Press "Enter" to skip to content

செப்டம்பர் 11 தாக்குதல்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும் நாளுமன்றமும் தப்பியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

(உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையாளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அந்த சம்பவத்தின் சுவடுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் தினமும் ஒரு நினைவை தொடராகப் பதிவு செய்கிறது பிபிசி தமிழ். அதில் நான்காவது கட்டுரை இது.)

செப்டம்பர் 11-ஆம் தேதியன்று உலக வர்த்தக மையக் கட்டடங்களையும் பென்டகனையும் தாக்குவதற்கு வெறும் கத்திகளும், வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறப்பட்ட பொய்யான மிரட்டலும் மட்டுமே போதுமானவையாக இருந்தன. ஆனால் மற்றொரு தாக்குதலை நடத்துவதற்கான விமானத்தைக் கடத்துவதற்கும், இலக்கை நோக்கிச் செல்வதற்கும் இவை போதுமானதாக இல்லை. அந்த விமானம் யுனைட்டட் ஏர்லைன்ஸ் 93.

பல்லாயிரக்கணக்கான லிட்டர் எரிபொருள் இருந்த விமானங்களைக் கடத்தி அவற்றை திறன்மிக்க, கட்டுப்படுத்தப்பட்ட ஏவுகணைகளைப் போல மாற்றி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க வேண்டும் என்பதே கடத்தல்காரர்களின் நோக்கமாக இருந்தது என செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய அமெரிக்க ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அத்தனை பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் ஏமாற்றி கடத்தல்காரர்களால் 4 விமானங்களைக் கடத்தவும் முடிந்தது. ஆனால் மூன்று விமானங்கள் மட்டுமே அவர்கள் திட்டமிட்டபடி இலக்குகளைத் தாக்கின. யுனைட்டட் ஏர்லைன்ஸ் 93 விமானத்தைக் கடத்தியவர்களால், அவர்களின் இலக்கை நோக்கிச் செல்ல முடியவில்லை. காரணம் விமானத்துக்குள் இருந்த பயணிகள் நடத்திய துணிச்சலான யுத்தம்.

யுனைட்டட் 93 விமானத்துக்குள் நடந்தது என்ன?

செப்டம்பர் 11-ஆம் தேதி காலை 8.42 மணிக்கு நியூஜெர்சி மாநிலத்தின் நெவார்க் விமான நிலையத்தில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகரை நோக்கி இந்த விமானம் புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தைக் கடத்துவதற்காக லெபனானைச் சேர்ந்த ஜியாத் ஜர்ரா, சயீத் அல் காம்தி, அகமத் நமி, அகமத் அல் ஹஸ்னாவி ஆகிய நான்கு பேர் பாதுகாப்புப் பரிசோதனைகளைக் கடந்து விமானத்துக்குள் சென்றனர்.

பாஸ்டன் ரோகன் விமானத்தில் இருந்ததைப் போன்ற கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) நெவார்க் விமான நிலையத்தில் இல்லை என்று செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானிகள் அறைக்கு அருகேயுள்ள முதல் வகுப்பின் 1பி இருக்கையில் ஜர்ராவும் அதே வகுப்பின் வெவ்வேறு இருக்கைகளில் மற்ற மூவரும் அமர்ந்தனர்.

செப்டம்பர் 11 அன்று கடத்தப்பட்ட மற்ற மூன்று விமானங்களையும்போல, இந்த விமானத்திலும் 5 கடத்தல்காரர்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால், துபாயில் இருந்து வந்த மற்றொருவர் மீது சந்தேகம் இருந்ததால் சில நாள்களுக்கு முன்பே குடியேற்றத்துறை அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் இருந்தே திருப்பியனுப்பி விட்டனர்.

கடத்தல்காரர்கள்

பட மூலாதாரம், Getty Images

182 பேர் பயணிக்கக்கூடிய யுனைட்டட் 93 விமானத்தில் அன்றைக்கு 4 கடத்தல்காரர்களுடன் சேர்த்து வெறும் 37 பேர் மட்டுமே பயணித்தனர். அவர்களோடு விமானிகள் ஜேசன் தஹல், லேராய் ஹோமர் மற்றும் 5 பணியாளர்களும் இருந்தனர்.

நியூயார்க்கின் இரட்டைக் கோபுரங்கள், பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் ஆகியவற்றைத் தாக்கிய விமானங்கள் பெரிய அளவில் தாமதம் இல்லாமல் புறப்பட்டுச் சென்றன. ஆனால் யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் மட்டுமே 8.42 மணிக்குப் 25 நிமிடங்களுக்கும் மேலாக தாமதமாகப் புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு நடுவானில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வர்த்தக மையக் கட்டடங்கள் தகர்க்கப்பட்ட விவரம் பரவத் தொடங்கியிருந்தது. பறந்து கொண்டிருக்கும் எல்லா விமானங்களுக்கும் இந்தச் செய்தி அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் யுனைட்டட் 93 விமானத்துக்கு சில நிமிடங்கள் தாமதமாகவே இந்தச் செய்தி கிடைத்தது. வர்த்தக மையத்தில் இரு விமானங்கள் மோதிய விவரத்தைத் தெரிவித்த தரைக்கட்டுப்பாட்டு அதிகாரி, விமானியின் அறைக்குள் யாரையும் நுழைய விட வேண்டாம் என்ற எச்சரிக்கையும் விடுத்தார். அப்போது மணி காலை 9.26.

அடுத்த இரண்டு நிமிடங்களில் கடத்தல்காரர்கள் தங்களது வேலையைத் தொடங்கிவிட்டதாக அமெரிக்காவின் விசாரணை அறிக்கை கூறுகிறது. விமானியின் அறையை அடித்துத் திறக்கும் சத்தத்தையும், விமானியின் அலறலையும் தரையில் இருந்த அதிகாரிகளால் கேட்க முடிந்தது. விமானத்தை கடத்தல்காரர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள்.

பயணிகளின் துணிச்சலான போராட்டம்

மற்ற மூன்று விமானங்களும் தரையில் இருந்து புறப்பட்ட 30 நிமிடங்களுக்குள்ளாக கடத்தப்பட்டன. ஆனால் யுனைட்டட் 93 விமானம் கடத்தப்படுவதற்கு சுமார் 46 நிமிடங்கள் ஆகியிருந்தன.

விமானி பயிற்சி பெற்றிருந்த கடத்தல்காரர்களில் ஒருவரான ஜர்ரா விமானத்தை இயக்கியதாகவும் வழக்கமான பாதையில் இருந்து விமானத்தை திருப்பியதாகவும், அதே நேரத்தில் மற்ற கடத்தல்காரர்கள் பயணிகளை விமானத்தின் பின்பகுதிக்கு போகும்படி கட்டளையிட்டதாகவும் செப்டம்பர் 11 விசாரணை அறிக்கை கூறுகிறது. விமானி அறையில் ஒரு விமானப் பணிப்பெண் பிடித்து வைக்கப்பட்டிருந்தது குரல் பதிவுக் கருவியில் பதிவாகியிருந்தது.

விமானி

பட மூலாதாரம், Getty Images

அந்த நேரத்தில் பயணிகளில் பலரும். விமானப் பணியாளர்களும் தரையில் இருந்த தங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் போன் செய்தார்கள். விமானம் கடத்தப்பட்டுவிட்டதாகக் கூறினார்கள். அப்போதுதான் இரட்டைக் கோபுரங்கள் விமானங்களை மோதவைத்துத் தகர்க்கப்பட்ட விவரம் யுனைட்டட் 93 விமானத்தில் இருந்தவர்களுக்குத் தெரியவந்தது.

அதன் பிறகு கடத்தல்காரர்களின் வேலை எளிதாக இருக்கவில்லை. மற்ற விமானங்களுக்கு ஏற்பட்ட கதியை பயணிகள் உணர்ந்திருந்ததால், எப்படியும் சாகப்போகிறோம் என்ற மனநிலைக்கு வந்திருந்தார்கள். அதனால், கடத்தல்காரர்களை எதிர்த்துச் சண்டையிடுவது என முடிவு செய்தனர். இவையெல்லாம் அவர்களில் சிலர் தொலைபேசி மூலமாகத் தெரிவித்த தகவல்கள். விசாரணை அறிக்கையிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வெளியில் இருந்த கடத்தல்காரர்களை பயணிகள் சிலர் தாக்கியிருக்கக்கூடும் என்று தெரிகிறது. இதை அறிந்து கொண்ட ஜர்ரா, விமானத்தை செங்குத்தாகவும், தலை கீழாகவும் இயக்கத் தொடங்கியதால், பயணிகள் விமானத்துக்குள்ளேயே உருண்டனர் அவர்களது அலறல் குரல் கறுப்புப் பெட்டி எனப்படும் குரல் பதிவுக் கருவியில் பதிவாகியிருந்தது.

ஆனாலும் பயணிகளும் விமான ஊழியர்களும் சேர்ந்து 4 கடத்தல்காரர்களையும் எளிதாக முறியடித்துவிட முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இன்னும் ஒரு சில வினாடிகள்கூட தாக்குப்பிடிக்க முடியாது என்று தெரிந்ததும், கடத்தல்காரர்கள் விமானத்தை தரையை நோக்கித் திருப்பினார்கள். அப்போது விமானத்தின் வேகம் மணிக்கு சுமார் 930 கிலோ மீட்டர்.

கடைசி நொடி வரை கடத்தல்காரர்களுடன் பயணிகள் போராடிய சத்தம் குரல் பதிவுக் கருவியில் பதிவாகியிருந்தது. இறுதயில் பென்சில்வேனியாவில் உள்ள இன்டியன் ஏரி அருகே வெட்ட வெளியில் மோதி விமானம் நொறுங்கியது. அதில் இருந்த யாரும் உயிர் பிழைக்கவில்லை. ஆனால், கடத்தப்பட்ட பிற விமானங்களைப் போல இந்த விமானமும் முக்கியத்துவம் வாய்ந்த ஏதோ ஒரு பகுதியில் மோதுவது தவிர்க்கப்பட்டது.

விமானம்

பட மூலாதாரம், Getty Images

கடத்தல்காரர்களின் இலக்கு அமெரிக்க அதிபர் மாளிகையாகவோ, நாடாளுமன்றக் கட்டடமாகவோ இருந்திருக்கலாம் என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி நடந்திருந்தால், இன்னும் ஏராளமான உயிர்கள் பறிபோயிருக்கக்கூடும். பயணிகளின் துணிச்சலால் அது தவிர்க்கப்பட்டது. பயங்கரவாதிகளுடன் நேருக்கு நேர் போரிட்ட பயணிகளின் துணிச்சலுக்காகவே யுனைட்டட் 93 விமானம் தீரத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பான முந்தைய கட்டுரைகள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »