Press "Enter" to skip to content

ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன?

பட மூலாதாரம், ULLSTEIN BILD DTL/GETTY IMAGES

1938 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் நாஜி கட்சியின் முன்னணி உறுப்பினரும், யூத அழிப்பின் முக்கிய கூட்டாளியுமான ஹென்ரிக் ஹிம்லர், ஐந்து பேர் கொண்ட குழுவை திபெத்துக்கு அனுப்பி ஆரிய இனத்தின் தோற்றம் பற்றிய அறிய முயன்றார். எழுத்தாளர் வைபவ் புரந்தரே இந்தச் சுவாரஸ்யமான ஆய்வுப் பயணம் பற்றி விவரிக்கிறார்.

இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பு ஜெர்மானியர்களின் குழு ஒன்று இந்தியாவின் கிழக்கு எல்லையில் ரகசியமாகத் தரையிறங்கியது.

அவர்கள் ஆரிய இனத்தின் தோற்றம் பற்றிய தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

ஐரோப்பிய வடக்கு நாடுகளைச் சேர்ந்த “ஆரிய” இன மக்கள் வடக்கு ஐரோப்பிய பகுதியில் இருந்து சுமார் 1,500 ஆ்ண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்று அடாஃல்ப் ஹிட்லர் நம்பினார். அங்கு வேறு இன மக்களுடன் கலந்து “குற்றம்” இழைத்ததாகவும், அதனால் பூமியின் “உயர்ந்த இனம்” என்ற அந்தஸ்தை அவர்கள் இழந்தனர் என்றும் ஹிட்லர் கருதினார்.

இந்திய மக்கள், அவர்களது விடுதலைப் போராட்டம் ஆகியவற்றின் மீதான வெறுப்பை ஹிட்லர் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அவரது உரைகளிலும் எழுத்துகளிலும் இந்த உணர்வைக் காணலாம்.

ஆயினும், ஹிட்லரின் சிறந்த தளபதிகளில் ஒருவரும், நாஜியின் எஸ்எஸ் படைப்பிரிவுத் தலைவருமான ஹிம்லர், இந்தியத் துணைக் கண்டத்தை இன்னும் கூர்ந்து நோக்க வேண்டும் என்று கருதினார். இங்குதான் திபெத் வருகிறது.

வடக்கு ஐரோப்பிய வெள்ளை நோர்டிக் இனமே உயர்ந்தது என்று கருதுவோர், தொலைந்து போனதாக கருதப்படும் கற்பனை நகரமான அட்லாண்டிஸின் கதையையும் நம்புகிறார்கள். “தூய்மையான ரத்தம் கொண்டவர்கள்” அங்கு வாழ்ந்ததார்கள் என்பது அவர்களது நம்பிக்கை. இங்கிலாந்துக்கும் போர்ச்சுகலுக்கும் இடையே அட்லாண்டிக் பெருங்கடலின் ஏதோ ஒரு பகுதியில் அட்லாண்டிஸ் தீவு நகரம் இருந்ததாகவும் தெய்வீகமான இடி தாக்கியதில் அது கடலில் மூழ்கியதாகவும் கதைகள் இருக்கின்றன.

ஹிட்லர்

பட மூலாதாரம், KEYSTONE/GETTY IMAGES

தப்பிப் பிழைத்த “ஆரியர்கள்” அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதாகவும், அதில் ஒன்றுதான் இமயமலை என்றும் கூறப்படுகிறது. உலகத்தின் கூரை என்று அழைக்கப்படும் திபெத் அதில் முக்கியமானது.

பெரும் பிரளயத்தால் அட்லாண்டிஸ் தீவு மூழ்கிய பிறகு அங்கிருந்த மக்கள் எங்கெல்லாம் சென்றார்கள், இன்னும் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக எஸ்எஸ் படையில் அஹ்னென்பெர் என்ற ஒரு பிரிவை ஹிம்லர் நிறுவினார்.

1938-ஆம் ஆண்டில் இந்தத் தேடுதல் பணிக்காக 5 ஜெர்மானியர்களைக் கொண்ட குழுவை அவர் திபெத்துக்கு அனுப்பினார்.

அணியின் இரண்டு உறுப்பினர்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து நின்றனர். ஒருவர் எர்னஸ்ட் ஷாஃபர். இவர் 28 வயதான விலங்கியல் நிபுணர். அதற்கு முன்பு இரண்டு முறை இந்திய – திபெத் – சீன எல்லைப் பகுதிக்குச் சென்றிருக்கிறார். 1933- ஆம் ஆண்டு நாஜிக் கட்சி வெற்றி பெற்றதும் அவர் எஸ்எஸ் படையில் இணைந்துவிட்டார்.

ஷாஃபர் வேட்டையாடுவதில் வேட்கை கொண்டவர். அதற்காக பல கோப்பைகளைப் பெற்று தனது பெர்லின் வீட்டில் அடுக்கியிருந்தார். ஒரு வேட்டைப் பயணத்தின்போது அவரது மனைவியுடன் படகில் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு வாத்தை துப்பாக்கியால் குறிவைத்துச் சுட முயன்றபோது படகில் இருந்து வழுக்கியதால், அவரது மனைவியின் தலையில் குண்டு பாய்ந்து அவர் இறந்துவிட்டார்.

ஹிம்லரின் அணியில் இரண்டாவது முக்கியமான நபர் புருனோ பெகர். மானுடவியல் படித்த இளைஞர். 1935-ஆம் ஆண்டு நாஜியின் எஸ்எஸ் படைப் பிரிவில் சேர்ந்தார்.

பெகர் திபெத்தியர்களின் மண்டை ஓடுகள் மற்றும் முக விவரங்களை அளவிட்டவர். அவற்றைக் கொண்டு முகமூடிகளை உருவாக்கினார். “இந்தப் பிராந்தியத்தில் நோர்டிக் இனத்தின் விகிதாச்சாரம், தோற்றம், முக்கியத்துவம் வளர்ச்சி போன்றவை தொடர்பான பொருள்களைத் திரட்டுவது நோக்கம்” என்று அவர் கூறியிருக்கிறார்.

சென்னைக்கு வந்த ஜெர்மானியர்களின் கப்பல்

1938-ஆண்டு மே மாதத் தொடக்கத்தில் ஐந்து ஜெர்மானியர்களைக் கொண்ட கப்பல் இலங்கையின் கொழும்பு நகருக்கு வந்து சேர்ந்தது. அதன் பிறகு வேறொரு கப்பலில் அவர்கள் சென்னைக்கு (அப்போதைய மெட்ராஸ்) வந்து சேர்ந்தனர். அதன் பிறகு இன்னொரு கப்பலில் கொல்கத்தாவுக்குச் சென்றார்கள்.

அப்போது இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் ஜெர்மானியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர். அவர்கள் ஒற்றர்களாக இருக்கக்கூடும் என்றும் கருதினர். முதலில் இந்தியாவுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போதைய டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் “இந்தியாவில் ஜெர்மானிய உளவாளி” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.

இப்போது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாக இருக்கும் சிக்கிம் அந்தக் காலகட்டத்தில் தனிப் பிராந்தியமாக இருந்தது. அங்கு பொறுப்பில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரியும் ஜெர்மானியர்களை சிக்கிம் வழியாக திபெத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

ஆயினும் கடைசியில் நாஜி விஞ்ஞானிகளே வெற்றி பெற்றனர். ஸ்வஸ்திகா கொடி கட்டப்பட்ட கழுதைகளில் பொருள்களை எடுத்துக் கொண்டு 5 நாஜி விஞ்ஞானிகளும் திபெத்துக்குள் நுழைந்தனர்.

ஸ்வஸ்திகா என்பது திபெத் எங்கும் காணப்படும் அடையாளம். அங்கு அதை “யுங்ட்ரங்” என்று அழைக்கிறார்கள். ஷாஃபரும் அவரது குழுவினரும் இந்தியாவில் இருந்த காலத்திலும் அந்த முத்திரையை அதிகமாகப் பார்த்திருப்பார்கள்.

ஜெர்மனி

பட மூலாதாரம், ULLSTEIN BILD DTL/GETTY IMAGES

அதிர்ஷ்டத்தின் சின்னமாக அது இந்துக்களால் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போதும் வீட்டுக்கு வெளியிலும் வாகனங்களிலும் இந்த முத்திரையைக் காணலாம்.

அந்த நேரத்தில் திபெத்தில் நிலைமை மாறிக் கொண்டிருந்தது.

13-ஆவது தலாய் லாமா 1933-ஆம் ஆண்டில் இறந்தார். புதிய தலாய் லாமாவுக்கு வயது வெறும் மூன்றுதான். எனவே அவரது பிரநிதியால் திபெத் ஆளப்பட்டு வந்தது. ஜெர்மானியர்கள் அங்கு சென்றபோது, அவர்களுக்கு திபெத்திய மக்களும் பிரதிநிதியும் உற்சாகமான வரவேற்புக் கொடுத்தார்கள்.

திபெத்துக்கு வந்த ஆரியர்களை இந்து மதத்தைப் போலவே, புத்த மதமும் பலவீனப் படுத்தியது என நாஜிக்களின் கற்பனையில் நம்பிக் கொண்டிருந்தார்கள் என்பதை திபெத்தியர்கள் அறிந்திருக்கவில்லை.

திபெத்தில் கிடைத்தவை என்னென்ன?

ஷாஃபரும் அவருடன் வந்தவர்களும் விலங்கியல், மானுவியல் ஆய்வுகள் என்ற பெயரில் தங்களது உண்மையான “ஆரியத் தேடல்” ஆராய்ச்சியை தொடங்க முற்பட்ட சிறிது காலத்திலேயே அதை திடீரென நிறுத்தவேண்டியதாயிற்று. 1939-ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் தொடங்கிவிட்டது.

அந்தத் தருணத்தில் ​​376 திபெத்தியர்களின் மண்டை ஓடுகள், முக அம்சங்களை அளந்திருந்தார். 2,000 புகைப்படங்களை எடுத்திருந்தார். 350 பேரின் விரல் மற்றும் கை அச்சுகளைச் சேகரித்திருந்தார்.

ஷாபர்

பட மூலாதாரம், ULLSTEIN BILD DTL/GETTY IMAGES

அவர்களது குழுவில் வேறொருவர் 2 ஆயிரம் பொருள்களைச் சேகரித்திருந்தார். சுமார் 18,000 மீட்டர் நீளம் கொண்ட காணொளி, 40,000 புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன.

அவர்களது ஆய்வுப் பயணம் பாதியில் நிறுத்தப்பட்டதால், அவர்கள் கல்கத்தாவில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை ஹிம்லர் செய்திருந்தார். மியூனிக் நகரில் அவர்களது விமானம் தரையிறங்கியபோது, நேரில் வந்து வரவேற்றார்.

திபெத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட “பொக்கிஷங்களை” சால்ஸ்பர்க்கில் உள்ள ஒரு கோட்டையில் ஷாஃபர் வைத்திருந்தார். ஆனால் 1945 இல் நேச நாட்டுப் படைகள் வந்தவுடன், அந்த இடம் சூறையாடப்பட்டது. பெரும்பாலான திபெத்தியப் புகைப்படங்களும் பொருள்களும் அழிக்கப்பட்டன.

பயணத்தின் மற்ற “அறிவியல் முடிவுகள்” என்று கூறப்பட்டவையும் போரில் நாஜிக்களுக்கு ஏற்பட்ட அதே முடிவைச் சந்தித்தன. அவை காணாமல் போயின அல்லது அழிக்கப்பட்டன. நாஜி மீதான கொடூரமான பார்வை ஏற்பட்டதால், போருக்குப் பிறகு அந்தப் பொருள்களையோ, தடயங்களையோ தேட யாரும் முயற்சி செய்யவில்லை.

“ஹிட்லர் மற்றும் இந்தியா: நாடு மற்றும் அதன் மக்களின் மீது அவரது வெறுப்பு பற்றி சொல்லப்படாத கதை” என்ற புத்தகத்தை எழுதியவர் வைபவ் புரந்தரே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »