Press "Enter" to skip to content

ஜோ பைடன் மற்றும் ஷி ஜின்பிங் ஏழு மாதத்திற்கு பிறகு தொலைப்பேசி அழைப்பு – உரையாடியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஏழு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினார்.

இரு நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் போட்டி சண்டையாக மாறிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்கு இரு நாடுகளுக்கும் உள்ள பொறுப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

ஜோ பைடன் பதவியேற்ற பிறகு ஷி ஜின்பிங் – பைடன் ஆகியோர் இரண்டாவது முறையாக பேசி கொள்கிறார்கள்.

உளவு, வர்த்தகம் மற்றும் கொரோனா பெருந்தொற்று உருவான விதம் ஆகிய காரணங்களால் சீனா – அமெரிக்கா உறவு மோசமான நிலையில் உள்ளது.

இரு தலைவர்களும், விரிவான, கேந்திர ஆலோசனைகளை மேற்கொண்டதாகவும், ஒத்த கருத்துடைய விஷயங்கள், மாறுபடும் விஷயங்கள் என இரண்டையும் விவாதித்ததாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது.

சீன அரசு ஊடகமான கண்காணிப்பு தொலைக்காட்சி, “இந்த தொலைபேசி அழைப்பு எதேச்சையானது என்றும், ஆழமானது என்றும் தெரிவித்துள்ளது. விரிவான கேந்திர பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இருதரப்பு சார்ந்த பல விஷயங்களை பேசியதாகவும்” தெரிவித்துள்ளது.

சீனா – அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நல்ல உறவை பேண முடியுமா என்பது உலகின் எதிர்காலத்திற்கும் முக்கியமானது என அதிபர் ஷி தெரிவித்ததாக கண்காணிப்பு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பைடனுக்கு முன் அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் தான் பதவி ஏற்ற ஒரு சில மாதங்களில் இரு முறை சீன அதிபர் ஷியுடன் உரையாடினார்.

ஆறே மாத்ததில் அவர் ஷியுடன் இரு முறை பேசியது மட்டுமல்லாமல் தனக்கு சொந்தமான மா அ லாகோ கிளபிற்கும் அவரை அழைத்தார். பின் இருவரும் அங்கு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிபர் பைடனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தொலைப்பேசி அழைப்பு வந்ததாகவும், தனது நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பாத சீனாவின் கீழ்நிலை அதிகாரிகள் மீது கோபமடைந்திருந்தார் பைடன் என்றும் மூத்த வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பைடன் நிர்வாகம் மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பதற்றமான சூழலில் நிறைவடைந்தது. இருதரப்பு அதிகாரிகளும் பரஸ்பரம் கண்டனங்களை பகிர்ந்து கொண்டனர்.

பிற நாடுகள் சீனா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தூண்டுவதாக சீன அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். சீனா பிற நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.

மனித உரிமை மற்றும் தலையீடுகள்

இரு நாடுகளும் வெவ்வேறு விஷயங்களில் முரண்பட்டிருந்தாலும், மனித உரிமை மற்றும் ஜனநாயகம் ஆகிய இரண்டும் முக்கிய பிரச்னையாக உள்ளன.

உய்கர் முஸ்லிம்

பட மூலாதாரம், Getty Images

ஷின் ஜியாங்கில் உள்ள வீகர் இன மக்களை சீனா இனப்படுகொலை செய்வதாக அமெரிக்கா தெரிவிக்கிறது. மேலும் ஹாங் காங்கில் ஜனநாயக உரிமைகளை சீனா நசுக்குகிறது என்றும் அமெரிக்கா தெரிவிக்கிறது.

அதே சமயம் தங்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக சீனா குற்றம் சாட்டுகிறது.

இரு நாடுகளும் 2018ஆம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்தபோது வர்த்தக போரிலும் ஈடுபட்டன.

அமெரிக்கா சீன பொருட்களின் மீது 360 பில்லியன் டாலர்கள் வரி விதித்தது. சீனா அமெரிக்க பொருட்கள் மீது 110பில்லியன் டாலர்கள் வரி விதித்தது.

அதன்பிறகு தென் சீன கடல் பிரச்னையும் உண்டு.

பல நாடுகளின் எதிப்புகளுக்கு மத்தியிலும் தென் சீன கடல் பகுதியில் சீனா தனது ராணுவ இருப்பை அதிகரித்தது.

அப்பகுதியின் அமைதியை காக்கவே இவ்வாறு செய்வதாக சீனா தெரிவிக்கிறது.

அதே போன்று சமீபத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படை வெளியேறியதற்கும் சீனா அமெரிக்காவை விமர்சித்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »