Press "Enter" to skip to content

சீனாவின் மாவோ ஆட்சியில் மாம்பழங்கள் தீவிர வேட்கையுடன் போற்றி வணங்கப்பட்டது ஏன்?

கடந்த மாதத்தில் ஒருநாள் பாகிஸ்தான் அரசு பல்வேறு நாடுகளுக்கு மாம்பழங்களைக் கொண்ட பெட்டிகளை அனுப்பியது. ஆனால் அமெரிக்காவும் சீனாவும் அவற்றை ஏற்க மறுத்துவிட்டன. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொடர்பான கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் வெளிநாட்டுப் பழங்களை ஏற்க முடியாது என்று கூறிவிட்டன. இந்தச் செய்தியை ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டது.

பழங்கள் வேண்டாம் என்று கூறிய நாடுகளில் கனடா, நேபாளம், இலங்கை உள்ளிட்டவையும் அடக்கம். மொத்தம் 32 நாடுகளுக்கு பழங்களை அனுப்பியதாகவும் அவற்றில் பெரும்பாலான நாடுகள் அவற்றை ஏற்பதற்குத் தயக்கம் காட்டியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இது ஏதோ வர்த்தக நடவடிக்கை என்றோ, வணிகத்துக்காக அனுப்பப்பட்ட பழங்கள் திருப்பியனுப்பப்பட்டன என்றோ நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த மாம்பழங்கள் பாகிஸ்தானின் ராஜீய உறவின் அடையாளமாக வழங்கப்பட்டவை. இப்போது பல நாடுகளால் மறுக்கப்பட்ட மாம்பழங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு வரலாற்றையே எழுதியிருக்கின்றன.

சீனாவில் உள்நாட்டுப் போர் முடிந்து மாவோ சே துங் ஆட்சியில் இருந்த காலம். முன்னோக்கிய பெரும் பாய்ச்சல், பெரும் பஞ்சம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சீனாவில் சிந்தனைகளை ஒன்று திரட்டுவதற்காகவும், ஆட்சிக்கு எதிரானவர்களை அழிப்பதற்காகவும் 1966-ஆம் ஆண்டில் மாவோவால் பண்பாட்டுப் புரட்சி கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறது.

ஸ்டூடன்ஸ்ட் ரெட் கார்ட்ஸ் எனப்படும் மாணவர் செம்படையை இதற்காக மாவோ உருவாக்கினார். ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுக்கு எதிராகப் புரட்சி செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு இடப்பட்ட உத்தரவு. ஆனால் அவர்களே மாவோவுக்குச் சிக்கலாக மாறினார்கள் என்பதை பல வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

மாணவர் செம்படைக்குள்ளேயே பிளவுகள் ஏற்பட்டன. அதிகாரப் போட்டியால் குழப்பம் உருவானது. மாணவர் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் என அனைத்தும் பிரிந்து நின்றன. இந்தச் சண்டையை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு வெறொரு வழியைத் தேட வேண்டிய நிலை மாவோவுக்கு ஏற்பட்டது.

மாம்பழம்

அவர்களை ஒடுக்குவதற்காக கிங்ஹுவை பல்கலைக் கழகத்துக்கு சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்களை அனுப்பினார். அவர்களிடம் ஆயுதங்கள் ஏதுமில்லை. சிறு சிவப்புப் புத்தகத்தையும் தாயத்தையும் மட்டுமே கொண்டு சென்றனர். அவர்களை மாணவர்கள் கடுமையாகத் தாக்கினர். பல்கலைக்கழகத்தில் இருந்தை அமிலத்தை வீசினர். அதில் 5 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 700-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நீண்ட மோதலுக்குப் பிறகு மாணவர்கள் அனைவரும் சமரசமாகி சரணடைந்தனர்.

இந்த அரிய பணியை செய்து முடித்ததற்காக தொழிலாளர்களுக்கு மாவோ சே துங் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? மாம்பழங்கள். அதற்கு முந்தைய நாள் வரை மாவோவுக்கு மாம்பழம் என்றால் என்னவென்றே தெரியாது. பிறகு ஏன் மாம்பழத்தைக் கொடுத்தார் என்று கேட்கிறீர்களா? அவை பாகிஸ்தானின் ராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக சீனாவுக்கு வந்து சேர்ந்தவை. முந்தைய நாளில்தான் அப்போது பாகிஸ்தானின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் அர்ஷத் ஹுசைனில் மாவோவுக்கு அவை பரிசாக வழங்கப்பட்டிருந்தன.

“அந்தக் காலகட்டத்தில் வடக்கு சீனாவில் மாம்பழங்களைப் பற்றி யாருக்குமே தெரியாது. அதனால் மாவோ கொடுத்த பழங்களை சாப்பிடாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். முகர்ந்து பார்த்தனர். தடவிக் கொடுத்தனர். இது என்ன மந்திரப் பழம் என்று வியந்து கொண்டிருந்தனர்” என்கிறார் அறிவியலாளர் ஃபிரெட் முர்க்.

ஊர்வலம்

அந்த நேரத்தில் தலைமைப் பொறுப்புகள் மாணவர் அமைப்புகளிடம் இருந்து தொழிலாளர் அமைப்புகளிடம் மாற்றப்பட வேண்டும் என்றும் மாவோ உத்தரவிட்டிருந்தார். அது ஒரு வழியாக கலகங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. மாம்பழங்கள் மாவோவுடன் நெருங்கிய தொடர்புடையவையாக மாறின.

மக்கள் அதை வணக்கத்துக்குரியதாக கருதத் தொடங்கினார்கள். ஒரு வகையில் பண்பாட்டுப் புரட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பழம் என்ற பெருமையும் மாம்பழத்துக்குக் கிடைத்தது. அதற்கு புனிதத் தன்மை வழங்கப்பட்டது.

மாவோ கொடுத்த மாம்பழங்களை பிரித்துச் சாப்பிடுவதா, இல்லை பாதுகாப்பதா என்ற நீண்ட விவாதத்துக்குப் பிறகு சில தொழிலாளர்கள் மாம்பழங்களை ஃபார்மால்டிஹைடு மூலம் பாதுகாக்க முடிவு செய்தனர். சிலர் இசையை ஒலித்தபடி மாம்பழத்தை வீதிவீதியாக எடுத்துச் சென்றதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரேயொரு மாம்பழம் விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நிகழ்வும் நடந்திருக்கிறது.

மாவோ

மாவோ கொடுத்த சில மாம்பழங்கள் அழுகத் தொடங்கியபோது, அவற்றை அறுத்து நீரில் போட்டு, அதைப் புனித நீராகக் கருதத் தொடங்கினர். ஒவ்வொரு தொழிலாளரும் ஒரு கரண்டி அளவு நீரைக் குடித்து மகிழ்ந்தனர். மாம்பழங்கள் செய்தித்தாள்களை ஆக்கிரமித்தன. சுவரொட்டிகளில் இடம்பிடித்தன.

புனிதப் பழமாகக் கருதப்பட்ட மாம்பழம் ஒரு கட்டத்தில், மாவோவிடம் இருந்து வந்த பரிசு என்பதையும் தாண்டி, மாம்பழமே மாவோதான் என்ற அளவுக்கு அதன் பெருமை உச்சத்துக்குச் சென்றது. மாவோவையும் மாம்பழத்தையும் புகழ்ந்து பாடல்களும் பாடப்பட்டன.

அதன் பிறகு 1976-ஆம் ஆண்டு மாவோ இறக்கும்வரை மாவோ பற்றிய புகழும் சீனா முழுவதும் பரவியிருந்தது. அதன் பிறகு மாம்பழம் மீதான புனிதத் தன்மையும் குறைந்துவிட்டது. இப்போது பெய்ஜிங்கின் எல்லாப் பழக்கடைகளிலும் மாம்பழங்கள் கிடைக்கும். அதுவும் ஓர் உணவுப் பொருளாகிவிட்டது. ஆனாலும் சீனாவின் வரலாற்றில் அதற்கு நிரந்தர இடம் உண்டு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »