டை நிறுத்தத்துக்கு தாலிபன்கள் முன்வந்துள்ளனர். ஏற்கெனவே சிறை வைக்கப்பட்டிருக்கும் சுமார் 7 ஆயிரம் பேரை விடுவிக்க வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

இது “மிகப்பெரிய கோரிக்கை” என ஆப்கானிஸ்தான் அரசின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் நதீர் நதீரி கூறியுள்ளார்.

இருப்பினும் அரசு தரப்பில் இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியிருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களாக தாலிபன்களின் கை ஓங்கியிருக்கிறது. பல முக்கியப் பகுதிகளை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். பல்வேறு இடங்களில் முன்னேறி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானின் 85 சதவிகிதப் பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபன்கள் அண்மையில் அறிவித்தனர். ஆயினும் அந்தக் கூற்றையும் கள நிலவரத்தையும் சரி பார்க்க இயலாது.

நாட்டில் மொத்தமுள்ள 400 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பகுதி தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக சில கணிப்புகள் கூறுகின்றன.

தற்போது சண்டை நிறுத்தத்துக்கு முன்வந்திருக்கும் தாலிபன்கள், வேறொரு முக்கியமான நிபந்தனையையும் விதித்துள்ளனர். தங்களது இயக்கத்தின் பெயரை அமெரிக்காவின் தடைப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு இதேபோன்றதொரு சூழலில் சுமார் 5 ஆயிரம் தாலிபன் கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அது ஆப்கானிஸ்தானிய அரசுக்கு பெருஞ்சிக்கலாக அமைந்துவிட்டது.

விடுவிக்கப்பட்ட தாலிபன் கைதிகள் மீண்டும் அரசுக்கு எதிராகச் சண்டையிடத் தொடங்கிதால் பல இடங்களில் வன்முறை அதிகரித்து நாட்டில் நிலைமை மிகவும் மோசமடைந்ததாக பிபிசி செய்தியாளர் லிஸ் டவ்ஸி கூறுகிறார்.

கடந்த வியாழக்கிழமையன்று ஆப்கன் படையினர் தாலிபன்களின் வசமிருந்த பாகிஸ்தான் எல்லையைக் கடக்கும் வழியை மீண்டும் கைப்பற்றிவிட்டதாக அறிவித்தனர். இதை தாலிபன்கள் மறுத்தனர். தாங்கள் எந்தப் பகுதியையும் இழக்கவில்லை என்று அவர்கள் கூறினர்.

தலிபான்

பட மூலாதாரம், Getty Images

இந்த வாரத் தொடக்கத்தில் கந்தஹாரை ஒட்டிய பாகிஸ்தானிய எல்லையைக் கடக்கும் போல்டக் என்ற பகுதியில் தாலிபன்களின் கொடி பறக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.

தாலிபன்கள் முன்னேறி வருவதைத் தடுப்பதற்கு ஆப்கானியப் படைகள் திணறி வருகின்றன.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் தாலிபன்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமடைந்தது.

இந்த உடன்பாட்டின்படி அமெரிக்காவுடன் அதன் நேட்டோ தோழமைப் படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும். தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வேறு எந்த பயங்கரவாத இயக்கத்துக்கும் தாலிபன்கள் அனுமதி அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன.

ஆனால் ஆப்கானிஸ்தானியப் படைகளுடன் சண்டையிடுவதை நிறுத்துவதற்கு தாலிபன்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இதுவரை ஒப்புக்கொள்ளாத தாலிபன்கள், தற்போது அதற்கு முன்வந்துள்ளனர். ஆனாலும் சண்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தாலிபன்களின் கடுமையான தாக்குதல்களால் ஆப்கன் படையினர் முற்றிலுமாக தோற்றும் ஓடும் நிலை ஏற்படும் என்று பலர் அஞ்சுகின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்பும் திட்டத்தை தொடங்கிய முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷும் இதே அச்சத்தை வெளிப்படுத்துகிறார். விளைவுகள் “நம்பமுடியாத அளவுக்கு மோசமாக” இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

தாலிபன்கள் யார்?

தாலிபன்கள் என்றால் பஷ்தோ மொழியில் மாணவர்கள் என்று பொருள். 1990-களின் தொடக்கத்தில் மதராஸாக்களில் பயின்ற சுமார் 50 மாணவர்கள் முல்லா ஒமர் தலைமையில் இணைந்து உருவாக்கிய இயக்கம் இது. இவர்களிடம் பத்துப் பதினைந்து துப்பாக்கிகள் மட்டுமே இருந்தாகக் கூறப்படுகிறது.

1980-களில் ஆப்கானிஸ்தானில் நடந்த சோவியத் போரின் கொடுமைகளில் இருந்தும், உள்நாட்டுப் போரின் சித்திரவதைகளில் இருந்தும் தப்பித்து பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் தங்கியிருந்த அகதிகள் இந்த இயக்கத்தில் இணையத் தொடங்கினர்.தாலிபன் அமைப்பு தங்களைக் கொடுமையில் இருந்து விடுவிக்க வந்த இயக்கம் என்று அவர்கள் நம்பினர்.

ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் தாலிபான் செல்வாக்கு: பாகிஸ்தான் பதறுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

அப்போது பாகிஸ்தானின் ராணுவத் தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப், தாலிபன் இயக்கத்துக்குத் தேவையான உதவிகளை வழங்கினார். ராணுவ வீரர்களும் தாலிபன் இயக்கத்தில் சேருவதற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மூலம் 1996-ம் ஆண்டு காபூலைக் கைப்பற்றிய தாலிபன்கள் 2001-ம் ஆண்டு அமெரிக்கா மீதான பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் நடக்கும்வரை ஆப்கானிஸ்தானை தங்களது பிடியில் வைத்திருந்தனர்.

இந்தக் காலகட்டத்தில்தான் ஆப்கானிஸ்தானில் அல்-காய்தா இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் திறக்கப்பட்டன. ஒசாமா பின் லேடனும், அல்-ஜவாஹிரியும் அல்-காய்தா இயக்கத்துக்கு ஆள் சேர்த்து வந்தனர். இவர்களை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தாலிபன்கள் ஏற்காததையடுத்து, நேட்டோ படைகள் ஆப்கனுக்குள் புகுந்தன.

இதன் பிறகு தாலிபன்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டாலும், கடந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு தாக்குதல்கள் மூலம் தங்களது இருப்பை உணர்த்திக் கொண்டே இருக்கின்றனர்.

20 ஆண்டுகளில் நடந்தவை என்னென்ன?

2001 செப்டம்பர் 2001: ஒசாமா பின் லேடன் தலைமையிலான அல் காய்தா அமைப்பு அமெரிக்காவில் மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியது. நான்கு விமானங்கள் கடத்தப்பட்டு, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம், வாஷிங்டனில் உள்ள பென்டகன் கட்டடம் உள்ளவை தாக்குதலுக்கு உள்ளாகின. சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

ஒசாமா

பட மூலாதாரம், Reuters

2001 அக்டோபர் 7: அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்த தாலிபன்கள் மற்றும் அல்-கய்தா முகாம்கள் மீது முதல் முறையாக வான்வெளித் தாக்குதலைத் தொடங்கின. காபூல், காந்தஹார், உள்ளிட்ட இடங்கள் தாக்கப்பட்டன. பின் லேடனை ஒப்படைக்க தாலிபன்கள் மறுத்தனர்.

2001 நவம்பர் 13: மேற்கு நாடுகளின் ஆதரவுடன் தாலிபன்களுக்கு எதிரான படைகள் காபூலைக் கைப்பற்றின. தாலிபன்கள் காபூலை விட்டு வெளியேறினர்.

2004 ஜனவரி 26: ஆப்கானில் புதிய அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் படி 2004 அக்டோபர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

2004 டிசம்பர் 7: புதிய அரசியல் சட்டப்படி முதல் அதிபரானார் ஹமீத் கர்சாய்

2006 மே: ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தாலிபன்களுக்கு எதிரான போரில் பிரிட்டிஷ் படை களமிறங்கியது.

2009 பிப்ரவரி 17: ஒபாமா அமெரிக்க அதிபரான பிறகு ஆப்கானிஸ்தானில் படைகளை அதிகரிக்க உத்தரவிட்டார். ஒரு கட்டத்தில் 1.4 லட்சம் வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்தனர்.

2011 மே 2: பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் ஒசாமா பின் லேடன் அமெரிக்க நேவி முத்திரை படையின் ரகசிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

லேடன்

பட மூலாதாரம், Getty Images

2013 ஏப்ரல் 23: தாலிபன்கள் இயக்கத்தை நிறுவிய முல்லா முகமது ஒமர் மரணமடைந்தார். ஆப்கன் உளவுத்துறை தகவலின் அடிப்படையில், அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்ததாகத் தெரியவந்தது.

2014 டிசம்பர் 28: நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் தங்களது நடவடிக்கைகளை முடித்துக் கொண்டன. அமெரிக்காவும் தங்களது படைகளை வெகுவாகக் குறைக்கத் தொடங்கியது.

2015: தாலிபன்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தினர். நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்டது. தாலிபன்கள் மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கினர்.

2019 ஜனவரி 2019: 2014-ஆம் ஆண்டு நேட்டோ படைகள் வெளியேறிய பிறகு நடந்த சண்டைகளில் ஆப்கனின் 45,000 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிபர் அஷ்ரப் கானி அறிவித்தார்.

2020 பிப்ரவரி 29: அமெரிக்காவும் நேட்டோ கூட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு தாலிபன்களுடன் உடன்பாடு செய்து கொண்டன.

2021 செப்டம்பர் 11: அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்பட்டு சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் அமெரிக்கப் படைகளை முழுமையாக விலக்கிக் கொள்வதற்கு நாள் குறிக்கப்பட்டது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »